முதல் “அவிர்” பாகம்.

பளை சோரன்பற்றை சொந்த இடமாகக் கொண்ட கிளி/ சோரன்பற்று
கணேசா வித்தியாலயத்தின் மாணவனான சுதந்தரலிங்கம் செல்வசுதனின்
(கவி மைந்தன் செல்வசுதன்) “அவிர்” என்ற முதலாவது கவிதை நூல்
வெளிவருவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். 
தனது பதின்நான்காவது வயதில் கவிமைந்தன் செல்வசுதன் இந்நூலை
வெளியிடுவது பாராட்டுக்குரியது. இவர் இவ்வயதில் நூலை
வெளியிடுகின்றார் என்றால் எவ் வயதில் கவிதையில் ஈடுபாட்டையும்
ஆர்வத்தையும் கொண்டிருந்திருப்பார் என்பதை எண்ணி வியக்கிறேன். 
பாடசாலை மாணவனாக, ஒரு சிறுவனாகத் திகழும் இவர் ஏனைய
மாணவர்கள் போல் அல்லாது இலக்கிய அதாவது கவிதை துறையில்
ஈடுபடுவது போற்றுதற்குரியதோடு முன்னுதாரனமான ஒரு செயற்பாடு
மாகும். இவரை ஊக்கப்படுத்துவது ஏனைய இவரின் வயது மாணவர்களை
வழமையான கல்விச் செயற்பாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம்
கொடுக்கும் நிலைப்பாட்டை மாற்றமடையச் செய்யும். அவர்களையும்
அவரவர்கள் விரும்பிய அவரவர்களுக்கு இயல்பாக கைவரும்
துறைகளில் கல்விச் செயற்பாடுகளுக்குச் சமாந்தரமாக ஈடுபடவும்
வைக்கும். பாடசாலை காலத்தில் மாணவர்களின் ஆக்கங்கள்
கையெழுத்து சஞ்சிகைகள் சிறு இதழ்களாக வெளிவந்திருப்பினும் ஒரு
அச்சு நூலாக வெளிவருவது அரிதே. அது  கவிமைந்தனிடம்
சாத்தியமாகியுள்ளது.
ஐம்பத்துநான்கு பக்கங்களில் சிறிதும் பெரிதுமான ஐம்பது கவிதைகளைக்
கொண்டு இவருடைய நூல் வெளிவருகின்றது. நூலின் தலைப்பு “அவிர்”.
ஒரு யாகத்தில் தோன்றும் அவிப் பொருளாக, இவர் செய்யத்
தொடங்கியுள்ள கவி யாகத்தின் முதற் பலனாக இந்த “அவிர்”;
கிடைத்திருக்கிறது.
ஒரு சிறுவனுக்குரிய மனநிலையோடு  சிறுவரின் வயதிற்குரிய
விடயங்களை தனக்கு புரிந்த கவிதை மொழியில்   இவர் கவிதைகளாக
வடிக்க முயன்றுள்ளார். 
இவை சிறுவர்களுக்கு வளர்ந்தோரால் படைக்கப்பட்ட சிறுவர் பாடல்கள்
அல்ல. சிறுவனொருவனாலே படைக்கப்பட்ட  பாடல்கள்.

கவிதை என்னும் தமிழின் மிக மூத்த முக்கியமான உயர் இலக்கிய
வடிவில் தான் சந்தித்த இன்னோரன்ன விடயங்களை, தன்
அனுபவங்களை, உணர்வுகளை, அதிகம் அலட்டிக்கொள்ளாது தான்
அறிந்த தான்  தெரிந்த கவிதை போன்ற  வடிவத்தில் ஆரம்பநிலை
கவிதைகளாக இவர் தன் கவிதைகளை எழுதியிருக்கிறார். இது ஒரு
குறையல்ல. ஏனெனில் சகல கலைஞர்களும் இந்த படிநிலையை கடந்தே
வளர்ந்து மிளிர்ந்திருக்கிறார்கள். மிளிர்ந்திருக்க வேண்டும். ஆனால்
ஏனையோருக்கு கிடைக்காத ஓர் வாய்ப்பாக தான் எழுதிய கவிதைகளை
பதின்ம வயதிலேயே நூலுருவாக ஆக்கியிருப்பது மிக முக்கியமானது
என்பதுடன் எதிர்காலத்தில் இவருடைய வளர்ச்சிப் படிநிலைகளை
ஒப்பிடுவதற்கு ஒரு சான்றாதாரமாகவும் இம் முயற்சி கைகொடுக்க
வாய்ப்பிருக்கிறது.

 இந்நூல் வெளியீட்டுக்கு அனுமதித்து ஒத்துழைத்து ஊக்கப்படுத்திய
பெற்றோருக்கும் மற்றோருக்கும் எனது பாராட்டுக்கள். அவர்களும்
முன்மாதிரியாக சிந்தித்துச் செயற்பட்டிருக்கிறார்கள் என்பேன்.
கவிமைந்தனின் கவிதைகள் எளிமையானவை. தன் மனதுக்கு
சிந்தனைக்கு எட்டியதை நேரடியான எளிமையான சாதார சொற்களில்
சோடனைகள், கவிதை அணிகளை பற்றிய அக்கறைகள் ஏதுமற்று இவர்
எழுதியுள்ளார். 

“பளைநகரம்”, “கணிதம்”, “முத்தமிழ்”, |எலியாரே”, “இயற்கை”,
“காலைக்காட்சி”, “இளங்காற்று”, ‘நாய்க்குட்டி” என்றது போன்ற
தலைப்புக்களில் கவிதை எழுதும் இவர் தனது சொந்த அனுபவங்களை
“பரீட்சைக்காலம்”, ‘கொரோனா எனும் நோய்”, “நான் சென்ற சுற்றுலா”;
போன்ற  கவிதைகளாகவும் பாடியுள்ளார்.

“அன்னை&” எனும் கவிதையில்
ஏக்கங்கள் பல கொண்டு
 ஏணிபோல் உயர்த்துவாள்
என் அன்னை என்பவர்…
“அப்பா” எனும் கவிதையில்
அப்பா எனும் சொல் சிறிது
ஆனால் அவர் செய்யும்
தொழில் பெரிது
உழைப்பும் பெரியது என்றும் வியக்கிறார்.

“விஞ்ஞானத்தின் விந்தை” எனும் கவிதையில்
அன்று மனிதனே இயந்திரத்தை இயக்கினான்
இன்று மனிதனே இயந்திரமாக ஆகிவிட்டான்; என்று கவலை கொள்கிறார்.
“குடும்பம்” என்பதில்
கூடி வாழ்ந்தால் 
கோடி நன்மையென்பது பழமொழி
குடும்பத்தில் வாழ்ந்தால் – அதுவே
மனநிம்மதி என்பது பொன்மொழி என வியக்கிறார்
“மலைத்தொடரும் மரங்களும்” கவிதையில்
வீட்டிற்கு ஓட்டைப்போல்
மலைக்கு மரங்கள்" என புதிய கற்பனை துளிர்க்க நிற்கிறார்.
“கடலலை”
எனும் கவிதையில்
பாம்பின் நடை நடந்து
பக்குவமாய் கவிபடைத்து
பார்ப்பவரின் மனதை
பரவசித்தாள் எனப் பேசுகிறார்.

 இச் சிறுவன் தானும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை தான்
செவிவழியாக அறிந்து கேட்ட கதைகளை அடிப்படையாக கொண்டு
“ஈழப்போர்” என்னும் கவிதையுடன் தொகுதியை நிறைவு செய்கின்றார்.
அதில்
காலக் கொடுமையதை
காலனும் அறிந்தானே
காணாமற் போனோரின் அவலத்தை
காவியமாய் வடிக்க
காகிதங்கள் போதாது" என்றும் மலைக்கின்றார்.
இவை சில பதச்சோறுகளே.

இன்றும் ஒரு பள்ளி மாணவனாக சிறுவனாக இருந்து கொண்டும் ஏனைய
சராசரிச் சிறுவர்களை போல அல்லாது கவிதை துறையில் இவர் ஈடுபட
நினைத்ததே இவரை வாழ்த்திப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தை
எனக்கு ஏற்படுத்தியது.

மேலும் எமது பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இம்முயற்சி
மேற்கொள்ளப்பட்டிருப்பதும் மகிழ்வைத் தந்தது.
 இவரை பெற்றோரும் ஆசிரியர்களும் இவரின் ஆர்வம் அறிந்து
எதிர்காலத்திலும் வழிகாட்ட வேண்டும். கல்விச் செயற்பாட்டுக்கு
குந்தகமில்லாமல் தன் மனதிற்கு பிடித்த கவிதைத்துறையிலும்  இவர்
இயங்கி தமிழ்க் கவிதைத் துறையின் ஆழ நீள அகலங்களை எல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாக கற்று கேட்டு வாசித்து அறிந்து தன்னை வளர்த்துக்
கொள்ள முயல வேண்டும்.

கவிதை துறையில் ஆரம்ப படியில் கால் வைத்திருக்கும் கவிமைந்தன்
செல்வசுதன் கவிதைத் துறையின் ஏனைய  அடுத்த படிகளிலும்
ஒவ்வொன்றாக கால் பதித்து ஏறி தொடர்ச்சியாக ஆர்வத்துடன்
கவிதைகளோடு ஊடாடி எதிர்காலத்தில் ஈழக் கவிதை துறையில் வளர்ந்து
மிளிர்ந்தொளிர வாழ்த்துகின்றேன்.

த.ஜெயசீலன்
பிரதேச செயலர்
பச்சிலைப்பள்ளி.
08.09.2025