த.ஜெயசீலனின் ‘எழுதாத ஒரு கவிதை’ கவிதைநூலை முன்வைத்து ஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்

இருபதாம் நூற்றாண்டின் பிற்கூற்றிலிருந்து தனக்கென ஒரு அழியாதவிடத்தைப்பெற்றுக் கொண்டு, இன்று வரை இடையறாது தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் கவிஞர் த.ஜெயசீலன், ஈழத்துத் தமிழ் மரபுக்கவிதையில் இறுதியாகத் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரம். கவிஞர் முருகையனிடம் யாப்பிலக்கணத்தையும் கவிதையின் சட்டதிட்டங்களையும் அதற்குள் திளைக்கின்ற அணுகுமுறை நுட்பங்களையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். முருகையன் தனது இறுதிக்காலப்பகுதியில் தன்னுடைய ‘கவிதை வாரிசு’ என்று த.ஜெயசீலனைக் கூறிக்கொண்டதை நான் கேட்டிருக்கின்றேன். விஞ்ஞானப் பட்டதாரியான த.ஜெயசீலனின் கவிதைகள், முருகையனின் கவிதைகள் போலவே உருவத்திலும் உள்ளடக்கத்திலும் உத்தி முறைமைகளிலும் ஏனைய கவிஞர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டுத் தோன்றுவது அவரது பலமாகவே நான் கருதிவருகின்றேன். இதையே பலவீனமாகக் கருதுவோரும் உளர். இது பற்றி விரிவாக நோக்குவது அவசியமாகிறது.

த.ஜெயசீலனின் கவிதைக்குள் நுழைவதற்கு முன் அவரைப் புரிந்து கொள்வதற்கு அவர் பற்றிய சிறுகுறிப்பை இவ்விடத்தில் தருவது தேவையென நினைக்கின்றேன். கம்பன் கழகத்தோடும் கம்பவாரிதியோடும் நீண்டகாலமாக நெருக்கமாக இருந்து இலக்கிய உறவை நெஞ்சிற்கினிதாக வளர்ந்து வரும் இவர், கம்பன் விழாக் கவியரங்கங்களில் முத்திரை பதித்தவர் என்பது யாவரும் அறிந்த செய்தி. அப்துல் ரகுமான், மேத்தா போன்ற ஜாம்பவான்களோடும் முருகையன், சோ.பத்மநாதன், கல்வயல் குமாரசுவாமி போன்ற ஈழத்து மூத்த கவிஞர்களோடும் பல கவியரங்கங்களைக் கண்டவர். ஸ்ரீபிரசாந்தன் தொகுத்த ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதை’ தொகுதியிலும் க.பரணிதரன் தொகுத்த ‘நதியில் விளையாடி’ என்ற தொகுதியிலும,; இவரது மிகச்சிறந்த கவிதைகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில வியாபார இதழ்களைத் திருப்திப்படுத்துவதற்காகவோ, ஒரு சில குழுக்களை மகிழ்விப்பதற்காகவோ, பயனற்ற கோட்பாடுகளை தூக்கிப் பிடிப்பதற்காகவோ த.ஜெயசீலன் கவிதைகள் எழுதுவதில்லை என்பது அவரது கவிதைகளின் ஊடே வெளிப்படுகின்ற, முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு சிந்தனை முதிர்ச்சியாகும். தன்னைத் திருப்திப்படுத்துவதற்காகவும் தன் உள்ளத்தை திருப்திப்படுத்துவதற்காகவும் தன் சிந்தனையை மகிழ்விப்பிப்பதற்காகவும் அவரது கவிதைகள் அவதரிக்கின்றன. அவை தமக்கென்று சிலபாதைகளை அமைத்து தமக்கான வழிமுறைகளோடும் வகைநெறிகளோடும் பயணிக்கின்றன. அவை மற்றவர்களது பாதைகளையோ பயணங்களையோ தடைசெய்வதுமில்லை, தண்டிப்பதுமில்லை. அவற்றின் மீது தனது அதிகாரங்களைத் திணிப்பதும் இல்லை. இக்கொள்கையிலேயே இவரது நங்கூரம் நிலைக்குத்தி நிற்கிறது.

‘என் அகத்தில் எது இருக்கோ அதையே தருகின்றேன். எனக்குத் தெரிந்ததெதோ அதையே உரைக்கிறேன். அந்நியத்தை என்னுட் புகுத்தி எவன் தனதோ சிந்தனையை, எவன் தனதோ வாழ்முறையை, எவன் தனதோ கருத்தியலை, எவன் தனதோ கவிவடிவை எவன் தனதோ உணர்வை என்கவியாய்ப் போலியாய் எழுதி எனைப்பெரியாள் என்றுரைக்கேன்’
இங்கு மிகக்கவனமாக அவதானிக்க வேண்டியது ‘ எவன் தனது உணர்வை என் கவியாய் போலியாய்’ எழுதமாட்டேன் என்பது. உண்மையில் இன்று தமிழ்க் கவிதை உலகில் நடப்பது இது தான். ‘போலி உணர்வுக்கவிதைகள்’ புற்றீசல் மாதிரி அதிகரித்துவிட்டன. பத்திரிகையில் வருகின்ற செய்திகளையும் தொலைக்காட்சி, இணையத்தில் கிடைக்கின்ற காட்சிகளையும் வைத்துக்கொண்டு உண்மையான உள்ளுணர்வு இல்லாமல் பலர் இன்று கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள். பத்திரிகையில் இடம் பெறுகின்ற பரபரப்பான தலைப்புக்களையே, தமது கவிதையின் தலைப்பாக்கி கவிதையிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். பத்திரிகைச் செய்தி, மறுநாள் பழைய செய்தியாகி பரபரப்பை இழந்து ஒரு மூலையில் கிடந்து உறங்குவதைப்போலவே இவர்களது பரபரப்பான கவிதைகளும் காலப்போக்கில் கவனிப்பை இழந்து விடுகின்றன.
த.ஜெயசீலனின் கவிதைகள் இத்தகைய பரபரப்பான உணர்ச்சிச்சுழிப்புக்களுக்கு ஆட்படுவதில்லை. அவை உள்ளத்தில் ஆழப்பதிந்து, ஊறி, தமக்கென ஒரு பூரண வடிவத்தை எடுத்துக்கொண்டு உடனடி உணர்வைமீறிய ஆழ்ந்த அமைதித் தன்மையோடு அதிக ஆடம்பரமும் அட்டகாசமும் இல்லாமல் பிறக்கின்றன. உடனடியாக தயாரிக்கப்பட்ட கவிதைகள் அடிக்கரும்பிலிருந்து நுனிக்கரும்பிற்கு செல்வதைப் போன்ற சுவையை தரும். ஆனால் ஆறஅமர உட்கார்ந்திருந்து அமைதியாக பிறக்கும் கவிதைகள் நுனிக்கரும்பிலிருந்து அடிக்கரும்பிற்கு செல்வதைப்போன்ற சுவையை நல்கும்.
உண்மையில் த.ஜெயசீலனின் ‘ கனவுகளின் எல்லை’ (2001) என்ற கவிதைத்தொகுதியை இரண்டாவது வகைப்பாட்டிற்குள் அடக்குவது கடினம். அது முழுக்க முழுக்க அவரது இளமைத்துடிப்புள்ள உணர்வலைகளை தாங்கி வந்த தொகுதி. தேசப்பற்றும் இனப்பற்றும் மிக்க ஒரு இளைஞனின் போரக்;குணம் கொண்ட மனவெழுச்சியை அதில் காணலாம். ‘ கைகளுக்குள் சிக்காத காற்று’ (2004) என்ற அவரது இரண்டாவது தொகுதியும் ‘எழுதாத ஒரு கவிதை’ (2013) என்ற மூன்றாவது தொகுதியும் இரண்டாவது வகைப்பாட்டுக்குள் வந்து சேர்கின்றன. இவ்விரண்டு தொகுதிகளிலும் முன்னைய கொடூரசீற்றம் சற்றும் இல்லை. மாறாக பூந்தென்றலின் மெல்லிய நறுமணமே இவற்றுக்குள் வீசுகின்றன.
இயற்கையும் இறையருளும் அவரது பாடு பொருளின் மையங்களாக நிலைநின்று அசைவிக்கின்றன. இந்த அடிதளத்தில் இருந்து தான் அவரது அனேகமான கவிதைகள் உருக்கொள்கின்றன. இயற்கையில் உள்ளத்தை பறிகொடுத்து, அதனுடைய அற்புதங்களையும் மேன்மைகளையும் கண்டு வியக்கும் இவரத சிந்தை, இயற்கையின் முழுஞானத்தையும் உணரமுடியாத ஆற்றாமையால் ஏங்குவதையும் காண்கின்றோம்.

‘அரிவரி வகுப்பில் அழுது இருப்போன் முன்
விஞ்ஞானி செய்யும் விரிவுரைபோல் எந்தனுக்கு
நீயுன் ழுழு வடிவை,
நீயுன் முழு அழகை
நீயுந்தன் மெய்பொருளை நிரூபிக்க முயல்கின்றாய்
நீ மேதை என்பது எனக்குப் புரிகிறது
நான் பேதை என்பதை ஏன் மறந்தாய்’

என்று இயற்கைக்கு அடிபணிந்து வியந்து யாசித்து நிற்கும் பாங்கு அலாதியானது. இயற்கையொடு உரையாடுகின்ற கவிஞனது உள்ளம் இயற்கையின் பாய்விரிப்பில் உறைந்தும் விடகிறது.
எதனைப் பாடும் போது அதிலொரு ஈடுபாட்டோடும் நயப்போடும் ஒருவித மென்மைத் தன்மையோடும் பாடுவது ஜெயசீலனுக்கு கை வந்த கலை. வெள்ளத்தின் கொடுமையைப் பாடும் போது கூட ,

‘சிறிய ஒரு ஹைக்கூவாய்ச் சிந்தின சிலதுளிகள்
பிறகு அடிகள் பெருக எழும் பாவினமாய்த்
தொடர்ந்து பொழிந்தோர் புராணமாகிப்
பெருக்கெடுத்து

காவியமாய் பின்பு பெருங் காப்பியமாக மாறி வெள்ளம்
காடாகித் திசையெங்கும் கவிந்து பரவிற்று’

என்று கவிதை நயம் சொட்டப்பாடுவது வியப்பை தருகிறது. இது போன்ற கவிதைகளில் ஜெயசீலனின் தமிழ் இலக்கிய இலக்கணப் புலமை மட்டுமன்றி அவருக்கு இயல்பாக வாய்த்த கவித்துவ ஆற்றலும் வெளிப்படுவதைக் காணலாம்.
த.ஜெயசீலனின் முழுப்பலமும் அவரது யாப்பறிவு தான். யாப்புக்குள் நின்று கொண்டு அவர் நிகழ்த்தும் சித்து விளையாட்டுக்கள், இன்றைய இளஞ்கவிஞர்கள் பலருக்கு எட்டாக் கனிகளே. ஜெயசீலனின் கவிதைகளைப் புறந்தள்ளுவோர் யார் என்று பார்த்தால், இந்த யாப்புப்பற்றி அறியாத, மரபுபற்றித் தெளிவில்லாதவர்கள்தான். இவர்களுக்கு யாப்பதிகாரம் சுத்தசூனியம். உண்மையில் யாப்பையும் தமிழ் இலக்கண இலக்கிய மரபையும் ஓரளவிற்கேனும் தெரிந்து கொண்டு ஜெயசீலனின் கவிதையை அணுகினால், அதற்குள் பொதிந்திருக்கும் ஆழ அகலங்களை, கவித்துவத்தின் நிறபேதங்களை சிறிதேனும் தரிசிக்;க முடியும்.

‘காலப்பிழையோ கலகக் கோள் தொந்தரவோ
நூலறுந்த பட்டமானோம் நொந்துபோனோம் – வேலவனே
என்றெம் வினையகலும் என்றெம் விதிதெளியும்
இன்றும் உறைக்கலையே ஏன்?’
இந்த ஒரு வெண்பாவே போதும், ஜெயசீலனின் கவித்தவ ஆழத்தை கண்டு சுவைக்க. இலக்கண நோக்கிலும் இலக்கிய நோக்கிலும் இவ்வெண்பாவை அணுகினால் தான் அதன் சுவையைப் பூரணமாகப் பருகலாம்.
‘தேமா புளிமா புளிமாங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் —கூவிளங்காய்
தேமா கருவிளங்காய் தேமா கருவிளங்காய்

தேமா கருவிளங்காய் நாள்’ என்ற வாய்பாட்டில் அமைத்து எந்தவொரு இடத்திலும் தளை தட்டாமல், (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை) நளவெண்பாவிற்கு நிகராக விளங்குகிறது இவ்வெண்பா.

‘நாள் மலர் காசு பிறப்பெனும் நான்கும் வெண்பாவீற்றின் மேவிடும் சீரே’ என்ற விதிக்கிணங்க, ‘நாள்’ எனும் வாய்ப்பாட்டுடன் இவ்வெண்பா இறும். இதன் முதல் இரண்டு அடிகளும் நெடிலால் ஆன நேரசையில் தொடங்கி தனி எதுகை பெற்றும், அதே எதுகை பெற்ற தனிச்சொல்லோடும், இறுதி இரண்டு அடிகளும் இன்னொரு எதுகை பெற்றும் நேரிசை வெண்பாவாக இது திகழ்கின்றது. இரண்டாவது அடியைத் தவிர்த்துப் பார்த்தால் வேறெந்த இடத்திலும் செப்பல் ஓசை குன்றவில்லை.(வெண்பாவின் ஒசை செப்பல்) இரண்டாவது அடி ‘நூலறுந்த பட்டமானோம், நொந்து போனோம்’ என்று வந்து ‘கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்’ என்ற வாய்ப்பாட்டைத் தந்தது. எனவே தளை தட்டவில்லை. ஆனால் ‘பட்டமானோம் ‘ ‘நொந்து போனோம்’ என்பதில் ‘டமா’, ‘துபோ’ குறில் நெடிலால் ஆன நிரை அசை வருகிறது. இதனை அடுத்து நெடில் ஒற்றாலான நேர் அசை வருகிறது. இவ்விதம் குறிலை அடுத்து நெடில்கள் வரும்போதும், இரண்டு நெடில்கள் வரும்போதும் செப்பல் ஓசை அடிபட்டுப்போய்விடுகிறது.

முருகையனிடம் யாப்பிலக்கணத்தை துறை போகக் கற்ற ஜெயசீலன், இவ்விடத்தில் செப்பலோசையை தளரவிட்டது ஏன் என்ற வினா எழுகிறது. இவ்விடத்தில் நின்று நிதானிக்கும் போதுதான், ஜெயசீலனின் கவித்துவ ஆற்றல் மேற்கிளம்புவதை உணர முடியும்.

நூலறுந்த பட்டம் என்ன செய்யும்? காற்றோடு அள்ளுண்டு நீண்ட நெடுந்தூரம் பறந்து செல்லும். அது பறந்து செல்லும் தூரத்தையும் வேகத்தையும் அதன் சுயம் இழந்த நிலையினையும் குறிப்பால் உணர்த்தவே, ஜெயசீலன் இவிவிடத்தில் யாப்பையும் மீறத்துணிகிறார். ஓசைச்சுவை சற்றுக் குறைந்தாலும் பொருட்சுவை பொதிந்து விடுகிறது. யாப்பை மேலோட்டமாக அறிந்தவர்களுக்கு இச்சுவை எளிதில் புலனாகாது. ஓசையை மீறுவது கெட்டித்தனம் அல்ல. அதை நுட்பத்தோடும் புலமையோடும் மீறுவதே கெட்டித்தனம். தமிழ்மக்களது வாழ்க்கை நூலறுந்த பட்டம் போல் அலைக்கழிந்து அல்லோல கல்லோலப்பட்டு அவதியுறுவதைப் கண்முன்னே காட்சிப்படுத்தும் தனித்துவம். அதுவும் யாப்பின் அடித்தளத்தில் நின்று கொண்டு அதனையும் உடைத்தெறியத்துணியும் மரபுத்துணிச்சல் ஜெயசீலனின் மேலாண்மையாகும். இத்தகைய யாப்பின் உன்னதங்களையும் சுதந்திரத்தையும் அறியாதவர்கள் ஜெயசீலனின் கவிதைகளை புறந்தள்ளுவது சிறுபிள்ளைதனமானது. இத்தகைய கவித்துவ வீச்சை அவருடைய எல்லாக்கவிதைகளிலும் காணலாம் என்றுமில்லை. அவருடைய கவிதைத் தொகுதிகளில் உச்சமான கவிதைகளும் உண்டு. சோடை போன கவிதைகளும் உண்டு.
ஒன்றைப்பற்றி தெரிந்து கொண்டு விமர்சிப்பது அறிவின் பாற்பட்டது. அதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் விமர்சிப்பது அறிவாகாது. மரபுக்கவிதைகளை விமர்சிப்போர் முதலில் யாப்பருங்கலத்தையோ அல்லது காரிகையையோ கற்றறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். யாப்பு அறிவு கொஞ்சமும் அறிந்து அதன் தட்ப வெப்பங்களை உணராது ‘யாப்பே தேவையில்லை’ என்று முழங்குவது உண்மையான அறிவாகாது. ஒருகவிதையின் பொருளை மட்டும் சுவைப்பதை விட அப்பொருளை இலக்கண அறிவு கொண்டும் யாப்பறிவு கொண்டும் சுவைக்கும் போது தான் அதனுடைய பல்பாரிமாணத்தன்மை வெளிப்படும். சங்கஇலக்கியங்கள், திருக்குறள், கம்பகாவியம், பாரதியார் கவிதைகள் போன்றவற்றில் எல்லாம் பலர் யாப்பின் ஆழத்தை காணமறந்து விடுகிறார்கள். வெறுமனே பொருட்சுவையை மட்டும் காண்கிறார்கள். இவ்வாறு பொருளை மட்டும் நோக்குவது தட்டையான பார்வை என்பேன். இன்ன பொருளை இவ்வாறுதான் கூறவேண்டும் என்று ஒரு புலவன் அதன் வடிவத்தை தேர்ந்தெடுப்பதில்தான் அவனுடைய மேதாவிலாசம் வெளிக்கொண்டுவரப்படுகிறது. எனவே வடிவத்திலும் பொருளின் நுட்பம் உறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. உருவமும் உள்ளடக்கமும் உடலும் உயிரும் போல் ஐக்கியப்பட்டு நிற்பதிலே தான் அதன் வெற்றி தங்கியுள்ளது. ஒன்றைவிட்டு மற்றதை நோக்குவோன் ஒரு கண்ணால் பார்க்கிறான் என்று ஆகுகிறது. பரிபூரணத்தை அவன் பருக முடியாது. உதாரணமாக ‘பூவிடை படினும் யாண்டுகழிந் தன்ன’ என்று தொடங்கும் சங்கப்பாடலை எடுப்போம். தலைவனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பூ நுழைந்தால் கூட (அந்த சொற்ப நேரத்தில்) பல ஆண்டுகள் தலைவனைப் பிரிந்த வேதனையை அனுபவிப்பதாகத் தலைவி கூறுகிறாள். தலைவி ஒருத்தியின் காதலை வெளிப்படுத்தும் இப்பாடல் சிறைக்குடி ஆந்தையாரின் கவித்துவ ஆழத்தை எடுத்தியம்புகிறது. இப்பாடல் அகவல் யாப்பில் அமையப்பெற்றது. அகவலில் மாச்சீரும் விளச்சீரும் வரவேண்டும். சிறுபான்மை காய்ச்சீரும் வருதலுண்டு. ‘பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன’ இங்கு மாச்சீரையும் விளச்சீரையும் பயன்படுத்தும் சங்கப்புலவன், தேவை கருதி காய்ச்சீரை தக்க இடத்தில் வைத்து புதியதோர் வியப்பைச் செய்கிறான். தங்களுக்கு இடையில் பூ நுழைந்தால் பல வருடங்கள் பிரிந்திருக்கும் வேதனையை ‘கூவிளங்காய்’ என்ற மூவசைச்சீரான காய்ச்சீரை பயன்படுத்தி, காலத்தின் மிகுதியை புலவன் குறிப்பாலும் உணர்த்திவிடுகிறான். ‘யாண்டுகழிந்’ என்பதிலுள்ள காய்ச்சீரின் நுட்பத்தை உணர்ந்து சுவைக்கும் போது, பொருட்சுவை மேலும் மேலும் அதிகரிக்கிறது. இங்குதான் யாப்பின் தேவை அவசியமாகிறது. சங்க இலக்கியத்தை பொழிப்புரையோடு மட்டும் அணுகாமல், யாப்பறிவோடும் அணுகினால் அதற்குள் சுரக்கும் அமுதத்தை முற்றும் சுவைக்கலாம். யாப்பு பற்றிய அறிவு இன்மைதான், அதனை ஒரு நீண்டாப் பொருளென கருத இடமளிக்கிறது. யாப்பின் மீது உள்ள வெறுப்பு, மரபுக்கவிதைகள் மீதும் வெறுப்புனர்வை ஏற்படுத்தி விடுகிறது. ஜெயசீலனின் கவிதைக்கும் இதுதான் நிகழ்ந்தது. யாப்புப் பற்றிய அறிவற்றவர்கள் ஒரு கூட்டாகச் சேர்ந்து நவீன கவிதை என்ற பெயரில் இயங்கத் தொடங்க, ஜெயசீலன் தனிமைப்பட்டு போனார். (நவீன கவிதையின் தரத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது) மரபுக் கவிஞர்களோடும் மரபோடும் ஒன்றித்துப்போன ஜெயசீலன் தனிப்பாதையில் தனிப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

‘எனக்கு உயிர் கவிதை, எனக்கு ஒளி கவிதை, எனது அடையாளம், எனது பிறப்பின் அர்த்தம், எனக்கு வரலாறு இட்ட கட்டளை கவிதை, நான் கவிஞன் என்ற நடப்பை விட அதிலும் நம் ஞானக்கவி மரபின் தொடர்பறாதிருக்க வந்த பாரம்பரியத்தின் வாரிசு நான்’ என்று அவரே இதனைக் கூறியிருக்கிறார். 1990 களில் அவருடைய கவிதைகள் ஊடகங்களில் முன்னணி வகித்தன. ஞானத்தின் தொடக்ககால இதழ்களைத் தட்டினால் ஜெயசீலனின் கவிதைகள் இல்லாத இதழ்கள் மிகக்குறைவு. யாழ்ப்பாணக் கவியரங்குகள் அவருடைய நாமத்தைச் சொல்லும். கவிதைக்காக அவர் பெற்ற பரிசுக்களும் பாராட்டுக்களும் ஏராளம். கம்பன் கழகத்தோடு அவர் நெருங்குவதற்கும், கம்பன் கழகக் கவிதைப்போட்டியில் பரிசு பெற்றமையே வழிகோலியது என்பதும் கவனிக்கத்தக்கது. இத்தனைக்கும் மேலாக பழகுவதற்கு இனிய நண்பன். பண்புள்ள கல்விமான். ஆணவம் இல்லாத அதிகாரி. இத்தகைய பகைப்புலத்தில் தான் த.ஜெயசீலன் என்ற கவிஞன் எழுந்து நிற்கிறான். ஜெயசீலனைப் பொறுத்த வரை, அவர் எப்பொழுதும் நல்ல கவிஞனாகவே வாழவே விரும்புகிறார். ஏனையவை எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டல்ல. ‘ என்ன பெரும் பதவி என்ன பெரும் புகழ் தான் வந்தாலும் அவற்றால் வருமானம் வந்தெனது வாழ்வு செழித்தாலும் அவை எனக்கு பெரிதில்லையே’ என்று தன் உள்ளடக்கிடக்கையை அவர் மொழிவார். கவிஞனாக வாழ்வதில் அவருக்கொரு அலாதிபிரியம். அதிலொரு ஆத்மதிருப்தி. கவிஞனாக வாழ்வது என்பது அவ்வளவு எளிதல்ல. எண்ணமும் பேச்சும் செயலும் ஒன்றாக ஒரே பாதையில் பயணிக்கவேண்டியது கவிஞனின் முக்கிய பண்பாகிறது. செயல் ஒன்று, சொல் ஒன்றாக அவனது வாழ்வு சிதைவதில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் இயல்பு உண்மைக் கவிஞனுக்கு கிடையாது. மற்றவர்களிடம் இருந்து இங்கு தான் கவிஞன் வேறுபடுகிறான்.

‘வையகம் வாழ வேண்டுமென்றேங்குவான்,
வையம் பாலிக்க வரங் கேட்டுப் பாடுவான்,
வையகம் உய்ய வழிகளைத் தேடுவான்,
வையகம் வெல்லும் வேளை கூத்தாடுவான்’ என்று பாடுவது மட்டுமல்லாமல்
‘ கவிஞன் காணும் கனவுகள் தாம் இந்த
ககன உண்மையைக் கண்டு பிடிப்பவை,
கவிஞன் காணும் கனவு இயற்கை தான்,

இறுக்கிக் கட்டிய புதிர்கள் அவிழ்ப்பவை’ என்றும் கவிஞனது தீர்க்க தரிசனங்களையும் ஆழ்மன உணர்வுகளையும் அவன் பாடுகிறான் என்றும் கூறும் ஜெயசீலன் ‘மனிதத்தை’ மிகமிக புனிதமானது, இவ்வுலகில் அதைவிஞ்ச வேறொரு தத்துவம் கிடையாது என்றும் உறுதியாக நம்புகிறார். ஆனால் அத்தத்துவம் உலக வாழ்வியல் நடைமுறையில் புழக்கத்தில் இல்லாததைக் கண்ட அவர் மனம் வெம்பி அழுதழிகிறது.

‘மனிதாபிமானம் மலரும் நாள் எப்போது?
மனிதனை மனிதன் வாழ்த்தும் நாள் எப்போது?
மனிதனை மனிதன் மதிக்கும் நாள் எப்போது?
மனிதர்கள் மனிதர்களாய் வாழும் நாள் எப்போது?’

என்று அவர் உலகத்தைப் பார்த்துக் கேட்பது முதலைக் கண்ணீர் போன்ற போலி உணர்வின் வெளிப்பாடு அல்ல. உண்மையான சிரத்தையும் இதயசுத்தியும் கொண்ட நேர்மைக் கவிஞன் ஒருவனின் உண்மைப் பிரார்தனையின் பாற்பட்ட வெளிப்பாடே எனலாம்.

‘மனிதருள் வாழும் மிருகத்தை வேட்டையாடி
மனிதத்தை மனிதருக்குள் அன்பால் விதைத்து விட்டால்

மனிதாபிமானம் இம்மண்ணெங்கும் பூத்தெழுமே’ என்று அன்பைப் போதிக்கும் போது அவருக்குள் இருக்கும் ஆன்மீக ஈடுபாடும் அறக்கோட்பாடுகளில் உள்ள பற்றுணர்வும் மேலோங்குவதைக் காணலாம்.
த.ஜெயசீலனின் கவிதைகளின் வெளிப்பாட்டு முறைமையும் அவற்றின் எளிமைத் தன்மையும் கவிதை பற்றிய பரீச்சயம் இல்லாத வாசகனையும் தன்பால் ஈர்த்து விடுகின்ற காந்தத்தன்மை கொண்டவை. இக்காலம் உரைநடையின் ஆட்சிச்காலம் என்ற காரணத்தினாலோ என்னவோ பல கவிதைகளில் உரைநடையின் ஆதிக்கம் தலைதூக்குவதையும் காண முடிகிறது. இத்தொகுப்பில் ஜெயசீலன் கண்முன்னே விரியும் வன்முறை வக்கிரகங்களையும் போரின் அட்டூழியங்களையும் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் தவிர்க்க முற்பட்டிருப்பதை உணரமுடிகிறது. வன்னியில் நிகழ்ந்த பேரழிவு பற்றி அவர் நேரடியாக எங்கும் பாடியிருக்கவில்லை என்றே தெரிகிறது. ஒரு கவிஞனை இத்தகைய அதிர்வலைகள் ஏன் தாக்கவில்லை என்ற புதிர் எழாமலில்லை. இரண்டு காரணங்கள் மேலெழுவதை தவிர்க்க முடியவில்லை.

1. கருத்தியல் நிலையில் பெரும் மாற்றங்களை அவர் சந்தித்திருக்கலாம்.
2. கண்ணால் காணாமல் வெறும் ஊகங்களை நம்பி கவிதை எழுதுவதை அவர் தவிர்த்திருக்கலாம் (இந்த முறையில் போலிக்கவிதை எழுதி பலர் போலிப்புகழையும் சம்பாதித்தனர்)

இவற்றை விட தன்னுடைய பதவி மற்றும் வேலைப்பளுவும் காரணமாக அரமைந்திருக்கலாம். பெரிய அதிகாரிமார்களுக்கு நேரம் கிடைப்பது என்பதே அபூர்வம். அதிலும் கவிதை எழுத நேரம் வாய்ப்பது என்பது அதைவிட அபூர்வம். சில காலங்கள் அவர் கவிதை உலகில் இருந்து அஞ்ஞாத வாசம் மேற்கொண்டிருந்தாரோ என எண்ணத்தோன்றுகின்றது.
2004 இல் ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ வெளிவந்த பிறகு ஏறத்தாழ ஒன்பது வருடங்களின் பின் ‘எழுதாத ஒரு கவிதை’ வெளிவந்திருக்கிறது என்ற தகவல் சிந்தனைகது.

ஆனாலும் ஒட்டுமொத்தமாக போரின் அழிவுகளை ஞானக்கண்கொண்டு நோக்கி ‘கொலையின்றி அமையாது உலகு’ என்று மட்டும் அவரால் அமைதி காண முடிந்திருக்கின்றது. இவ்விடத்தில் அவரிடத்தில் யாதார்த்தம் கட்டுப்பட ஆத்மார்த்தம் வெளிப்பட்டு தலை காட்டுவதை காணமுடிகிறது.

கண்முன்னே அல்லற்படுத்தும் வன்முறைக்காட்சிகளைக் கூட மென்முறையாக்கிப் பாடுகின்ற இயல்பூக்க ரசமாற்றம் இவரிடத்தில் காணப்படுகிறது. ஊலகத்துன்பத்தை தன்துன்பமாக்கி, அதனைப்போக்க இறைவனை யாசித்து நிற்கின்ற சரணாகதித்துவத்தை இவரது பல கவிதைகளில் தரிசிக்கலாம்.

‘உன்னைவிட உறுதுணைகள் யாரும் உலகில்லை,
நின்னைவிட யாவரையும் யான் நம்பப் போதில்லை,
உன்னைவிட அமைதிதர ஓர் உறவும் எனக்கில்லை,
என்பதனால் எனக்கு நிழலாய் நீ அபயமருள்!
புன்னகையாம் தென்றலினால் என்னுயிர்க்கு மருந்துகட்டி
உன் கை வருடலினால் என் ஐயம் அச்சமோட்டி
என்னைச் சுகப்படுத்து எக்கணமும் நல்லூரா!’

இத்தகையதொரு பக்குவமான மனநிலையில் கொலுவீற்றிருந்து கொண்டுதான் அவரால் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட முடிகிறது. தமிழைப்பற்றி பாடுவதையும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதையும் இன்றைய இளஞ்கவிஞர்கள் மறந்து விட்டிருக்கும் நிலையில் சுந்தரம்பிள்ளை, பாரதியார், பாரதிதாசன் மரபில் தன்னாலும் தமிழிற்கு அருமையானதொரு வாழ்த்தினைப் பாடமுடியும் என்று த.ஜெயசீலன் நிரூபித்திருக்கிறார்.

‘உயிரோடும் எங்கள் உணர்வோடும் ஊறி
ஒளியாகி வாழ்வின் மொழியாகி
உலகென்ற மேடைதனில் நாமும் ஓங்க
உரம் தந்து மேன்மை வழிகாட்டி
வைரங்கள் பாய்ந்து வயதாலும் மூத்து
வரலாற்றையாளும் தமிழ்மாதே
வரமாக உந்தன் மடிவந்த சேய்கள்
மனதார வாழ்த்தி மகிழ்கின்றோம்’

‘உனதன்புச் சேய்கள் எம்மண்ணில் நாங்கள்
உயிர் வாழ்தல் ஒன்றே பெரும்பேறு
உடன்கட்டை ஏறி உனைக்காக்க நீறி
உயர்ந்தோரைப் போற்றும் வரலாறு
உனதுண்மையான வயதென்ன இன்றும்
உயிர்ப்பாய் குலுங்கும் எழிலோடு
உனை நெஞ்சில் வைத்த துணிவால் ஜெயித்து
உயர்வோம் புவிக்குள் மதிப்போடு’

இவ்வாழ்த்துப்பாக்களின் சந்தநயம் சிந்தையைக் கொள்ளை கொள்கிறது. எதுகை மேனைகளின் களிநடனம், இயைப்புத்தொடடையின் சங்கமம், தேனுக்குள் ஊறிய சுவைமிக்க சொற்களின் உயிர்ப்பூட்டல், கவிஞனின் பேரின்பத்தமிழ்பற்று, தமிழ் வாழவேண்டுமென்ற ஆழ்மனக்கனவு இவை எல்லாவற்றுக்கும் மேலாக கற்றவரக்;கன்றி மற்றவர்களும் மிகஎளிதில் புரிந்து கொள்ளக்கூடிய எளிமை கொண்டிருப்பதும், இவ்வாழ்த்துப்பாவின் சிறப்பிற்கு காரணமாகிறது. உண்மையில் பொருட்சுவையும் சொற்சுவையும் கலந்து மயக்கும் புணர்ச்சியின்பம் புத்துணர்வோடு புதுமையின்பம் தருகிறது. செயற்கைத்தன்மை இம்மியளவும் இல்லை என்பதனால் தான், இத்தகைய சுவைகளையெல்லாம் இப்பாவால் தரமுடிகிறது. உண்மை உணர்வும் உள்ளத்துத் தாய்மொழிப்பற்றும் மேலோங்கும் இவ்வாறான கவிதைகளை இன்றைய கவிஞர்களின் கவிதைகளில் காணலரிது.

மேலே உள்ள தமழிம்தாய் வாழ்த்தில் உள்ள ஒவ்வொரு அடியின் நயத்தையும் விளக்க வேண்டுமென்று நெஞ்சம் விருப்பினாலும் இடவிரிவஞ்சி ஓர் அடியின் நயத்தை மட்டும் நோக்குவோம்.

தமிழ்மொழி நலிந்து மெலிந்து சாகும் எல்லைக்கு போய் வாடிநிற்கும் காலங்களில், தன்னலமற்ற தமிழ்ச் சான்றோர்கள் தங்களது உவமையில்லா கலைஞானங்களால் தமிழ்மொழிக்கு வாழ்வு கொடுத்து மீட்டெடுத்த வரலாறு உண்டு. 19 ஆம் நூற்றாண்டை பொறுத்தவரை மிகச்சிறந்த உதாரணம் ஆறுமுகநாவலர். இவர் தன்னை இழந்து, தன் உயிரை உருக்கி, தன் உடலை ஆகுதியாக்கி தன்னாலான அருங்தொண்டுகள் யாவும் செய்து ஆங்கிலேயரிடமிருந்து தமிழையும் சைவத்தையும் மீட்டெடுத்த வரலாறு எம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. இப்படிப் பல, தமிழின் நலிவு கண்ட அறிஞர்கள் உடன்கட்டை ஏறி தமிழை போற்றி பாதுகாத்தமையினால் அவர்கள் ‘உயர்ந்தவர்கள்’ எனப்படுகின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடும்போது இத்தகைய உயர்ந்தவர்களையும் ஜெயசீலன் ஒரு முறை நினைத்துப்பார்க்கிறார். அவர்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தமிழ் பயிர்க்கு நீராக ஊற்றியதை அவர் சொற்களில் கொண்டு வருகிறார்.
‘உடன்கட்டை ஏறி உனைக் காக்க நீறி
உயர்ந்தோரை போற்றும் வரலாறு’

என்று மிகச் சுருக்கமாக (இரத்தினச்சுருக்கமாக) சான்றோரின் பெருமைகளைப் பொன்னைப்போல் பொறித்து மகிழ்கிறார்.
உடன் கட்டை ஏறினால் மரணம்தானே நிகழும் என்ற கேள்வி எழலாம். இத்தகைய சான்றோர் எரிகின்ற பிணங்களின் மீது உடன்கட்டை ஏறினாரில்லை. எரிகின்ற தமிழ் மீது, எரிகின்ற சமுதாயத்தின் மீதே இவர்கள் உடன்கட்டை ஏறினார்கள். எனவே இவர்களின் இழப்பிற்கு கிடைத்த பரிசு மரணமல்ல. மரணம் நெருங்க முடியாத பெருவாழ்வு, நித்திய வாழ்வு இதனால் தான் இவர்களை ‘உயர்ந்தோர்’ என்று கூறி உளம் வியக்;கிறார் கவிஞர்.
ஜெயசீலனிடம் இத்தகைய தமிழ் அறிஞர்களைப்போலவே அசைக்க முடியாத பெரும் தற்துணிவு ஒன்று இருக்கின்றது. அந்த தற்துணிவே அவரை நம்பிக்கைப்பாதையில் வழி நடத்திச் செல்கின்றது. எத்தனை சவால்கள் எதிர்த்து வந்தாலும் அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கிக்கொண்டு இவர் முன்னேறுவதற்கு இந்த தற்துணிவே பக்கபலமாக இருக்கிறது இனியும் இருக்கும். அவரே சொல்கிறார்

‘கல்லால மரநிழலில கருணை கூர்ந்த
கடவுளை நான் காணவில்லை, போதி என்ற
நல்ல மரநிழலினிலே ஞானம் பெற்றும்
நடவில்லை நான், ஏதும் சிலுவை தூக்கி
இல்லை உயிர் என்றிருந்து உயிர்த்து ஊர்க்கு
இறைதூதன் எனும் படியான் உயரவில்லை,
வெல்வதற்கே பிறந்திருந்த அசுரர்போலும்
விளையவில்லை, வெறும் நரனென் வினையால் வாழ்வேன்.’

இது எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். படிக்கப் படிக்க கருத்துக்கள் ஊறிக்கொண்டே இருக்கும் சுவைபொதிந்த கவிதை இது. கல்லால மரநிழலில் தட்சணா மூர்த்தி நால்வருக்கு அறமுறைத்த செய்தி புராணத்தில் வருகிறது. அந்த நால்வரில் ஒருவராக இருந்து சிவனிடம் பாடம் கேட்டு ஞானம் பெறும் வாய்ப்புக் தனக்கு கிடைக்கவில்லையே என்று கவியுள்ளம் ஏங்குகிறது. போதிமரநிழல் ஞானம் பெற்றவர் புத்தபெருமான். புத்தபெருமானைப் போன்று ஞானம் பெறுவதற்கு போதிமர வாய்ப்பொன்றும் தனக்கு கைகூடவில்லையே என்று ஏங்குகிறது, ஞானம் பெறத்துடிக்கும் அவரது நெஞ்சு சிலுவை சுமந்து கல்வாரியில் சிலுவையில் அறையுண்டு மரணித்துப் பின்னர் உயிர்த்தெழுந்த யேசுபெருமான் போலவும் உயருகின்ற இறையருளும் தனக்கில்லையே என்று அழுகிறது. அவரது சிந்தை சிவனிடம் அறம் கேட்ட நால்வர், புத்தர், யேசு முதலானோரைப்போன்று உயர ஞானம் இல்லையே போராடும் அவரது மனம் அசுரர்களைப்போலாவது பிறந்திருக்கலாமே என்று அவாவுறுகிறது. கடவுளரை எதிர்த்து இறுதிவரை போர் செய்து பின்னர் அக்கடவுளுக்கே தொண்டு புரியும் வாகனங்களாக வலம் வருகின்ற வாய்ப்பும் கிடைக்காதோ என்று குறைந்த பட்சக் கோரிக்கையை முன்வைத்த கவியுள்ளம், அதுவும் கிடைக்காமல் போகவே தான் தனித்து நின்று போராடி வாழ்வேன் என்ற (அவரிடம் இயல்பாகவே குடிகொண்ட) தற்துணிவிற்கு மீண்டும் வந்தடைகின்றது. ‘நான் என் வினையால் வாழ்வேன்’ என்று சத்தியப்பிரமாணம் எடுத்து கொள்கிறது.

தமிழ் இலக்கண நூல்கள் செம்பொருள், குறிப்புப்பொருள் என இரண்டு வகையான பொருள் ஒரு படைப்பிற்கு இருக்க வேண்டும் என கூறுகின்றன. அவ்வகையில் இக்கவிதைக்கும் ஒரு குறிப்புப்பொருள் உண்டு. தன்னை யார் புறக்கணித்து ஒதுக்கி விரட்டினாலும், தன்னை யார் புதைத்து மண் மூடினாலும், தூக்கிவிட ஆட்களற்று கடலில் வீசினாலும் தான் எதிர்நீச்சல் போட்டு தனித்து நிமிர்ந்து வீறுகொண்டு எழுவேன் என்ற ஓர் ஆத்மாத்த உள்ளுணர்வை இக்கவிதையின் குறிப்பொருளாக கொள்ள வேண்டும். குற்றியியலுகர புணர்ச்சி அவசியமென்று தொல்காப்பியம் கூறுவதனால் இக்கவிதையின் குற்றியியலுகர புணர்ச்சியை கவிஞர் அனுசரித்துப்போயிருக்கலாம். ‘இல்லை உயிர் என்றிருந்து உயிர்த்து ஊர்க்கு’ என்பதில் குற்றியலுகரப் புணர்ச்சிகள் புணர்த்தாமலே விடுபட்டுள்ளன. மேலும் இவற்றைப் புணர்த்தும் போது ஒரு சில அசைகள் குறைகின்ற அபாயமும் ஏற்படுகின்றது. எனவே புதிய சில அசைகளை சேர்க்க வேண்டும் என்பதற்காக புணர்ச்சியைத் தவிர்த்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. இவ்விடத்தில் கவிஞர் தடுமாறுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. யேசுவையும் நபிகள் நாயகத்தையும் சேர்த்துக் கூறவேண்டும் என்று கவிஞர் நினைக்கிறார். ஆனால் மரபு அதற்கு இடம் தரமறுக்கிறது. ‘சொல்லவும் வேண்டும், சொல்லவும் முடியாது’ அது தான் மரபுக்கவிதையிலுள்ள ஒரே ஒரு சிக்கல். ஜெயசீலன் தனது கவித்துவத்தால் அச்சிக்கலையும் தீர்த்தும் விடுகிறார். வெறும் சொற்புணர்ச்சியில் தடுமாறினாலும் பொருள்புணர்ச்சியில் வெற்றிபெற்று விடுகிறார். ‘ஏதும் சிலுவை தூக்கி இல்லை உயிர் என்றிருந்து உயிர்த்து ஊர்க்கு இறைதூதன் எனும் படியான் உயரவில்லை’ இறைதூதன் என்பது யேசுவிற்கும் பொருந்துமாயினும் உண்மையில் அச்சொல் நபிகள் நாயகத்திற்கு உரியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே ‘; சிலுவை தூக்கி இல்லை உயிர் என்றிருந்து உயிர்த்து’ யேசுவாகவும், ‘ஊர்க்கு இறைதூதன் எனும் படி’ நபிகள் நாயகம் போலவும் தான் உயரவில்லை என்று பொருள் கொள்வதே பாடமாக அமையும் என்று நினைக்கிறேன். மரபுக்கவிதையின் இவ்விதம் சுவையான சிக்கல்கள் பல உண்டு. அவற்றை விளக்க இது இடமல்ல.

புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான தர்மு சிவராம் உருவங்களை அடுக்கிச் செல்வதே உண்மையான படிமம் என்று படிமத்திற்கு விளக்கம் கற்பித்து அவ்விளக்கத்திற்கு ஏற்ப பல படிம கவிதைகளையும் எழுதியுள்ளார். தர்மு சிவராமின் பாணியில ஜெயசீலனும் ஒரிருகவிதைகளை படிம கவிதைகளாக தந்து இருக்கிறார்.

‘காமம் தனித்தொருவர் கடக்க முடியாத
பேராறு அதுவோர் பென்னம் பெருவானம்,
எண்ணிக் கணிக்க வொண்ணா திறைந்த கரையின் மணல்,
மென்மை உணர்வு தந்தும் மிருக வெறியோடும்
எம்மைக் கடக்கும் இளஞ்காற்று, கைகளுக்குள்
சிக்காத சூரியப் பொற்சிதறல், மூச்சடக்கி
முங்கியாழம் காண முடியாச் சரித்திரம்,
தகதக என்றெரியும் தணற்சுவாலை, சில கணத்துள்
சகலரையும் தாக்கிச் சரிக்கும் புவிநடுக்கம்,
அக உணர்வில் தோன்றும் ஆழிப்பேரலை’ கவிஞர் அடுக்கும் உருவகங்கள் சிந்தனைக்கு விருந்தளிப்பதாக அமைந்து, சிறந்த படிமங்களாக பொருள் விரிவைத் தருவதனை அவதானித்தல் வேண்டும்.

மிகச்சிறந்த கவிஞனுக்குரிய குணம் ஒன்று உண்டு. எழுதிய கவிதைகள் மீது உள்ள நம்பிக்கையையும் பற்றையும் விட எழுதாத கவிதை மீது கொண்ட நம்பிக்கையும் பற்றும் பல மடங்கு அதிகமாக இருக்கும். அதாவது, தான் எழுதியது போதாது என்று அவன் உள்மனம் உணர்த்திக் கொண்டே இருக்கும். ‘மேலும் மேலும் புதியதை எழுதி, இன்னும் இன்னும் தேடித்தேடி புதுமை செய்’என்று அவனது ஆழ்மனம் கவிஞனை உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கும். இக்குணம் ஜெயசீலனிடம் நிறைய உண்டு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரது நூலின் தலைப்பே அதனைப் பறை சாற்றும்.
எழுதாத ஒரு கவிதை

‘ஒரு கவிதை என்றாலும் எழுதத் துடிகிறேன்,
ஒரு கவிதை எழுதுவது ஒரு பெரிய விசயமல்ல
எனினும் ஒரு கவிதை உண்மையான ஒரு கவிதை
மனச்சாட்சியிற்குத் துரோகம் இழைக்காமல்
உள்ளதை உள்ளபடி எழுதும் உயிர்க்கவிதை

அள்ளி இடர் அகற்றும் அருட் கவிதை… எழுதத்துடிகிறேன்’ என்று தான் எப்போதும் தேடல் உள்ள கவிஞனாகவும், அசைவியக்கம் உள்ள இளைஞனாகவும் புதுமைகளின் புரட்சிகளை நாடிநிற்கும் சிந்தனையாளனாகவும் தன்னை ஜெயசீலன் வெளிப்படுத்தும் விதம், தன்னை அவர் முற்றுமுழுதாக புரிந்து கொண்டமையே எடுத்துக்காட்டுகிறது. தன்னைப்புரிதலும் ஆன்மீக ஈடுபாடும் ஒரு கவிஞனுக்கு இருப்பது மிகமிக அவசியமானது. அது பாரதியிடம் இருந்தது நான் எல்லாம் எழுதிவிட்டேன் என்ற உணர்வு பாரதியிடம் இருந்ததில்லை. அதுவே அவனைத் தேட வைத்த மந்திரக்கோல். அந்த மந்திரக்கோல் நல்ல கவிஞர்களுக்கு எப்பொழுதும் குருதியோடு ஒன்றியிருக்க வேண்டும். அது ஜெயசீலனிடம் இருப்பதற்கு மேலுள்ள கவிதை சான்று.

பின் நவீனத்துவப் பார்வை ஜெயசீலனிடம் இல்லை என்று ஒருசிலரால் கூறப்படுகிறது. அவரது கவிதைகளில் பன்முகத் தன்மை என்ற பல பக்கங்கள் தெரிவதில்லை என்று சிலர் கூறுகிறார்கள். உலகத்தையே அசைக்க கூடிய அதிர்வலைகள் ஜெயசீலனின் கவிதைகளின் இறுதி அடிகளில் இல்லை என்கிறார்கள் சிலர். இவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். இத்தகைய தற்கால கவிதைப்பண்புகள் ஜெயசீலனின் கவிதைகளில் காணப்படுமேயானால் அவரது கவிதைகள் மேலும் மேலும் சிறந்துயர்ந்தோங்க வாய்ப்புண்டு. ஆனால் இத்தகைய பண்புகள் ஏன் கவிதைக்கு தேவை என்றவொரு வினாவும் எழுகிறது. இப்பண்புகள் இல்லாமல் சிறந்த கவிதையை எழுதமுடியாதா என்ற மற்றொரு வினாவும் ,எல்லோரும் ஒரே மாதிரியாக கவிதைகள் எழுத வேண்டுமா என்ற எண்ணமும் எழுகின்றது. விரிவஞ்சி இவற்றுக்கு விடையளிப்பதை தவிர்த்துக்கொள்கிறேன்.

யாப்பைக் கச்சிதமாகக் கையாள்வதில் அவரைபோல் இன்னொரு இளைஞனை தற்போது காட்டுவது கடினம்.ஒரு சில குறைபாடுகளை தவிர்த்து நோக்கினால் ஜெயசீலன் நல்லதொரு கவிஞன் என்பதில் ஈழத்து தமிழ்கவிதை உலகு பெருமை கொள்ளலாம்.

Leave a Reply