ஜெயசீலனின் கவிதைகள் – ராம் கதிர்வேல்

“அரக்கர் எம் அழகுபூமி தனைஏய்க்க எழுந்தருளின்
அறம்பாடி அவரெரிய வைப்போம்” என்ற வரிகளில் கவியை ஆயதமாக்கி எதிரியை அழித்த ஐதீகக் கதையைக் கூறும் நந்திக் கலம்பகத்தின் எதிரொலியைக் கேட்க முடிகிறது. த.ஜெயசீலன் இரண்டுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புக்களைத் தந்தவர். சஞ்சிகைகளில் கவிதைகள் மூலம் அதிகம் பங்களித்து வருபவர். ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ தொகுப்பில் வரும் கவிதைகள் இங்கு நோக்கப்படுகின்றன.

தன்னைச் செதுக்கியதில் ‘இயற்கையும், இறைநினைவும், காலமும்,’ பங்களித்தமையை முன்னுரையில் பதிவு செய்கிறார். எனவே, முதலாவது கவிதையாக வரும் ‘துணை தருக’ என்பதைக் ‘காப்பு’ எனக் கருதுவதில் தவறில்லை. அரக்கரை அறம்பாடிப் புறப்பட்ட காற்று,“திராணியற்று மூன்றுமுறை துப்பி முழுதாய்ச் சபித்துவிட்டு” எதிர்த்திசையில் போகிறது.(ஆறும் நானும்) இந்த முரண், இவரில் மட்டுமன்றி அனேக கவிஞர்களிடத்திலும் காணக் கிடைக்கிறது. இந்த முரண் ஈழத்துக் கவிதையின் வெறுக்கத்தக்க பண்பாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வீரம் பேசிவிட்டுத் தலைகுனிந்து போம் நிலையாக இதனைக் கருதி அவமானம் என விபரித்து வியாக்கியானஞ் செய்யவும் செய்யலாம். எண்பதுகளில் அருந்தலாகத் தென்பட்ட இந்த முரண் தொண்ணூறுகளின் பின் வந்த கவிதைகளில் அதிகம் தென்படுகின்றது.

‘கைகளுக்குள் சிக்காத காற்று’ தொகுதியில் எண்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. எனினும் ஜெயசீலனின் இதுவரை எழுதப்பட்ட கவிதைகளின் எண்ணிக்கை, எழுதப்படும் வேகத்தை வைத்துப் பார்த்தால் இவ் எண்ணிக்கையை விட பத்து மடங்காகிலும் இருக்க முடியும். அவரது படைப்பு வேகமும் பிரசுர வேகமும் கவனிப்புக் குரியன.

“அவற்றின்(மரத்தின்)
குறைதுயரை
எந்தக் கவிவரியில் இத்தனைநாள்
பதிவுசெய்தோம்?
இந்த வரிகள் மூலம்(‘மரநிலை’) ஜெயசிலனின் பார்வைப் புலம், வியாபிக்கும் எல்லைகளைச் சுட்டிக்காட்ட முடியும். அவ்வாறே அவர் எழுத எடுத்துக்கொள்ளும் பாடுபொருளும் பன்முகப்பட்டுள்ளது. தன்னுணர்வு சார்ந்து மட்டுமே எழுதப் பழகிய பல பேனாக்களுக்கு மத்தியில் இது வித்தியாசமான பேனா. அதேவேளை அப்பாடுபொருளைத் தரும் கவிதைக் கோணமே கவிதையின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதையும் அழுத்திச் சொல்ல வேண்டும். அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும், அனைத்துப் பொருள் குறித்தும் தான் கொண்டுள்ள அறிவை பாடுபொருளாக்கும் சுதந்திரத்தைக் கவிஞன் கொண்டுள்ளான். அவை கவித்துவத்துடன் மிளிர அவ்வுலக அறிவு அனுபவத்தில் வர வேண்டும். குறைந்தபட்சம் அந்த அறிவு உணர்வுக்கு நெருங்கி வர வேண்டும். ஜெயசீலனின் சில கவிதைகள் கவிதையாகாமல் போனமைக்குக் காரணம் உலக அறிவு பட்டறிவாக இல்லாமை காரணமாக இருக்கக் கூடும்.

“சுழலுகின்ற மின்விசிறி சுழன்று
சுழன்று…தான்
களைத்து வியர்க்கையிலே
காற்றுக்கு எங்குபோகும்?” (பக்87)
போன்றவற்றை அவ்வகையில் கவிதையாகாதவையிற்கு உதாரணமாகக் காட்டலாம். ‘கொள்ளை போன குளம்’ (பக்6) குறிப்பிடத் தகுந்த ஒரு கவிதை. கவிஞனின் உள்ளார்ந்த கோபத்தை வாசகனில் ஏற்றுவதில் வெற்றியடைகிறது.

“தூண்டிலிட்டு நாலு சிறுதிரளி பிடித்ததனால்
வீட்டுப் பசிவிரட்டும்
அவனுமாராற் பசித்துள்ளான்.” என்று கவிதை முடிகையில், அதுவே மீளவும் அக்கவிதை வாசிக்க வைக்கும் ‘சரடையும்’ அதனால் அக்கவிதை அதன் இரண்டாம் வாசிப்பில் தரும் கோணமும் சாத்தியமாகின்றன.

‘மறத்தல்’(பக்கம் 11) கவிதையும் இன்னும் இறுக்கமாக வெளிவந்திருக்க வேண்டும். அடிமுடி ஏதுமற்ற பிழம்பாக வடுக்களை உவமித்த வரிகளில் கவிதையின் உயிர்ப்பு இருக்கிறது. இந்த உயிர்ப்பை இன்னும் பல கவிதைகளில் காண முடியும். என் ‘அகத்தில்’ அதன் வேர் துளைத்த வலிமட்டும் இன்னும் இருக்கிறது என்ற வரிகளை(வேர் பக்கம்12) இவ்வகையில் குறிப்பிடலாம். ‘அகத்தில்’ என்பதற்கு மேற்கோள் குறிகள் இடப்பட்டு மனதையும் வீட்டையும் குறிப்பால் உணர்த்துகிறது எனக் காட்ட சற்று சிரமப்பட்டிருக்கிறார். தேர்ந்த வாசகன் தவறாமல் அந்த இருபொருளையும் கண்டடைவான் என்பதில் கவிஞனுக்கு ஏற்பட்ட நம்பிக்கையீனத்தையே இது காட்டுகிறது. கவியரங்கமாயின் இரு முறை இருவேறு அழுத்தத்துடன் எடுத்துரைக்கும் முறையின் தொடர்ச்சியோ இது என எண்ணத் தோன்றுகிறது.

ஈழத்துக் கவிதைச் சூழலில் ஒரு முக்கியமான அம்சம் கவிதை எழுதுபவர்களின் தரத்தைவிட கவிதையை வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கி வாசிப்பவர்களின் தரம் உயர்வாக உள்ளது. இதற்கு ஆதாரமாக வகை தொகையின்றி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகும் கவிதைகளின் தரத்தையும் அவற்றுக்கு வழங்கப்படும் வாசக மதிப்பையும் காட்ட முடியும்.
ஜெயசீலனின் கவிதைகள் மரபு வடிவத்தைப் புறக்கணித்து மரபை மீறிய கவிதைகள் எழுதப்படும் முறையில் எழுதப்படுகின்றன. அதாவது வரிகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. எனினும் மரபின் கதகதப்பை புறக்கணிக்க விரும்பாத கவிதைகள் இவருடையவை. அனேக கவிதைகள் மரபோசையுடன் வருகின்றன. கவிதைகளுக்கு அந்த லயம் சிற்சில சந்தர்ப்பங்களைத் தவிர வலுச் சேர்ப்பதை மறுப்பதற்கில்லை.

‘வெளிநாட்டுப் பறவைகள்’ என்று தலைப்பிடப்பட்ட(பக்கம்56) கவிதை குறித்து சில வரிகள் சொல்ல வேண்டும். அது புலம்பெயர் பறவைகள் குறித்த விபரணங்களோடு ஆரம்பித்து கவிதை வளர்கையில் அது புலம்பெயரும் பறவைகளை மட்டும் குறிக்காமல் புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பால் உணர்த்திச் செல்கிறது என்பதும் வாசிப்பவருக்கு விளங்குகின்றது. “வேர்பெயர்ந்து எங்கோ விழுதுவிட்டுச் சொந்தஊரை பார்த்துவிட்டுப் போக படையெடுக்கும்” தமிழரைத்தான் தான் குறிப்பிடுவதை வாசகன் கவனிக்கத் தவறிவிடுவான் என்ற அச்சத்தில் கவிதையை எழுதிவிட்டு கடைசியில் “நம்மவரும் வெளிநாட்டுப் பறவைகளா?” என இரண்டு வரிகளைச் சேர்ப்பதன் மூலம் கவிதைக்கு ஊறு செய்ய முற்படுகிறார். கடைசி நான்கு வரிகள் இல்லாமலே அவர் சொல்ல விழைவதும் அதன் குறிப்பும் கட்டிறுக்கத்துடன் உள்ளன என்பதை அழுத்தமாகக் கூறவேண்டும்.

‘நடத்துவது தெய்வம் நானோர் கருவி’ என்ற பான்மையில் ஆன்மீகச் சார்புடையவர் என்பதை அவரது கவிதைகளும், கைப்பட எழுதியுள்ள குறிப்பும் காட்டுகின்றன. அவரது தத்துவார்த்த நோக்கும் ஆன்மிக வழிப்பட்டதே. கவிதை எழுதல் குறித்த நோக்கு ‘வாழ்க்கைப்போர்’ என்ற கவிதையிலும் எடுத்துரைக்கப்படுகிறது. சகபாடிகளுடன் நெருங்க முடியாத அந்நியமாதல் பிரச்சனையையும் ஒதுக்கிய போது பெறப்படும் தனிமை கவிதை எழுதப்படும் களமாவதையும் எடுத்துரைக்கிறார்.
இத்தொகுப்புக்குத் தலைப்பைக் கொடுத்த கவிதையான ‘கைகளுக்குள் சிக்காத காற்றில்’ வரும் காற்று இக்கவிஞனே! சமுதாய அமைப்பை விமர்சிக்கும் அதே வேளை அதை மாற்றுவது குறித்து அல்லது சீர்திருத்துவது குறித்து வியாக்கியானங்கள் இன்றி ‘தாமரை இலையில் தண்ணீர’; போல ‘ஓடும் புளியம்பழமும்’ போல வாழ விரும்பும் ஆன்மிகப் போக்கை அடியொற்றுகிறது இவரது உலகம்.

(இது 18.12.2005 ‘தினக்குரல்’ பத்திரிகையில் வெளிவந்த விமர்சனக் குறிப்பு)

Leave a Reply