கவிஞர்.த. நாகேஸ்வரன் அவர்களுக்கு பூத்தூவி அஞ்சலித்தோம்!

சந்தமார் கவிகள் பாடி
தன் திறன், ஆற்றல் சொன்ன
செந்தமிழ்க் கவிஞர். கல்விச்
சேவையால் ஒளிர்ந்த தீரர்.
சந்ததம் கலைக்காய்த் தன்னைச்
சந்தன மாகத் தேய்த்தோன்.
நொந்துமா நோயில் வீழ்ந்தார்?
நொடிந்தனம் நாமெல் லோரும்!

‘கம்பனின் கழகம்’ வைத்த
கவிப்போட்டி ஒன்றில் கண்டேன்.
‘வம்பு’ சேர் சந்தப் பாக்கள்
மழையெனப் பொழிந்தார் ‘நாகேஸ்’!
தம்பிமார் முப்ப தாண்டாய்த்
தமிழாலே இணைந்து நின்றோம்.
நம்பிட முடிய வில்லை,
நமனினைத் தூற்று கின்றோம்!

கவிதைகள் புனைந்து; பேச்சில்
கலகலப் பளித்து; நேற்று
தவம்போல தனியார் கல்விச்
சாலையில் மிளிர்ந்து; ‘கம்ப-
னவன்’ பணி, ‘தென்ம ராட்சி
இலக்கிய அணி’ யில் சேவை
புவிபோற்றப் புரிந்து; போனீர்!
பூத்தூவி அஞ்ச லித்தோம்!

14.09.2025.