“எனக்குத்தான் எல்லாமும் தெரியும்
பிறர்பற்றி
எனக்கென்ன?
அவர்க்கு என்ன தெரியும்” என்ற
அலட்சியமும்,
அபரிமித ஆற்றல் பலம் திறனும்,
வலிமையும்,
“மற்றவர்கள் மடையர்
அவர்களெல்லாம்
வலிமை வளமற்றோர்” எனும் நினைப்பும்,
அகங்காரம்
மமதையும், பிறரை மதியாத் தலைக்கனமும்,
“எமனுமென் கீழெ”ன்ற இழக்காரமும், “என்னால்
எதுஞ்செய்ய முடியும்…
எதும் என்னால் இயலும்”…எனும்
அதிகார ஆணவமும்,
மாயத் திறனால் மற்றவரை மருட்டுகிற
போலிப் பெருமையும்,
தனது புகழ்காக்க
எந்த நிலைக்கும் இறங்கிப் பழிவாங்கும்
சிந்தனையும்,
அதனைச் செயலாக்கும் தந்திரமும்,
மந்தைகளாய் மற்றவரை எண்ணி
அவர்கருத்தை
மறைத்துத்… திறணை மறுதலித்து…
தற்பெருமைப்
பறையடித்து
“தனைமட்டும் பார்போற்ற வேணும்” என்று
முரசறையும் பண்பும்,
“மூச்சுக் காட்டாதீர்” என
எவரையும் அடக்க எழும் குரலும்,
சுற்றியுள்ள
எவர்க்கும் இரங்கா இரும்புளமும்,
எளியவர்கள்
எவர்க்கும் தயைகாட்டா எகத்தாளமும்,
“தன்சொல்
மட்டும்தான் கேட்டேற்க வேணு”மெனும் கொள்கையும்,
கெட்ட நரிக்குணமும், கீழ்மனமும், வஞ்சகமும்,
வெற்றிக்காய் சுற்றத்தை வீழ்த்தும்
அக வெறியும்,
மற்றவரின் துன்பம் வலி பற்றிக் கவலையற்று
இன்பம் தன் இலாபம் இடம் பொருள் பதவி காக்க
என்னவும் பண்ணத் தயங்கா இயல்புகளும்,
கொண்டிருந்தால்…
அன்னவரும் குவலயத்தில் ‘சூரர்’ தான்!
வென்றிடலாம் அவர்கள்;
விதவிதமாய் வாகைசூடி
எண்திசையை ஆண்டிடலாம்;
கொன்றிடலாம் மெய்யை;
“தாம் வைத்ததே சட்டம்”
என்று திமிரோ டெழுந்தாட்டம்
போட்டிடலாம்;
அன்னவரின் கொட்டம் அடக்க,
அவர் ‘மும்மலத்தில்’
மின்னல் இடியாய் விழுந்து
பொசுக்கிவிட,
வேலோடு ஒருகடவுள் விளைந்து… எழுந்துவந்து…
தீவினைகள் தீய்க்கத் திருப்பெரு வடிவெடுத்துக்…
கருவறுப்பான்;
நொந்தவரின் கதறலுக்குச் செவிகொடுத்துக்
கருணைகூர்வான்; காத்தருள்வான்;
கைவிடான்;
‘சுரர்’ வாழ்வு
பெருகவிடான்;
தர்மம் பிழைக்கவிடான்;
என்பதுதான்….
வரலாறு!
நேற்றும் இன்றும் அட நாளைக்கும்
வருவார்கள் சூரர்கள்;
வேல்சுழற்றி முருகனுந்தான்
வருவான்; ‘நேர்ந்தவரின்’ வலியறுத்துக்
காத்து வரம்
தருவான்; இதுநடக்கும் தப்பாது…
நீ தேறு!





