சேவையிலே சீராளர். – பொ.சிவதாஸ்

குன்றாத உடலழகு… கேட்கும் யார்க்கும்
கொடுத்துதவும் பேரறிவு… கடமைக்காக
தன் கஷ்டம் பாராத அர்ப்பணிப்பு
சகலரோடும் எளிமையாகப் பழகும் பண்பு…
மென்மையான புண்படுத்தாப் பேச்சு, யாரும்
இலகுவாக அணுகவல்ல உயர் பணிவு…
புன்னகையே வாடாத பொலிவு…இவைகள்
பொ.சிவதாஸின் நல் இயல்பின் சான்று!

‘ஆறு. ஐந்து. அறுபதில்’ சரசாலை மண்ணில்
பொன்னம்பலம் சிவயோகம் செய் தவத்தாற்
தான்…பிறந்து…,தவழ்ந்தெழுந்து நடந்துயர்ந்து,
சாவகச்சேரி கமலாசினி வித்யா சாலை
போதிக்க… தரம் ஆறு வரையும் கற்று,
புகுந்து தரம் ஏழில் யாழ் இந்து சென்று,
சீராக உயர்தரத்தில் தேர்ந்தொளிர்ந்து
அரச நில அளவையாளர் ஆனார் அன்று!

இருபதாண்டில்… அரச நில அளவையாளர்,
பின் உதவி நில அளவை அத்தியட்சகர்,
சிறிது நாளில் நில அளவை அத்தியட்சகர்,
சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர்,
வரிசையாக உயர்ந்து இன்னும் உயர்வு காண
வரம் கேட்டோம்;;ளூ விதி… சாபம் போடக் கண்டோம்!
சிறுநீரகம் எமனாய் மாறிற் றையோ!
சிகிச்சைக்கும் நாள்குறித்தோம்… ம(றை)றந்ததேனோ?

சேவையிலே சீராளர், குடும்பம் தன்னை
சேவித்து வழிநடத்தி வந்த தேவர்!
ஊர்புகழ… கல்வியிலே சேய்கள் தம்மை
உயர்த்திவைத்து…பாசத்தின் உவமை யானார்!
வான்சேர்ந்தார்… பலர் வியக்க … அமரரானார்!
வீடிருந்து காடுவரை நெடுந்தொலைவு
காவிவந்து அன்புரைத்தார்… கடமைப்பட்டோர்!
கசிந்தன்னார் ஆத்மசாந்திக் காய்நாம் நேர்வோம்!

Leave a Reply