ஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்

2.கரணவாய் கிழக்கு,
கரவெட்டி.
17.04.2004.

என்றும் என் அன்புக்கினிய,
தம்பி ஜெயசீலனுக்கு;

தங்களின் கவிதை நூல் வெளியீடு அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும், தங்களுக்கு சில காலமேனும் ஆசிரியராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தமை பற்றி பெருமையும் அடைந்தேன்.

இன்று தாங்கள் வெளியிடுகின்ற இந்நூலும் தங்களைப் போலவே பல தனித்துவ பண்புகளையும் ஒருங்கே உள்ளடக்கியதாகவும் வெளிப்பகடற்ற எளிமையான தோற்றத்தைக் கொண்டதாகவும், அனைவர் உள்ளங்களையும் வெகு சீக்கிரம் வசீகரிக்கும் பண்புள்ளதாகவும் அமையப்பெற்றிருக்குமென்பதில் எனக்கு திடமான நம்பிக்கையுள்ளது.

இந்நூலை வெளியீடு செய்யும் தங்களையும், இம்முயற்சிக்கு பக்கபலமாக ஒத்துழைத்த சகலரையும் ஆர்வலரில் ஒருவரென்ற வகையில் வாழ்த்துவதுடன் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தாங்கள் அனுப்பி வைத்த அழைப்பிதழ் உரிய காலத்தில் கிடைக்கப்பெற்றிருப்பினும், வெளியீட்டு வைபவத்திற்குரிய வேளையில் என்னால் சமூகமளிக்க இயலவில்லை. இதற்காக என்னை மன்னித்துக்கொள்வீர்களென நம்புகின்றேன்.

– இன்றைய கைக்குள் சிக்காத காற்று நாளைக்குள் அனைவரினது மனங்களினுள் சிக்கிக்கொள்ளும் –

இயலுமாயின் விரைவில் உங்களை நேரில் சந்திக்கின்றேன்.

(தயவு செய்து இக்கடிதத்துடன் வெளியீட்டு விழாவிற்கு வருகைதரும் இத்தம்பி மூலம் அனுப்பி வைக்கின்ற என் சார்பிலான சிறு அன்பளிப்பையும் பெருமனதுடன் ஏற்றுக்கொள்ளவும்)
-குறை விளங்கற்க
நன்றி
வணக்கம்

என்றும் அன்புடன்,
V.S குணசீலன்
(ஆசிரியர்)
New Science Hall