அழகான பாக்கள் அதிலே கனாக்கள்
அடி ஆழமுள்ள உனதாற்றில்…
விளையாட எண்ணி விழிகள் பிதுங்கி
மிதவா தமிழ்ந்தேன் நினதேட்டில்.
களமாடல், காதல், கடல் தாண்டி மோதல்,
கருவாய் மிளிர்ந்த கவிமேட்டில்
பழமாக…வாசம்…பசிமீட்டி..வாட்ட
பலியானேன்; கம்பா…உனதூற்றில்!
கவிதா விலாசக் கலை சாகரத்தின்
கரையே… விரிந்த தொடுவானே!
புவியாழு மாறு.. புனிதங் கலந்து
புது ஏடடித்த புகழோனே!
குவிவான கொற்றம் குறளூடு கோர்த்து
குலம் மீட்க வந்த குறியீடே!
செவியூ டறங்கள் சிதையாமல் ராமன்
செயலா லுணர்த்தும் ‘திரு’…நீயே!
வெடியுண்டு லைந்து,விதிமுள்ளு தைத்து
விசமேறும் ‘மார்க்க’ விழி காத்தாய்.
கடிவாள மிட்ட கவியாலே காற்றும்
கடன் வாங்குமாறு கதை வார்த்தாய்.
நொடிபோல் விருத்தம்; நுழைந்தால் விருட்சம்;
நுணுகப் ‘பிறப்பின்’ நுனி நூர்த்தாய்.
அடி, சீர், அசைக்குள்…அணுவைப் பிளக்கும்
அதிசக்தி வைத்தாய் அறந் தைத்தாய்!
உலகே வியந்தும் உவமைக் கலைந்தும்
உனதாச ராக உவந்தாட,
நிலவே துணிந்து நினைவைத் துறந்து
நினதே நிறத்தில்…ஒளி காட்ட,
தலையே கவிழ்ந்த தணலோன் மலைத்து
தமிழுன்னில் தாகம் தனை மாய்க்க,
அலகில்…அகன்ற அகிலம் வணங்க,
அட… நான் ‘வியத்தல்’….சரிதானா?
முடிவே இலாத முழுசே..அணுக்குள்
‘முகம் பார்க்கில்’ நீயும் முதலாவாய்.
வடிவாளும்.. வாயின், வசனம் உயிர்க்க
‘வடிகட்டி’ வார்த்தை வரம் ஈவாய்.
கொடியே ற்றியிங்கு குவி ‘ராஐ பாக்கள்’
குலையாது மின்னுங் குணஞ் சேர்ப்பாய்.
மடியாய்; எமக்கு ‘முடியாய்’; துணைக்கு
வருவாய்; வசந்த…வழி நீயே!
(1995 ல் அகில இலங்கைக் கம்பன் கழக 15 ம் ஆண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பட்ட ‘கம்ப மலரில்’ எனது கவிதை.)





