கைகளுக்குள் சிக்காத காற்று க.வேல்தஞ்சன்

ஆய்வு அணுகுமுறைகளில் இலக்கியம் – இலக்கிய கர்த்தா வாழும் சமூகவியல் பின்புலம் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. முதலில் இலக்கியத்தையும் இலக்கிய கர்த்தாவையும் உருவாக்குகின்ற அவ்அக் காலத்துக்குரிய சமூக, பொருளாதார, அரசியல் சூழமைவை விளங்கிக் கொண்டு இயலுமானளவு சாத்தியமான தீர்மானத்துக்கு வரவேண்டிய அவசியம் உண்டு.

கவிஞர் த.ஜெயசீலனையும் அவரது படைப்புக்களையும் புரிந்து கொள்ளவதற்காக அவருக்கு முன்னும் அவரது சம காலத்திலும் எமது அரசியல் அசைவியக்கத்தின் பெரும்பாகமான பெரும்பான்மை ஓட்டம், தமிழ் அரசியல் சுழற்சிக்குள் நின்றமையும் அவரை உருவாக்கிய யாழ்.சமூகவியல் பின்புலம் பெரிதும் சாதியப் பிளவுகள் போன்ற முரண்பாடுகள் நிறைந்த சைவ சமய ஆசாரபூதித் தனங்களுடன் கூடிய மரபுவாத தொன்மைத்துவ சூழலாக உள்ளமையும் கவனிக்கத்தக்கது.

மாக்சியத் தளங்கொண்ட சஞ்சிகைகள் ஒருசிலவற்றில் த.ஜெயசீலன் சில ஆக்கங்களை எழுதியிருந்தாலும், தமிழ்தேசியத் தளங்கொண்ட ஊடகத்தில் ஆரம்பத்திலும் பின்னர் தமிழ் தேசியத் தளங்கொண்ட அச்சு ஊடகங்களிலும் தனக்கான கவிதைத் தளங்களைக் கொண்டிருந்தார். இனப்போர் காலத்துள் யாழ்.இந்துக் கல்லூரியில் கற்று, யாழ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞான பட்டதாரியாக வெளிவந்தவர். இனப் போரின் சகல பரிமாணங்களிலும் ஒரு சாதாரண சிவிலியன் என்ற வகையில் அனுபவங்களைச் சம்பாதித்தவர். இவரைக் கவிதைத் துறையில் பாடசாலை வாழ்நிலையில் ஊக்குவித்த ஊக்கியாக பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் இடம்பெறுகிறார். மேலும் மிகவும் pழிரடயச ளவயபநள ஆகத் திகழ்ந்த ‘கம்பன் கழகத்தின்’ ஜெயராஜ் அவர்கள் ஒழுங்குபடுத்தும் அரங்குகளும் த.ஜெயசீலனின் தொடக்கங்கள் எனலாம்.

இதற்கப்பால் இவரது காலத்திற்குச் சற்று முந்திய இவரது சமகாலத்தய சில ஈழக்கவிஞர்களை வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இவரது காலத்திற்கு முந்தியவர்களும் சமகாலத்தவர்களுமான கவிஞர்களிடம் இவரது ஈடுபாடு கணிசமான அளவில் இருந்திருக்கும். இந்தப் பின்புலத்தில் இவர் ஆரம்பத்தில் தந்த கவியரங்கக் கவிதைகளும் இலத்திரனியல் ஊடகம் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் தந்த கவிதைகளும் மரபு பேணுபவையாக இருந்துள்ளன. ‘கனவுகளின் எல்லை’ கவிதைகளில் மரபு பேணப்பட முற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அவ்வாறே தற்போது அவர் வெளியிடும் இத்தொகுதியிலும் மரபில் அவரது அக்கறை வெளிப்படுகிறது.

மேலும் சீலன் தான் ஒரு சைவசமயி என்பதிலும் உறுதியானவர். அவரது இக்கவிதைத் தொகுதியிலும் தெய்வ அனுட்டான ஆசாரத்தின் தீவிர வெளிப்பாடுகளைத் தரிசிக்கலாம். கனவுகளின் எல்லையில் ‘கவிமூலம்’ என்பதன் கீழ் இதை அவதானிக்கலாம். இந்த வெளியீட்டில் ‘துணைதருக’ என்றே தொடங்குகிறார். எனினும் இத்தொகுதியின் ‘ஓமமும் வேள்வியும்’ என்ற கவிதையில் ஒரு வித்தியாசமான அதிர்வையும் முன்வைக்கிறார்.
‘ஆறும் நானும்’ கவிதையில்
“மூன்றுமுறை துப்பி முழுதாய்ச் சபித்துவிட்டு
நடக்கின்றேன். ஆற்றின் எதிர்த்திசையில் நடக்கின்றேன்”
ஏன் எதிர்த்திசையில் நடக்க முடிவெடுக்கின்றார் என்பதில் வியப்பேதும் இல்லைத்தான். போரின் அழிவையும் அதன் அரசியல் பரிமாணத்தில் ஒருவித அர்த்தமிழப்பையும் கவிஞன் உணர்வதாகத் தோன்றுகிறது. பக்கம் 65ல் ‘கழுத்தறுந்த சேவல்’ தரும் அவலமும் பெரியது.

தொடர்ந்து வரும் கவிதைகளான ‘கொள்ளை போன குளம்’ ‘கண்ணீரின் பாடல்’ ‘புலம்பல்’ போன்ற கவிதைகளும் அரசியல் ரீதியில் அர்த்தம் கொடுபடாத பல புலம்பல்களைத்தான் வெளியிடுகின்றன.
பக்கம் 9 இல் இரண்டாம் பந்தியும் மூன்றாம் பந்தியும்… ‘கனவுகளின் எல்லை’ வரை சென்ற கவிஞன் ஜெயசீலன் இனியெமக்குத் துயரா எல்லை? என்று கேட்கிறார்.

‘தார்’, ‘மறத்தல்’ ஆகிய கவிதைகளும் அரசியற் கவிதைகளாகப் பரிணமிக்கின்றன.
‘மெய்யுறவு’ என்ற கவிதை போரும், அவலங்களும் அழிவுகளும் நிறைந்து கவிந்திருக்கின்ற காலப்பகுதியின் அகம்சார் விடயமொன்றையும் அதன் தொடர்புப் பங்காளிகளின் மெய்யுறவையும் சரிவரப் பேசுகிறது.

அடுத்து வரும் ‘இல்லாத இதம்” என்ற கவிதை இத்தீவில் நடந்த போர் ஒரு இனத்தின் பிராந்தியத்தை சுடுகாடாக்கியதையும் மற்றைய இனத்தின் பிராந்தியம் அசல் அழகோடு செழித்து ஓங்குவதையும் குறிக்கிறது.

‘நெருடல்’ என்ற கவிதையில், கவிஞன் காலிமுகத் திடலில் நின்று தன்னினத்தின் அழிவால் ஏங்குவதைக் காட்டுகிறது. ‘கண்டி வீதியில் கவிந்த கவிதை’ இத்தீவின் இரு தேசிய இனங்களின் போராட்டக்காரர்கள் மடிந்த கதை கூறுகிறது.
தற்போது நடைபெறும் அரசியல் பேச்சுவார்தைகளிலோ சமாதானத் தீர்விலோ பெரிய அளவு நம்பகத்தன்மை கொள்ளாத யதார்த்தத்தை கவிஞர் நன்றாகப் பிரதிபலிக்கிறார்.

ஊர்வலம், உருவேற்றல், கேள்விகள், நிகழ்காலம், நியாயங்கள், உங்களது கைகோர்ப்பு, வெளிநாட்டுப் பறவைகள் ஆகிய கவிதைகள் சமாதானமும் போருமற்ற இச்சூழலில் ஒரு பொதுத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அரசியல் கவிதைகள் ஊடாக யதார்த்தமாகப் பேசப்படுவது சமூகத்தின் செவிகளுக்கு விழ வேண்டிய விடயமாகிறது.
இந்த இடத்தில் 1985 நவம்பரில் ஏறத்தாழ 19 வருடங்களுக்கு முன்பு உ.சேரன், அ.யேசுராசா ஆகியோரால் தொகுக்கப்பட்ட ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பில் சேரன் வழங்கிய முன்னுரையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையீனங்கள் வெளிப்பட்டிருந்தன.

உரிமைப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமற்றுப்போகும் நிலைமையை வெளிப்படுத்தும் ஜெயசீலனும் பல கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறார்.

‘பாலூற்றும் பாட்டு’ ‘வல்லமைகளுக்கு வரவேற்பு’ ஆகிய கவிதைகள் ஏதோ ஒருவகை நம்பிக்கையூட்டுவதற்கு முனைந்தாலும் காரிருளில் ஒரு சின்னஞ்சிறு வெளிச்சமாக மங்கிவிடுகின்றன. இவ்விரு கவிதைகளிலும் பெரும்பாலும் மரபு பேணப்பட்டுள்ளது. ‘எமது பாடல்கள்’ என்ற கவிதையும் நம்பிக்கைத் தொடர்பை அறவிடாது காக்க முயல்கிறது.
இவற்றுக்கப்பால் இயற்கை, தொழில்வர்ணனை என்பவற்றை சிறப்பாக அழகியலுடன் விபரிக்கும் நல்ல கவிதைகளாக நம்புதல், காற்று வரும் காலம், துணை, புதிதாய் மலர்ந்த ஆறு, அபிமான வீரன், குயிலி, என்பன உள்ளன. இதற்குள் குயிலி என்ற கவிதையில் இயற்கையில் மூழ்கி குயிலியின் தவிப்பில் தவிக்கும் கவிஞனின் தவிப்பு எமக்குள்ளும் தொற்றிவிடுகிறது. ‘வெளிப்பு’ என்ற கவிதை விவசாயியின் தொழில் அழகையும் முயற்சியையும் விபரிக்கிறது. ‘ஆறுதல்’ என்ற கவிதை நல்லூர் கோவில் களத்தை இயற்கை வனப்போடு விபரிக்கிறது. கார்த்திகை மழை என்பது தமிழ் மண்ணின் மாரிகாலத்தை விபரிக்கிறது. எனினும் “நீயில்லை இங்குன் நிழலில்லை! ஆனால்நீ கார்த்திகை நாள் தீபத்தில் ‘கண்திறப்பாய்’ என்பதிலே எனக்கையம் இல்லை” எனும் வரிகள் வீரர்களின் நினைவிருப்பை தொட்டுயிர்க்க வைக்கிறது. ஒரு மார்கழித் திருவெம்பாவைக் காலத்தை விபரிக்கும் ‘கண்ணம்மா’ என்ற கவிதை ஒரு சைவத் தமிழ்ப் பெண்ணின் அப்பாவித் தனமான இல்லறப் பற்றையும் அதனூடாக பெண்ணியற் சிந்தனை அதிர்வொன்றையும் ஏற்படுத்தும் ஒரு வித்தியாசமான வெளிப்பாடாக உள்ளது. ‘துயரின் கனம்’ ‘தூண்டிற்காரி’ என்பன அகம்பாடும் இரு ஏக்கங்களைத் தருகிறது.

இவ்வாறாகப் பல கவிதைகள் தொடர்கின்றன. எனினும் சமூக அரசியல் பரிமாணத்தில் ஜெயசீலனின் ‘கைகளுக்குள் சிக்காத காற்றை’ பகுப்பாய்வு செய்ய முயற்சிப்பதே பலன் தரும் என்று நினைக்கிறேன்.

‘நாட்டுக்குரைத்தல்’ அருமைத்தாய் நாட்டை நினைக்கப் பாவமாயும் பயமாகவும் இருக்கிறது என்று கூறுகிறார் கவிஞர். தாய்நாட்டின் அழுகை துயர்கள் என்பன சமூகத்தின் ஒரு தரப்பால் தமக்கான சுயநலங்களைப் பேணவும் வளர்க்கவும் உதவுகிறது என்கிறார். தாய்நாட்டின் பசி, வலி, என்பனவும் அத்தரப்பால் தமக்கான உணவு மருந்து போன்ற தேவைகளை ஈட்டிக்கொள்வதற்கு பயன்படுத்தப் படுவதாகக் கூறுகிறார். “தாய்நாட்டின் அலைச்சலாற் தான் ஒரு தொகுதி மக்கள் உலகெல்லாம் குடியுரிமை பெற்றார்@ குலம் வளர்த்தார்” என்றும் கவிஞர் உரைக்கிறார். “உன்துடிப்பால்…தம் கதிரை ஆடாமற் காக்கிறார்கள் உன்னைப் புளுகுவோர்கள்” என்று சாட்டையடி போடுகிறார்.

சமூக பொருளாதார ரீதியில் தாழ்ந்த வகுப்பினராக இருக்கும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட வீதத்தினரும் மத்திய வகுப்பைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட வீதத்தினரும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் மலிவான கூலிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.
அவர்களுக்கு அக்கண்டங்களில் வழங்கப்படும் அவர்களின் உழைப்பின் ஒரு சிறு பகுதியான கூலி அவர்களது குடும்பங்களுக்குரிய பொருளாதாரப் பேணுகைக்கு அனுப்பப்பட அதையும் திறந்த சந்தையின் நுகர்வுக் கலாசாரம் இங்கு விழுங்கிவிடுகிறது.

கவிஞர் ஜெயசீலன் தாய் நாட்டின் அழுகை துயர்கள். பசி, வலி, அலைச்சல் இவை எவ்வகையில் அரசியல் தஞ்சம்கோருதல், அகதி அந்தஸ்த்து கோருதல், என்பவற்றினூடாக ஒரு பொருளாதார அம்சமாகிறது என்பதை சேய்களின் மகிழ்ச்சி, புதல்வர்களின் பாடல், மைந்தர்களின் உணவு, தனயர்களின் மருந்த ஆகிய சொற்றொடர்கள் ஊடாக குறியீட்டு யுக்தியினூடாக உரைக்கிறார். “உன்மைந்தன் குடியுரிமை பெற்றது எமது அலைச்சலாற்தான்” என்றும் தெரிவிக்கிறார். இங்கு சீலன் தாய்நாடு மூலமாக உருவாக்க முனைவது போனவர் போக எஞ்சியிருப்போரில் அவர்களது செயற்பாட்டளவில் இரு தரப்பாரை அவர் அறிமுகம் செய்கிறார். “உன் துடிப்பால்… தம்கதிரை ஆடாமற் காக்கிறார்கள் உன்னைப் புளுகுவோர்கள்.”
புளுகிப் புளுகி கதிரை ஆடாமல் பார்க்கின்ற இந்தக் கூட்டத்தைத் தவிர ஒரு தியாகத்தனமான அர்ப்பணிப்புச் சூழ்நிலையில் “என்னருமைத் தாய்நாடே…உனக்காய் உயிர்சிந்திச் சின்னவரோ மெழுகானார்.”என்று கவிஞன் பேசுகின்ற போது வேதனை வரம்புடைக்கிறது. “மாற்றுடைக்கும் நேற்று வழியற்றிருக்கையிலே…காற்றடிக்கும் திசையெல்லாம் கைநனைத்த பெரியோர்…”பற்றிச் சீலன் கூறும்போது கொடுப்புக்குள் ஒரு நையாண்டிச் சிரிப்போடு கவிஞன் தோன்றுகிறான்.

சில பேர்வழிகள் தங்களுக்கு மொழிகளுக்கு இடையில் வேறுபாடுகள் புரிவதில்லை என்றும் கலாசாரங்களுக்கிடையில் மாறுபாடுகள் புரிவதில்லை என்றும் சர்வதேச கனவான்களாக அமெரிக்க ஐரோப்பிய வெள்ளைத் துரைத்தனத்திடம் விருதுகள் பெறத்; துடிப்போடு திரியத் தொடங்கி விட்டனர். அவ்வாறு ஏற்கனவே திரிந்த சிலரையும் பேரினவாத முதலாளி அடிவருடும் அரசியல் மூலங்களோடு தோழமை கொண்டாடும் அரசியல் விபச்சாரகர்களையும் “காற்றடிக்கும் திசையெல்லாம் கைநனைத்த பெரியோர்” என சீலன் விழித்துள்ளமை பொருத்தமாக அமைந்துள்ளது.

அந்தக் கவிதையின் இறுதியில் இத்தமிழுணர்வு இன்னும் நின்று நிலைப்பதற்காக இந்த மண்ணில் எஞ்சியிருந்தோர் பற்றியும் அவர்கள்தான் ‘இந்நாட்டு மன்னர்’ திரையரங்கில் ஏழைகள்போல் பின்னுக்கு நிற்கின்றார்.

“பின்னுக்குப் பின்னே நான்…
உந்தன் நிசச்சிரிப்பை ஓர்தடவை பார்ப்பதற்கு
சந்தர்ப்பம் தேடி
எட்டிஎட்டிப் பார்க்கின்றேன்” என்று தனது நிலைகூறி அக்கவிதையை நிறைவு செய்கிறார்.
ஒரு அரசியல் கவிதை என்ற வகையில் முப்பதுக்கும் குறைந்த வரிகளில் தமிழ்த் தேசியத்தின் நிலையை அச்சொட்டாகப் பதிந்திருக்கிறார் கவிஞர். யதார்த்தமாக உள்ள வர்க்கச் சிந்தனைத் தளத்தில், ஒரு பொருளாதார அரசியற் பரிமாணத்தின் வெளிப்பாடாக கவிஞரின் வரிகள் வெளிவருகின்றன.

இந்த வகையில் தமிழ் வாதம் பேசிய கவிஞர்கள் அன்று தொட்டு இன்று வரை யதார்த்தத்தை மேலோட்டமாகப் பதிவு செய்து விட்டு தமது இலக்கியப் பணி நிறைவு பெற்றதாகக் கருதி திருப்தியடைகின்றனர். முன்பே இருந்து வந்த சாதிசமயப் பிளவுகள், பிரதேச இன வேறுபாடுகள், முற்றாக இன்னும் மறையவில்லை. இப்பிரிவுகளுக்கும், பிளவுகளுக்கும் வரலாற்று இயங்கியல், பொருள்முதல்வாத இயங்கியல் அடிப்படையான தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

எனினும் மேலே குறிப்பிட்டது போன்று தத்துவார்த்த அடிப்படை பற்றி எவ்வித கரிசனையும் கொள்ளாது- தமிழ்த் தேசியச் சட்டகத்துள் நின்று கொண்டு ச.வே. பஞ்சாட்சரம், காசி ஆனந்தன் போன்ற சிரேஷ்ட கவிஞர்களிலிருந்து கனிஷ்ட கவிஞர்கள் வரிசையில் இடம்பெறுகின்ற ஜெயசீலன்கள் வரையில் தங்கள் எழுத்துக்கள் மூலமாக தாங்கள் சார்ந்து நின்ற அரசியல் சுற்றோட்டத்துக் கூடாகவோ பெண்ணடிமைத்தனம், சாதிய சமயப் பிளவுகள், பிரதேச வாதம், என்பன தொடர்பான சீராக்கங்களின் திசைகளைத் தொட்டுக் காட்டவோ, செயற்படவோ முடியவில்லை. எனது குருவான ச.வே. பஞ்சாட்சரம் பற்றியோ, கவிஞர் காசி ஆனந்தன் பற்றியோ, அவர்களிடம் தமிழுணர்வும் தமிழ்க் கவிதை சுவையும் மிதமிஞ்சி நின்றமை பற்றியோ ‘போஸ்மோட்டம்’ செய்வது அழகோ பண்போ ஆகாது.

எனினும் இவர்களின் கவிதைகளின் பொதுவான இயல்புகளுடன் ஜெயசீலனது கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இச்சட்டகத்துள் நிற்போரில் ஒருவர் ஏனைய சமூக ஒடுக்குமுறைகள் பற்றி ‘அதையேன் பாட வேண்டும், அப்படி ஒன்று இல்லையே- அதுதான் எப்பவோ முடிந்துவிட்டதே’ என்பார். மற்றொருவர் அதைப்பாடுவார் -அப்படி ஒன்று இருந்ததாகச் சொல்வார் அது ஒளிய வேண்டும் என்று உரக்கக் கூறுவார். திரிபு இவரிடம் இருக்காது. பிந்திய இன்னொருவர், அதைப்பழிப்பார், அப்படியொன்று இருப்பதால் சமூகத்தை விமர்சிப்பார், தான் அதிலிருந்து விலகி நிற்பதாகப் பிரகடனஞ் செய்வார்.

எடுத்துக் காட்டாக கவிஞர் ச.வே.பஞ்சாட்சரத்தின் ‘கவிக்குரல்’ என்ற கவிதையில்
“காய்ந்த சருகாகி காலமெனும் வெப்பினிலே
மாய்ந்து மடிந்துவிடும் வலிமையிலா இலக்கியங்கள்
ஆய்ந்து சரியாக அறிவீர்! வரலாற்றுத்
தேய்ந்தே ஒழிகின்ற சிறுசாதிப் பிரச்சனையைப்
பாடிச் சிதைந்துவிட்ட பாம்படிக்கும் பாட்டுத்தான்
மூடுசவக் குழிதிறந்து…மூக்கைநாம் பொத்துவதா?
குத்தும் முள்ளென்று கொழுத்திவிட்டோம் சாதியினை
குத்தும் அதன்சாம்பல் கூட வென்று கருவமைத்து
குத்தும் மடமையினைக் கைவிடுவீர் தோழர்காள்!
மெத்தியெழும் விதம்விதமாய் புதியசிக்கல் தமைப்பாடீர்”
ஏன் இவர் சாதியம் அறுபதுகளின் ஆரம்பத்திலே சிதைந்த பாம்பாகி விட்டது. அதற்கு நல்லடக்கம் முடிந்துவிட்டது என்கிறார்.
அதே காலப்பகுதியில் (முப்பது முப்பத்தைந்து ஆண்;டுகளுக்கு முன்) ‘சாதிப்பிரிவினை எதிர்ப்பு’ என்ற கவிதையில் கவிஞர் காசி ஆனந்தன்
“என்னருந் தோழா! உனக்கொன் றுரைப்பேன்
இதுகேள் நீ களத்திலே
பன்னெடுங் காலம் அலைந்த அனைத்தும்
பாழடா..!குதிக்கின்றாய்!
சின்னக் கதைகள் வளர்க்கிறாய்! இது
சிறுமையல்லவோ மூடா?
உன்னையே நூறாய்ப் பிரிக்கின்றவன் நீ
ஒருவனே ..அடப் பாவி”
என அதன் இருப்பை வெளிப்படுத்துகிறார். அத்துடன் பிரதேச உணர்வு பற்றி
“மட்டக் களப்பும் யாழ்நகர் மண்ணும்
மரபில் வேறுபட்டவை யென்றொரு
குட்டித் தலைவன் குழப்புவானங்கே…
குற்றஞ் சூழ்ந்த மலை நாட்டானை
திட்டுவானொரு சிறு மகன்…மன்னார்
திருமலையெனச் செந்தமிழ்க் கூட்டம்
எட்டுப் பத்தாய்ப் பிரிந்தது மாற்றான்
இருந்த களத்தில் எரிந்தது நெஞ்சே!” என்று குறிப்பிடகிறார்.
‘கைகளுக்குள் சிக்காத காற்றிலும்’( பக் 72) ஜெயசீலன் சமூகத்தைப் பழிக்கிறார். அப்படி இருப்பதாக சமூகத்தை விமர்சிக்கிறார். நிலாந்தன், யேசுராசா பற்றி ‘பதிவுகள்’ முன்னுரையில் கூறியது போல ஜெயசீலனும் முரணியாக தனியனாகப் போய்விடுவாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இக்கவிதையில் ஜெயசீலன்
“தாமரை இலையின்மேல் தண்ணீராய்ச் சமூகமே..உன்
னோடொட்டக் கொள்ளாமல்
என்பாட்டில் நடக்கின்றேன்” என்று பிரகடனஞ் செய்கிறார். அவ்வாறானால் கடந்த முப்பது நாற்பது வருடங்களாக என்னதான் நடந்தது? கடந்தகால போராட்டச் சூழலின் இலக்கிய இயக்கத்தில் ஏன் சமூக மாற்றத்துக்கான அறிவியல் ரீதியான முறையியல் முன்னெடுக்கப் படவில்லை?
வெறுமனே முரண்களாகவும் தனியன்களாகவும் இருந்துவிட்டு சமூகத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்று விரக்தியுற்று செய்வதறியாது தூற்றி அழுவதுடன் நின்று விடுவதா? எங்களை நாங்கள் மறு வாசிப்புச் செய்ய வேண்டும் என்பதை ஜெயசீலனின் ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ அவசரமாக உணர்த்தி நிற்கின்றது. இத் தொகுதியில் இடம்பெறும் இக்கவிதை 40 வருடங்களுக்கு மேல் அறியாமையோடு அல்லது அறிந்தும் தீர்வு தெரியாமையோடு இருந்த எமது சமூகத்துள் புரையோடிப் போயிருந்த நோய் ஒன்றின் தெளிவான அறிகுறிதான். இக்கவிதையே இத்தொகுப்பின் வாநஅந pழநஅ ஆகவும் இருப்பது இதன் முக்கியத்துவத்தை இன்னமும் வலியுறுத்துகிறது.

ஒரு விஞ்ஞானப் பட்டதாரியாகவும் கவிதைப் படைப்பாளியாகவும் விறங்கும் கவிஞர் ஜெயசீலன் சமூகத்தோடு ஒட்டிவாழ்ந்து நோயறிந்து சிகிச்சை செய்யும் ஒரு சமூகப்படைப்பாளியாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

(17.04.2004 அன்று யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நடைபெற்ற த.ஜெயசீலனின் ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ கவிதைத் தொகுதி வெளியீட்டின்போது க.வேல்தஞ்சன் நிகழ்த்திய திறனாய்வு உரையின் சுருக்க வடிவம். இது 50ஆவது ‘தாயகம்’ இதழில் பிரசுரிக்கப்பட்டது.)

Leave a Reply