நம் ‘நக்கீரர்’!

 

ஈழத்துத் தமிழ்க்கவிதை விருட்சம் தன்னில்
என்றென்றும் அறா…யாரும் அறுக்க ஏலா…
ஓர்விழுது ‘கல்வயலார்’! நம்ஊர் வாசம்
ஊடுபாவாய் ஒலிக்கும் பேச்சோசைப் பண்பை
ஈழத்தின் தனித்துவப்பா வடிவாய் ஆண்ட
எம்கவிஞர் பரம்பரையில் ஒருவர்! வற்றாத்
தேன்தமிழின் சுவை, சிறப்பு, மரபு தேர்ந்தூர்
திருந்தப்பா சொன்னவராம்…நம் ‘நக்கீரர்’!

குறியீடு படிமத்தில் சமூகம் கொண்ட
குறை, தவறை நிதம் குத்திக் காட்டி, தொன்மப்
பெறுமானம் குறையும் நம் வாழ்வைச் சாடி,
பிழைதிருத்த அறச்சீற்றம் காட்டி, எங்கள்
அரங்குகளில் கவிபாடி, எழுதி, வாழ்வில்
அனுதினமும் போராடி, நோயில் வாடி,
பிரிந்த ‘கல்வயலாரின்’ நினைவை மீட்டிப்,
பிரார்த்திப்போம்…அவர்கவியைப் பரப்பிப் போற்றி!