கனவுகளின் எல்லை’ ஒரு தரிசனம் – துணைவியூர் கேசவன்

எது கவிதை மரபு சார்ந்து நின்று கட்டுக்குலையாமல் கருத்துரைப்பது கவிதையா? அல்லது மரபுக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து சுதந்திரமாய் வெளிக்கிளம்பும் உணர்வு கவிதையா? ஒருவேளை இவை இரண்டுமே கவிதை இல்லையா? அது வேறையா? இத்தகைய சர்ச்சைகள் ஒன்றும் புதியவையல்லளூ இன்றுவரை இலக்கிய உலகில் தொடர்ந்து வருபவை. ‘கடவுளை எவ்வாறு வரையறுக்க முடியாதோ…அவ்வாறே கவிதையையும் வரையறுத்துவிட முடியாது’ என கவிஞர் முருகையன் கூறியதாக ஞாபகம். இருக்கட்டும்.

ஆனால் கவிதையென்று சொல்லப் படுபவையெல்லாம் கவிதைகளா என்ற கேள்வியை நான் என்னுள் புதைக்க விரும்பவில்லை. கவிதை உணர்வோடு இருக்க வேண்டும். அந்த உணர்வுக்குள் படிப்பவனை ஈர்க்க வேண்டும். கவிதை சுவைக்க வேண்டும். படிப்பவனை அந்த சுகாஅனுபவத்துள் இணைக்க வேண்டும். கவிதை எதையோ சொல்ல வேண்டும். படிப்பவனுக்கு அது புரிய வேண்டும். கவிதை அழகியல் சார வேண்டும். இத்தகைய தகுதிப் பாடுகள் உள்ளவையே எனக்குக் கவிதைகளாகத் தெரிகின்றன. இது சரியோ பிழையோ தெரியாது.

இவ்வகையில்,ஈழத்தின் இளங்கவிஞர் த.ஜெயசீலனின் ‘கனவுகளின் எல்லை’ எனும் தொகுதியில் 71 கவிதைகளைத் தரிசிக்க முடிகிறது. சுவை புதிதாய், சொல் புதிதாய், பொருள் புதிதாய், சோதிமிக்க நவ கவிதைகளாக அவை இருக்கின்றன. இவை புத்தம் புது உணர்வுகளை எமக்குள் பிரசவிக்கின்றன. எம் அனுபவப் புலத்துள் உள்ளவையும், இல்லாதவையுமாக பல செய்திகளைப் பேசுகின்றன. ஆனால் அனைத்தையும் புதிதாய்ச் சொல்கின்றன. ஒரு விஷயம் கவிஞரின் பலம் மரபு சார்ந்து நிற்றலே என்பதைளூ மரபு சார்ந்து நின்றும் இவற்றையெல்லாம் சொல்லலாம் எனச் சாதிப்பதே என்பதை இத்தொகுதி தெளிவு படுத்துகிறது.

கவிஞரது கவிதைகளில் ஆன்மீக இழையோடுவது ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் உள்ளது. ‘கவிமூலம் என்ற, தொகுதியின் முதற் கவிதையின் தரிசனத்தில் இது தெளிவாகிறது
‘நிலையான நிசமாக நினை மட்டும் தானடா
நிதம்நம்பிச் சுவாசிக்கிறேன்.
நின் பாதம் சரணென்று நீ நல்கு அரணென்றுன்
நிழலுக்குள் இடந்தேடுறேன்.’
எனவரும் அக்கவிதையின் அடிகள் ஆன்மீக முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. அது மட்டுமல்ல
‘உடைக்கின்ற நேரத்தில் உதிராமல் உனைஎண்ண
உதவிசெய் நல்லை முருகா’
எனும் கவிதையின் ஈற்றடிகள் ‘உனையென்றும் மறவாமை வேண்டும்’ என்ற காரைக்கால் அம்மையாரையும் ‘அவனருளாலே அவன்தாழ் வணங்கி’ என்ற மாணிக்க வாசகரையும் நினைவுபடுத்துகிறது. இதைப் போலவே ‘உங்களின் வாரிசு’,’வேட்டை’ போன்ற கவிதைகளில் கவிஞரின் தெய்வ நம்பிக்கையும் ஈடுபாடும் பளிச்சிடுகின்றன.
இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி எனச் சொல்வர். இன்று ஈழக் கவிதைகள் உச்சம் பெறுவதற்கான காரணமாய் ஈழத்துச் சமகால நிலையும் சுட்டப் படுவதுண்டு. உண்மையில் சமகாலத்தை, சமகாலத்து உணர்வுகளைப் பேசாத இலக்கியம் உயிர் பெற முடியுமா? என்பது தெரியவில்லை. ஆனால் த.ஜெயசீலனின் சமகாலப் பிரச்சனைகளைப் பேசும் கவிதைகள் உயிர் பெற்று உணர்வுபெற்று எம்மைப் பிரமிக்க வைக்கின்றன என்பதை அழுத்தமாக சொல்ல முடியும். அவர் அத்தகைய கவிதைகளைப் படைத்திருக்கும் முறைமை, கையாண்டுள்ள சொற்கள், உத்திகள் அக் கவிதைகளுக்குப் பலஞ் சேர்க்கின்றன.
‘நல்லூர்’ என்ற ஒரு கவிதை படிப்பவர்க்கு அது நல்லூரின் பெருமை பேசுவதாகத் தெரியும். உண்மையுந்தான். ஆனால் அதன் ஈற்றடிகள் கவிதைப் போக்கையே புரட்டி விடுகின்றன.

‘நல்லூர் ஒருநாளென் கேள்விகட்குப் பதிலளிக்கும்
அன்று வரை எனையருகில் இருக்கவிட்டால்
அதுபோதும்.’
இதில் தேங்கிநிற்கும் ஏக்கம், எதிர்பார்ப்பு, சோகம், சொல்லவொணா உணர்வு எல்லாம் சமகாலத் தமிழர்களின் அவலம்.
‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்’ என்ற கவிதையில் எம்நகரின் இன்றைய நிலை பற்றி கவிஞரின் ஏக்கம் வெளிப்படுகிறது. நகரின் அன்றைய பெருமைகளை விபரிக்கும் அக்கவிதை அன்று வந்த அதே நிலா இன்றைய நிலையைப் பார்த்து எதைநினைக்கும் என்ற வினாவோடு முடிகிறது. ஆனால் இக்கவிதையால் எம் உணர்வில் வரையப்பட்ட கவிதை தொடர்கிறது. இது கவிஞரின் வெற்றி.

போரிற்குள் வாழ்ந்து, போர்க்கரங்களின் கொடுமைகளைப் பார்த்து, தவித்து வாழ்வோரில் கவிஞரும் ஒருவர், ஆதலால் அவருக்குப் போரின் கொடுமை நன்கு தெரியும். அதனால்தான் விசர் நாயைப் போருக்கு ஒப்பிட முடிகிறது. ‘விசர் நாயும் போரும்’ போரைத் தெரியாதோர்க்குபோரைத் தெரிந்து கொள்ள உதவக்கூடும். ‘மருட்டும் மழை’,’போரிட்ட சட்டம்’ போன்ற பல சமகால யுத்த நிலையையும் அவலத்தையும் பேசும் உணர்வுள்ள கவிதைகள் இத்தொகுதியில் உள்ளன. ஆனால் ‘பிரசார நெடி’ இக்கவிதைகளில் இல்லாமல் இருப்பது கவிதைகளின் உயிரோட்டத்திற்கு வலுச்சேர்க்கிறது.

எதிர்காலம் பற்றிய வலுவான, பிரகாசமான நம்பிக்கை கவிஞருக்கு உண்டு. இந்தத் துன்பங்கள், துயரங்கள், அவலங்கள், எல்லாம் ஒருநாள் தீரும் என்று அவர் நிறையவே நம்புகிறார்.

‘இதய பாரங்கள் இடியும் நாளொன்றில்
இதங்கள் இராஜாங்கம் புரியுமே!
இதழில் வேதங்கள் எழுதும் பூங்காற்றின்
இசையெம் நெஞ்சத்தை உரசுமே!’
எனும் ‘புலரும்’ எனும் கவிதையின் அடிகள் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடு. ‘நேரம்’ எனும் கவிதையில்
‘பாடுகிறீர்ளூ பாடுங்கள்
இதேபாட்டை… நாமுமோர்நாள்
பாடிடுவோம்ளூ
அந்நாளைப் பார்த்துத்தான் காத்துள்ளோம்!’
எனக்கூறுவது இந்த நம்பிக்கையில் தான். இத்தகைய நம்பிக்கையே தமிழரின் இன்றைய இருப்பு என்பதும் மறுப்பதற்கில்லை.

கவிஞர் அணிகளைக் கையாண்டுள்ள இடங்களும் விதமும் சுவைக்குச் சுவை சேர்ப்பவை. அந்த அணிகளிலே நிச்சயமாய் புதுமை பளிச்சிடுகிறது.

‘மெல்ல இருட்திருடர் மேற்கோடி ஒளிந்துவிட
‘கள்ளன் -பொலிஸ்’ ஆட்டம்
கதிரவனின் வரவோடு
முடிகிறது!’
‘வானம் சலவைக்குப் போய்வந்து மலர்கிறது.’
‘வெண்ணிலவு மண்ணுக்கு வெள்ளை அடிக்கிறது’
போன்ற தற்குறிப்பேற்றங்களும் ‘புளிக்காப்புப் போட்டஐம் பொற் சிலையாய் தளிர்துளிர்கள்’ எனும் உவமையும் புதுமையும் இனிமையும் மிக்கது. இயற்கையிலே கவிஞருக்கு இருக்கும் ஈடுபாடு இத்தொகுதிக் கவிதைகளிலே வெளிப்படையாகத் தெரிகிறது.

எளிமையான, பயன்பாட்டிலுள்ள சொற்களைக் கவிஞர் கையாண்டிருப்பது கவிதைகளின் பலத்துக்கு மற்றுமொரு காரணம். உள்ளத்தைப் பிணிக்கவல்ல ஓசைச் சிறப்பு வாய்த்தது பிறிதொரு காரணம்.

இப்படியாக இத்தொகுதியின் கவிதைகளில் பெரும்பாலானவை படிக்கையில் வியப்பையும் ஒருவித மகிழ்வையும் தருவதாக அமைந்துள்ளன. எமக்குக் கிடைத்திருக்கும் நம்பிக்கையுள்ள கவிஞராக த.ஜெயசீலனை இனங்காட்டுவனவாக உள்ளன.
கனவுகளின் எல்லை விரிவடைய வேண்டும் என்பதே இப்போதைக்கு எங்களது எதிர்பார்ப்பாகும்.

(இவ்விமர்சனக் குறிப்பு ஆசிரியரும் பேச்சாளருமான துணைவியூர் கேசவன் அவர்களால் 2002 ம் ஆண்டில் எழுதப்பட்டது)

Leave a Reply