மங்கிடாப் புகழாளன்

எங்களின் குருவாயும், “இது திசை”
என்று ரைத்த ‘கலங்கரை’ யாகவும்,
சங்கை மிக்க ‘யாழ் இந்து’ ஆசான்களில்
தனித்தொளிர்ந்த ‘பிதாமக னாகவும்’,
சிங்கமாகக் கால் பழுதுபட் டாலும்… உள்ச்
சீற்றம் குறையாது ‘வாழ்ந்து… உயர்ந்த’ நம்
‘மங்கிடாப் புகழாளன்’ ‘சிவராம-
லிங்கம்’ மாஸ்ரரை.. நெஞ்சால் வணங்குவோம்!

கற்ற கல்வியால் பெற்ற கம்பீரமும்,
கலை மொழி தேர்ந்து கொண்ட மிடுக்கதும்,
மற்ற வர்க ளிற்காய்த் தன் இயலாமை
மறைத்து… உதவிடும் ஈகைக்குணம் பண்பும்,
உற்ற துன்பம் பொறுத்து… ஊர் உலகிற்
குழைத்தும் தன்நலம் எண்ணாத் தியாகமும்,
நற்றமிழ் சைவம் பேசி அறம் சொல்லுஞ்
ஞானமும், கொள் ‘சிவ ராமர்க்கு’ ஈடுயார்?

‘மூன்று சக்கரச் சைக்கிளாம் தேரிலே’
மூலை முடுக்குகள் யாவும் நிதம் சென்று,
ஆன்றோர் தொட்டு அசடர் வரை நட்பை
ஆண்டு, யார்யா ருக்கோ கரம் தந்து,
சான்றோ னாகவும், ‘நாட்டாமை’ போலவும்,
தமிழடியார்க்குப் ‘பிரம்ம ரிஷி’யாயும்,
தோன்றி – மறைந்தின்று இருபது ஆண்டுகள்
தொலைந்ததா? ‘ஐயன்’ நினைவுகள் நீறுமா?

‘ஆசான் – மாணவர்’ உறவுக் குதாரணம்
ஆனவர் ‘லிங்கர்’; ஆற்றுப் படுத்தியும்,
பேச வைத்தும், பிரபலம் ஆக்கியும்,
‘பின்னிற்க’…மாணாக்கரோ ‘முன்வைத்து’
தேசம் தேசமாய்க் காவித் திரிந்தனர்!
சேவை செய்தனர் கடைசி வரை; அவர்
பாசம் கண்டவர்… இன்று ‘நூற்றாண்டு
அகவை நாளில்’ பணிந்தஞ் சலிக்கிறோம்!

த.ஜெயசீலன்
11.09.2025.