நேர்காணல் -நேர் கண்டவர் : திருமதி அகிலா லோகராஜ்

1.முருகையன் கவிதைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
ஈழத்துப் பூதந்தேவனாரில் இருந்து ஈழத் தமிழ்க் கவிதை தோற்றம் பெற்றிருந்தாலும் பாரதிக்குப் பின்னான இந்த நூற்றாண்டின் ஈழத் தமிழ்க் கவிதை 1950 களில் தோன்றிய போது அக்கால கவிதைப் பிதாமகர்களான மூவருள் ஒருவராக கருதப்பட்டவர் சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த கவிஞர் முருகையன் அவர்கள் ஆவார். இவரின் தந்தையார் இராமுப்பிள்ளை தாயார் செல்லம்மா ஆவார்.
அவருடைய கவிதைகள் தனித்துவமானவை. தற்புதுமை மிக்கவை. இந்நூற்றாண்டின் ஈழக்கவிதையின் போக்கிற்குத் தொடக்கப் புள்ளியாக அமைபவை. பாரதி தனது கவிதைப் போக்கில் புதுக்கவிதை தொடர்பான பருசோதனைகளையும் மேற்கொண்டிருந்த போதும் முருகையனின் கவிதைகள் முற்றும் முழுதாக மரபு யாப்பு வடிவங்கள் சார்ந்தவை. மேலும் மரபுரீதியான இலக்கியப் பரீச்சயத்தையும் அவற்றில் ஆட்சியையும் தேர்ச்சியையும் இவரின் கவிதைகள் கொண்டிருந்த அதே வேளை மரபிலக்கியங்களில் பின்பற்றப்பட்ட வழமையான பாடுபொருட்களை மட்டும் பாடாதவை. நவீன விஞ்ஞானக் கருத்துகளையும் உத்தி முறைமைகளையும் அறிமுகப் படுத்தியவை. பொதுவுடமைச் சிந்தனையை தத்துவார்த்தமாக அணுகியவை. ஈழத்துக்கே தனித்துவமான பேச்சோசைப் பாங்கையும் கிராமிய மணம் கமழும் வாழ்வியலுடன் கூடிய சொற்பிரயோகங்களையும் அதிகம் கொண்டவை என்பது எனது அபிப்பிராயமாகும்.

2. முருகையனுக்கும் உங்களுக்குமான தொடர்பு எத்தகையது?
1993ல் நான் முதல் முதலாக பங்குபற்றிய ‘அகில இலங்கைக் கம்பன் கழகம்’ நடாத்திய கவிதைப் போட்டியில் நடுவர்களில் ஒருவராக கவிஞர் முருகையன் இருந்தார். அதுவரை நான் அவரை அறிந்திருக்கவும் இல்லை. அதற்குச் சில வாரங்களின் பின் யாழ் நகரின் ஆரிய குளச் சந்தியில் இருந்த எழுத்தாளர் ஒன்றியத்தின் நிகழ்வொன்றில் உரையாளராக கவிஞர் அவர்கள் பங்குகொண்டிருந்தார். அதில் நான் ஒரு பார்வையாளனாக கலந்து கொண்டிருந்தேன். நிகழ்வின் முடிவில் அவர் தனது நீர்வேலியிலுள்ள வீட்டிற்கு சைக்கிளில் செல்ல ஆயத்தமானார். நானாகச் சென்று அவருடன் கலந்துரையாடினேன். எனது கவிதை மீதான ஆர்வத்தையும், கம்பன் கழக கவிதைப் போட்டியில் கலந்து கொண்டதையும், அவ் ஆண்டு கம்பன் விழா கவியரங்கில் பங்குபற்றியதையும், தெரிவித்து கவிதை மரபை கவிதை யாப்பு வடிவம், நுட்பங்களை அறிய ஆவலாக இருப்பதனையும் கூறினேன். அவர் அதற்கு உதவ இசைந்தார்.
அவரின் வீடுதேடி எனது இரு நண்பர்களுடன் சென்று கவிதை பயிலத் தொடங்கினேன். வார விடுமுறை நாட்களில் நீர்வேலியில் இருந்த அவரின் வீட்டுக்கு சைக்கிளில் சென்று கற்றோம்.
சில வாரங்களில் நான் மட்டுமே மாணவனாக மிஞ்சினேன். அவரின் வீடு ஒரு குருகுலம் போல் ஆனது. நான் செல்லும் வேளைகளில் கவிஞர், அவரின் மனைவி, மகன், ஆகியோர் எல்லோரும் கூடியிருந்து பல்வேறு கவிதை பற்றிய விடயங்களை சுவாரசியமாக உரையாடுவோம். அவர் பல உதாரணங்களையும் கவிதை தொடர்பாக நிகழ்ந்த சம்பவங்களையும் வெளியீடுகளையும், அக்காலத்தில் நிகழ்ந்த கவிதை சமர்களைப் பற்றியும் கூறுவார். நான் தேவையானவற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்வேன். அவர் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த தனது கவிதைகளை சீராக நறுக்கி தனியான ஏடுகளில் காலக்கிரமப் படி பேணி வைத்திருந்தார். இதனால் உடனுக்குடன் அவை பற்றிய விபரங்களை எடுத்து விளக்குவார். 1995 வலிகாம இடம்பெயர்வு வரை அனேகமாக வார இறுதி விடுமுறை நாட்களில் அவருடன் கழி(ளி)த்துப் பெற்றவை அனந்தம் என்பேன். அவரிடம் கற்றவை கோடி கொடுத்தாலும் பெற முடியாதவை. அப்போது ஒரு உயர்தரம் கற்ற மாணவனாக பொருளாதார பலமற்ற நிலையில் அவருக்கு கோடி பணம் கொடுக்க முடியாது ‘கோடி வேட்டி’யொன்றை எனக்கு கற்பித்ததற்கு பரிசாக “கொடுத்தேனோர் கோடி” என்ற கவிதையொன்றையும் எழுதி வழங்கினேன்.
வலிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்து தென்மராட்சியில் இருந்தபோதும் அவரை ஓரிரு தடவைகள் அவரின் கல்வயல் வீட்டில் சந்தித்திருந்தேன். மீளக் குடியமர்ந்த பின் இருந்த சூழலில் அவரை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரும் பின் கொழும்பு சென்றுவிட்டார்.

3. முருகையனின் கவிதைப் பாணி எத்தகையது?
இதற்கு எனது முதலாவது கேள்விக்கான பதிலே போதுமானது. அவரின் கவிதைகளிலுள்ள தனித்துவமான மேற்சொன்ன பண்புகளே அவரின் பாணியாக அமைந்தன. கவிதைகள் மட்டுமன்றி அவரின் இசைப்பாடல்களும், நாடகங்களும், பா நாடகங்களும், மொழிபெயர்ப்புகளும், அவர் வரைநடதிருந்த ஓவியங்களும் கூட தனித்துவம் வாய்ந்தவை.

4. முருகையன் கவிதைகளின் உள்ளடக்கம் யாது?
நான் ஏற்கனவே சொன்னது போல ஆழ்ந்த தமிழிலக்கிய புலமை, யாழ்ப்பாண தமிழ் வாழ்க்கை முறைமையிலிருந்த பற்று, நவீன விஞ்ஞானச் சிந்தனை, பிற்போக்குத் தனங்களுக்கெதிரான புத்தெழுச்சி, நித்தம் புதுமையை அவாவும் பண்பு, பொதுவுடமை நோக்கு, தீர்க்கமான சமூக பார்வை, சிறிய வட்டத்துள் சிக்காத மானுடம் தழுவிய எண்ணம், பரந்த தத்துவ விசாரம், என்பன முருகையனின் கவிதைகளுடைய உள்ளடக்கமாக காணப் படுகின்றன.

5. முருகையனின் கவிதைகளின் பண்புகள் சிறப்பம்சங்கள் எவை?
நவீன சிந்தனைகளை மிகப் பாரம்பரிய வடிவங்களில் பேசியமை, வழக்கொழிந்திருந்த பல யாப்பு வடிவங்களுக்கு புத்துயிர் கொடுத்தமை, காவிய மரபின் தொடர்ச்சியாக குறுங்காவியங்களை ஆக்கியமை (உதாரணமாக ‘அது அவர்கள்’ என்ற குறுங்காவியத்தை நவீன விஞ்ஞான வரலாற்றுப் பின்னணியில் வெண்பா யாப்பில் பாடியமை), கிராமிய யாழ்ப்பாண மொழி வழக்குகளை சரளமாக தனது படைப்புகளில் பயன்படுத்தியமை, புதிய சொற்சேர்க்கைகளை தந்தமை, தமிழக கவிதைகளில் காணக் கிடைக்காத சொற்செட்டையும் பேச்சோசைப் பாங்கான கவிதை நடையையும் வளர்த்தெடுத்தமை, தமிழின் தொன்மங்களை தனது படைப்புகளில் மீளுருவாக்கம் செய்தமை, அரசியல் சார்ந்த போர்க்காலத்தில் பேச நெருக்கடியான பல விடயங்களைப் பாட புதுமையான குறியீடுகளையும் புராணக் கதைப் படிமங்களையும் பயன்படுத்தியமை, கவியரங்கங்களில் தனித்தன்மை மிக்க கவிதை சொல்லும் பாணியை அறிமுகப் படுத்தியமை, என்பவற்றை அவரின் கவிதைகளின் சிறப்பம்சங்களாகக் கூறலாம்.

6. முருகையன் கவிதைகள் ஊடாக சமூகத்திற்கு எடுத்துக் கூறியவை எவை?
தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்கு தனங்களைக் கடுமையாகச் சாடியவர் கவிஞர். “இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு” என்ற கவிதை எமது வரலாற்றில் இன்றும் நாம் தேவையற்றுச் சுமக்கும் பல விடயங்களைப் பற்றி சுட்டிச் செல்கிறது. அக் கவிதை பற்றி பல விமர்சனங்கள் இருப்பினும் மேல்நாட்டவர் எவ்வாறு தேவையற்ற விடங்களை களைந்து புதிய விடயங்களை புகுத்தி தம்மை மேம்படுத்தினர் என்ற வியப்பையும் அது எம்மிடை இன்னும் சாத்தியமாகவில்லையே என்ற ஆதங்கத்தையும் சுட்டுவதாக அக்கவிதை ஒரு பதச்சோறாக இருக்கிறது. ஒரு விஞ்ஞானப் பட்டதாரி என்ற ரீதியில் நவீன விஞ்ஞான சிந்னைகளை எமது சமூகம் இலக்கியத்துள்ளும் உள்வாங்க வேண்டும் என்பதையும், உலகளாவிய படைப்புகளையும் தத்துவங்களையும் எமது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேணவாவையும், தனது கவிதைகள் ஊடாக இவர் எடுத்துக் கூறினார்.

7. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் முருகையன் கவிதைகளின் பங்களிப்பு யாது?
இந்த நூற்றாண்என் ஈழத் தமிழ்க் கவிதையின் மூலவர்களாக மும்மூர்த்திகளாக மகாகவி, முருகையன், நீலாவாணன் என்போர் கருதப்படுகிறார்கள். எவ்வாறு தமிழ்க் கவிதைக்கு பாரதி ஒரு யுகசந்தியோ ஈழத்தமிழ்க் கவிதைக்கு இவர்கள் மூவருமே யுகசந்திகளாக திகழ்கிறார்கள். எனவே இந்நூற்றாண்டு ஈழத் தமிழ்க் கவிதைக்கு முருகையனின் பங்களிப்பும் தவிர்க்க முடியாதது.
தமிழகத்தில் காணக் கிடைக்காத எமக்கென்றான ஒரு தனித்துவமான கவிதைப் பாணி, பாரம்பரியத்தின் தோற்றுவாய்களில் ஒருவர் முருகையன் எனபது மிகமுக்கியமானது. தமிழகத்திலும் ஈழத்திலும் புதுக் கவிதைகள் நவீன கவிதைகள் கோலோச்சி ஓசை வயப்பட்ட மரபுக் கவிதைகள் ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டதாக கருதப்பட்ட 1970 களின் பின்னிருந்தும் தனது இறுதிக் காலம் வரை யாப்புக் கவிதைகளில் அனாயசகமாக புதுக்கவிதையாயாளர்கள் பயன்படுத்திய புதிய பாடுபொருட்களைப் பாடி ஓசை வயப்பட்ட யாப்புக் கவிதைகளின் தொடர்ச்சியான நிலவுகைக்கு உதவியமை, நாடகங்கள், பாநாடகங்கள், இசைப்பாடல்கள், குறுங்காவிய ஆக்கங்கள், ஓவியங்கள் என்பவற்றிலும் புதிய தடங்களைப் பதித்தமை. இறுதிக் காலத்தில் சேக்ஸ்பியரின் பல நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்தமை, (அவற்றைக் கையெழுத்துப் பரதிகளாக வைத்திரந்தார் ) 1950 களிலேயே 12 தேர்ந்த பிறநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து ‘ஒரு வரம்’ என்ற நூலை முதன்முதலாக வெளியிட்டமை, காளிதாசரின் ‘இறையனார் களவியல்’ என்ற சமஸ்கிருத நூலை ஆங்கில வழி ‘இளநலம்’ என்ற நூலாக்கியிருக்கியமை, பேராசிரியர் கைலாசபதியுடன் இணைந்து ‘கவிதைக்கலை’ என்ற நூலை வெளியிட்டமை, ;ஒரு வரம்’, ‘வந்து சேர்ந்தன’, ‘தரிசனம்’, ‘நெடும் பகல்’, ‘கோபுர வாசல்’, ‘ஒருசில விதி செய்வோம்’, ‘ஆதிபகவன்’, ‘வெறியாட்டு’, ‘அது அவர்கள்’, ‘மாடும் கயிறு அறுக்கும்’, ‘நாங்கள் மனிதர்’, ‘மேற்பூச்சு’, ‘சங்கடங்கள்’, ‘ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்’, ‘உண்மை’, ‘இன்றைய உலகில் இலக்கியம்’ ஆகிய 21 நூல்களை இலக்கிய உலகுக்குத் தந்தமை, புதுமை முயற்சியாக ‘தேனருவி’ என்னும் சஞ்கிகையில் மஹாகவியுடன் இணைந்து ‘தகனம்’ என்ற காவியத்தை பாடியமை, கறாரான இலக்கிய கவிதைக் கோட்பாட்டாளராகவும் விமர்சகராகவும் விளங்கியமை, மிகப் பிரபலமான ‘உயிர்த்த மனிதர் கூத்து’, ‘கடூழியம்’, ‘பொய்க்கால்,’ ‘யார்கொலோ சதுரர்’ ஆகிய நாடகங்களை எழுதி மேடையேற்றியமை, கல்வி வெளியீட்டுத் திணைக்கள பாடநூல் ஆக்கக் குழுவில் அங்கத்தவராக இருந்து பாட நூல் வெளியீடுகளில் பங்களிப்புச் செய்தமை, கலைச்சொல் ஆக்கக் குழுவில் அங்கம் வகித்து அரும்பணி ஆற்றியமை, சிறிது காலம் விஞ்ஞான இரசாயன ஆசிரியராக விளங்கியமை, என்பன முருகையனின் கலை கல்விப் பங்களிப்புகளில் முக்கியமானவை எனலாம்.

8. முருகையனின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தியோர் யாவர்?
முருகையனின் முன்னோர்கள் சைவ தமிழ்ப் பாரம்பரியம் மிக்கவர்கள். தந்தையார் ஒரு தமிழாசான். அவர்களின் செல்வாக்கு முருகையனில் ஏற்பட்டது ஆச்சரியமானதொன்றல்ல. கவிஞர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவர். அவருடைய பாடசாலைக் காலத்தில் இருந்த பிரபலம் மிக்க ஆசான்களை அவர் அடிக்கடி நினைவுகூருவது உண்டு. தமிழ் ஆங்கில மொழிப் புலமை அவர்களால் இவருக்குக் கைகூடியது என்பார். உயர் கல்வி பெற்ற கொழும்பு பல்கலைக்கழகம் லண்டன் பல்கலைக்கழகம் என்பவற்றின் புகழ் பூத்த பேராசிரியர்களும் அவரின் ஆளுமை முதிர்ச்சியி;ல் பங்கெடுத்திருந்தனர். பிற்காலத்தில் இவர் பொதுவுடமைக் கருத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அக்கருத்துகளோடு இயைந்த தலைவர்களும் பேராசிரியர்களும் முருகையனின் ஆளுமையில் செல்வாக்கு செலுத்தியிருந்தனர். இவரின் பாடசாலை நண்பர்களான க.கைலாசபதி, தி. நடனசபாபதி சர்மா, போன்றோரும் சக கவிஞர்களான மஹாகவி, சில்லையூர் செல்வராசன், நீலாவணன் போன்றோரும் தமிழக ஆளுமைகளான கி.வ. ஜகன்நாதன், சி.சு. செல்லப்பா, சிதம்பர இரகுநாதன், ந.பார்த்தசாரதி போன்றோரும் இவரின் இலக்கிய ஆளுமையில் செல்வாக்குசெலுத்திய முக்கியமானவர்கள் எனலாம்.

9. முருகையனின் ஆளுமையில் செல்வாக்குச் செலத்திய நிறுவனங்கள் எவை?
என் அறிவுக்கெட்டிய வகையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு யாழ் லண்டன் பல்கலைக்கழகங்கள், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கலை இலக்கிய பேரவை, யாழ் இலக்கிய வட்டம் எனபவற்றை கூறலாம். 1950 ல் இவரது கவிதையொன்று யாழ் இந்துக் கல்லூரி வெளியிட்ட ‘இந்து இளைஞன்’ சஞ்சிகையில் வெளிவந்தது. அக் காலத்தில் இருந்து சுதந்திரன், வீரகேசரி, ஈழகேசரி, அமுத சுரபி, கலைமகள், தீபம், எழுத்து, தேனருவி, தாமரை ஆகிய பத்திரிகை சஞ்சிகைகளிலும் இவரின் கவிதைகள் வெளிவந்தன. இவற்றை விட வேறு சில நிறுவனங்களும் செல்வாக்கு செலுத்தியிருக்க வாய்ப்புண்டு.

10. முருகையனின் கவிதை ஈடுபாடு?
அது அலாதியானது. இறுதி வரை கவிதையுடன் ஊடாடுபவராக வாhழ்ந்தவர் முருகையன். இடையறாத தேர்ந்த வாசகனாகவும் புதுவிடயங்களை தொடர்ச்சியாக சிந்திப்பவராகவும், தேடுபவராகவும், பருசோதனை ரீதியில் நுட்பமான இலக்கிய ஆய்வு முயற்சிகளை விரும்பியவராகவும், அவற்றை தமது படைப்புகளில் முன்வைத்தவராகவும் திகழ்ந்தார். ஆசிரியர், கல்வி வெளியீட்டுத் திணைக்கள அதிகாரி, இறுதியாக யாழ் பல்கலைக் கழக பதிவாளர் என பல்வேறு பதவிகளை வகித்தபோதும் அல்லும் பகலும் இலக்கியத்திற்கு தம்மை அர்ப்பணித்தவராக விளங்கினார். அவரின் விஞ்ஞான முதுமாணி வரையான பட்டங்கள் தமிழ் முதுகலைமாணிப் பட்டம் என்பவற்றின் மூலம் பெற்ற அறிவு, ஆங்கிலப் புலமை என்பன எமது மரபிலக்கியத்தில் கால் பதித்தவாறு பல் வேறு புதிய திசைகளை பரந்துபட்டுப் இவரைப் பார்க்க வைத்தது. இப் பார்வை அவரின் படைப்பகளிலும் பிரதி பலித்தது. இது அவரின் சமகாலத்தவர்களான பல கவிஞர்களிடம் காணக்கிடைக்காத பண்பாகும். இதனால் தான் பேராசிரியர் கைலாசபதி இவரை ‘ கவிஞர்க்குக் கவிஞன்’ என்றும் பேராசிரியர் சிவத்தம்பி ‘புலமைக் கவிஞன்’ என்றும் இவரை போற்றினர். யுhழ் பல்கலைக் கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது.
முருகையனின் படைப்புகள் பல நூலுருவாகியுள்ளன. அவர் பேராசிரியர் கைலாசபதியுடன் இணைந்து எமுதிய ‘கவிதை நயம்’ என்ற நூல் இன்று வரை தமிழில் வெளிவந்த கவிதை தொடர்பான தரமான உசாத்துணை நூலாக கருதப்படுகிறது. அவருடைய கையெழுத்துப் பிரதிகளாகவும், உதிரிகளாகவும் நூலுருப் பெறாத படைப்புகள் யாவும் நூலுருப் பெறும் போது தமிழ் இலக்கிய உலகம் பெரும் பொக்கிசங்களை பெற்றுக் கொள்ளும் என்பது திண்ணம்.
முருகையனின் படைப்புக்கள் முழுவதையும் நூலுருவாக்கும் முயற்சிகளும் அவர்தம் மாணாக்கர் சிலரால் முன்னெடுக்கப் படுவதும் முக்கியமானதாகும். இவை எதிர்காலத்தில் தமிழ்கூறு நல்லுலகமானது 73 ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்த கவிஞர் முருகையன் என்ற பெரும் கலை ஆளுமையின் பல்பரிமாணங்களையும் படைப்பாற்றலையும் அறிந்து கொள்ள உதவும் என்றால் மிகையில்லை.

நேர் காணல் : த.ஜெயசீலன்.
நேர் கண்டவர் : திருமதி அகிலா லோகராஜ் (முதுதத்துவ மானி பட்டப் படிப்பு மாணவி, யாழ் பல்கலைக் கழகம்)
திகதி : 17.09.2019