இன்றும் தொடரும் எழிற் கவிப் பயணம்

கீத்தா பரமானந்தன் அவர்களுடைய சில கவிதைகள் அடங்கிய புதிய நூல் ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

கீத்தா பரமானந்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனினும் கடந்த சுமார் முப்பது வருடங்களாக புலம் பெயர்ந்து ஜெர்மனியிலெ வாழ்ந்து வருபவர். நண்பன் நக்கீரனின் சகோதரி. அவர்களின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். அவர் கவிதைத் துறையில் ஈடுபடுவது ஒன்றும் வியப்பான விடயமில்லை.தன் ஆர்வம் காரணமாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய, கவிதைத்துறைகளில் ஈடுபட்டு ஏற்கனவே சில கவிதை நூல்களை வெளியிட்டுள்ள இவர் ‘பாவலர் பயிலரங்கம்’ நடத்தும் கவிவளர் பயிற்சியில் யாப்புகளைப் பயின்று பல்வேறு சந்தங்களில் செய்யுள்களை ஆக்கிய அனுபவத்தையும் இசைகூட்டிப் பாடத்தக்க இசைப் பாக்களை படைக்கும் திறமையையும் கொண்டுள்ளவர். மிக விரைவில் ஆயிரம் மரபுக் கவிதைகளைக் உள்ளடக்கிய தொகுப்பு ஒன்றையும் இவர் வெளியிட உள்ளார் என்ற சேதியும் முக்கியமானது.

மரபு சார் வடிவங்களிலும் புதுக்கவிதையிலும் இவர் தன் அன்றாட வாழ்வியல் அனுபவங்களையும், சமூகம்,இனம், பெண்ணியம், சார்ந்த பல்வேறு விடயங்களையும் பாடு பொருளாக்கி இருக்கிறார்.

“உண்மைக் காதலுக்கும் உறுதுணையாம் தோழமைக்கு பெண்மையின் உயர்வுக்கும் பேரழகாம் தாய்மைக்கும்
இல்லை என்றும் முற்றுப்புள்ளி…”

“குத்திவிடும் சிறுபுள்ளி குறித்துவிடும் முடிவுதனை சிந்தித்துப் போடு முற்றுப்புள்ளி சிந்தனைக்குப் போடாதே என்றும் முற்றுப்புள்ளி…”

என்ற ‘முற்றுப்புள்ளிக்’ கவிதை முத்தாய்ப்பாக புதுக்கவிதைக் கூறுகள் உத்திகளை கொண்டு வருகிறது.

“வண்ணமாய் வாஞ்சையாய் வசந்தத்தின் வருகையாய்
வாசல்கள் தோறும் வரவேற்பைக் கூறி
இன்பமும் இன்னலும் ஒன்றெனக் கொண்டுமே
எங்கணும் நிறைந்திட மலர்களே மலருங்கள்”

என்று ‘மலர்களே மலருங்கள்’ என்ற கவிதையில் மலர்களின் மலர்வு அழகியலிலும் சமூகச் சூழல் நன்மையை விரும்புகிறார்.

“நட்சத்திரங்களைச் சிதறவிட்டாய் கற்பனைகள் ஊற்றெடுத்து தடையின்றித் துள்ளிவந்த கவிதையென
இரவைத் தாலாட்டிட
உவகைப் பூக்கள் விரிந்து
விழியை மூடுகிறது”
என ‘சொல் ஆழி’ எனப் புதுப் படிமத் தலைப்பில் நவீன கவிதைப் பாணியிலும் முயற்சித்தும் பார்த்திருக்கிறார்.

‘வாலிபம் தொலைத்த வயோதிபம்’ என்ற கவிதை

“நோயும் பாயும் துணையாய்ப் போக வாயும் மனதும் வனப்பைத் தேடிட ஓயும் பருவத்தில் ஓராயிரம்
ஏக்கங்கள்
தேயும் நிலவாய் தேடுவார் இன்றி” என முதுமையின் சோகத்தை எண்ணிக் கலங்குகிறார்.

‘நெய்விளக்கு ஏற்றிடுவோம்’ என்ற கவிதை

“விதையாய் வீழ்ந்திட்ட
விருட்சமல்லவா
புயலாகப் பிறந்திட்ட வேதமல்லவா வலிகொண்ட வரலாற்றுப் பாடமல்லவா
வரிகளில் அடங்காத தியாகமல்லவா”
என்று ஈழமண்ணில் நடந்து முடிந்த ஈகப்போரின் பெருமையை சந்தம் கொஞ்சப் பேசிப் போகிறது.

பாட்டுக்கொரு புலவன் பாரதியை பாடிப் போற்றாதோர் உண்டா?

“பாவாலே ஆண்டிட்ட புலவன் பாரதத்தாய் பெற்றிட்ட மறவன் பூவாகச் சொரிந்திட்டே தமிழை புதுப்பரணி பாடிட்டான் நாளும் தீயாகிக் கனன்றிட்ட தீரம்
தீந்தமிழின் காவலென வேழம்” என அவனை ஓசை நயம் பொங்க நினைந்து வியக்கிறார்.

‘நதிதேடும் கடலாக நான் மாறவா’
என்ற கவிதையில்

“நதிசேரும் கடலாக நான்மாற வா நாளெல்லாம் இணைந்தாட நாள்பார்க்க வா!
அதிகாலைக் கனவாகி அணைத்தாட வா
அரும்பாகி மலராகி அசைந்தாட வா”

என “தனனான தனனான தனனானனா” என்ற சந்த மெட்டில் எதுகை, மோனை, சீர் , அசைகள் சிறக்க இசைப்பாடலும் எழுதி விடுகிறார்.

“வானில் கோலம் வாஞ்சையாய்ப் போடும்
வாஞ்சை உலகின்
வனப்பைத் தேடும்
காலமும் உறங்கா
நினைவுப் பறவை!” என்று நினைவுகளை பறவையாக உருவகித்துப் பரவசிக்கிறார்.

‘அதிகாலை அழகு’ என்ற கவிதையில்

“நத்தையின் ஊர்வும்
நழுவிக் கரைய
சொத்தையாய்ச் சிரிக்கும்
செவ்வந்தி மலர்கள்
கத்தையாய்த் தோட்டத்தில் இரைதேடும் சிட்டுக்கள்
தத்தியே விலகுது
இருளின் திரையும்” என சாமானியர் காணாத அதிகாலை அழகை நுணுகி ஆய்ந்து நாமும் இரசிக்க வைக்கிறார்.

இவ்வாறு இத்தொகுதில் உள்ள கவிதைகளூடாக கவிதாயினி கீத்தா பரமானந்தனுடைய கவிதை முகத்தை, கவிதை இதயத்தை, கவிதை உயிரை, கவிதை உயிர்ப்பை இலகுவாக இத் தொகுப்பில் தரிசிக்க முடிகிறது.

கவிதைத்துறையில் நீண்ட கால பயிற்சியும் அனுபவமும் உடைய இந் நங்கையின் கவிதைகளில் எளிமை, இயல்புத்தன்மை,ஆடம்பரமற்ற கற்பனை, அந்நியப்படாத வார்த்தைகள், வாசகரை குழப்பாத தெளிவு, நெஞ்சுக்கு நேர்மையாக வெளிப்படும் வார்த்தைகள், சமூக அக்கறை என்பவற்றையும் தரிசிக்க முடிகிறது.

நீண்ட பாரம்பரியம் கொண்ட, தமிழ்க்கவிதையில் பல வடிவங்களை இவர் பரீட்சித்து பார்த்துள்ளதையும் இதில் பார்க்க முடிகிறது. எமது பல்வகைமை மிக்க தமிழ்க் கவிதைகளுடனான தொடர்ச்சியான

ஊடாட்டம் இவரை மேலும் வளப்படுத்தும். கவிதைத்துறையில் செழிக்க வைக்கும்.

கீத்தா பரமானந்தனின் கவிப்பயணம் தொடர்ந்து வளர்ந்தொளிர வாழ்த்துக்கள்

அன்புரிமையுடன்

த.ஜெயசீலன்

07.04.2025.