கே.ஆர். டேவிற்

.‘பூபாளம்’
பிடாரி கோவில் வீதி,
ஆனைக்கோட்டை,
01.07.2015.

அன்புக்கும், மதிப்புக்கும், கௌரவத்துக்குமுரிய,
திரு.த.ஜெயசீலன் அவர்களுக்கு,
13.07.2015 ஆம் திகதியிடப்பட்ட தங்களின் கடிதம் எனக்கு உரியகாலத்தில் கிடைத்தது. எனது நன்றிகளையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பதில் போடுவதில் சிறு தாமதம், ஏற்பட்டுவிட்டது. தவறு என்னுடையதாக இருக்கும் போது அதற்கான மன்னிப்புக் கேட்பதும் எனது பொறுப்பாகும். மன்னித்துக் கொள்ளுங்கள்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ நல்ல பண்புகள் கருகிப்போய்விட்டன. அவற்றில் முக்கியமானவைகள் என்று கருதக்கூடியவற்றுள் ‘பிறரை அந்தரங்க சுத்தியோடு வாழ்த்துதலையும், குறிப்பிடலாம். ‘அந்தரங்க சுத்தியோடு வாழ்த்துதல் என்பது, ஆழமானதும், செழுமையானதுமான ‘மனிதத் தளத்தில்’ பிரவாகிக்கும் ஒரு உயரிய பண்பாகும். தங்களின் கடிதம் அதைத்தான் எனக்கு உணர்த்தியது. இதைச் சம்பிரதாயத்துக்காகவோ அல்லது, தங்களைப் புகழவேண்டும் என்பதற்காகவோ நான் கூறவில்லை.
எனது புகழ்ச்சி எந்த வகையிலும் தங்களுக்குத் தேவைப்படாது ஏனென்றால் தாங்கள் ஒரு ‘சராசரிப்பிரஜை‘ என்பதைவிட மேலதிகமாகத் தங்களுக்கு இரண்டு ‘முகங்கள்’ உண்டு.
ஒன்று – உன்னதமான ‘சிருஸ்டிகர்த்தா’ என்ற முகம், இரண்டாவது, பிரதேசத்தில் ‘மன்னன்’ என்ற முகம் இதில் ‘மன்னன்’ என்ற முகம் தனக்கு மேலான ‘சக்கரவர்த்தியின்’ தயவை வேண்டி நிற்குமே தவிர சாதாரண பிரஜையை வேண்டி நிற்காது. இவைகள் அனைத்தையும் தாண்டி ஜெயசீலன் என்னை ஏன் வாழ்த்தினார்? இந்தக் கேள்வியின் விடைக்குள்தான் தங்களின் வாழ்த்திலுள்ள சுயநலமற்ற –‘மனிதச் செழுமை’ உள்ளுறைந்துள்ளது. தங்களின் கடிதத்தை எனது வாழ்க்கையை விபரிக்கும் ஒரு ஆவணமாகக் கருதி கோவைப்படுத்தியுள்;ளேன். மரணம் என்பது பொதுவானதும், தவிர்க்கமுடியாததுமாகும். எனது மரணத்தின் பின்னான காலத்தில் தங்களின் இந்தக்கடிதம் என்னைப் பற்றிப் பேசும் – பிறரையும் பேச வைக்கும்.
மீண்டும் எனது நன்றிகளையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
வணக்கம்.
கே.ஆர். டேவிற்.