பாடல்களைப் பேசும் பணி

‘சமரபாகு சீனா உதயகுமார்’ அவர்களின் 18 வது நூலாக ‘பாடல்களால் பேசுகின்றேன்’ என்ற ‘திரையிசை பாடல்களில் இலக்கிய நயம்’ என்ற வகுதிக்குள் வருகின்ற நூல் ‘குபேந்திரா பதிப்பக வெளியீடாக’ அண்மையில் வெளிவந்திருக்கின்றது.

ஏற்கனவே கணிதம், கவிதை, சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாவல், பல்சுவை, கல்வி, ஆகிய வகைகளைச் சேர்ந்த 17 நூல்களை வெளியிட்டுள்ள ஆசிரியத்துறை உட்பட பல்பரிமான ஆளுமையுடைய சமரபாகு சீனா உதயகுமார்
மேற் சொன்ன வகைகளிலிருந்து வேறுப்பட்டு தமிழ்திரையிசைப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட இந்நூலை வெளியிட்டு இருக்கிறார்.

திரையிசை அல்லது சினிமா இசை என்பது ஜனரஞ்சகமானது, சாதாரணமானது, இலக்கிய, இசை அந்தஸ்த்து அற்றது, தீண்டத்தகாதது என்ற சிலரின் அறியாமை இருளைக் கலைக்கும் முதல் சுடர்விளக்கொளியாய் இந்நூல் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிதது.

தமிழ்திரை இசையின் புதிய வரலாறாக, பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக, கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ்த்திரையிசை உலகத்திலும், பல்வேறு இசைப்படைப்புக்கள் மூலமாக சர்வதேச ரீதியிலும் பெரும்புகழ்பெற்று தனது 82வது வயதில் இன்றும் இசைத்துறையில் ஈடுபட்டு இயங்கி வரும் ‘இசைஞானி இளையராஜா’ அவர்களுக்கு சமர்ப்பணமாக இந்நூலை வெளியிட்டிருக்கும் உதயகுமார் தன் அனுபவம் சார்ந்த, கடந்த காலங்களிலும் தான் பார்த்து கேட்டு சுவைத்த, தமிழ்த் திரையிசை பாடல்கள் பற்றியும், அவற்றை படைத்தவர்கள் பற்றியும், தன் தனிப்பட்ட விருப்பம் தெரிவு சார்ந்தும் ஒப்பிட்டு ரீதியாகவும் சிறியதும் பெரியதுமான 42 கட்டுரைகளை தொகுத்து இந்நூலாக வெளியிட்டிருக்கின்றார்.

இவர் இங்கு எடுத்தாண்ட அனேகமான பாடல்கள் 80 களிற்கு முன் வெளிவந்த ‘பழைய பாடல்கள்’ என்று பொதுவாக எல்லோராலும் கருதப்படுகின்ற பாடல்களாகவே காணப்படுகின்றன. அவற்றின் இசை நுணுக்கங்கள், பாடகர்கள் பாடல்களை பாடிய முறைமைகள், பாடல் வரிகளிலிருந்த பொருத்தம், சிறப்புக்கள், என்பவை அனேக கட்டுரைகளில் உள்வாங்கப் பட்டிருக்கிறதன. அத்துடன் 80ற்கு பின்னான இன்றுவரையுள்ள திரையிசைப் பாடல்களின் சில விடயங்களையும் கட்டுரைகளாக இவர் ஆக்கியுள்ளார்.

இந் நூலிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, தெரிவு, ரசனையின், பாற்பட்ட கட்டுரைகளே எனினும் அவற்றில் பெரும்பாலானவை அவரின் வயதை ஒத்த தலைமுறைகள் உட்பட இன்றைய திரையிசை பற்றி பெரும் அதிருப்தியில் இருக்கின்ற அனேகமானவர்களையும் ரசிக்க வைப்பவையாக அமைகின்றன. அத்துடன் அதிக ஆழமான, நுணுகிய ஆய்வு விடயங்களாக, தீவிர வாசிப்புப்குரியவையாக, அக் கட்டுரைகள் அமையாமல் குறித்த விடயங்களை மேலோட்டமாக சிலாகிப்பவையாக காணப்படுவதால் அவை வாசகர்களின் மூளைக்கன்றி இதயத்திற்கும் நெஞ்சிற்கும் நெருக்கமானதாகவும், சலிப்புத் தட்டாதவையாகவும், அமைந்திருக்கின்றன.

இவருடைய கட்டுரைகளில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்,கவியரசர் கண்ணதாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாலிபக் கவிஞர் வாலி, இசைஞானி இளையராஜா, காதல் மன்னன் கமலஹாசன், இயக்குனர் சிகரம் பாரதிராஜா, கவிஞர் பஞ்சு அருணாச்சலம், கவிஞர் வைரமுத்து, கவிஞர் பழனி பாரதி, பல்துறை ஆற்றலாளர்களான கங்கை அமரன், T.ராஜேந்தர், போன்றவர்கள் வந்து செல்கிறார்கள்.

நூலில் இடம் பெறும் சில கட்டுரைகள் ஒரு படைப்பாளியுடன் இன்னொரு மறைந்த அல்லது வாழும் படைப்பாளியை ஒப்பீட்டு நோக்கில் அணுகி அவர்களின் படைப்புக்களிற்கு இடையிலுள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் பேசுபனவையாக அமைகின்றன. அவற்றில் வாலி – வைரமுத்து, வாலி – சோக்கிரட்டீஸ், வாலி- உருத்திரமூர்த்தி, விவேகசிந்தமணி- கண்ணதாசன், கம்பன்- கண்ணதாசன் – கங்கை அமரன், போன்ற ஒப்பீடுகள் ரசிக்க வைக்கின்றன.

இவரின் சில கட்டுரைகள் திரையிசைப்பாடல்களில் விசேடமாக எடுத்தாளப்பட்ட விடயங்கள், பாடல்களின் உள்ளடக்க வேறுபாடு, இசையமைப்பாளர்களின் பாடலாசிரியர்கள், பாடகர்களின் தனித்துவ முத்திரைகள் என்பவற்றை நுணுக்கமாக அவதானித்துப் பேசுகின்றன.

சுமார் நூறு வருட வரலாறு கொண்ட தமிழ் திரையிசையில் அதிலும் முழுமையாக தமிழகத்திலிருந்து வெளிவந்த சினிமாப் பாடல்களைக் கேட்டு ரசித்து அவற்றை சிலாகிக்கும் அல்லது அத்திரையிசைப் பாடல்களின் இலக்கிய நயத்தைத் தேட அல்லது காண முயலும் படைப்புகளைக் கொண்டதான தொகுப்பு நூல்கள் வெளிவந்தது மிகக் குறைவு. இந்நூல் அக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதோடு இப்புதிய பார்வை ஈழத்திலிருந்து குறிப்பாக யாழிலிருந்து தோற்றம் பெற்றிருப்பது முக்கியமானதாக அமைகிறது.

இலக்கியத்தின் வெவ்வேறு வடிவங்களான கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், போன்ற பல்வேறு விடயங்களில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டு ஊடாடி வரும் உதயகுமார் அவர்களின் இலக்கியப் பரீச்சயம், அவரின் அழகியல் அணுகுமுறை, அனுபவம் என்பன இந்நூல் ரசிப்பிற்குரிய ஒரு நூலாக வெளிவந்திருப்பதற்கு காரணமாகின்றது.

80களில் தமிழ் திரையிசையின் பயணத்தில் பாரிய திருப்புமுனை ஏற்பட்டது என்றால் மிகையில்லை. புதிய இசையமைப்பாளர்கள்,புதிய கவிஞர்கள், புதிய பாடகர்கள், மண்ணோடு ஒட்டிய விடயங்களை கையாண்ட புதிய இயக்குனர்கள், புதிய கதைக்களங்கள், புதிய நடிகர்கள், மேக்- அப் முறை மாற்றங்கள், வானொலி, ரேப் ரெக்கோடர், இறுவட்டுகளின் அறிமுகம், என்பன புதிய மலர்ச்சியை பரிமாணத்தை மடைமாற்றத்தைத் தமிழ் திரையிசையில் ஏற்படுத்தின. இது இந்திய சினிமாத்துறைக்கே முன்னுதாரணமாகவும் வழிகாட்டுவதாகவும் அமைந்திருந்தது. தூற்றிப் பழித்த வடக்கர்களும் தென்னக சினிமாவைப் போற்றிப் பின் தொடர்ந்தனர். இக்கால கட்டத்திலேயே தென்னக ஆளுமைகள் இந்தியா எங்கும் கோலோச்சத் தொடங்கினர்.

ஆனால் இன்று நவீன தொழில்நுட்ப வளர்ச்சி கணனி, இணையத்தள, சமூக ஊடக பாவனையாக மாற்றமடைந்தமையானது தமிழ்ச் சினிமாவிலும் திரையிசையிலும் கூட பாரிய மாற்றத்தை, தாக்கத்தை செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

‘தமிழ்ச் சினிமாவின் பொற்காலம்’ எனப்படுகின்ற 80களில் இன்றிருப்பது போல ஊடகங்களின் பயன்பாடு இல்லாத போதும் கூட வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் கிடைக்காமையால் அத்தலை முறையில் வாழ்ந்த அனேகமானவர்களுக்கு சினிமா சார்ந்த தகவல்கள் இலகுவாக வானொலி தொலைக்காட்சி சஞ்சிகைகளூடாகக் கிடைத்தது. அவர்களுக்கு அக்கால திரைத்துறை சார்ந்த விடயங்கள் அத்துப்படியாகத் தெரிந்தும் இருந்தது. அந்த கேட்டறிந்த விடயங்களே இந்நூலுக்கான அடிப்படைகளாகவும் ஆதாரங்களாகவும் அமைந்திருக்கின்றன.

80களில் தோன்றிய ஆளுமைமிக்க இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள், இயக்குநர்கள், போன்றோர் தமக்கு முன்பிருந்த தலைமுறையினரின் ஆற்றல் ஆளுமை எல்லைகளைத் தம் ஆற்றல் ஆளுமையினால் தாண்டிக் கடந்தாலும் அவர்களின் வழிநின்று அவர்களின் மேதா விலாசத்தை மதித்துப் பிரகாசித்தனர்.ஆரோக்கியமான போட்டியுடன் வெளிவந்த அக்காலப் படைப்புக்கள் எல்லோராலும் மதிக்கப்பட்டதோடு அதற்கு முந்திய தலைமுறைப் படைப்புக்களோடு ஒப்பீட்டு ரீதியாகவும் ரசனை ரீதியாகவும் நோக்கப்பட்டது. இந்த நிலை இன்றில்லை.

இன்றைய காலத்தை விட அக்கால படைப்புக்கள் அனைத்து தரப்புக்களிடமும் சென்று சேர்ந்ததுடன் அவை அக்கால நினைவுகளை இக்காலத்திலும் மீட்டுபவையாக அமைந்திருப்பதும் அப்படைப்புகளின் மேன்மையையும் சிறப்பையும் காலங்கடந்து சமூகத்தில் பதித்த அழுத்தத்தையும் தெளிவாகச் சுட்டி நிற்கிறது.

வானொலியில் ஒலிபரப்பப்பட்டால் மட்டுமே கேட்க முடிந்த காலத்தில் பாடல்கள் பெற்ற வெற்றி இன்று ஆயிரம் வசதிகள், முன்னோட்டங்கள், விளம்பர உத்திகள், வாய்த்தபோதும் சாத்தியமாகவில்லை என்பது துரதிஷ்டவசமானது.

இன்றைய படைப்புக்கள் நவீன தொழில் நுட்பங்களை அதிகம் கொண்டு துல்லியத் தன்மை மிக்கவையாக இருந்தாலும் அவை விரைவில் காணாமற்போகும் தன்மையுடையவையாகவும், மனதில் ஒட்டாதவையாகவும், உயிரற்ற இயந்திர மயமானவையாகவும், எமது மண்ணோடும் வாழ்வோடும் இணங்காத அந்நியமானவையுமாகவுமே காணப்படுகின்றன.

தமிழ் சினிமா இசையில் இன்று ஏற்பட்டு இருக்கின்ற இந்தத் தேக்கம் சலிப்பு பழைய இசையை, பாடல்களை, அவற்றைப் படைத்த கலைஞர் கவிஞர்களை இன்றைய தலைமுறையும் தேடி இரசித்து அவற்றின் அவர்களின் மேன்மைகளைக் கொண்டாடும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழலில் சமரபாகு சி. உதயகுமாரின் கடந்த காலத்தை மீட்டிப் பார்க்க வைக்கும் ஆக்கங்களைக் கொண்ட இந்நூல் முக்கியமானதாகப் படுகிறது, வெறும் இரைச்சலையும், காதைக் கிழிக்கும் சத்தத்தையும், அர்த்தமற்ற வார்த்தைக் குவியல்களையும் கொண்டு, இயல்பான படைப்பாக்கத் திறனற்று, தொழில்நுட்பக் கருவிகளின் துணையை மட்டும் கொண்டு, எங்கெங்கோ இருந்து வெட்டி ஒட்டி கலந்து குழைத்து வெளிவரும் மனதோடு ஒட்டாத திரையிசைப் பாடல்களுக்கு மத்தியில் இதயத்தை மயிலிறகால் வருடி, தாய்மடியாய் இதமும் சுகமும் அள்ளி வழங்கி, அனேகமாக இரவுகளில் அமைதி அருளி, மனச் சலனம் போக்கி, நிம்மதி நல்கித், தாலாட்டித் தூங்கவைக்கின்ற இசையையும் வரிகளையும் கொண்ட பாடல்களைப் பற்றிய இந்நூலின் பகிர்வுகள் வாசிக்கும் போது எமக்கும் ஆறுதல் தருகின்றன.எம்மை ஆனந்தப்படவும் வைக்கின்றன.

உதயகுமாரின் இரசிப்பனுபவம் எங்களையும் ஆட்கொண்டு விடுகிறது. இது இன்றைய கணணி இசை காதலர்களையும், நாளைய AI தலைமுறையினரையும் கூட கவரும் ஆட்கொள்ளும் என்பதே யதார்த்தம்.

எமது பண்பாட்டுச் செழுமையையும், எமது மண்ணுக்குரிய தனித்துவ கலாசார அடையாளங்களையும், எங்கள் வாழ்வியலின் அங்கங்களையும் காவிக்கடத்திய தமிழ்த் திரையிசைப் பாடல்களின் சிறப்பை பெருமைகளச் சுட்டிக்காட்ட கட்டிக்காக்க உறுதுணை புரிந்திருப்பதே அல்லது அதற்கான சிந்தனை விதைகளைச் சமூகத்தில் தூவி இருப்பதே இப் ‘பாடல்களால் பேசுகிறேன்’ நூலின் பயன் மற்றும் வெற்றி என்று துணிந்து கூறுவேன்.

த.ஜெயசீலன்

10.09.2025