தேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா

ஈழத்தில் 1990 களில் எழுதத் தொடங்கிய கவிஞர்களில் த.ஜெயசீலன் தனித்துவம் வாய்ந்ததொரு படைப்பாளுமை பெற்றவராக நிலைபெற்றுள்ளார். இவரது கவிதைகள் யாவும் காத்திரமானவையாகவும் யதார்த்தம் பேசுபவையாகவும் உள்ளன.

‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’ எனும் நூல் இவரது நான்காவது கவிதைத் தொகுப்பாகும். இதில் பிரார்த்தனைகள் என்ற கவிதை முதல் எம்மொழி போற்றதும் என்ற கவிதை ஈறாக 59 கவிப்பூக்கள் மலர்ந்து மணக்கின்றன. அவை அத்தனையும் வாசகர்களை, தேடலை நோக்கி அழைத்துச் செல்கின்றன.

பொதுவாக ஒரு சம்பவத்தையோ அல்லது ஒரு நிகழ்வையோ கவிதையாக்கும் போது, அதற்கு அழகு சேர்ப்பது மொழியாகத்தான் இருக்கும் அந்தவகையில் இவரது எளிமையான மொழிநடை கவிதைகளுக்கு கனதி சேர்க்கிறது. அங்கே அழகியல் ஜொலிக்கிறது. கவிதை மொழிகளால் அவர் கவிதைகளைப் படைத்துள்ளமை அவரது தனித்துவத்தைப் பறைசாற்றுகிறது.

‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’ என்ற தலைப்புச் சிந்திக்கத் தூண்டுகிறது. ஒரு புயல் மழையின் பின்னரான பொழுதானது, நாம் நினைப்பது போன்று சுலபமானதல்ல. அவரவர் இருப்புக்கேற்ப அந்தப் பொழுதின் தாக்கம் வேறுபடுவதோடு காலநீட்சியும் கொண்டதாகும். அதைத்தான் கவிஞர் இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

சுயத்தின் தேடல், இயற்கை மீதான ஈர்ப்பு, போரின் பின்னரான அவலம் பிடிமானமற்ற காலத்தின் இயலாமை மேலாண்மை குறித்த எள்ளல் போன்ற பல்வேறுபட்ட பாடுபொருளினைத் தன்னகத்தே கொண்ட கவிதைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

இவ்வாறு சிறப்பாக அமைந்துள்ள இக்கவித்தொகுப்பு நூலில் ஆங்காங்கே அச்சுப்பிழைகள் தலைதூக்கி நிற்கின்றன. அத்துடன், முற்றுப்புள்ளிகளும் தேவையற்ற இடங்களில் இடப்பட்டுள்ளன. இவை நூலின் வனப்பைச் சற்றுக் குறைக்கின்றன. மற்றும் படி கவிகள் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

அலாதியான சொற்களின் உன்னத ஒழுங்குபடுத்தலே கவிதைகளாக உருப்பெறுகின்றன.சொற்களின் இடையே புதைந்துள்ள மௌனத்தின் பேருருவமே கவித்துவத்தின் தேறிய பெறுமானமெனக் கொள்ளப்படுகின்றது. இவற்றினைக் கவிஞர் ஜெயசீலனின் கவிதைகளில் தரிசிக்க முடிகின்றது.

(16.08.2015 தினக்குரல் வாரமலர் ‘நூலறிமுகம்’ பகுதியில் வெளிவந்தது)

Leave a Reply