வரலாற்றின் வாரிசு தெணியான்

பணியாமை, சமூகத்தின் அநீதி கண்டு
பதுங்காமை, பயமற்று உண்மைக் காகத்
துணிவோடு தொடர்ந்து குரல் கொடுத்து நின்றெம்
தொல்தமிழை எழுத்துதனை மூச்சாய்க் கொண்டோர்
அணிசேரா தியங்கிடுதல், படைப்பின் மூலம்
அழியாத புகழ்…ஈழந் தாண்டிக் கொள்ளல்,
தெணியானின் முகவரிகள்! எழுபத் தைந்தாம்
திருவயதில் வாழ்த்துகிறேன்…வாழ்க நீங்கள்!

நெடிய உரு, நெகிழ்ந்த மனம், நெற்றி மேவும்
நேர்த்திமுடி, பகலாக ஒளிரும் மீசை,
விடைதேடும் விழி, தூர திரு~;டிப் பார்வை,
விசாலமான சிந்தனையால் விரிந்த நெற்றி,
படபடக்கா யார்க்குமஞ்சாப் பேச்சு, மீண்டும்
பார்க்கவைக்கும் தூயஉடை, துணிவு இன்னும்
குடியிருக்கும் நடை, கொள்கை குன்றா…நாட்டார்
குண எழுத்து, இவை தெணியான் வடிவியல்பு!

சிறுகதையில் நாவலிற் தன் பாரம் எல்லாம்
தேக்கி, யாழ்ப் பாணத்தின் ஏற்றத் தாழ்வை
பொறுக்காதக் கொடுமைகண்டு பொங்கி, முன்நாட்
போலிமைகள் மாறப் போராடி, நொந்து
வெறுத்திழைத்த சந்ததிக்குத் தோழன் ஆகி,
விருதுதேடி அலையாது பெருமை சூடி,
வரலாற்றின் வாரிசாக உயர்ந்த ஐயன்
வாழ்க இன்னும் பல்லாண்டு… ஊழி தாண்டி!