இசைஞானி

எந்தெந்தக் காலம் எப்படித்தான் மாறிடினும்
சிந்திஅழுகாச் செவிநுகர்
கனிவகைகள்
தந்தாய்நீகற்பகதருவாகி!
எண்ணிலாத
அந்தக் கனிகள் எமதுஅகம் புறத்தில்
எப்போதுங் கிடக்க…
எதைச்சுவைப்பதெனமருண்டு
இலகுவாய்க் கிடைத்ததனை,
இதமாய்க் கனிந்ததனை,
மிகவும் இனித்ததனை,
உருசித்துத் தினம் உருசித்து
மனமும் வயிறும் குளிர்ந்து இருந்தோம் யாம்!
நாங்கள் அடிக்கடிஉருசித்தகனிச்சுவையை
விட…நாம் அதிகம்
சுவைக்காதநின்கனிகள்
பலதைத் தெரிந்தெடுத்து இப்போ
சுவைக்கையிலே
அவற்றின் புது உருசியைஅனுபவித்தோம்!
என்றென்றும்
புதியசுவையைத் தருவனஉன்கனிகள்.
விதிகள் பலகடந்தும்,
விசேடசுவைகலந்தும்,
வியப்பையிக் கணமும்
வளங்கிக்கொண் டுள்ளனநின்
பலகனிகள்
இயற்கைச் செழிப்பும் புத்துயிர்ப்பும்
கலந்தன உன் கனிகள்.

இன்று….பார்க்கவடிவாயும்,
நவீனநிறத்தோடும்,
உருசித்துக் கொண்டிருக்கையிலே
சுவையைமறக்கவைக்கும்…சொல்லுந் தரமற்றுக்
கைக்கின்றவெம்பற்
கனிகளைத்தான் அருந்துகிறோம்!
உந்தன் சுவையைஉருத்திரித்து
தம்கனிகள்
என்றுரைப்போர் நல்கும் ஏற்றமிலாக் கனிகளையே
காண்கின்றோம்
இன்றுந்தன் கனியருமைஉணர்கின்றோம்!
எந்தெந்தக் காலம்
எப்படித்தான் மாறினாலும்
சிந்திஅழுகாச் செவிநுகர்
இசைக்கனிகள்
தருவோன்நீ…
கற்பகதருவாய்…. இசைஞானி!

இசைப்பயன் நீ

தூறலென அன்று தொடங்கியது நின்பயணம்.
தூறல் மழையாகி,
சொரிந்து அடை மழையாகி,
வாரடித்து வெள்ளமாகி,
வாய்க்கால்களில் பெருகி,
ஓடிச் சிறு அருவி ஆகி,
கிளைபரவி,
கூடியொரு ஆறாகி,
குலவி ஆறுகளாகி,
காட்டாறாய்ச் சீறி, கடலோடு கடலாகி,
ஆழ சமுத்திரமாய் ஆனாய் !
மனநிலங்கள்
யாவையையும் கழுவித் துடைத்து
அவற்றையெல்லாம்
போஷித்தும் நீ நிலைத்தாய்!
பொருளறிந்தோர் அன்றுரைத்தார்….
“நீரின்றி அமையாது உலகென்று ”
நிஜம்:
நீராய்
வேறுவேறு
பரிமாணம் கொள்ளும் நீ
இவ்வுலகைப்
பாலித்து நிறைகின்றாய் !
‘இசைப்பயனாய்’ அருள்பொழிவாய்!

Leave a Reply