“யாழ் களரி” சஞ்சிகைக்கு வழங்கப்பட்ட நேர்காணல்

யாழ் களரி சஞ்சிகை மாசி 2018 இதழுக்கு வழங்கப்பட்ட நேர்காணல்

1.அரச மட்டத் தலைவர்கள், பணியாளர்கள் புதுத் தெம்புடன் விரைவுபட்டு செயற்பட உங்கள் எதிர்பார்ப்புகள் எவை?
அரச பணியாளர்கள் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று மக்களுக்காக சேவையாற்றப் பணிக்கப்பட்டவர்கள். எனவே அரச பணியாளர்களின் சேவை மக்களை நோக்கியதாக மக்களை முன்னிலைப் படுத்தியதாக இருக்க வேண்டும். அவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட கடமைகளை உரிய முறையில், உரிய நேரத்தில், வினைத்திறனுடனும் விளைதிறனுடனும், செய்தாலே போதுமானது. தனிமரம் என்றுமே தோப்பாகாது. எனவே ஒவ்வொரு பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்து தொலைநோக்குடன் மக்களுக்கு வகைசொல்லக் கூடியவர்களாக பணியாற்ற வேண்டும்.

2.இலக்கிய வாதியாய் உங்கள் பயண அனுபவங்கள்?

கணந்தோறும் ஒவ்வொரு அனுபவங்களை காலமும் இயற்கையும் தந்த படிதான் நகர்கிறது. அவற்றை மனிதர்கள் தாம் உணர்வதாக இல்லை. இலக்கியவாதி அல்லது ஒரு கலைஞன் இவ் அனுபவங்களை ஓரளவு உணர்ந்து புரிந்து தெளிந்து கொள்ளும் ஆற்றல் கைவரப் பெற்றவனாக விளங்குகிறான்.

இது எனக்கு ஒரு வாய்ப்பாகவும் அந்த அந்தக் கணங்களின் அனுபவங்களினூடாக வாழ்க்கையை இலக்கிய கண்ணாடி ஊடாக பார்க்கும் வசதியை வழங்கியதாகவும் இருக்கிறது.

இவ் இலக்கிய அனுபவத்தினூடாக நானடைந்த இன்பங்களும் துன்பங்களும், நன்மைகளும் தீமைகளும், வெற்றிகளும் தோல்விகளும் ஏராளம். இவ் அனுபவங்களாம் அனற்சுவாலைகளே என்னை நித்தம் புடம்போட்டு ஒளிர வைக்கின்றன எனத் திடமாக நம்புகிறேன்.

3.இப்பணித்தளத்தின் மூலம் மீண்டும் உயிர்பெற்று எழ கலைஞர்களுக்கான திட்டமிடல்கள் எவை?
கலைஞர்கள் வெறுமனே கலைகளைப் பிரசவிப்பவர்கள் மட்டுமல்ல. கலைஞர்களே காலத்தைக் கணிப்பவர்கள் கட்டமைப்பவர்கள். காலத்தின் விம்பங்களாக திகழ்பவர்கள். சமூகத்தில் பதிய சிந்தனை மாற்றங்களைத் தோற்றுவிப்பவர்கள். புதுமைகள் மலர ஊக்குவிப்பவர்கள். இயற்கையின் என்றென்றும் மாறாத உண்மைகளை விழுமியங்களை அவ்வப்போது உலகில் தோன்றி அவற்றை உணராத மானுடர்களுக்கு உணர்த்துபவர்கள். இவற்றையெல்லாம் கலைஞர்கள் என்போர் மனதிற் கொள்ள வேண்டும்.

இவற்றை நோக்கிய தேடலும் முயற்சியுமே ஒரு கலைஞன் காற்றில் அலையுண்டு மாயும் சருகா, இல்லை காலமெல்லாம் கலையாமல் வாழும் கல்வெட்டா என்பதனைத் தீர்மானம் செய்யும்.

ஒரு கலைஞனின் தேடல் மிக்க ஆத்மார்த்தமான கலை ஈடுபாடே அவனை சாகாவரம் பெற்றவனாக அல்லது காலத்தை வென்ற கலைஞனாக மாற்றிவைக்கும். இவ்வாறான கலைகளை, கலைஞர்களை எவரும் திட்டமிட்டு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வது போல தயாரிக்க முடியாது. திட்டமிட்ட கலைவளர்ப்பு கலைவார்ப்பு ‘இழைய வளர்ப்பு’ போன்ற ஒரே மாதிரியான, பிரதி செய்யப்பட்ட, உயிர்ப்பற்ற, செயற்கையான, படைப்புகளையே தோற்றுவிக்கும்.

எனவே கலைஞர்களை கலைஞர்களாக பார்க்கும், அவர்களின் ‘பல்வகைத் தன்மையைப்’ ஏற்று மதிக்கும், அவரவர்களின் தனித்துவ அடையாளங்களை பார்வைகளைக் கருத்துக்களை போற்றும், அங்கீகரிக்கும், மனப் பாங்கை செயற்பாட்டை வளர்ப்பதே கலைகளை, கலைஞர்களை உயிர்த்தெழ வைப்பதற்கான தீர்வுகள் என நம்புகிறேன்.

4.யாழ் மாநகரின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற டயஸ்போறா போன்ற வெளிநாட்டுப் பங்களிப்பு எந்த வகையில் உதவலாம்?

எமது வளங்களில் மிக முக்கியமான வளங்களில் ஒன்றாக புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பைக் கருதலாம். அவர்களின் பங்களிப்பு இல்லாது இருந்திருப்பின் போருக்குப் பின்னரான எமது மீண்டெழுகை இவ்வளவு சாத்தியமாகி இராது.
ஆனால், இதில் சில பாதக அம்சங்களும் உள்ளன. புலம்பெயர் உறவுகளின் நேரகாலம், பனி மழை, பாராத கடின உழைப்பை உறுஞ்சிக் கொண்டு தாய்நிலத்தில் சும்மா இருந்துகொண்டு சோக்குக் காட்டும் ஒரு தலைமுறையும், உழைப்பின் உண்மைப் பெறுமானத்தை உழைப்பின் களைப்பை சுகத்தை உணராத ஒரு சந்ததியும், இன்று உருவாகியுள்ளது. இது மாற்றப்பட வேண்டும்.

கடின உழைப்பால் கல்வியால் மாத்திரம் ஒருகாலத்தில் முன்னுதாரணமாக உயர்ந்து திகழ்ந்த ஒரு இனத்தில் இன்றைய இந்நிலை துரதிஸ்டவசமானது. எனவே சுமார் முப்பது வருடத்திற்கு மேலாக புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் அறிவும் அனுபவமும் திருவும் எம் குறைகளை நிரப்ப நிச்சயம் உதவும். உதவ வேண்டும் என்பேன்.
மேலும், புலம் பெயர்ந்து இன்று எம்மண்ணில் முதலீடு செய்யும் பலர் சுயநலத்தோடு தத்தம் பொருளாதாரத்தை இங்கு மேம்படுத்தவே முயல்வதாகப் படுகிறது. யுத்தத்தில் நொந்த சமூகம் சார்ந்து எமது இன முன்னேற்றம் கருதி உதவும் புலம் பெயர் உறவுகளை விரல்விட்டு எண்ணி விடலாம். இந்த நிலைமையும் மாற ஒருங்கிணைந்த செயற்பாடு விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என கருதுகிறேன்.

5.ஒரு விஞ்ஞானப் பட்டதாரி ஆகிய தாங்கள், கலைப் பயணத்தில் பிரபலமாக பேசப்படும் ஈழத்துக் கவிஞராக மிளிர ஊன்று கோலான, ஆர்வ மிகுதியாக அமைந்தது, எது என்பது பற்றி குறிப்பிடுவீர்களா?

விஞ்ஞானம் பயின்றவர்களுக்கு மட்டும் கூர்ந்து நோக்கும் தன்மையும் ஆர்வமும் தேடலும் அமையும் என்று கூற முடியாது. எனக்கு விஞ்ஞானக் கல்வியிலும் கலைத்துறையிலும் ஒரே நேரத்தில் சமாந்தரமான இயல்பான விருப்பம் ஏற்பட்டிருந்தது. அதனாற் தான் விஞ்ஞானப் பட்டதாரியாகவும் கலைஞனாகவும் ஒரே வேளையில் என்னால் பரிணமிக்க பயணிக்க முடிந்தது. எனது விஞ்ஞானப் பின்னணி எனது பார்வைக் கோணத்தில் என்னை அறியாமலேயே எனக்குள் செல்வாக்கு செலுத்தியும் இருக்கலாம்.

அனாலும் கவிதைத் துறையில் எனக்கு அதிகமான ஆர்வத்தை ஈடுபாட்டை ஏற்படுத்தியது, மன நெருக்கத்தைத் தந்தது, நவீன விஞ்ஞான ரீதியானதல்லாத எமது நீண்ட தொடர்ச்சியான மரபின் மீதான இயல்பான பற்று மற்றும் ஈர்ப்பும் விருப்பமுமே.

6.ஒரு கவிஞராக எமது சமூக இளையோருக்கு தாங்கள் கூற விளைவது?

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கலையுடன் தொடர்பு பட்டிருப்பது, அதனை பயில்வது, அதனை இரசிப்பது, அவரவரின் உடல் உள ஆரோக்கியத்துக்கு அவசியமானது என்பதனை இன்றைய நவீன விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ‘ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று எளிது’ என்பார்கள். எல்லாவற்றையும் எல்லோரும் செய்ய முடியாது. அவரவர்கள் தமக்கு இயல்பாகத் தோன்றும், நாட்டம் கொள்ளவைக்கும், கலைகளுடன் ஊடாடுவது அவரவரின் தனிப்பட்ட வாழ்வுக்கு நிச்சயம் உதவி புரியும்.

இன்றைய இளையோர் பலர் திசைமாறிப் போவதற்கும் எது சரியான உண்மையான கலை என்பதை அவர்கள் இனங்காணாதிருப்பதே காரணம் என்பேன். சரியான, உண்மையைப் பேசுகின்ற, வாழ்வை மனதை பக்குவப்படுத்தி மேம்பாடடையச் செய்கின்ற, அவரவர்களுக்கு இயல்பாக வருகின்ற, அவர்களுக்கு உண்மையான இரசிப்பை மகிழ்வை ஏற்படுத்துகின்ற, கலைகளை அனைவரும் பயில, இரசிக்க, உருசிக்கப், பழக வேண்டும்.

கலைகளின் அரசி கவிதை. உலக வரலாற்றிலும் தமிழர்களின் வரலாற்றிலும் கவிதை ஆற்றிய பங்களிப்பு மிக மிகப் பாரியது. அப்படியான எமது நீண்ட பாரம்பரியத்திலிருந்து இன்று வரையிலான கவிதைகளை பயில்வதும் இரசிப்பதும் அவற்றின் வழி செல்ல முயல்வதும் எமக்கும் எமது சந்ததிகளுக்கும் நிச்சயமாக பெரும் நன்மையைத் தந்தே தீரும்.

24.01.2018.