மனமெனும் கூடு

கந்தர்மடம் அ.அஜந்தன் அவர்களுடைய முதலாவத கவிதைத் தொகுப்பான ‘மனமெனும் கூடு’ கடந்த வருடம் வெளிவந்துள்ளது. சுமார் 82 கவிதைகளைக் கொண்ட 98 பக்கங்களில் அழகான அர்த்தபூர்வமான அட்டைப் படத்தையும் அருமையான அச்சமைப்பையும் தன் கைவண்ணத்தாலான எளிமையான கோட்டுருச் சித்திரங்களையும் கொண்டு இத்தொகுப்பை அஜந்தன் தந்திருக்கிறார்.

“மனதைக் காயப்படுத்திய சம்பவங்களையும், வலிமிகுந்த நாட்களையும், அவ்வப்போது வரிகளாக்கி நாளிதழ்கள், சஞ்சிகைகளின் ஊடாகப் பகிர்ந்து கொண்டேன். அவற்றுக்கு உருவம் கொடுக்க சிறுவயதில் ஓவியர் மார்க்கிடம் சில மாதங்கள் பயின்ற ஓவியத்தையும் மிக நீண்ட நாட்களின்பின் இந்த நூல் வாயிலாக உணர்வூட்டி கோடிட்டு வரைய முற்பட்டுள்ளேன்.” என தனது நூல்பற்றி ஏறத்தாள தன்னிலை விளக்கமாக முகவுரை தந்துள்ள அஜந்தன் போரின் வலிகளையம், அதன் இழப்புகளையும், வலிசுமந்த பயணங்களையும், துரோகங்களையும், புறக்கணிப்புக்களையும், பாரபட்சங்களையும், கவிகளாக்க முயன்றுள்ளார்.

அவர் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் களநிலை அலுவலராகப் பணியாற்றிய போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடமையாற்றிப் பெற்ற அனுபவங்களும் அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுடனான அளவளாவலும் ஒரு செவிலித்தாய் போல அவர்களின் துயர்கள் ஒவ்வொன்றையும் பகிர்ந்து கொண்ட தருணங்களும் அவரைப் பாடாய் படுத்தியிருக்கின்றன.

“போரின் சாட்சிகளான பொதுமக்களுடனான ஒவ்வொரு பகிர்வும் கூர்வாளாய் குருதி தெறிக்க என் இதயத்தைக் குடைந்து சென்றன” என்ற கூற்று அவரின் உண்மையான கபடமற்ற மனநிலையை எடுத்துரைக்கிறது. இவைதான் இவரின் சாதாரண இதயத்தை தீமை கண்டு பொங்கும் கவிஞனின் இதயமாக மாற்றியிருக்கிறது. “யுத்தத்துள் வாழ்ந்த மக்களின் துயரங்களை உணர மட்டுமே முடியும் அவற்றை முழுமையாகச் சொல்ல முடியாது” என்ற அவரின் அனுபவ முகவுரை வரிகள் இன்னும் பல பேசமுடியாத கதைகள் மண்ணுள் புதைந்தும், நீரில் கரைந்தும், காற்றில் கலந்தும், கிடப்பதை யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றைய அரசியற் சூழலிலும் அனைவரையும் மீள நினைத்துப்பார்க்க வைக்கிறது.

“வெடிவிபத்தில் சிக்குண்டு சக ஊழியர்கள் இருவர் நம் கண்முன்னே தம் கண்களை மூட, காயங்களுடன் நானும் சாரதியும் சாட்சிகளாய் நடுவீதியில் குருதிசொட்டத் தவித்த தவிப்பும் பின்பொருநாள் சாரதி உயிர்துறந்ததும் நிலையாமை வாழ்வைத் தெளிவுபடுத்தியது.” என்கிறார். மேற்படி சம்பவம் நடந்த அன்று சிறய நேர வித்தியாசத்தில் அதே வழித்தடத்தில் பயணித்த நான் அச்சம்பவத்தின் எச்சங்களை கண்டு அதிர்ந்து சென்றது என் மனக்கண்ணில் இன்று மீள நிழலாடுகிறது. அக்காலத்தில் நான் பணியாற்றிய பிரதேசத்தில் நானறிந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளராக விளங்கியவர் அஜந்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அன்று அவர் கவிதைத் துறையில் ஆர்வமுடையவராக இருந்தார் என்பது நான் அறியாதது.

மேலும் யுத்தத்தைத் தாண்டி சமூக அவலங்களையும் இவர் கண்டு கொதித்து கவிதைகள் படைத்திருக்கிறார் என்பதும் இத் தொகுப்பைப் பார்க்கும் போது புரிகிறது. சமயப் போலிகளும், அவர்களின் மூட நம்பிக்கைகளும், மலிந்து கிடக்கும் சமூகத்தில் “நாணயமற்ற ஆத்திகனைவிட நாணயமுள்ள நாத்திகள் எவ்வளவோ மேல்” எனத் தத்துவம் பேச வைக்கிறது அவரின் சமய நோக்கு.

இவரின் கவிதைகள் எளிமையானவை. அவை தான் கண்ட வாழ்வியல் அனுபவங்களை அரிதாரப் பூச்சுகள் அற்று வெளிப்படையாக அனேகமாக நேரடியாகப் பேசுபவை. சமூகத்தில் ஊறிப்போய்க் கிடக்கும் பிற்போக்குத் தனங்களை நையாண்டி செய்து சாடுபவை. கவிதையின் ஆடம்பரமான பண்புகள் சோடனைகள் பற்றி அலட்டிக் கொள்ளாதவை. ஓரளவு ஓசை ஒத்திசைவு ஒழுங்கை பேண முயலுபவை. ஆங்காங்கே மின்னற் பளிச்சீடுகள் போல பல வரிகளை தந்து செல்பவை.

‘முதுமை’ என்னும் கவிதையில்

கூன் விழுந்து வளைந்த தேகம்

தான் சுமந்த சுமைகள் சொல்லும். என்றும்,

‘மானிட வாழ்வில்’ கவிதையில்

உறவுகள் சூழ்திட்ட வாழ்வு

இதில் உனக்கென வாழ்பவர்

எத்தனை கூறு? என்றும்,

‘சிறைக்கதவு திறந்திடுமோடா’ வில்

ஆறுகடல் குளங்கள் கூட

கோடையில் வற்றிவிடும்.

பாதியுகம் கடந்த பின்னும்

இவர்கள்

கண்ணீர் இன்னும்

வற்றலையே என்றும்,

‘உலகம் இங்கு ஏ(எ)து?’ வில் மாற்றுத் திறனாளிகள் எவருமே தவறான வழியில் செல்லவில்லை ஆனால்

எல்லாம் இருந்தும் –

இங்கே மனிதனாய் வாழ்ந்தவர் யார்? என்றும் மனதை உலுக்குகிறார்.

அவரின் ‘மனமெனும் கூடு’ என்ற முத்தாய்பான கவிதையில்

இன்பத்தில் மூழ்கிடும் வீடு

இதில் வன்மத்தீ மூட்டினால்

வீடே சுடுகாடு என்றும்

உள்மனதோடு நீ உறவாடு

அது உணர்த்திடும் நல்வாழ்வு

அதை நம்பி நடைபோடு என்றும் உளவியல் பேசுகிறார்.

‘கள்ளிப்பூ’ வில்

கள்ளிச் செடியின் பூவும்

ஏழைத்தாயின் குழந்தையும்

தீண்டத் தகாதவையோ? என கேள்விச் சாட்டை சுழற்றுகிறார்.

‘சுயசிற்பி’ தனித்துத் தெரியும் கவிதை. அதில்

பிண்டமாய்ப் பிறந்த உடலுக்கு

மெய்யுருக் கொடுத்து நற்சிலையாக்கு

உன்னை நீயே சிற்பியாக்கு என கவித்துவத்தையும் காட்சிப் படுத்துகிறார்.

‘மெழுகுவர்த்தி’ என்ற கவிதை

உச்சந்தலை தீசுமக்க

உடலுருகி ஒளிபரப்ப

தனித்து நின்ற மெழுகுவர்த்தி

மனதுருக மனிதர்

இல்லையென்றெண்ணி

தானே உருகி அழுகிறதோ…என்று புலம்புகிறார்

. மேலும்

முட்கள் பூக்களாய் மலர்ந்ததும்

பூக்கள் முட்களாய் காயப்படுத்தியதும்…

நினைவிருக்கிறது

………….

தரையில் கிடந்து துடித்ததும்

நீரில் மிதந்து களித்ததும்

நினைவிருக்கிறது

…………….

மனிதர்களாய் நாம் வாழ்ந்ததும்

பின் மிருகங்களாய் நாம் வாழ்வதும்

நினைவிருக்கிறது என்றும் ‘வாழ்க்கை முரண்கள்’ பற்றி பேசுகிறார். ‘மனிதம் மரித்த இடமான’ முள்ளிவாய்க்கால் பற்றி

மனிதம் மரித்த முள்ளிவாய்க்காலில்

மரித்துக் கொண்டிருக்கும் மனிதத்தின்

மடியில் தவழ்கிறது

குருதிக் குழந்தை என்கிறார்

. உன் உடலைப் புதைப்பதா? ஏரிப்பதா?

இறுதி வார்த்தையாய்ப் பதிலுரைத்தான்

நீதி தேவதையைப் புதைத்திருந்தால்

என்னையும் புதையுங்கள்

எரித்திருந்தால் என்னையும் எரியுங்கள் என ‘தூக்குக் கயிற்றில் ஓர் உயிர்” என்ற கவிதையில் நீதிக்காய் கோ~மிடுகிறார்.

இவரின் குறுங்கவிதைகள் அர்த்தச் செறிவோடும் அழகோடும் வாசகர்களின் முகத்தில் அறைகின்றன.

‘மனிதனும் கடவுளும்’

இறைவன் நினைக்கிறான் பூமியில்

மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்று

மனிதன் நினைக்கிறான் பூமியில்

இறைவன் ஒருநாளேனும்

மனிதனாய் வாழ்ந்து பார்க்கட்டும் என்று

‘சுமாதானச் சின்னம்’

கோவில் கோபுரத்திலும்

தேவாலய முகட்டிலும்

முசூதியின் கூரையிலும்

பாகுபாடின்றி குடியிருப்பதால் தானோ

வெண்புறாக்கள் சமாதானச் சின்னமாய்த்

தேர்ந்தெடுக்கப்பட்டன என்பன இதற்குச் சான்றுகள்

. ‘பார்வையாளனாய்’ என்ற கவிதையில்

குற்றுயிராய்த் தெருவில் கிடந்த

மனித உடல்களையே

வேடிக்கை பார்த்துச் சென்று

பார்வையாளர்களாகவே பழக்கப்பட்ட

வெட்கங்கெட்ட பிறவிகள்

இந்த மனிதகுலம் என்பது புரியாத

அந்த நன்றியுள்ள ஜீவன்

இறுதிவரை மனிதனை நம்பியே

தெருவோரம் உயிர் துறந்தது என்று மனித சுயநலத்தைத் துயிலுரிக்கிறார். ‘மண்ணுக்குள் புதையுண்ட புனிதர்களில்’

நிவாரணத்தால் எதையும் ஈடுசெய்யும்

பிற்போக்குச் சிந்தனைகள்

என்றுதான் எம் மண்ணை விட்டகலும் என்று அங்கலாய்க்கிறார்.

இவை பதச்சோறுகள் மட்டுமே. ஏனைய அனைத்துக் கவிதைகளையும் பற்றி கூறிச் செல்வதை விரிவஞ்சித் தவிர்க்கிறேன்.

ஏனைய கவிதைகளில் தீக்குச்சி, பெற்றதும் பறிபோனவையும், தீயிடை விழுந்த விதை, என் கேள்விக்குப் பதில், கற்றுக் கொண்ட பாடம், வீழ்ச்சியும் எழுச்சியும் போன்றவை தனித்துத் தெரிபவை. குறுங்கவிதைகள் இவரின் தனித்துவத்தை பறைசாற்றுபவை. இவருடைய ஓவியங்கள் பலபொருள் கொள்ளத்தக்கவை. பல் பரிமாணம் மிக்கவை. இவரின் கவிதைகளுக்குப் பலம் சேர்ப்பவை.

‘மனமெனும் கூடு’ இனூடாக ஈழத்துக் கவிதையுலகினுள் வந்திருக்கும் அஜந்தன் கவிதை பற்றிய பார்வைளையயும் பரீச்சயத்தையும் இன்னும் விரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இன்று முன்வைக்கப்படும் கவிதை தொடர்பான கருத்துக்களையும், எமது வரலாற்று வழிவழி வந்த கவிதைகளையும், ஒப்புநோக்கி தனக்கு வாலாயப்படும் தனது தனித்தன்மையான கவிதையைக் கண்டடைய முயல வேண்டும்.

இன்று கவிதை வாசிப்பவர்களைவிட கவிதை எழுதுபவர்கள் அதிகமாகியுள்ள சூழலைப் புரிந்து கொண்டு எமது ஈழத்தமிழ்க் கவிதையின் செல்நெறியினூடாக தனது கவிதா ஸ்தானத்தை தெளிந்து கொள்ள முயல வேண்டும். எதையும் நேரடியாக சொற்செட்டின்றி கவிதா நுட்பங்களில்லாமல் எழுதுவது கவிதையாகிவிடுமா என்ற கேள்வி இன்று அடிக்கடி கேட்கப்படுகிறது. அதே போல கவிதா நுட்பங்களைப் பாவிக்கிறோம் என்ற ரீதியில் மிகமிகச் சிக்கலான படிமங்களை வேண்டுமென்று புகுத்தி இருண்மைக்குள் தோய்த்து எழுதியவருக்கே என்ன பொருள் என்று புரியாத கவிதைகள் பற்றியும் கருத்தாடல்கள் நிகழ்கின்றன. உறுதியான ஒரு பொருளன்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக பொருள் கொள்ளக் கூடிய கவிதைகளே உச்சமானவை என்ற கற்பிதங்கள் பற்றியும் இன்று விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இவைகள் எல்லாவற்றைப் பற்றியும் அஜந்தன் கரிசனை கொண்டு தனக்குரியதைத் தேர்ந்து தனது கவிக்கொள்கையை வகுத்துக் கொள்வது பொருத்தமானது எனக்கருதுகிறேன். இவ்வாறு பெற்றுக் கொண்ட கவிக் கொள்கை கூட ஒரே முடிந்த முடிவாக இருக்கவேண்டும் என்ற எந்த அவசியங்களும் இல்லை. எனவே பூரண சுதந்திரத்துடன் கவிதையை அணுக இவர் கற்கவேண்டும்

வெறும் குழு மனப்பாண்மையுடன் தமது முடிவே முடிந்த முடிவு என்ற ரீதியில் தம்படைப்புக்களே உச்சமானவை என தமக்குத்தாம் முடிசூட்டிக் கொண்டு எழுகின்ற ஒற்றைத்தன்மையான தட்டையான கவிதை விமர்சனச் சொல்லாடல்களைத் தவிர்த்து பல்வகைமை மிகுந்த எம்முன் கொட்டிக்கிடக்கின்ற வௌ;வேறு கவிதை வகை மாதிரிகளை இடையறாது வாசித்து பயின்று தனக்கேற்ற, தனக்கேயுரிய, கவிதையை இவர் படைக்க வேண்டும். ஒரு தேர்ந்த கவிஞனாவதற்குரிய அடிப்படைகள் பலவற்றை ஆங்காங்கே தன் படைப்புகள் ஊடாக காட்டிச் செல்லும் அஜந்தனின் கவிதைப் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.