‘எழுதாத ஒரு கவிதை கவிதை’ நூல் பற்றிய ஒரு இரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.

கவிஞர் த.ஜெயசீலனின் எழுதாத ஒரு கவிதை என்ற இந்த நூலைப்பற்றி சில வரிகள் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ஏற்கனவே ஆங்காங்கே பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவரும் அவர் கவிதைகளைப்படித்து அவற்றால் ஆகர்சிக்கப்பட்டிருந்தேன். எனது ஆசிரிய வாழ்க்கையில் அவர் கவிதைகளில் ஒன்றை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு ‘இலக்கிய நயம்’ எழுதுவதற்காக கொடுத்த ஞாபகம் உண்டு.

‘எழுதாத ஒரு கவிதை’ என்ற இந்த நூல் கவிஞனின் மூன்றாவது நூலாகும். முதல் இரண்டு நூல்களையும் பார்த்த நினைவுகள் இல்லை. இந்த நூலை மேலோட்டமாக பார்த்த போது எனக்குள் பொறிதட்டிய ஒரு விடயம், இதற்குள் முழுக்க முழுக்க கவிஞரே நிறைந்திருக்கிறார் என்பதாகும். முதலில் என்னுரை தொட்டு இறுதி அட்டையில் கவிஞரைப்பற்றிய அறிமுகம் உள்ளவரை அவரே நிறைந்துள்ளார். அணிந்துரை, முகவுரை, வாழ்த்துரை, மதிப்புரை என்ற எதுவுமே இல்லாது முழுக்க முழுக்க அவரையே வெளிப்படுத்துகிறது இக்கவிதை தொகுதி.

‘காலம் என்னுடலில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தி
வாழ்க்கையில் ஏதேதோ…….
வரங்களையும் சாபங்களையும் தந்த போதும்
அன்றும் இன்றும் என்றும் என்னுள் இருக்கும் கவிஞனை
கவிஞனாக வைத்திருக்க வேண்டும என்பதே
எனது இடையறாத பிரார்த்தனையாக தொடர்கிறது.
இதற்கு என்னை வழி நடத்தும்
இயற்கையும் இறையருளும் என்றும்
துணைதரும் என்று நம்புகின்றேன்’

என்று தன்னுரையில் பிரார்த்தனை செய்யும் கவிஞர். இறுதி அட்டையில் தன்னைப்பற்றிய சுயஅறிமுகத்தில் இவ்வாறு பாடுகின்றார்.

‘கணங்கணமும் ஓயாத அலைகள் போலே
கடுந்துயர்கள் வழிமறிக்கும், மிரட்டிப்பார்க்கும்
வணங்கி எழச்சொல்லும்! ஆம் ..வாய்மை மீறி
வழிதவறத்தூண்டும், பொய் பித்தலாட்டம்
‘துணை உனக்கு’ எனத்தொடரும், இவற்றை எல்லாம்
துச்சமென துணிந்தெதிர்த்து மனிதன் என்ற
உணர்வூற வாழ்ந்து ஒரு கவிஞனாகி
உயிர்க்கவியால் வலிதுடைப்பேன் சிறியேன் நானும்!’

ஆம், ஆசாபாசங்களும், அவலங்களும், சின்னத்தனங்களும் துரோகங்களும் மலிந்த இந்த உலகில் கவிஞர் இவற்றை எல்லாம் மீறி ஒரு ‘மனிதனாக உணர்வூற வாழ்ந்து கவிஞனாக தன்னை வெளிப்படுத்துகின்றார். ஒரு சாதாரண மனிதனாக உலகின் வலிகளை அகற்ற முயல்வேன் என்கிறார்.

இவரின் கவிதைகள் முழுவதுமே ஒரு சாதாரண மனிதனது வாழ்க்கை பற்றியது தான். வாழ்வின் தரிசனங்களே இவரது ‘உணர்வூறிய வார்த்தைகளில் கவிதைகளாக பரிணாமம் கொள்கின்றன. வாழ்க்கையே கவிதையாகின்றது.

‘நமக்கு தொழில் கவிதை
நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சேராதிருத்தல் …….’

என்று மகாகவி பாரதி பாடியது போல கவிஞர் ஜெயசீலன் ஜீவனோபாய தொழில் உட்பட தன்னை சூழ்ந்திருக்கும் எல்லாவற்றையுமே எல்லா அனுபவங்களையுமே கவிதையாகவே காணுகின்றார். வாழ்தலே கவிதையாகின்றது. கவிதையே வாழ்வாகின்றது இந்த ‘அனுபூதிநிலை’ எல்லோருக்குமே வாய்ப்பதில்லை.

உதாரணமாக ஒரு சிறு கீற்று, தன்னுடைய குழந்தையுடனான அனுபவத்தை கவிஞர் இவ்வாறு பாடுகின்றார்.

‘கனிஇதழ்கள் திறந்துஎதையோ கதையாய் எந்தன்
காதருகே குசுகுசென்று ஏதோ சொல்லாய்
எனை உறுக்குமாறுப் போல பார்ப்பாய் நெஞ்சில்
ஏறி நின்று உதைவிடுவாய்
கதைகள் கேட்பாய்
எனைத் தழுவி
சிறுநீரால் தீர்த்தமாட்டி
எனை நித்தம் புனிதனாக்கி வளர்த்து எனை
கனியவைப்பாய்
இளக வைப்பாய்
நேகிழ வைப்பாய்
கல்நெஞ்சை பனியாக உருக்கி நிற்பாய்’

இவரது கவிதை மொழி எளிமையானது. பிசிறுகள் அற்றது. மறை பொருள், குறியீடு, படிமம் என்றெல்லாம் மலைப்பூட்டாதது. வாசகனுக்கும் அனுபவத்தொற்றலை ஏற்படுத்தி அவனையும் கவிதையுடன் ஒன்றிக்கச்செய்வது. ஒரு வகையில் இவர் நமது மரபின் குழந்தை எனலாம். இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நமது செழுமையான கவி மரபின் இன்றைய கொழுந்துகளில் ஒன்றே கவிஞர் ஜெயசீலன் எனலாம். இவரும் மனிதனின் காதல், காமம் என்பவற்றை பாடுகின்றார். இவரும் மனிதனின் புறப்போராட்டங்களை அவற்றின் வெற்றிகளை தோல்விகளை சோகங்களைப் பாடுகின்றார். மனிதனின் அறவிழுமியங்களை பாடுகின்றார். பக்திவைராக்கியத்துடன் தெயவங்களைப் பாடுகின்றார். இயற்கையின் மோகனமான அழகுகளில் இலயித்து தோய்ந்து அனுபவித்து பாடுகின்றார். பெண்களின் மென்மையையும், நளினத்தையும், மழலைகளின் குறுகுறுப்பையும் இனிமையுடன் பாடுகின்றார். இந்த வகையில் ஜெயசீலன் நமது மரபின் குழந்தைதான்.
சங்ககால அகத்திணைக் கவிதைகள் சிலவற்றில் சிறுகதைகளின் சாயல் இருப்பதாகச் சொல்வார்கள்.ஜெயசீலனின் கவிதைகள் சிலவற்றிலும் அத்தன்மையை நான் காண்கிறேன்.உதாரணமாக ‘பூவும் வண்ணத்துப் பூச்சிகளும்’ என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.இந்தக் கவிதையை எமது கற்பனையில் விரித்து விரித்துப் பார்த்தால் எங்கெங்கெல்லாமோ கொண்டு செல்லும்.

‘பிஞ்சு விரல்களைப் பொத்தி விரித்தபடி
குஞ்சுக் கரங்களினால்
வண்ணத்துப் பூச்சிகளைப்
பிடிக்கத் துடிக்கிறாளென் தோளமர்ந்து
பேரழகி…’

என்று தொடரும் அந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள். இப்படி ‘எழுதாத ஒரு கவிதையில்’ பல கவிதைகளை என்னால் சொல்ல முடியும்.

ஜெயசீலன் அழகான வித்தியாசமான உவமைகளைக் கையாள்கிறார்.ஒன்றிரண்டு உதாரணங்களை இங்கு சுட்டலாம்.

‘வேப்பம்பூ வேம்பில் வெகுத்துச் சொரிந்ததென
மகிழ்ச்சி மனதில்
மலிந்து கிடக்குதிப்போ’

நாதசுரம், மந்திர உச்சாடனம், பஜனையிசை, பக்தர்களின் அரோகராக் கோசம்
கற்பூர தீபம், ஊதுபத்தி வாசம் என்ற இரம்மியமான சூழலில் எழுந்தருளும் இறைவனின் தெய்வீகம் என நிறைவு கொள்ளும் மகிழ்ச்சி சூழும் மனதிற்கு

‘வேப்பம்பூ…’ என்னும் உவமை அற்புதமாக இணைகிறது.

காலம்…யாரையும் கணக்கெடாமல்
தன்பாட்டில்
போகுமொரு சித்தனை போல்
போய்கொண்டிருக்குது காண்!
யாரோடும் பேசாது
யார் சொல்லும் கேட்காது
யார் துணைக்கும் ஏங்காது
யார் தயவும் தேடாது
யாரும் நெருங்க விடாது
தனக்கு தான் பேசி
சிலசமயம் பெரிதாய்ச் சிரித்து
ஏசி……….. ஓடி……………
பல சமயம் உட்கார்ந்து வெறித்து
விசர்க் கோலமும் ஆடிக்
குதூகலிக்கும் சிந்தனைப் போல்’

எப்போதும் என்னென்ன நடக்குமெனத் தெரியாத காலத்தின் போக்கை, தன்பாட்டில் திரிகின்ற சித்தர்களின் போக்குக்கு உவமை செய்கின்றார் கவிஞர்.

இந்தக் காலத்தின் போக்கை ‘விதியின் சதி’ என்ற இன்னொரு கவிதையில் அழகாக வெளிப்படுத்துகின்றார் கவிஞர். இக் கவிதையில் கையாளப்பட்ட சொற்களையும், அவற்றின் அர்த்தங்களையும் ஆழமாகக் கவனித்தல் வேண்டும்.

‘ஒரு வனது தேவை உள்ளவரை
காலந்தான்
வரவேற்புப் பாடி
வாழ்த்தி வணங்கி…………. அவன்
புகழைப் பரப்பி புளுகி
அவனிடத்தில்
கறக்கும் அத்தனையும் கறக்கும்,
அவனிடத்தில்
பெற இருந்த பலனெல்லாம் பெற்றுவிடும்
மறுகணமே
அவனுக்கு அடித்த காற்றைத் திறந்து……….. அவன்
பெறுமதி குறைத்து
பிணமாக்கி விட்டுவிடும்…..’

எனத் தொடங்கும் இக்கவிதையில் காலத்தின் விளையாட்டு ‘நறுக்குத் தெரிந்தாற்’ போன்ற சொற்களில் வெளிப்படுகிறது.

இவரது கவிதைகளில் ‘கவிஞனே’ மையமாக நின்று வாழ்க்கையை, உலகத்தைப் பார்க்கிறான். கவிஞனும் பார்வையினூடான உலகம் எம்முன் விரிகின்றது. பல்வேறு விதமான மனிதர்கள் வந்து போகின்றார்கள். இயற்கைக் காட்சிகள், சோகங்கள் ஓவியங்களாகப் பதிவு பெறுகின்றன. சில மேதைகளைக் கண்டு கவிஞர் வியக்கின்றார். சிலரை ‘இப்படியும் மனிதர்களா…..’ என்று சலிக்கிறார். சிலவேளைகளில் மறைமுகமான உபதேசங்களும் செய்கின்றார். ஆனாலும் எப்போதும் மனிதனாக கவிஞனாக மகிழ்கின்றார்.

ஏற்கனவே ‘கனவுகளின் எல்லை’, ‘கைக்குள் சிக்காத காற்று’ என்ற இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட கவிஞர், நூற்றியெட்டுக் கவிதைகளைக் கொண்ட இக்கவிதைத் தொகுதிக்கு ‘எழுதாத ஒரு கவிதை’ எனப் பெயர் சூட்டியிருக்கிறரர். இத் தொகுதியில் உள்ள ‘எழுதாத ஒரு கவிதை’ என்ற கவிதை.

‘ஒரு கவிதை என்றாலும் எழுதத்துடிகின்றேன்’ என்றே தொடங்குகிறது. இத்துடன் மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட இக்கவிஞர், ஒரு கவிதை என்றாலும் எழுதத் துடிக்கின்றேன் என்று எழுதாத ஒரு கவிதையை நோக்கி காத்திருப்பது தவமிருப்பது ஏன்?. இவர் இதுவரை எழுதியதெல்லாம் ‘வெற்றுக் கவிதைகளா?’ உயிர்கவிதை ஒளிரும் லயக் கவிதையை கவிஞர் ஜெயசீலன் இன்னும் எழுதவில்லையா? கவிதைகளைப் படியுங்கள். நீங்களே முடிவு சொல்வீர்கள்.

இறுதியாக ஒரு வார்த்தை தொகுதியின் இறுதி அட்டையில் காணும் கவிஞரின் தோற்றம், சப்பாணி கட்டி அமர்ந்திருக்கும் ஒளிவட்டம் காணும் அந்தத் தோற்றம் அதை நன்றாக கவனித்து அதில் வரும் கவிதை வரிகளைப் படித்து பாருங்கள்.

Leave a Reply