காதல் வந்த சாலை – பற்றி

‘காதல் வந்த சாலை’ பற்றி ….                           .ஜெயசீலன்

சமரபாகு சீனா உதயகுமாரின் புதிய கவிதைத் தொகுப்பான’காதல் வந்த சாலை’ காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் கவித்துவ அரிதாரம் பூசிய புதுக்கவிதை வடிவிலான தொடர்ச்சியான ஒரு நெடுங்கவிதையாக வெளிவருகிறது.
வழமையான சமூகப் பாங்கான பாடு பொருள்களிலிருந்து விலகி சற்றேறக் குறைய சினிமாப் பாணியில் தீராமற் பெருகி வருகின்ற காதற் கவிதைகளை ஒத்த, பக்கத்திற்குப் பக்கம் பொருத்தமான அழகிய சித்திரங்களுடனான, சிக்கனமான வரிகளைக் கொண்டதாக, இத் தொகுப்பு அமைகிறது.
இக்கவி வரிகளின் சாயலை ஏற்கனவே எங்கோ பார்த்தது போல அல்லது கேட்டது போல தோன்றினாலும் பல இடங்கள் இவருடைய நளினமான புதிய கற்பனைகளை, தனித்தவமான அடையாளங்களைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இது சில வேளைகளில் இவரின் அண்மைக்காலச் சொந்த அனுபவ வரிகளாகவோ அல்லது ‘யாவும் கற்பனைகளாகவோ’ கூட இருக்கலாம் என்றாலும் வாசிப்போரை தங்கள் வாலிப பருவத்தை எண்ணவைப்பதாக இவ்வரிகள் விளங்குகின்றன.
காதலில் விழும் சகலருமே பொதுவாக கவிஞர்களாவது வழமை. இவர் கவிஞராக ஏற்கனவே அடையாளங் காணப்பட்டதால் இவ் வரிகளில் அழுத்தம் சற்று அதிகம் விழுந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
சீனா உதயகுமாரின் ஆரம்பகால கவிதைகளில் கவிஞர்களான பா.விஜய், யுகபாரதி போன்றோரின் தாக்கம் இருந்தது என்றும் இவரின் இதற்கு முன்னரான கவிதைத் தொகுதியான ‘என் பேனாவின் நிதர்சனத்’ தில் அத்தன்மை மாற்றமுற்றிருக்கிறது என்றும் ஒருவிமர்சகர் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது. இந்நெடுங் கவிதையின் பாடுபொருள் காரணமாக மீண்டும் மேற்படி கவிஞர்களின் செல்வாக்கை பாணியை இங்கு தரிசிக்க முடிகிறது.
இக் காதல் நூலில் முதன் முதல் காதல் உணர்வில் ஆட்படும், காதல் வசப்படும் இளையோருக்கு ‘பயன்படத்தக்க’ பல எளிமையான இனிய காதல் வரிகளையும் காண முடிகிறது.
காதல் ஒரு நெடும்பணயம் என்பர். இப்பயணத்தின் ஒவ்வொரு கணங்களும் வௌ;வேறு வகைப் பட்டவை. காதலியின் பெருமை பேசுபவையாக, அவளின் பார்வையில் புன்னகையில் கிறங்குபவையாக, அவளின் அழகின் செழிப்பை ஆராதிப்பவையாக, அவளைப் புதுப் புதுக் கோணங்களில் வர்ணிப்பவையாக, அவள் மீதான ஏக்கத்தை விபரிப்பவையாக, அவள் தனது சொந்தமானவள் என்ற மனநிலையைப் பகிர்பவையாக, அவளைப் பற்றிய கற்பனைகளாக, அவளின் பிரிவால் ஏற்படும் சோகத்தைத் துயரை புலம்புபவையாக, அவை இருக்கமுடியும் .இவ் நெடுங்கவிதையின் ஒவ்வொரு தருணங்களும் மேற் சொன்னது போன்ற வௌ;வேறு உணர்வுகளை மீட்டிச் செல்வதை அவதானிக்கலாம்.
‘பூமிப் பந்தின்
முரட்டு மேனியில்
புடவை கட்டி அசைந்து வந்த
புன்னகை நிலாபோல் நீ…’

‘நீயோ
விடுமுறை இல்லாத நிலவு…’

‘வானத்து நிலவைச் சுற்றி
வெள்ளி நட்சத்திரங்கள்;
புன்னகைநிலா உன்னைச் சுற்றி–என்
வெள்ளை நினைவுகள்.’

‘மௌன நிலவே அடிக்கடி வெளிவந்து
தலைகாட்டி விட்டுப் போகாதே
பூமிக்கு இருநிலவுஎன்று
பதிவேற்றம் செய்திடுவார்
போட்டிக்கார விஞ்ஞானிகள்…’

‘உன்னைக் கண்ட
பிறைநிலா
முழுநிலாவாய் ஒளிவீசும்…’

‘என்றும் என் இதயத்தில் குடிகொள்ளும்
நீதான்
கால்முளைத்த நிலா
என் காதல் நிலா’

 

இவை புளித்துப்போன நிலவை உவமித்த காதலி மீதான வர்ணிப்புக்கள் தான் என்றாலும் மீண்டும் வாசிக்க கள்போதை மயக்கத்தை ஏற்படுத்துவது உண்மைதான்.
இவரின் காதலினால் ஏற்பட்ட களிப்பு மகிழ்வு இவ்வாறிருக்கிறது.

 

‘உன் முதல் வரவு பார்த்த
என் கண்களும்
உன் முதல் வரவு உணர்ந்த
என் இதயமும்
புதமையாகவே விழாக் கொண்டாடி
மகிழ்ந்திருக்கின்றன…’என்கிறார்.

 

‘நீதந்தது என்பது
இல்லை என்பதைத் தானே…ஆனால்
நீதந்த இல்லைகளில்
இத்தனை உண்டுகளா?’ என்றும்,


‘என்னருகில்
நீ
இல்லாத போதுதான்
எல்லாமும்
உண்டு என்று ஆகிவிடுகிறது…’
என்றும் வியக்கிறார்.

 

‘அழகான தமிழ்ச் சொற்களைக்
காணும் போதெல்லாம்
உன் ஞாபகமே
எனை நினைவு செய்கின்றன…’
என்று காதலியாள் அழகில் கிறங்குகிறார். ‘எனை நினைவு செய்கின்றன’ வித்தியாசமான பிரயோகமாகத் தெரிகிறது.

 

‘மேலும் முல்லைச் செடி
உன் இடை என்றால்
பாரி தந்த ரதமே
என் வலது கரம்…
‘என்று புதமை மிகு கற்பனையிலும் சிறகடிக்கிறார்.

 

‘என் இளமைக் குறியீடுகளை
பலதடவை
மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறாய் நீ…
‘என மகிழ்கிறார்.

 

இவரின் இன்னொரு இரசிக்கத் தக்ககற்பனை
‘உன் பாதம் வரைதொட்டு
கறுப்புநீர் வீழ்ச்சியாய்
நெளிந்து ஓடுகிறது
உன் கருங்கூந்தல்..
.’என்பதை கேட்கும் போது ஈரவாசம் அடிக்கிறது.

 

‘என் இளமையின்
இரகசியம் என்பது
என் நினைவில்
உன் ஞாபகங்களே…
‘எனும் போது இவரின் காதற் புனிதம் புலப்படுகிறது.

‘இன்றுவரையும்
நான்
நீயாக இருக்கிறேன்….
நீ
எப்போதும்
நானாக இருக்கிறாய் என்ற
அதீத நம்பிக்கையிலே…
‘இது சினிமாப் பாடலொன்றை அடியொற்றி இருந்தாலும். இதில் தெரிகிறது இவரின் பிரிவுத் தவிப்பின் தகிப்பு..,

‘என்னை எத்தனை முறை
சாகடிக்க முடியும் உன்னால்…’
என்ற கேள்வியில் வாசகருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது!
இவ் வரிகள் கவிதையின் ஆரம்பத்தில் கடயளா டியஉம போல கையாளப்பட்டிருப்பது நம்மை ஈர்ப்பதுடன்; கவிதையின் மீள்வாசிப்புக்கும் இவ்வரிகள் களமமைத்துக் கொடுக்கிறன.
ஆக, ‘காதல் வந்த சாலை’ தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் காதல் கவிதை அலைகளில் தானும் ஒருஅலையாகத் தன்னைப் பதிவு செய்துகொள்கிறது.