தினக்குரல் நேர்காணல் -28-04-2019

  1. கவிஞர் த.ஜெயசீலன் நாடறிந்த ஒருவர். உங்கள் கல்வி, உங்கள் குடும்பம் உங்கள் தற்போதைய தொழில் பற்றிக் கூறுங்கள்?
    நான் இதுவரை முறைசார்ந்து கற்றது கைமண் அளவைவிடச் சிறியது. அதைக் கற்க யாழ் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயம், யாழ் இந்துக் கல்லூரி, யாழ் பல்கலைக் கழக உயிரியல் விஞ்ஞான மற்றும் உயர் பட்டப்படிப்புகள் பீடம் என்பன உதவின. இதை விட எனைச் சூழ்ந்த சூழலிலிருந்து, சமூகத்தில் இருந்து, வாழ்க்கையிலிருந்து தினமும் கற்றவை கற்றுக் கொண்டிருப்பவை அனந்தம். என் தனிப்பட்ட குடும்பம் நானுட்பட நான்கு பேரைக் கொண்டது. ஆனால் எனது கவிக்குடும்பம் மிகப் பெரியது எண்ணிக்கை வரையறையற்றது. “ நமக்குத் தொழில் கவிதை” என்ற பாரதி போலத்தான் நானும். எனது ஆத்மார்த்தமான தொழில் கவிதைதான். உலகியல் வாழ்வாதாரத் தொழிலில் நான் நிர்வாக சேவை அதிகாரி.
  2.  மிக இள வயதிலேயே (இப்பவும் இள வயதுதான்) ஈழத்தின் பிரபல கவிஞர்களான முருகையன், சோ.ப ஆகியோர்களோடு தொடர்பை ஏற்படுத்தி கவிதைப் பயணம் செய்த உங்கள் அனுபவம் பற்றி கூறுங்கள்.
    பாரதியுடன் ஒப்பிடும் போது அவனளவு இளவயதில் நான் கவிதை புனையத் தொடங்கியிருக்கவில்லை. சுமார் 18 வயதில் கவிதை எழுதத் தொடங்கி கவிஞனாக அறிமுகமாகிய 20 ஆவது வயதிலிருந்து ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களான முருகையன், ச.வே. பஞ்சாட்சரம், புதுவை இரத்தினதுரை, சொக்கன், சோ.பத்மநாதன், கல்வயல் வே. குமாரசாமி, காரை செ. சுந்தரம்பிள்ளை ஜெ.கி. ஜெயசீலன், அ.யேசுராசா போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் அனுபவங்களும் அவர்கள் என்னில் ஏற்படுத்திய தாக்கங்களும் பல.
  3. மரபு, நவீனம் என இரண்டிலும் கவிதை புது மாதிரியான கவிதைத் தடங்கள் இட நகர்வு வாசகர்களின் மன விசகத்தில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அறிந்திருக்கிறீர்கள்?
    கவிதையில் மரபு புதுமை என்பன அவரவரின் விருப்பம் சார்ந்தது. என்னைப் பொறுத்தவரையில் கவிதையைக் கவிதையாகவே பார்க்கிறேன். “ ஒரு கவிதை மரபுக் கவிதையாகவும் இருக்க வேண்டும் அதே நேரம் புதுக் கவிதையாகவும் இருக்க வேண்டும்” என்ற முருகையனின் கூற்றோடு நான் உடன் படுவேன். தொன்மையான கவிதையின் அடிப்படைகள் (மரபுகள்) இல்லாமல் இன்றைய கவிதைகள் இல்லை. அதே நேரம் காலத்திற்கு ஏற்ப புதுமைகளான வடிவம் பாடுபொருள், நவீன உத்திமுறைமைகள் போன்றவற்றையும் கவிதைகள் உள்வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆக இது ஒரு இடையறாத தொடர்ச்சியுடையது. இது கவிதைக்கு மட்டுமல்ல சகல விடயங்களுக்கும் பொருந்தக் கூடியதே. மனிதன் தோன்றியதிலிருந்து சில அடிப்படையான வடிவம், இயல்புகள், குணங்களைக் கொண்டிருந்த போதும் அவன் காலத்திற்கு காலம் சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப பல்வேறு விடயங்களில் மாற்றங்களுக்கு உள்ளாகியும் வந்துள்ளான். இது போலவே கவிதையும் அமையும். அமைய வேண்டும் என்பேன். இவ்வாறு கூர்ப்புக்குள்ளாகி அந்தந்தச் சூழலில் தாக்குப்பிடித்து வாழும் கவிதை காலம் கடந்தும் வெல்லும். மற்றவை மறைந்தழிந்து விடும். இதுவே இயற்கையின் நியதியும் விஞ்ஞானமும் ஆகும்.
  4. இதுவரை வெளிவந்த உங்கள் கவிதைத் தொகுதிகள் எவை? கிடைத்த விருதுகள் எவை?
    ‘கனவுகளின் எல்லை’(2001), ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ (2004), எழுதாத ஒரு கவிதை(2013), புயல் மழைக்குப் பின்னான பொழுது(2014) இவை வெளிவந்த எனது கவிதைத் தொகுப்புகள். தொகுப்பாகாத பெரும் எண்ணிக்கையான தனிக் கவிதைகளும் கவியரங்கக் கவிதைகளும் என்னிடம் உள்ளன. விருதுகள் பல கிடைத்துள்ளன. 1993ல் அகில இலங்கைக் கம்பன் கழகம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் மூன்று பரிசுகளில் ஏதும் கிடைக்காத போதும் எனக்கு கம்பன் விழாக் கவியரங்கில் பங்குபற்ற கிடைத்த வாய்ப்பு, 1994 ல் அ.யேசுராசா நடத்திய ‘;கவிதை’ இதழின் கவிதைப் போட்டியில் கிடைத்த முதற்பரிசு , இன்று நான் ஆணையாளராக விளங்கும் யாழ் மாநகர சபை 1994 ல் நல்லூர் உற்சவ காலத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசாக கிடைத்த தங்கப் பதக்கம், யாழ் பல்கலைக் கழக விஞ்ஞான பீடத்தில் கற்ற போது மூன்று வருடங்களும் ‘விஞ்ஞான வார கவிதைப் போட்டியில்’ பெற்ற முதற் பரிசுகள், 2004 ல் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் அவ்வாண்டு வெளிவந்த எனது ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ கவிதை நூலை சிறந்த நூல் என ‘ஆனந்த விகடன்’ சஞ்சிகையில் தெரிவு செய்தமை, என்பன எனக்குக் கிடைத்த சில முக்கிய விருதுகள். எனது நூல்களுக்கும் சில விருதுகள் கிடைத்துள்ளன. விருதுகளை பெற வேண்டும் என்று அதற்கேற்ற திட்டமிட்டு நான் எனது கவிதைகளை எழுதுவது இல்லை என்பதால் பொதுவாக விருதுகள் பற்றி அதிகம் நான் அலட்டிக்கொள்வதில்லை.
  5.  குறியீடு, படிமம் பற்றிய சிறு விளக்கத்தை உதாரணங்களூடு தெளிவு படுத்துங்கள்.
    குறியீடு என்பது குறிப்பால் உணர்த்துவதில் இருந்து தோன்றியது என்பது என் கருத்து. நேரடியாக கூற முடியாத, தயக்கத்துக்குரிய, எளிதில் பூரண விபரணம் வழங்க முடியாத ஒரு விடயத்தை வேறு ஒன்றை அல்லது விடயத்தை குறியீடாக்கி விளங்கச் செய்தல். தமிழர்களுக்கு அவர்களின் வலிமை நிமிர்வு வீரத்திற்கு பனையைக் குறியீடாக கொள்வதும் ‘விசர் நாயும் போரும்’ என்ற கவிதையில் நான் போருக்கு விசர் நாயைக் குறியீடாக்கியதும் சில உதாரணங்கள். படிமம் என்பது ஒரு காட்சியை விம்பத்தை முழுமையாக உறையவைத்து சொற்களுக்குள் சிக்கவைப்பது. உ-ம் கம்பனின் அயோத்தி நகர வர்ணனை.குறியீடு படிமம் என்பன உவமை உருவகம் என்பவற்றின் தொடர்ச்சி எனலாம்.
  6.  கவிதைகளில் குறியீடு படிமம் மிகமிக அவசியமானவை. ஆனால் கவிதை முழுவதும் படிமங்களாய் நிரம்பி வழியும் பின்நவீனக் கவிதைகள் பற்றி சொல்லுங்கள்.
    கவிதை என்பது பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு கலைவடிவம். எல்லாக் கூறுகளும் ஓரளவு சம அளவில் அமைவதே சிறப்பானது. கறியில் உப்பு புளி உறைப்பு வாசம் போல எல்லாம் அளவாக இருந்தால் அது சுவைதரக் கூடியது. சில தேவைகளுக்கேற்ப சில கூறுகள் ஓரளவு கூடுதலாகவோ குறைந்ததாகவோ அமையலாம். ஆனால் சில கூறுகளுக்கு மட்டும் வலிந்து அழுத்தி முக்கியத்துவம் கொடுப்பதும் பல கவிக்குரிய அடையாளங்களான அவசியமான கூறுகளை வேண்டுமென்று புறக்கணிப்பதும் அவரவர் விருப்பு வெறுப்பு, உள்நோக்கு, இலக்கிய அரசியல், அதைத்தாண்டி சிலவேளை உலகமயமாக்கலின் தாக்கத்தினாலும் கூட அமையலாம். பின்நவீனத்துவ சிந்தனையான “எந்த ஒரு விடயத்தினுள்ளும் அதற்கென்றான அரசியல் மறைந்து உள்ளது” என்பது இதைத் தானோ? படிமம் குறியீட்டை அபரிமிதமாக பயன்படுத்துவதும் அதை எழுதுவதும் பின் நவீனக் கவிஞர்களின் விருப்பம் சார்ந்தது. அது தவறில்லை. ஆனால் அவை மட்டுந்தான் கவிதைகள் ஏனையவை கவிதைகளே இல்லை என்பது பின்நவீனத்துவ வாதிகளின் அராஜகம்; என்பேன். அவர்கள் புனைவது கவிதையின் இன்னோரன்ன வகைகளில் ஒன்றே தவிர அது தான் கவிதை என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
  7. கவிதையின் பாடுபொருள் காலத்துடன் ஒன்றிணைந்து பயணப்படும் ஒன்றா? அப்படியில்லாமலும் இருக்குமா?கவிதை எப்போதும் ஒரே விதமாக இருந்து வந்த ஒரு வஸ்து அல்ல. காலத்திற்கு காலம் தேவைக்கேற்ப கவிதையின் மொழி, வடிவம், அமைப்பு, பாடுபொருள், பயன்படுத்தப்படும் அணிகள், எதற்கு முன்னுரிமை வழங்குவது, என்பன மாறியே வந்துள்ளன. கவிதை காலத்தின் கண்ணாடி தான். கவிஞன் மறைந்தாலும் அந்தந்தக் காலத்தின் கோலத்தை, வாசத்தை, நிறத்தை, கவிதை காலங்கடந்தும் எடுத்தியம்புகிறது. சங்க காலக்கவிதைகள், கலித்தொகைக் கால கவிதைகள், கம்பன் காலக் கவிதைகள், பாரதி காலக் கவிதைகளில் அந்த அந்தக் காலகட்டங்களின் தாக்கங்களைக் காண முடியும். எனவே கவிதையின் பாடுபொருள் காலத்துடன் ஒன்றிணைந்து பயணிக்கும் ஒன்றென்ற போதும் உலக மகாகவிகளாக கொண்டாடப்படும் கவிஞர்களின் கவிதைகள் காலத்தை பிரதிபலிப்பதையும் தாண்டி மானுட மேன்மைக்கான இன்னோரன்ன விடயங்களை, வாழ்வின் உண்மையான உறுதிப் பொருட்,களை, இயற்கையின் இயல்புகளை, தத்துவங்களை பேசிச் செல்பவையாக அவற்றைக் கொண்டு இந்த மனுக்குல மேம்பாட்டுக்கு வழிகாட்டுபவையாக இருக்கின்றன. இதனால் வெறுமனே குறித்த ஒரு காலத்தின் கோலத்தை மாத்திரம் பிரதிபலிக்கும் படைப்புகள் பின்னர் பெறுமதியற்றவையாகி விடகின்றன. எனவே உண்மையான, காலத்தில் அழியாது வாழும,; கவிதை காலத்தையும், காலம் கடந்த உண்மைகளையும் பேசுபவையாகவே இருக்கும்.
  8.  ஈழத்துக் கவிஞர்கள் தொடர்பாக ஜெயமோகன் முன் வைத்த கருத்துகள் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.?
    அது அவரின் கருத்து அல்லது அபிப்பிராயம் மட்டுமே. அதுவே முடிந்த முடிவு, இறுதித் தீர்ப்பு அல்ல.உலகில் எத்தனையோ எண்ணிக்கையான வகைகளைக் கொண்ட உயிரினங்கள் வாழ்கின்றன. இது உயிர்ப்பல்வகைமை எனப்படும். எமக்குத் தேவையான பயன்தரும் உயிரிகள் சிலவே. ஏனையவை எமக்குத் தேவையற்றிருக்கலாம். ஆனால் இயற்கைக்கு அவை தேவையானவை. அதனாலேயே அவற்றை தொடர்ந்தும் இயற்கை வாழ அனுமதிக்கிறது. எமக்குத் தேவையில்லை என்பதற்காக இயற்கைக்குத் தேவையில்லை என்பதும் அவை முழுவதுமாக அழிக்கப்படவேண்டும் என்பதும் இவை வாழத் தகுதியற்றவை என நாம் முடிவுகட்டுவதும் அடி முட்டாள்த் தனம்.உயிர்பல்வகைமை போல இலக்கியத்திலும், இசையிலும், கவிதையிலும், சகல கலைகளிலும், பல்வகைமை காணப்படுவது இயற்கையானது. எனக்கு பிடித்தது நான் இரசிப்பது உமக்கும் அவனுக்கும் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம். இரசிக்கலாம் இரசிக்காமலும் போகலாம். “ஈழத்தில் கவிஞர்கள் அனேகமானவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அப்படியே விடுவது ஆபத்தானது. அவர்களால் பெண்களும் பாதிக்கப் படுவார்கள் எனவே அவர்கள் அனைவரையும் பூச்சி கொல்லி வைத்து கொல்ல வேண்டும்” என்ற வகையான ஜெயமோகனின் கருத்து மடைமையானது அபத்தமானது என்பதுடன் நிச்சயமாக இந்த இலக்கிய சர்வாதிகார ஹிற்லர் மனப்பாங்கு கண்டிக்கப்படவும் வேண்டியது என்பேன். இவர் திரைக்கதை எழுதும் தமிழக சினிமாத்துறையோடு ஒப்பிடும் போது எமது கவிஞர்கள் பெண்களை பெண்மையை சீரளித்துவிடவில்லை. எம் கவிஞர்கள், கவிதைகள் பேசிய பெண்ணின் பெண்மையின் மேன்மை பெருமை உவகறிந்தது.

ஜெயமோகன் இயற்கையின் கோட்பாட்டை மறுதலிக்கிறார். அவரின் அறியாமையை எண்ணி அவருக்காக இரங்கலாமே தவிர இது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. இவரின் கருத்துகளை கணக்கெடுக்க வேண்டியதில்லை.
இப்படியான சர்வாதிகார, சட்டம்பித்தன, குருபீட மனப்பாணமை அவரைப் போன்ற பலரிடம் உள்ளது. இவர்கள் போன்றவர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும், இவர்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கிக் கிடக்கும், எமது பல இலக்கிய மேதாவிகளுக்கு, அடிப்பொடிகளுக்கு, இவரின் கூற்று இடியாக இறங்கி யிருக்கிறது. எனினும் சிறு விடயங்களுக்கே பொங்கி வெடித்து போர்க் கொடி தூக்கும் இவர்களில் பலர் எமது சீலையையே உரிந்த ஜெயமோகனை கண்டிக்கும் திராணியற்று இவர் போன்றோரின் ஆசீர்வாதங்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அங்கலாய்ப்பில் காக்கும் கள்ள மௌனமும் இவரின் கருத்துக்கு உரைக்கும் சப்பைக் கட்டுகளும் வியப்பை ஏற்படுத்துகின்றன. என்னே எங்கள் இலக்கிய நேர்மை?
இவர் போன்றோர் சொன்னால் தான் அது கலை, கவிதை இவர் போன்றோர் சொன்னால் தான் அவர் கலைஞர் கவிஞர் என்று நாம் வாழ்வதால் வந்த இழிநிலையே இதற்கு காரணம் என்பேன். இந்த நிலைமை நிச்சயம் இங்கே இல்லை என்று உறுதிபடக் கூறுவேன்.
நாம் எமது சுயத்தோடு எமது காலில் நின்று, எமது கலைத் தனித்துவத்தைக் காத்து, காலத்திற்கேற்ப எம்மை வளர்த்துக்கொண்டால் இவர் போன்றோரின் கருத்துகளை கணக்கில் கொள்ள வேண்டியிராது என்பேன்,

நேர் கண்டவர் — சமரபாகு சீனா உதயகுமார்

28.04.2019