தினக்குரல் நேர்காணல்

தினக்குரல் 06.09.2015வார மலரில் வெளிவந்த எனது நேர்காணலின் முழுமையான பகுதி இதுவாகும். இதில் ஜந்து கேள்விகளும் அவற்றுக்கான எனது பதில்களும் மட்டுமே பத்திரிகையில் வெளிவந்தன. இக்கேள்விகள் அனைத்தும் (23ம்) பேட்டிகண்ட எஸ். மல்லிகா என்பவரால் கேட்கப்பட்டவை.

1. தங்களைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்?

யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவன். நல்லூர் மங்கையர்க்கரசி வித்யாசாலை, யாழ் இந்துக் கல்லூரி, யாழ் பல்கலைக் கழக விஞ்ஞானபீடம் மற்றும் உயர் பட்டப் படிப்புகள் பீடம் என்பவற்றின் மாணவன். ஆசிரியனாகத் தொடங்கி இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக கடந்த பதினொரு ஆண்டுகளாக பணிபுரிபவன். எண்பதுகளின் இறுதிகளில் கவிதைத் துறையில்
காலடி எடுத்து வைத்துத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் என்ற பெருந் தெருவில் பயணிக்கும் ஒரு இளைய கவிப்பயணி.

2. தங்கள் எழுத்துலக மலர்வு பற்றிக் கூறுங்கள்
யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயிலும் போது இயல்பாக, திடீரென்று தோன்றிய எண்ணம் என்னைக் கவிதைத் துறையில் ஈடுபட வைத்தது. என் கவி மலர்வு எனக்கு ஒரு ஆச்சரியமாகவே நிகழ்ந்தது எனலாம். அதற்கு பின் என் பிரதான பாதை பயணம் அனைத்தும் கவிதைக்கென்றானது. கவிதைத் துறைதான் எனக்கும் என் வாழ்க்கைக்கும் பெருமை தேடித் தருவதாக அமைந்து விட்டது. இதுவே எனது அடையாளமாக தனித்துவமாக எனக்கு கிடைத்த பெரும் பேறாகவும் மாறிவிட்டது. நான் ஒரு கவிஞனாகப் பார்க்கப் படுவதையே பெரிதும் விரும்புகிறேன்.

3. கவிதைத் துறையில் தங்களைத் தட்டிக் கொடுத்தவர்கள் பற்றிக் கூறுங்கள்.

யாழ் இந்துக் கல்லூரி தமிழாசான் ச.வே. பஞ்சாட்சரம், நான் அவரிடம் தமிழ் பயிலாத போதும் என்னைக் கல்லூரி மட்ட கவியரங்குகளின் மூலம் கவிதைத் துறையில் அறிமுகஞ் செய்தார். கம்பவாரிதி இ. ஜெயராஜ் என் கவிதை பிரபலமான அரங்குகளில் ஜொலிக்க அங்கீகாரம் பெற்றுத் தந்தார். ‘சாளரம்’ சஞ்சிகை ஆசிரியர் கவிஞர் விவேக் என் கவிதையொன்றை முதலில் தன் சஞ்சிகையில் பிரசுரித்து வெளியிட்டார். கவிஞர் இ.முருகையன் ஒருசிஷ்யனாய் என்னை ஏற்று அணைத்துக் கவிதை நுட்பங்கள் கற்றுத் தந்தார். சிரித்திரன்’ சுந்தர், அறிஞர் சொக்கன், ஆசான் சிவராமலிங்கம் பிள்ளை, ஆறு திருமுருகன், அ.யேசுராசா, போன்றோர் என் ஆரம்பகால முயற்சிகளில் உதவினர். சஞ்சீவி, நமது ஈழநாடு, போன்ற பத்திரிகைகளும், சிரித்திரன், சுந்தரன், தாயகம், ஞானம், போன்ற சஞ்சிகைகளும், இதய சங்கமம், கவிதைக் கலசம் போன்ற வானொலி நிகழ்ச்சிகளும் என் ஆக்கங்களுக்குக் களந்தந்தன.

4. தங்களை மிகவும் ஈர்த்த கவிதைகள், கவிஞர்கள் பற்றிக் கூறுங்கள்.

என்னை ஈர்த்த கவிதைகள் எண்ணற்றவை ஏராளம். பட்டியல் போடப் பக்கங்கள் போதாது. இக்கணம் வரை நான் இன்னோரன்ன கவிதைகளுக்கு மாணவன், இரசிகன்.
என்னைக் கவர்ந்த கவிஞர்கள் பலர். கம்பன் வள்ளுவன் தொடக்கம் இன்றைய நவீன கவிஞர்கள் வரை பலரை நான் பயின்றிருக்கிறேன். பயின்றுகொண்டிருக்கிறேன். குறிப்பாக கம்பன், திருவள்ளுவன், மணிவாசகர், அருணகிரியார், பட்டினத்தார், பாரதி போன்ற என் முப்பாட்டன், பூட்டன், பாட்டன் தலைமுறைக் கவிஞர்கள் காலங்கடந்து இன்றும் என்னை ஈர்த்தபடி இருக்கிறார்கள். வள்ளுவன், கம்பன் கையாண்ட கவிதை நுட்பங்கள், பாடுபொருள் வீச்சு, அறம், எளிமை, கற்பனை, உவமை உருவகம், எவரும் புரிந்து கொள்ளக்கூடிய சொல்லாட்சிகள், என்றும் நிலைபேறடைந்து இன்றும் சமூகத்திற்கு வழிகாட்டிப் பயன்படும் தன்மை, என்பவை எனக்கு பெருவியப்பைத் தந்தபடி உள்ளன.
ஈழத்தில் மஹாகவி, முருகையன், புதுவை இரத்தினதுரை, சோ.பத்மநாதன், கல்வயல் குமாரசாமி, சு.வில்வரத்தினம், வ.ஐ.ச ஜெயபாலன், சேரன், சண்முகம் சிவலிங்கம், சி.சிவசேகரம், சோலைக்கிளி, கருணாகரன், ப.அகிலன், ச.முகுந்தன், அனார், தி.திருக்குமரன், போன்றோர் என்னை ஈர்த்திருக்கிறார்கள். தமிழகத்தில் கவியரசு கண்ணதாசன், பசுவையா, வைரமுத்து, சுகுமாரன், மனு~புத்ரன், இந்திரன், சல்மா, மாலதி மைத்ரி, யுவன் சந்திரசேகர், போன்றோரும் என்னை ஈர்த்தவர்கள். இவர்களில் சிலரின் தாக்கம் அல்லது பாதிப்பு என் கவிதைகளிலும் இருக்கலாம்.
மஹாகவி, புதுவை இரத்தினதுரை, சோ.பத்மநாதன் போன்றோரின் ஆற்றொழுக்கான, பேச்சோசைப் பாங்கான, கவிதை நடையில் எனக்கு அலாதியான ஈடுபாடு உண்டு. சோலைக்கிளியின் அதீத கற்பனை, புதுப்புதுப் படிமங்கள், கவிதை நோக்கு, என்பனவும் என்னைக் கவர்ந்தவை. சு.வி, வ.ஐ.ச ஜெயபாலன், சேரன் ஆகியோரும் தனித்துத் தெரிபவர்கள். ஈழத்து இசைப் பாடல்களில் காசி ஆனந்தன், புதுவை ஆகியோர் என்னைக் கவர்ந்தவர்கள்.

5. தங்கள் முதலாவது கவிப் பிரசவம் தங்களுக்குள் எத்தகைய உணர்வலையை எழுப்பியது?

விளையாட்டாகத் தான் எனது முதலாவது கவிதைப் பிரசவம், பிரவேசம் நிகழ்ந்தது. அது இன்றுவரை தொடரும் ஒரு வினையாக (கவிதைச் செயற்பாட்டாக) நீளும் என்று அன்று நான் நினைத்தே இருக்கவில்லை.

6. ஒரு சிறந்த கவிதைக்கு இருக்க வேண்டிய பண்புகள் எவை என்று நினைக்கிறீர்கள்?

கவிதை கடவுள் போன்றது. அதை இலகுவில் இப்படித்தான் இருக்கும் என்று எவரும் புரிய வைக்க முடியாது. நல்ல கவிதையை உணர்ந்து தான் அனுபவிக்க முடியும். கடவுளுக்குப் போல் கவிதைக்கும் முடிந்த முடிவான எல்லோரும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட வரைவிலக்கணத்தை இதுவரை யாரும் வகுத்து விடவுமில்லை. இதுவே பலருக்கு வாய்ப்பாகவும் போய்விடுகிறது.
முதலில் கவிதை கவிதையாக இருக்க வேண்டும். கவிதை ஒரு ஆச்சர்யமாக, மனதில் தோன்றும் திடீர் மின்னல் பளிச்சீடு போல, மனதை வசப்படுத்தி உணர்ச்சி மயமாகி நம் உணர்வுகளை வழிப்படுத்துவதாக, புதுமையான கற்பனைகளைக் கொண்டதாக, “இப்படி நான் பார்க்க – நினைக்கவில்லையே” என்ற வியப்பை ஏற்படுத்துவதாக, ஓசை ஒத்திசைவூடாக செவி வழி புகுந்து இதயத்தை மலரச் செய்வதாக, கவிதையின் பல்வேறு சோடனை மூலங்களான உவமை, உருவகம், படிமம், குறியீடு, என்பன தேவைக்கேற்ப இடம் பொருள் ஏவல் அறிந்து பயன்படுத்தப் படுவதாக, வாழ்வின், உலகின், இயற்கையின் மறைந்திருக்கும் புதிர்களை அவிழ்த்து விடுவிப்பதாக, உண்மைகளை உரத்துரைப்ப தாக, பிறர் அறியாத ஒன்றை அறியவைக்கும் ஒரு கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும் எனலாம். தேவைக்கேற்ப அது கருத்துரைக்கும் தளமாகவும் ஒரு பிரசார ஊடகமாகவும் திகழலாம். சைவ சமயத்தின் பக்தித் தேவாரங்கள், பாரதியின் பல கவிதைகள், திராவிட எழுச்சிக்கால கவிதைகள் என்பன ஒருவகையில் பிரசாரங்களே.
கவிஞனும் ஒரு விஞ்ஞானி தான். அவன் வாழ்க்கை, உலகம், இயற்கை காலம் என்பன மறைத்து வைத்திருக்கின்ற எண்ணற்ற புதிர்களை உண்மைகளைத் தன் நுண்ணுணர்வால் கண்டறிந்து சாதாரண மக்களும் அவற்றை அறியச் செய்கிறான்.
இவ்விடத்தில் அண்மையில் இணையத்தில் வாசித்த இன்றைய கவிதை தொடர்பான, அன்பர் ஒருவரின் கூற்றும் மனங்கொள்ளத் தக்கது. அவர் கூறுகிறார். “ஓசை நயமோ சொற்சுவையோ இல்லாத பொருட்சுவையும் வித்தியாசமான கற்பனையும் நிறைந்த புத்திசாலித்தனமான வாக்கியங்களைக் கொண்ட உரைநடையை நான் கவிதை என்று ஏற்றுக் கொள்வதில்லை. கவிதையில் மறைபொருள் இருக்கவேண்டும் வாசகன் யோசித்து அனுபவிப்பதற்கு ஏதாவது இருக்க வேண்டும் என்ற ஒரு விதியை மட்டும் கொண்ட உரைநடை கவிதையாகிவிடாது.” என்று.

7. ஒரு படைப்பாளி சுதந்திரமாக இயங்குவதாக நினைக்கிறீர்களா?

இன்றைய உலகியல் நடைமுறையில் ஒரு படைப்பாளி முற்று முழுதாக சுதந்திரமாக இயங்குவது என்பது கடினமே. இங்கு சுதந்திரம் என்பதன் வரையறை என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. எனது சுதந்தரம் என்பது எனது கைத்தடியை முன்நிற்கும் ஒருவனின் மூக்கைத் தாக்காமல் சுழற்றுவது மட்டுமே.
இன்று கவிதையை மட்டுமே, வாழ்க்கையாக, வாழ்வாதாரமாக கொண்டவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம். அன்று மன்னவர்கள் புரவலர்கள் புலவர்களை போற்றிப் பாதுகாத்தார்கள். இன்று? இந்நிலையில் முழுச் சுதந்திரத்தோடு, தன் கருத்தை விட்டுக்கொடாது, சமரசம் எதுவும் செய்யாது, படைப்பாளி சுதந்திரமாக இயங்குவது சந்தேகம்தான்.

8. விமர்சனங்கள் படைப்பாளிகளைச் செதுக்குகின்றனவா சோர்வடையச் செய்கின்றனவா?

நேர்மையான, நடுநிலையான, உண்மையான, தன் விருப்பு வெறுப்பைப் பாராத, விமர்சனங்கள் நிச்சயமாகப் படைப்பைச் செம்மைப் படுத்தும் என்று நம்புகிறேன். ஆனால் இன்று இத்தகைய விமர்சகர்களை, விமர்சனங்களைக் காணவே முடியாது. ஏதோ ஒரு பின்னணியுடன், அரசியலுடன், தான் சார்ந்த சமூகம், வட்டம், அமைப்பு, குழு, கொள்கை, கோட்பாடு, கருத்தியலை . அடிப்படையாகக் கொண்ட விமர்சகர்களே சகலரும். எனவே இவர்கள் போற்றிப் புகழ்கிறார்கள் என்றோ சேற்றை வாரி இறைக்கிறார்கள் என்றோ படைப்பாளி சஞ்சலம் கொள்ளத் தேவையில்லை. இவ் விமர்சனங்கள் காலத்தின் விமர்சனத்தின் முன் அர்த்தமற்றவையே.
மேலும் ஒரு கருத்தியலை அடிப்படையாக மட்டும் கொண்டு, ‘அந்தக் கண்ணாடியை மட்டும்’ போட்டுக் கொண்டு, செய்யப்படும் விமர்சனங்களும் அபத்தங்களாகவே மாறுகின்ற அபாயம் உள்ளது. மார்க்சிசம் அல்லது நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்று கொண்டு அந்த அந்தக் கோட்பாடுகளில் ‘இவை இவை’ இருக்க வேண்டும் என்றும், ‘ஒரு பொதுவான இலக்கியப் படைப்பில்’ ‘அவை அவை’ இல்லை என்றும், எனவே அது “படைப்பே இல்லை” என்றும் விமர்சிப்பது எப்படிப் பொருத்தமானதாக இருக்கும்? இது அந்தப் படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தை மறுதலிக்கும் கைங்கரியமாகத்தான் இருக்கும்.
இன்று ஒரு கோட்பாடு கோலோச்சும். நாளை முற்றிலும் தலைகீழான கோட்பாடு ஒன்று தூக்கிப் பிடிக்கப்படும். அப்போது இன்றையது பரிகசிப்புக்குரியதாக மாறிவிடும். இன்று தமது மேதாவித் தனத்தைக் காட்ட எதையெதையோ எங்கெங்கோ இருந்து உருவி எடுத்து எழுதிவிட்டு அதை விளக்குமாறு கேட்டால்… கேட்டவர்கள் முட்டாள்கள், அவர்களுக்கு விளக்கம் குறைவு, என்ற ரீதியில் மட்டந்தட்டி கேட்பவர்களின் வாயை மூடச் செய்து தம் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் விமர்சகர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறான விமர்சகர்கள் தான் பொய்யான, போலியான, இருண்மை மிகுந்த, செயற்கையான, உயிர்ப்பற்ற, மண்ணோடு ஒட்டாத, படைப்புக்கள் தோன்றக் காரணமாகின்றனர் என்பேன்.

9. தற்போதைய எழுத்தாளர்கள் மீதான தங்கள் பார்வை எவ்வாறுள்ளது?

இன்றைய எழுத்தாளர்களிடம் நவீன தொழில்நுட்ப அறிவு இருந்த போதும் பரந்த வாசிப்புப் பழக்கம் இல்லை என்ற பொதுவான குற்றச் சாட்டு முன்வைக்கப் படுகிறது.
தமிழ்க் கவிதையை எடுத்துக் கொண்டால் எமது கவிதைப் பாரம்பரியம் மிக நீண்டது. செழுமையானது. இதைப் பற்றிய ஆகக் குறைந்த பட்ச அறிவு, அறிமுகம் இவர்களிடம் இல்லை. இவற்றை முழுமையாகப் புறக்கணித்து அல்லது மறுதலித்து இளையோர் பலர் அனேகமாக நவீன கவிதை எழுதுகிறார்கள். எமது பாரம்பரியமான கவிதைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எப்போதும் சொன்னதில்லை. ‘கொள்வன கொண்டும் அல்லன விலக்கியும்’ நாம் முன்னேற வேண்டும்.
மாக்சிசம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்றவை வெளி நாடுகளுக்குரியவை. அங்கிருந்து இங்கு இறக்குமதியானவை. ‘அமெரிக்கன் மா எப்படி எங்கள் அடுப்படி வரை வந்து எங்கள் பாரம்பரிய மாவகைகளை முற்றாக இல்லாமல் பண்ணி அவ்விடங்களை நீக்கமறக் கைப்பற்றிக் கொண்டதோ’ அதுபோல இப் பிறநாட்டுக் கோட்பாடுகளும் எங்கள் பாரம்பரிய கலை கவிதை முறைமைகளையே ஓரங்கட்டியிருக்கின்றன. “எங்களிடம் கலை, கவிதைகளே இல்லை” என்று முடிவு கட்டுகின்றன. இதற்கு எங்கள் கல்வியாளர்களும் துணை போகிறார்கள்.
மேற் சொன்ன கோட்பாடுகள் அந்தந்த நாட்டுச் சூழல், அவர்களின் வாழ்க்கை முறைமை, கலாசாரம், என்பவற்றுக்குரியவை. அவற்றை அறிந்து அவற்றின் புதுமைகளை, எமக்குப் பிரயோசமானவற்றை தேர்ந்து கொள்வது, அவர்களின் நாமறியாத சிந்தனைகளை, உத்திமுறைகளை உள்வாங்குவது வேறு. ஆனால் அவற்றை ‘அடிமை மனப்பாங்கில்’ அப்படியே படியெடுத்து நாம் எமது வாழ்க்கை முறைக்கு அவற்றை வலிந்து பொருத்திக் கொண்டு அவற்றை அடிப்படையாக கொண்டு நமது படைப்புக்களைப் படைத்து, எங்களுக்குரிய எங்கள் வாழ்க்கை கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற கலை கவிதை முறைமைகளை முற்றாக தீண்டத் தகாதவைகள் என்று ஒதுக்குவது வேறு. இந்த மனப்பாங்கு தானே இன்று அனேக இளையோரிடம் கோலோச்சுகிறது. இது எந்த வகையில் நியாயமானது? இதை இன்றைய எழுத்தாளர்கள் புரிவதாக இல்லை.

10. ஆரோக்கியமான கவிதைகளுக்கு இணையத்தளங்கள் வழிசமைப்பதாக நினைக்கிறீர்களா?

ஆம். இன்று கவிதைகள் அச்சு ஊடகங்களைத் தாண்டி இணைய வெளியில் பரவலாக பதிவிடப் படுகின்றன. பார்க்கப்படுகின்றன. இரசிக்கப் படுகின்றன. ஒரு சஞ்சிகையின் பத்திரிகையின் பரவலுடன் ஒப்பிடும் போது இணைய வெளியின் பரவல் உடனுக்குடனானது, மிகவும் பரந்தது. வியாபகம் மிக்கது. ஒலி ஒளி வடிவங்களை உள்ளடக்கியது. பின்னூட்டலுடையது. செவிவழி பேச்சுவழியிலிருந்து அச்சுவழியில் இயங்கிய கவிதை இணைய வழியிலும் தனக்கான வடிவங்களைத் தீர்மானித்து தன்னை ஸ்திரப்படுத்துவது அவசியம். இது இன்றைய நவீன யதார்த்த சூழலில் கவிதை தன் தொடர்ச்சியைப் பேணிக் காத்துக் கொள்ளவும் உதவும். எனது கவிதை தொடர்பான விடயங்களை என் இணையத் தளமான றறற.வாயயெதநலயளநநடயn.உழஅ இல் பார்வையிடலாம்.

11. தாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் களம் கவிதைக்கான சூழலைத் தருகிறதா?

எங்குதான் கவிதைக்கான சூழல் இல்லை? எங்கும் எதிலும் எப்போதும் கவிதைக்கான சூழல் அமைந்து தான் உள்ளது. நாம் தான் அவற்றைக் கண்டு கொள்வதில்லை. கவிஞனின் சிறப்பியல்பே எங்கும் எதிலும் மறைந்து புதைந்து ஒளிந்திருக்கும் கவிதையை தன் நுண்பார்வை, நுண் அவதானம், அனுபவம் மூலம் கண்டுபிடித்து சாமானியர்களும் அறிய வழங்குவதுதான். எனது பணிக்களத்தின் பிரதான பங்காளிகள் பொதுமக்கள். அரச சபைகளிலும் பண்டித பவனிகளிலும் சிறைப்பட்ட கவிதை இன்று மக்களிடம் தானே விடுவிக்கப் பட்டுள்ளது என்கிறோம். எனவே என் பணிக்களமும் கவிதைக்கான பரந்து விரிந்த தளம் என்று உணர்கின்றேன். இதுவே பல கவிதைகளுக்கான தோற்றுவாயாகவும் மாறியிருக்கிறது. எனினும் சில நேரங்களில் என் பணிச்சுமையானது எனைச்சூழும் கவிதைத் தருணங்களை, நான் உணரும் இனங்காணும் கவிதைப் பொறிகளை, அவை தம் முழு வடிவைப் பெறக்கூடியதாக நான் அடைவைக்க முடியாமல் கருக்கலையச் செய்துமுள்ளன என்பதும் உண்மை.

12. எழுத்தாளர்களிடையே நிலவும் ‘தமிழ்க் கொலைகள்’ பற்றி என்ன கூறுகிறீர்கள்?

முன்பு பெரியோர்கள், ஆசிரியர்கள், விமர்சகர்கள், மிகுந்த தமிழறிவுடையவர்களாக இருந்தனர். அவர்கள் இளையோரைத் திருத்தினார்கள். அவ் அறிஞர்களுக்கு எல்லோரும் பயபக்தியுடன் நடந்தார்கள். ஆனால் இன்று இலக்கிய ஜனநாயகச் சூழல் அவ்வாறு இல்லை. “எல்லாம் எமக்குத் தெரியும்” என்ற கோதாவில் இறங்கும் பலருக்கு அடிப்படைத் தமிழறிவோ, மொழித் தேர்ச்சியோ, நல்ல சொற் களஞ்சியமோ, மொழியுடனான அனுபவமோ இல்லை. இவர்களின் தமிழ் இலக்கண இலக்கிய பயிற்சி, தேடல் என்பன பூச்சியந்தான். ‘பயில் தொறும் நூல்நயம்’ என்றார்கள் நம் முன்னோர். எதையும் பயிலாமல் எதையும் அறிய முயலாமல் “எப்படியும் எழுதலாம் எவரும் எதையும் கேட்க முடியாது. இதுதான் கட்டுடைத்தல், வடிவத்தைச் சிதைத்தல்” என்ற ரீதியில் தங்கள் தமிழறிவு வரட்சியை மறைத்து தங்கள் தமிழைக் கொன்ற படைப்புகளே நவீன தமிழ்ப் படைப்புக்கள் என்கின்ற மாயை நிலையை இவர்களில் சிலர் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் கூறுபோட்டு விற்க தமிழ் அவ்வளவொன்றும் அற்பமான மொழியல்ல என்பதுதான் தமிழின் பெருமை. எமது தமிழ் இலக்கிய வரலாற்றின் வௌ;வேறான காலகட்டங்களில், சுமார் 1000 ஆண்டுகள் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாது இருந்த, பிற மொழி சமயங்களின் ஆதிக்கங்களின் பின்னரும் கூட தமிழ் தமிழிலக்கியம் தன்னைத் தக்கவைத்து தற்காத்துக் கொண்டதுடன் தன்னை அவ்அவ் காலங்களிற்கு ஏற்ப வளர்த்துக் கொண்டது என்பதும் வியப்புக்குரியது. தமிழ் இன்றைய காலத்திலும் தன்னை ‘இற்றைப்படுத்தி’ புதுப்பித்து உயிர்ப்போடு தன் அடையாளங்கள் அழியாமல் தன்னைக் காத்துக் கொள்ளும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. ஏனென்றால் தமிழும் ஒரு இயற்கையின் மொழியாம்.

13. மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் இடையே காணப்படும் நுண்ணிய வேறுபாடுகள் எவை?

சில வேறுபாடுகள் உண்டு. இவற்றில் முக்கியானது ஓசைப்பண்பு. அடுத்தடுத்த சொற்களுக்கு இடையில் ஓசை ஒழுங்கு செம்மையாக வருகின்ற போது அதற்கென்று தனித்துவமான ஓசைச்சுவை தோன்றும். இந்த மொழியின் இயல்பான ஓசை நுட்ப ஒழுங்கு படுத்தலை நமது முன்னோர்கள் அடையாளம் கண்டு கவிதை இலக்கணமாக வகுத்திருக்கிறார்கள். இவ் ஓசைப்பண்பு அந்தந்தக் கவிதைகைளை அவற்றின் அடுத்த தளங்களிற்கு நகர்த்தி என்றென்றும் கவிதைகளை வாசகர் மனதில் பதிய வைத்து ஞாபகத்தில் நிலைக்கச் செய்கிறது. இது கவிதையை அசையும், பரவிப் பாய்ந்து சென்று தொற்றும், தன்மையுடையதாக மாற்றுகிறது. ஆனால் ஓசை வழிப்படாத வெறும் சிந்தனை வயப்பட்ட கவிதை இறுகி உறைந்து போய்விடுகிறது.
செவிவழி கவிதை கேட்ட காலம் போய் அச்சுயுகத்தில் கவிதைக்கு ஓசைப்பண்பு அவசியம் இல்லை என்பது புதுக்கவிதையாளர்களின் முடிவு. ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்றார் திருவள்ளுவர். கவிஞர் முருகையன் “நாம் காதுகளை கழற்றி விட்டோமா செவியின்பத்தை நுகராமல் தவிர்க்க” என்று கேட்பார்.
இடைக்காலத்தில் கவிதைக்குரிய பல பண்புகள் கைவிடப்பட்டு வெறுமனே ஓசைநயம் மட்டும் தமிழ்க் கவிதைகளில் முன்னிறுத்தப் பட்டமையால், மேலோங்கியமையினால் மரபுக் கவிதையின் செல்வாக்குக் குறைந்தது என்று சொல்வாரும் உளர். அதில் உண்மையும் உண்டு. ஆனால் இது அக்காலக் கவிஞர்களின் குறையே தவிர மரபுக் கவிதைகளின் குறையல்ல.
இன்று புதுக்கவிதைகளில் கையாளப்படும் புதிய உத்தி முறைகளுடன் கவிதையின் அடிப்படையான அவ்அவ் உணர்வுகளுக்குரிய ஓசைப் பண்புகள் சங்கமிக்கும் போது தோன்றும் கவிதையின் பரிமாணம், வீச்சு வேறானதாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். இதைத்தான் கவிஞர் முருகையனும் “கவிதை மரபுக் கவிதையாகவும் இருக்க வேண்டும் அதே நேரம் புதுக்கவிதையாகவும் இருக்க வேண்டும்” என்;று கூறிச் சென்றார்.
ஆனால் இன்று குழு மயப்பட்டு, யாரையோ பார்த்துப் படியெடுப்பதே படைப்பென்று, வௌ;வேறு தனித்துவமான மொழிக் கலைகளின் மீதான உலகமயமாதலின் ஆதிக்கத்தைப் பற்றிய புரிதலற்று, எமது தனித்துவங்களை அடையாளங்களை மரபுரிமைகளை ( இவையும் எமது மரபுரிமைகள்தான்) போற்ற வேண்டும் என்ற சிந்னையற்று புதுக்கவிதையாளர்கள் அல்லது நவீன கவிதைக் காரர்கள் என்போர் ஓசைப்பண்பை வலிந்து புறக்கணிக்க வேண்டும் அது தீண்டத்தகாதது என்கிறார்கள்.
இவ்விடத்தில் தமிழகக் கவிதைகளில் இல்லாத ‘பேச்சோசை’ மரபொன்று ஈழத்துக் கவிதையின் தனித்தன்மை மிக்கதாக விளங்குவதைக் கூறியே ஆகவேண்டும். மஹாகவி, முருகையன், புதுவை, சோ.ப, கல்வயலார் போன்றோர் அதனை வளர்த்தெடுத்தனர்.
மேற்படி ஓசைப் பண்பு என்பதற்கு மேலாக உவமை, உருவகம், படிமம், குறியீடு, போன்றவற்றைப் பயன்படுத்தும் முறைமைகளிலும், பாடுபொருள், உத்திகளிலும் மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையில் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.

14. தங்கள் கவியரங்க அனுபவங்கள் பற்றிக் கூறுங்கள்?

1992 இல் இருந்து கவியரங்குகளில் பங்குகொள்கிறேன். எனது கவிதையுடனான தொடர்பு கவியரங்கங்களுடன் தான் தொடங்கியது. இதுவரை ஈழத்தின், தமிழ்நாட்டின் சிறந்த கவிஞர்களின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்கெடுத்துள்ளேன். கவிதைகளை எழுதி வாசிப்பதிலும் பார்க்க அவற்றை ஏற்ற இறக்கங்களுடன் அவற்றிற்குரிய உணர்ச்சிகளுடன் சொல்லும் போது அது இலகுவாக சுவைஞர்களைக் கவர்ந்து அவர்களைத் தொற்றி அவர்களுக்கு மனப்பாடம் ஆகியும் விடுகின்றது. வெறும் சொற்சிலம்பங்களும், வார்த்தை ஜாலங்களும், மலினமான பகிடிகளும் கொண்ட கவியரங்குகள் கடந்த கால கவியரங்குகளின் தகுதியை குறைத்திருக்கின்றன. ஆனால் இன்று நல்ல தரமான கவியரங்குகள் பெரும் வரவேற்பைப் பெறுவதோடு சாதாரண இரசிகர்களைக் கூட கவர்ந்திழுக்கின்றன. நடைமுறை வாழ்வுப் பிரச்சனைகளின் குறுக்குவெட்டுகளைக் காட்டுகின்றன. கவிதையை சமூக மயமாக்குகின்றன.

15. கவிதைத் துறை தவிர்ந்த தங்களின் ஏனைய கலையார்வங்கள் பற்றிக் கூறுங்கள்?

இளம் வயதில் சித்திரம் வரைவதில் நாட்டமிருந்தது. இலயஞான சுரபி என். சிதம்பரநாதன் அவர்களிடம் மிருதங்கம் நான்காம் தரம் வரை பழகியிருந்தேன். பாடகனாகவும் முயன்றிருந்தேன். விளையாட்டுத் துறையிலும் ஆர்வமிருந்தது. இவற்றைத் தொடர முடியவில்லை. இவை எனக்கு வாலாயமாகவில்லை. தற்போது கவிதையை விட கர்நாடக, மெல்லிசை, சினிமா இசை, என இசைத்துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆனால் இசையறிவு எனக்கில்லை. இரசனை மட்டும் தான். சினிமா இசைதான் என்றாலும் இசைஞானி இளையராஜாவின் இசையின் விசுவாசி நான். தற்போது கவிதையும் இசையுமே என் வாழ்வின் கணிசமானதைத் திருடிக்கொண்டிருக்கின்றன.

16. கலைப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எவை?

சவால்கள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்று இருந்ததுண்டு. எனக்கு கவிதையே வாழ்க்கை. அதுவே சுவாசம். என் கவிக் கொள்கை, இலக்கிய நேர்மை, கவிதை தொடர்பான எனது கருத்து, நம்பிக்கை, அதற்கான விசுவாசம், என்பவற்றை கடைப்பிடிக்கும் போது வரும் சவால்களுக்கு முகங்கொடுக்க இயற்கையும் இறையருளும் எனக்கு உதவும் என்று திடமாக நம்புகிறேன்.
இன்று ஈழத்திலும் வெளியிலும் இலக்கியத்துறை ஆரோக்கியமாக இல்லை. தனிமனித துதிபாடல்களும் தூற்றுதலும், குழு அல்லது வட்டம் சார்ந்து இயங்கும் தன்மையும், தமக்கிடையே ஒருவருக்கொருவர் முதுகு சொறிதலும், அல்லது இவர்களுக்கிடையான மோதலும் சாடல்களும் தான் எங்கும் மலிந்துள்ளன. இலக்கியத்தில் கவிதையில் பல்வகைத் தன்மை (னiஎநசளவைல) உண்டென்பதை ஏற்க மறுத்தலும், எல்லோரும் ஒரே மாதிரித்தான் “இப்படித்தான் இலக்கியம் படைக்க, கவிதை புனைய வேண்டும்” என்ற அதட்டலும், படைப்பாளிகளிடையே புரிந்துணர்வு சகிப்புத்தன்மையற்ற போட்டியும், காணப்படுகின்றன.
இலக்கியத்தில் கவிதையில் கருத்து கொள்கை ரீதியான வேறுபாடுகள் தனிப்பட்ட பகைமைகளாகி பகைவர்களாகி இன்று படைப்பாளிகள் சிதறுண்டு கிடக்கிறார்கள். ஒருவரின் படைப்பை மற்றவர் பார்ப்பதில்லை. ஏற்பதில்லை. அதிலுள்ள நல்ல விடயங்களையேனும் இரசிப்பதில்லை. ஒட்டு மொத்தமாக “ஒன்றுமே இல்லை” என மறுதலிக்கிறார்கள். அல்லது “இதுதான் தெய்வம் என்று வணங்கிக் கொண்டாடுகிறார்கள்.”
இன்றும் உயிர்பிரியாத சாதியத்தில் உள்ளதை விட அடாவடிகளும், சண்டித்தனங்களும், வசைபாடல்களும், புறக்கணிப்புகளும், ஒதுக்குதலும், தீண்டாமையும் இன்று இலக்கியத் துறையில் மலிந்திருக்கிறது. இந்த ஆரோக்கியமற்ற சூழலும் சவாலே.

17. கலைப் பயணத்தில் தாங்கள் பெற்றுள்ள பட்டங்கள் பரிசுகள் பற்றிக் கூறுங்கள்?

கவிதைகளுக்காக பல பாராட்டுகள் பரிசுகள் பெற்றுள்ளேன். அவற்றைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. என் நூல்களுக்கான விருதுகளை அவற்றுக்கான அங்கீகாரங்களாக கருதுகிறேன். 2004 ல் வெளிவந்த என் இரண்டாவது நூலான ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ அமரர் சுஜாதா அவர்களால் 2004ல் ‘ஆனந்த விகடன்’ சஞ்சிகையில் ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் அவ் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலாக தெரிவு செய்யப்பட்டது.

18. தங்கள் ஆன்மாவைத் தொட்ட கவிதைகளை எழுதியுள்ளீர்களா?

நானாக நினைத்துத் திட்டமிட்டு எந்தக் கவிதையையும் எழுதியதில்லை. அவை அவை அந்தந்த நேரத்தில் அப்போதைய மனநிலையில் வந்தவையே. அவற்றில் பல எனக்கு வியப்பைத் தந்தன என்பதும் உண்மை. பல ஆன்மாவை வருடியிருக்கின்றன. எனினும் முழுமையான நிறைவான கவிதையொன்றை எழுதியதாக நான் நினைக்கவில்லை. அதைப் பற்றிய தேடலே என்னை இக்கணம் வரை இயக்குகிறது. எழுத வைக்கிறது என்று நம்புகிறேன். இந்த எண்ணத்தின் சாரமே என் மூன்றாவது கவிதைத் தொகுதியான ‘எழுதாத ஒரு கவிதை’ என்பதன் மகுடமானது.

19. எவ்வாறான சூழ்நிலைகளில் தங்களுக்கு கவிதைகள் கருக்கொள்கின்றன.?

எத்தகைய சூழல்களும் கவிதைகளைத் தோற்றுவிக்கும் கருப்பைகள்தான். எத்தகைய சூழலிலும் எந்நேரத்திலும், எவ்வேளையிலும் கவிதைக்கான ஒரு எண்ணப்பொறி, பளிச்சீடு தோன்றலாம். இன்னின்ன நிபந்தனைகள் இருந்தால்தான் கவிதை கருத்தரிக்கும் என்ற கருத்துடன் நான் உடன்பட மாட்டேன்.

20. மிகவும் திருப்தியைத் தந்த தங்கள் கவிதை எது?

எனது எல்லாக் கவிதைகளுமே ஏதோ விதத்தில் எனக்குப் பிடித்தமானவை தான். எனது ஒவ்வொரு கவிதையுமே இன்னொரு என் கவிதையின் பிரதியாக, வேறொன்றின் சாயல் கொண்டதாக இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறேன். ஒரு கவிதையில் ஒரு சொல் மீண்டும் மீண்டும் வருவதே எனக்கு நெருடலாகத் தோன்றும். இவ்விடயங்களை எழுதிய கவிதைகளை செப்பஞ்செய்யும் சந்தர்ப்பங்களில் கவனிக்கிறேன். எவருமே எவருக்கும் பிடிக்காத, எவருக்கும் பயனற்ற, கூடாத கவிதையை எழுத முயல மாட்டார்கள். நூறு வீதம் திருப்தியை தந்த கவிதையை இன்னும் நான் எழுதவில்லை.

21. தற்போதும் எழுதிக்கொண்டிருக்கிறீர்களா?

இது தற்போதும் சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா எனக் கேட்பதுபோல இருக்கிறது. சுவாசமில்லாமல் உயிரா? கவிதையில்லாமல் நானா?

22. தாங்கள் எழுதுவதற்கு பிரதேச செயலர் என்ற பதவிப் பொறுப்பு தடையாக இருந்ததில்லையா?

எனது சிந்தனைச் சுதந்திரத்திற்கு எனது பதவி தடைபோட முடியாது. எனினும் என் கவிதையின் பாடுபொருள், கருத்து, வெளியீடு, பிரசுரிப்பு போன்றவற்றிற்கு எனது பதவி ஓரளவு தடையாக உள்ளதை உணர்கிறேன். அரச ஊழியர்கள் அரசியல் உரிமையற்றவர்கள் என்பர். எந்த அரசியலாக இருப்பினும் அரசின் பணியை நாம் மேற்கொள்ள வேண்டியவர்கள். ஆனால் அரசியல் இல்லாமல் கவிதை இல்லை. எனவே சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது தான். ஆனால் அதற்கும் சில குறியீடு, உத்திமுறைப் பரிகாரங்கள் உள்ளன. எனவே சமாளிக்கிறேன்.
பதவி பட்டம் தாண்டி என் கவிதை தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்பது என் அவா. பதவி பட்டங்களுக்கு வரையறைகள் கால எல்லைகள் உண்டு. இவற்றைக் கடந்து இந்த வரையறைகளுக்குள் சிக்காது என்கவிதை பார்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

23. இந்த நேர்காணலூடாக இளம் எழுத்தாளர்களுக்குத் தாங்கள் கூற நினைப்பது?

நான் முதிர்ந்த எழுத்தாளன் அல்ல. இளம், முதிர்ந்த எழுத்தாளர் என்ற வரையறை வெறுமனே வயதை மட்டும் கொண்டு செய்யலாமா என்ற சர்ச்சையும் அண்மையில் தோன்றியிருக்கிறது.
மீண்டும் சொல்கிறேன். தமிழ் மிகப் பெருஞ் சமுத்திரம். தமிழின் அதியுச்சமான கலைவடிவம் கவிதைதான். எம் கவிதைக்கு மிக நீண்ட செழுமைமிக்க பாரம்பரியம், ஒரு தொடர்ச்சி உண்டு. இப் பாரம்பரியத்தை உலகம் வியந்து போற்றுகிறது. இதனை நாம் அறியாதவர்களாக, அறிய அக்கறை இல்லாதவர்களாக, அறிய முயலாமல் இலகுவான வழிகளில் பிரபலம் தேட முயல்பவர்களாக இருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துகள், தேவைகள், சமூக அரசியல் வரலாற்றுப் பின்னணிகள், விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம். அவற்றை முன்னிறுத்துவதற்காக எமது மூதாதையரின் முன்னோரின் நீண்ட வரலாற்றை, தொன்மையை, பெருமைகளை மறுதலிக்க முடியாது. ஜப்பான் போன்ற நாடுகள் எவ்வளவு நவீனங்களை உள்வாங்கிய போதும் தமது தனித்துவங்களை மறந்ததில்லை. அதுவே இன்றுவரை அவர்களின் பெருமையுமாகியிருக்கிறது.
இன்றைய நவீன உலகின் உலகமயமாதலில் இதுவரை போற்றிப் புகழப்பட்ட ‘உடனடிப்’ பயன்களின், தயாரிப்புகளின், உற்பத்திகளின், விளைவுகளை அவற்றின் தீமைகளை தற்போது இனங்கண்டு அவற்றை தடைசெய்கின்ற களைந்தகற்றுகிற யதார்த்தச் சூழலில் வாழ்கின்றோம். நேற்றைய அறிவியல் இன்று குப்பைக்குள் செல்கிறது. நேற்றைய சில அமுதங்கள் இன்று நஞ்செனத் தடைசெய்யப் படுகின்றன.
வளர்ச்சியடைந்த மேற்கு நாட்டு நவீனர்கள் நமது (கீழைத்தேய) முன்னோர்கள் வாழ்ந்த இயற்கையுடன் இயைந்த வாழ்வின் சிறப்பை, வாழ்க்கை முறையை, உணர்ந்து அதை நோக்கி விரும்பித் திரும்ப நாங்களோ அவர்கள் அன்றே கழித்து விட்டவற்றை இன்று காவிக் கொண்டாடி அவர்களின் வியாபாரத்திற்குள் சிக்கி அவற்றின் அடிமைகளாகின்றோம்.
இன்று உலகில் அனேக இனங்கள் தங்கள் தனித்துவங்கள் அடையாளங்களைத் தொலைத்து விட்டு நிற்கின்றன. பல்தேசியக் கம்பனிகளின் கவர்ச்சியில், அரசியலில், அவர்களின் நுட்பமான சுரண்டலில், நாம் நம்மை இழந்துகொண்டிருக்கிறோம். நவீனம் முன்னேற்றம் என்பவற்றை தேடி எங்கள் பெறுமதிமிக்க தனித்துவத்தையே, இருப்பையே, அடையாளத்தையே இழந்து கொண்டிருப்பதை எவரும் உணர்வதாக இல்லை.
நான் பழைமை வாதியோ அல்லது புதுமைக்கு விரோதியோ இல்லை. எமது தனித்துவங்களை அடையாளங்களை சிதைக்காத புதுமைகளை நான் வரவேற்கிறேன். இளையவர்கள் இவற்றின் உள்ளர்த்தங்களை உண்மைகளைக் கண்டு அறிந்து தேர்ந்து தங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்.

Leave a Reply