செல்வி ஆரணி என்னும் லதிஸ்கா சிறிலின் ‘பயணிக்கின்ற பாதைகள்’ என்னும் கவிதை நூல் 43 கவிதைகளை கொண்டு பயணிக்கின்றது.தன் கருவறை தோழனின் காலடிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நூலில் “இன்று மாறி வரும் மனித வாழ்வில் எம்மை எமக்கே அறிமுகப்படுத்த வேண்டிய ஒரு கால சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்று இன்றைய கால யதார்த்தத்தையும் அதற்குள் ஒரு கவிஞனின் பங்கு பணி என்ன என்பது பற்றிய தெளிவோடும் இவ் இனம் கவிஞர் அடியெடுத்துவைத்துள்ளார்..எனினும் இவரின் கவிவரிகள் சொற்செறிவும் பொருட்செறிவும் அனுபவ முதிர்ச்சியும் கொண்டு விளங்குவதோடு முதல்வாசிப்பிலேயே வாசகர்களை கவர்வதாகவும் புரிந்துகொள்ள எளிமையானதாகவும் காணப்படுகின்றது.
“கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்பு எம் இனம்பட்ட துயர் உலகறிந்ததே அதன் தாக்கம் இன்றும் தொடர்கின்றது” என்பது அவரின் முடிவாகும்.இக் கூற்றின் அடிப்படையில் அவரின் பல கவிதைகள் வேர்கொள்கின்றன என்பதை தரிசிக்க முடிகிறது.மேலும் “எத்தனையோ ஏமாற்றங்கள் எத்தனையோ மாற்றங்கள் எத்தனையோ இழப்புக்கள் எத்தனையோ அவமானங்கள் சுமந்து இறுதியில் அத்தனையும் வெற்றி கொண்டு தன் வாழ்வுப் பயணத்தை வளமாக அமைத்து அதன் அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு வரமாக வழங்கிச் சென்ற மனிதர்களின் வாழ்வை சுமந்து மகிழ்ந்த பூமி இது.இன்று நாம் வாழ்தல் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் என்ன என்பதே கேள்விக்குறியாக காணப்படுகின்றது” என்ற அவரின் ஆதங்கமும் அவரின்; கவிதைகளில் ஆங்காங்கே பிரதிபலிக்கின்றன.
தன் உணர்ச்சி சார்ந்தவை சமூகநிலை பேசுபவை,போரின்தாக்கம்,இன்றைய இளையோரின் போக்கு,போர் சிதைத்த காயங்கள்,நம்பிக்கையீனம்,எதிர்காலம் பற்றிய கனவுகளை சொல்பவை பல பாதைகளில் என்று கோணங்களில் இவரின் கவிதைகள் பயணிக்கின்றன.
‘அம்மா’என்ற கவிதை எல்லோரும் எழுதும் சராசரிக் கவிதையில் இருந்து வேறுபட்டு நிற்கின்றது.
“ஆண்டவனின் அச்சா?
அன்றேல்-நீ
உலகிற்கு அவனால்
உவந்தளிக்கப்பட்ட
உயிருள்ள அச்சகமா?
உந்தன் பிரதிகள்
நாங்கள் உன்னைப்
பிரதிபலிக்கின்றோமோ
இல்லையோ எம்மை
பிரகாசிக்கச் செய்யும்
எல்லையற்ற ஒளி
நீ அம்மா!” ….. என்கிறார்
.இவரின் ‘வென்று தீருவேன்’ எனும் கவிதையில்,
“அத்துணை துயர்
சுமந்து என்
ஏழைத் தாய்
கொடுத்த எம்
வாழ்வா உனக்கு
கிடைத்தது விளையாட்டு
மைதானமாய்?…..”
என்று அங்கலாய்ப்போடு கேட்கிறார் இதில் அவரின் அகக் கோபம் கொப்பளிக்கிறது.
‘துருப் பிடித்த நினைவுகள்’; எனும் கவிதையில் கடந்த கால நினைவுகள் ஊர்வலமாக கடந்து போகின்றுது.அது நட்பாக காதலாக மெல்லிய உணர்வுகளைப் பேசிச் செல்கின்றது.
“ஆஹா…
யார் என் மேல்
பன்னீர் தெளித்தது?
சந்தனக் குழையலை
அள்ளிப் பூசியது யார்?
உலர்ந்துபோன என்
உதடுகளை ரோஐh
இதழ் கொண்டு
வருடியது யார்?……” என்றும்
“எல்லாம்….எல்லாம்
நேரெதிராகிப் போன
நிகழ் காலத்தில்
என் துருப்பிடித்த
நினைவுகளுக்குள்
இத்தனை வலிமையுள்ள
உயிருண்டா?….” என்று கேட்டு வியக்கிறது.
‘புனிதப்படுக’ என்ற கவிதையில்
“எது எப்படி
ஆனபோதும்
யாராலும் நாம்
கசக்கி எறியப்பட்ட
காகிதப் பூக்களல்ல
புரிந்துகொள்ளுங்கள்!…..”
என்று சற்று ஆவேசமாக எம் நிலையுணர்த்துகிறார் கவிஞர்.
‘விலைமதிப்பு’ எனும் கவிதையில்
“மனித உயிரே-நீ
மறுபடி எப்போது
விலை பெறுவாய்?……”
என்று ஆதங்கத்தோடு தன் கேள்வியை முன்வைக்கிறார்.
‘கனாக் கண்டேனடி தோழி’ என்ற கவிதையில்
“கரங்களுக்கு
மட்டும் ஏனோ
விலங்கிடா அச்
சிறை அறையில்
என் சகி
இரவின் உறக்கத்தில்
தான் காணும்
கனவிற்கு பொருள்
கேட்கையில் புரியும்
அவள் உணர்வு’…..என்றும்
‘சமாதானப் புறா’ என்ற கவிதையில்,
“சிதைந்த தசைச்
சகதிக்குள்
கால் புதைய
நின்று நீங்கள்
உயிர் உருக
கண்ணீர் சிந்திய
உங்கள் தேசத்து
உறவுகளுக்காய்
அஞ்சலி செய்தேனே
நானும் கூண்டுக்கள்
இருந்தபடியே….’
என்றும் பேசுகிறது.இக் கவிதையில் இவர் நேரடியாக அனுபவித்த சில உணர்வுகள் வெளிப்படுகின்றன.
‘நந்திக் கடல்’ என்ற கவிதையில,;
“ஆயிரம் ஆயிரமாய்
அலைக்கரம் கொண்டாய்
கடலே!-நீ
ஏன் எமக்காய்
இரு கரம் நீட்டும்
ஆற்றல் இழந்தாய்?……..”
என்று உலகத்தமிழினத்தின் ஆதங்கத்தை தன் ஒற்றைக்குரலாக கடலிடம் கேட்டு கொதித்து நிற்கிறார்.
‘தோல்விகளிடம் தோற்றுப் போ’ என்ற கவிதையில்,
“வானத்து நிலா
அண்ணாந்து பார்க்கும்
உன்னை..
நெற்றிப் பொட்டிட
உயரப்
பறந்து வரும்
நெற்றியின்
விருட்சத்தை நீ
நிச்சயம்
வான் உச்சியில்
நாட்டுவாய்……” என்று நம்பிக்கை தருகிறார்.
‘விவாகரத்து’ என்ற கவிதையில்,
“உறவறுத்தலில்
மட்டுமேனோ
உயிர் தன்னைத்தான்
வதை செய்யும்
கடைசித் துளி
இரத்தமும்
சுண்டிப்போகும்
கணங்களில்….
இதயம்
மின் ஒழுக்கில்
மாட்டிய சிறு
மான் குட்டியாய்
துடித்து அடங்கும்”…..
என்று தன் குமுறலை புது உவமையூடாக வெளிப்படுத்துகிறார்.
‘சுமை தாங்கிகள் சுமையாகுதோ?’ என்ற கவிதையில்,
“சபிக்கவில்லை
இன்னும் எங்கள்
தவிப்பு ஒன்றேதான்
தாங்கள் விதைத்துள்ள
விதைகளேனும் உங்களுக்கு
நிழல் கொடுக்கும்
விருட்சங்களாகட்டும்
உறவின் வேரை
மறக்காதபடி…” என்று ஆவேசப்படுகின்றார்.
‘அடங்க மறு’ என்ற கவிதையில்,
“பாசம் தேடி
பக்கம் வருவோன்
பாதம் பணிந்தே
பழகிக் களி
தேவைக் கென்றே
தேடி வந்திடும்
வேசம் காண்கின்
அடங்க மறு……” என்றும் எச்சரிக்கையூட்டுகிறார்.
‘மழை’ என்ற கவிதையில்,
“மண் மாதாவின்
மேனியில்
வான மகள்
வரையும்
தண்ணீர்க் கவிதை!….”
என்று புதுக்கவிதை உருவகங்களுக்கு சற்றும் குறையாத கவிதை வரிகளை எழுதி செல்கிறார்.
‘ஓர் மகாத்மாவும் மரணமும்’ என்ற கவிதையில்,
“யார் நிழலில்
விட்டு வந்தேன்?
எங்ஙனம் நான்
அமைதியில் நிலைத்திருப்பேன்?
ஆறுதலாய் நான்
தோள் சாய்த்துத்
திரும்பிடுவேன்
என் கல்லறையே
ஒரு முறை நீ
கதவு திறவாயோ?……”
என்று ஆதங்கப்படுகிறார்..
‘பயணிக்கின்றன பாதைகள்’ என்ற கவிதையில்,
“மனதின் விழித்திரையை
இறுக மூடிக் கொண்டு
வாழப் பணித்தது
யாருன்னை?
இயற்கையிலிருந்து நீ
வேறுபட்டாய்
செயற்கையால் நீ
மாறுபட்டாய்
மதி கெட்டாய் மானிடா……” என்று புத்தி சொல்லி போகிறார்.
‘நூறு நாட்களும் காணாமல்; போயின’ என்ற கவிதையில்,
“கவலையால் வயிற்றை
நிரப்பி…
கண்ணீரில் தாகம்
தணித்து…
காத்திருக்கையிலும்
வயிற்றில் மூண்டு
எரியும் துன்பத் தீயை
அணைக்க வழியின்றித்
துடிக்கின்றன
கழுகுகளிடம் குஞ்சுகளை
பறிகொடுத்ததாய்
கதறும் தாய்ப்
பறவைகள்…..”
என்று யதார்த்தம் கண்டு வேதனை கொள்கிறார்.
‘உணர்வினில் இழை எடுத்தேன்’ என்ற கவிதையில்,
“உணர்வினில் இளை
எடுத்தேன் என்னவனே!
என் உயிரினில்
உனைக் கோர்க்க” என்று காதல் வயப்பட்டு கனிகிறார்.
‘இருக்கின்றன இல்லைகள்’என்ற கவிதையில்.
“எங்கள் வீட்டில்
இருக்கின்றவை
சொல்லவா?
என் அப்பாவின்
சட்டைப் பை
வெறுமையாய் இருக்கின்றது.
என் வீட்டு
விறகுக் கட்டு
குறையாமல் இருக்கின்றது
என் வீட்டு
அடுப்பங் கரை
குளிர்காயாது இருக்கின்றது.
எங்கள் இரப்பைகள்
பல நாட்கள்
விரதம் இருக்கின்றன.
வாஞ்சையோடு வாங்கிய
வாகனத்தின் வயிறும்
காலியாக இருக்கின்றது.
என் கவிதையின்
தலைப்பிலும் கூட
இலக்கணப் பிழை
இருக்கின்றதா…?
மன்னியுங்கள!;” என்று புதுமையாக வாழ்கையின் இன்னல்களை பட்டியல்படுத்துகிறார்.
‘எனக்கு அப்பா இல்லை’ என்ற கவிதையில்,
“கால்கொண்டு நடை போட்ட
கலங்கரை விளக்கமே
கலங்கித்தான் தவிக்கின்றேன
இனி கரை சேர
எனக்கேது மார்க்கமே”……
என்று தன் மனக் கவலையை இழப்பின் வலிவேதனை எம்மிலும் தொற்றவைக்கிறார்.
இவ்வாறு தனது முதல் தொகுதியிலேயே முகிழ்நிலைக் கவி ஒருவரின் அடிப்படை பண்புகளை தாண்டி ஒரு அனுபவமுள்ள வளர்ந்து வரும் கவிஞர் தான் என்பதை பல இடங்களில் ஆரணி உறுதிப்படுத்தி செல்வது பாராட்டுக்குரியது.
தமிழ்க்கவிதையின் வியாபகம் ,பரப்பு,பயன்பாடு,செல்நெறி என்பது மிகப்பெரியது.மிக நீண்ட காலத் தொடர்ச்சியில் இடையறாது தமிழ் கவிதன்னை நிலை நிறுத்தி வந்திருக்கிறது.பல்வேறு வகைமைகளை கொண்ட தமிழ் கவிதைகளில் புதுக்கவிதை சார்ந்த கவிகள் 70இன் பின் அதிகம் எழுந்தன அதின் பின்னான கடந்த சுமார்50 வருடங்களில் கவிதை பல தடைவ தோலுரித்து தன்னை புதுப்பித்திருக்கிறது.இன்று மரபுவிதை,புதுக்கவிதை,நவீன கவிதை,பின் நவீன கவிதை என கவிதையின் வடிவம் பாடுபொருள்,சொல்லாட்சி,என்பன மாறிச் செல்கின்றன.எனினும் கவிதை என்ற வடிவின் பண்பியல்பு என்றும் மாறாது இருக்கின்றது.இலக்கியங்களின் கலைகளின்,கவிதைகளின் இயங்குதளம் மக்கள் மனங்களே,மக்களின் அன்றாட வாழ்வியலை பாடாத பேசாத படைப்புக்கள் விலைமதிப்பற்றதாகிவிடும்.அந்த அடிப்படையில் ஆரணியின் ‘பயணிக்கின்றன பாதைகள்’ எமது மண்ணின்,எமது மக்களின் வாழ்வியலை கடந்த சில தசாப்த காலங்களின் கண்ணாடியாக அவரின்; பார்வை புலத்திருந்து கருக்கொண்டு தம்மை கட்டமைத்துள்ளன.
தமிழ்கவிதையின் பல்வேறுபட்ட கவிதைகளை கவிஞர்களை பயில்வதும், பரீச்சயம் கொள்வதும் கவிஞரை மெருகூட்டும் என நம்புகிறேன்.ஒரு கவிஞர் ஆவதற்குரிய அடிப்படை பண்புகளை கொண்டிருக்கும் ஆரணி தொடர்ச்சியாக எழுதி இயற்றி,கவிதைகளோடு ஊடாடி தன் கவிதாவிலாசத்தை மேலும் மெருகூட்டி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு அவரிடம் உள்ள கவியாற்றல் மேலும் வளர்ந்து செழித்தோங்க எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈழத்து பெண் கவிதாயினிகளின் வரிசையும் நீண்டது குறிப்பாக யுத்த காலங்களில் பல பெண் கவிதாயினிகள் ஈழக்கவிதையில் தவிர்க்கமுடியாதவர்களாகி இருந்தார்கள். இன்று தளத்திலும் புலத்திலும் தொடர்ந்து இயங்கும் பல கவிதாயினிகள் உள்ளனர்.அவர்களின் வரிசையில் தனித்துவமான தன்மைகளுடன் ஆரணியும் ஈழத்து கவிதைதுறையில் இயங்கி சாதனைகள் மேலும் செய்துவர வாழ்த்துகின்றேன்.
அன்புரிமையுடன்
த.nஐயசீலன்