மு.நாவலன் (பவித்திரன்) இன் கடிதம்

அன்புள்ள நண்பன் ஜெயசீலனிற்கு,

இன்றைய விழாவின் களிப்பில் முதல் பிரசவத்தின் இனிமையில் மகிழ்ந்திருப்பாய்! உனக்கு வாழ்த்து தரும்போது ‘கனவுகளின் எல்லையை’ நான் வாசித்திருக்கவில்லை. இன்று வாசித்தேன் வெகு அருமை! இது வெறும் புகழ்ச்சியில்லை. நான் கூட உன்னைப்போல் சிறப்பாக எழுதமாட்டேன். இதையிட்டு பொறாமைப் படவில்லை. உனது வளர்ச்சி கண்டு பெருமையடைந்தேன். சந்தோசம் கொண்டேன். நல்ல கவிஞன் ஒருவனைக் கண்டு கொண்ட பரவசம்! ஆனந்தம்! சுகமான ராகங்கள் – இதய வீணையின் இனிய அதிர்வுகள் – வசந்த காலத்தூறல்கள் – குரூர வசிகரங்கள் இலை உனது கவிதைகள் பற்றிய சுருக்கமான விமர்சனங்கள். ஆனால் ஒரு சில கவிதைகளில் பவுடர் (அலங்காரம்) கூடி விட்டது. சிலவற்றில் (ஓரிரு கவிதைகளில்) ஒன்றடியாக சொல்ல விழையும் – நெருக்கமாகப் போடப்பட்ட படிமங்கள் உண்டு. பெரும் பாலானவை என்னைக் கவர்ந்தன. ஆனாலும் முதற் குழந்தையின் அழகில், சிணுங்கலில் கை, கால், அசைவில், முகமலர்வில் பூரித்தேன்!
வளர்க வாழ்த்துக்கள்.

என்றும் இதயம் கனிந்த நட்புடன்
மு.நாவலன் (பவித்திரன்)