‘கைகளுக்குள் சிக்காத காற்று’ கவிதைத் தொகுதி-ஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்

2004 ஆம் ஆண்டு கவிஞர் த.ஜெயசீலன் அவர்களால் வெளியீடு செய்யப் பட்ட ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ கவிதைத் தொகுதி ஏறத்தாள ஏழு ஆண்டுகளின் பின் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப் படுகிறது. ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ என்ற இக்கவிதைத் தொகுதி கவிஞரின் கன்னி வெளியீடல்ல. ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுதியைப் பிரசுரித்த ‘பிரசவ அனுபவம்’ இவருக்குண்டு. கர்ப்பகால மசக்கைகள், நோக்காட்டுக் குத்து, பிரசவ வேதனை, தாலாட்டு, கற்பனைகள் எதுவுமே கவிஞருக்குப் புதிதல்ல என்ற தளத்தில் நின்றே இவரையும், இவரது கவிதைகளையும் நோக்க வேண்டிய பொறுப்பு இயல்பாகவே ஆய்வாளருக்கு ஏற்படுகிறது.

ஏழு ஆண்டுகளுக்கு பின்பு இக்கவிதைத் தொகுதிக்கு ஒரு ஆய்வு அவசியமா என்றொரு கேள்வி இயல்பாக எழத்தான் செய்யும். ஏனெனில், நூல் பிரசுரமாகும் காலத்தை அண்டி வெளியீட்டு விழா, அறிமுக விழா, என்பன நடைபெறுவதும், அதன் பின் அந்நூல் பேசப்படாமல் விடப்படுவதுந்தான் இதுவரையில் இலக்கியப் பரப்பில் நடந்து வருகின்ற நிகழ்வுகளாகும்.
ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பாளி தனது படைப்புகளை தொடர் மதிப்பீட்டுக்கு உட்படுத்துவது அவசியமானதெனக் கருதுகிறேன். ஏனெனில் எனது இலக்கியச் செல்நெறி பற்றி எனக்குள் நானாகி சுயவிமர்சனம் செய்வதன் மூலம் இலக்கியத் தளத்தை வளப் படுத்திக் கொள்ள முடியும். காலம் தரிப்பதில்லை. கருத்துக்கள் நிலைப்பதுமில்லை.
1977 இல் முதன்முறையாக என்னால் எழுதப்பட்டு வீரகேசரியில் பிரசுரமாகி வெளிவந்த நாவலை நான் இப்போதும் வாசிக்கிறேன். அப்படி வாசிக்கும் போது எனது பலத்தையும், பலவீனத்தையும் என்னால் உணர முடிகிறது.

ஒரு படைப்பாளன் இறந்த கால வரலாற்றையும், சமகால யதார்த்த விஞ்ஞான இயங்கியலையும், எதிர்காலத் தீர்க்க தரிசனங்களையும் பெற்றிருப்பதோடு சிறந்த மொழி வாண்மையும் ‘சமூக மேய்ச்சல்’ உள்ளவனாகவும் இருப்பது அவசியமாகும்.

இலக்கிய வடிவங்களுள் கவிதை இலக்கியம் மிகவும் நுணுக்கமானது மட்டுமல்ல மிகவும் காரமானதும் கூட. எழுபதுகளுக்கு முற்பட்ட காலத்தில் கவிஞர்களும், எழுத்தாளர்களும் மிக அரிதாகவே காணப்பட்டனர். அதே வேளை 85ம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்பு களத்தில் நின்ற போராளிகளுள் பலரும், களத்திற்கு வெளியே நின்று போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட பலரும் கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் மாறினார்கள். உயிரை உறைய வைக்கும் சம்பவங்கள் நிறைந்திருந்தமையும், படைப்பாளரின் உற்பத்திக்கு முக்கிய காரணியாக அமைந்திருந்தமையும், இங்கு கவனத்திற் கொள்வது அவசியமாகும்.

அண்மையில் நடந்த ஒரு கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஒரு பேராசிரியரின் கருத்தை இங்கு பகிர்ந்து கொள்வது பயன்தருமென எண்ணுகிறேன். அவரின் உரை பின்வருமாறு அமைந்திருந்தது.
‘சமகாலப் படைப்பாளிகளின் படைப்புக்களில் பெரும்பாலானவைகள் தரிசனங்களோடு மட்டும் அமைந்து விடுகின்றன. விஞ்ஞான அடிப்படையிலான பொருளாதார நோக்கங்களையோ தத்துவார்த்த வெளிப்பாடுகளையோ காண முடிவதில்லை. புரிதலும் புரிந்ததைப் புரியவைப்பதிலும் சராசரி மனிதர்களை விட எழுத்தாளன் முக்கியமானவனாகக் கருதப்பட வேண்டும். உணர்வு கொப்பளிக்கும் பிரச்சனைகளுக்கான வடிகால்களையும் தொட்டுக் காட்டவேண்டிய பெரும் பொறுப்பு எழுத்தாளர்களுக்கு உண்டு’ எனக் குறிப்பிட்டார்.

சபையில் எழுத்தாளர்களும் கவிஞர்களும் விமர்சகர்களும் நிறையப் பேர் இருந்தனர். ஆனால் பேராசிரியரின் கருத்துக்கு எதிர்வினையாக எவருமே கருத்துத் தெரிவிக்கவில்லை என்பதையும் இங்க குறிப்பிடுவது அவசியமென நினைக்கிறேன்.
பேராசிரியரின் மேற்படி கருத்துவலை வீச்சுக்குள் கவிஞர் ஜெயசீலனின் ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ கவிதை நூல் சிக்கவில்லை என்பதை ஆய்வாளன் என்ற வகையில் மன நிறைவோடு கூறிக்கொள்கிறேன்.

110 பக்கங்களைக் கொண்ட இக்கவிதை நூலில் 84 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. அட்டைப் படத்தை ஓவியனாகவே பிறந்த, கௌரவத்துக்குரிய திரு.ரமணி அவர்கள் வரைந்துள்ளார். நூலின் நுழைவாயிலிலும் பின்அட்டையிலும் கவிஞரின் குறிப்புக்களைத் தவிர வேறெந்தப் பிரபலங்களின் குறிப்புகளும் இடம்பெற வில்லை என்பது கவனத்திற்குரியது.

நுழைவாயிலில் உள்ள கவிஞரின் குறிப்பில் தன்னைப் பற்றியும், கவிதை பற்றியும், தனக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கூறப்பட்ட கருத்துக்கள் இயல்பானவையாக இருப்பினும் கூறப்பட்ட நுணுக்கமும் செட்டான மொழிப் பிரயோகமும் கவிஞரின் கூற்றுக்கு தனித்துவமான ஒரு கம்பீரத்தைக் கொடுக்கிறது. இவை ‘சொற்சிலம்பமாக’ இல்லாமல் பயிற்சியும் அனுபவமும் மிக்க பிடிமானம் தவறாத சொல் வீச்சுக்கள் எனலாம்.

கடைசிப் பக்கத்தில் அமைந்துள்ள கவிஞரின் குறிப்புக்கள் கவிஞரின் கருத்திறுக்கத்தையும் செட்டான கவித்துவ வாண்மையையும் சிக்கலான மொழிப் பிரயோகத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றன.
‘நமக்குத் தொழில் கவிதை என்றானே
தீக்கவிஞன்
எனக்குத் தொழிலல்ல…
எனக்கு அது உயிராம்!’
எனக் கவிஞரின் குறிப்பு ஆரம்பிக்கிறது. இக்கூற்றில் இரண்டு விடயங்கள் உள்ளடங்கியுள்ளதை அவதானிக்க வேண்டும். பாரதியைத் ‘தீக்கவிஞன்’ என்று கூறி பாரதியை வானத்தை நோக்கி உயர்த்துகிறார். எனது இலக்கிய அனுபவத்தில் பாரதியைத் ‘தீக்கவிஞன்’ என வர்ணித்த முதலாவது மனிதனாக கவிஞரைக் காண்கிறேன். பாரதியின் கவிதை வீச்சை வர்ணிப்பதற்கு ‘தீக்கவிஞன்’ என்ற சொல்லை விட வேறு சொற்கள் தமிழில் இருக்காதென்று கூடச் சொல்லலாம். இரண்டாவது,
‘நமக்குத் தொழில் கவிதை என்றானே
தீக்கவிஞன்
எனக்குத் தொழிலல்ல…
எனக்கு அது உயிராம்!
என்ற கவிஞர் ஜெயசீலனின் கூற்றில், பாரதியை வானத்தை நோக்கி உயர்த்திய அதே வேளை ‘எனக்கு உயிராம்’ என்ற கூற்றின் மூலம் கவிஞர் ஜெயசீலன் பாரதியின் தலையில் ஏறிக் குந்திவிட்டதை ஊகிக்க முடிகிறது.
‘பாரதிக்குக் கவிதை தொழில்
தொழிலை மாற்றலாம் அல்லது நிறுத்தலாம்.
ஜெயசீலனுக்கு கவிதை உயிர்ளூ
உயிரை மாற்றவும் முடியாது…நிறுத்தவும் முடியாது’
(நிறுத்தினால் அது மரணந்தான்)
கவிஞர் ஜெயசீலன் தன்னை உயர்த்திக் கொண்டதில் எந்தத் தவறுமில்லை. பாரதியின் கவிதைகள் தான் கவிதை இலக்கியத்தின் எல்லைப்புள்ளியாக நியமப் படுத்தி இதுவரையில் யாரும் கூறவும் இல்லை.

‘உலகத்திலேயே சிறந்த நாவலாசிரியர் பெர்னாட்ஷா’ என்று அவரே ஒருமுறை கூறியுள்ளார். இக்கூற்றில் ஆணவமோ அகங்காரமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தனது படைப்பை நம்புகின்ற, ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற ஒரு படைப்பாளனின்-பெர்னாடஷாவின் கூற்றாகவே இதனை நான் கணிக்கிறேன். இதே குறிப்புத் தொடரின் இறுதியில் கவிஞர் குறிப்பிட்டிருப்பதையும் இங்கு நோக்குவது அவசியமாகும்.

‘இப்பிறவியினைக்
கழித்திட என் கவிதையினைக்
கருவியாகக் கைக்கொள்வேன்.’ என்று குறிப்பிடுகிறார். இக்கூற்றுள் உயிர்ப்பூச்சி துடிப்பதை உணர முடிகின்றது. எனவே ஜெயசீலனிடம் செருக்கு இருப்பதைத் தவிர்க்க முடியாது. அடுத்துச் சில கவிதைகளைப் பார்க்கலாம்.
‘வண்டிலிலே கனபாரம்
நுரைகக்க நாம்பன்கள்…
கொண்டிழுத்துச் சென்றுளனளூ
கொல்களத்தில் வெட்டுண்ட
மாட்டை
இறைச்சிக் கடைக்கு வெகுவிரைவாய்.’

இவ்வளது தான் கவிதை. நாம் வாழ்கின்ற இந்தச் சமுதாயத்தின் ‘குறுக்குவெட்டுத்’ தோற்றத்தை விளக்குவதற்கு கவிஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட உத்தி அற்புதமானது. கவிஞரின் பார்வைக் கூர்கள் சமூகத் தளத்தைக் குத்தி ஆணிவேரின் வேர்முடியைக் குத்தி நிற்கிறன. கருத்துக் கவனம், உத்தி, கற்பனை, அனுபவம், மொழியாட்சி, சகலதுமே சிறப்பாக உள்ளன.

மனிதனின் உணவுக்காக உச்சந்தலையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டு, தோலும் குடலும் அகற்றப்பட்ட மாடு என்ற மிருகத்தின் தசைக் குவியலை வண்டிலில் ஏற்றி அதே மாடுகளைக் கொண்டு இழுப்பிக்கிறான் மனிதன். ‘மாட்டிறைச்சியைச் சமைத்துச் சாப்பிட்டு இந்த மக்கள் மகிழ வேண்டும்’என்ற எண்ணம் இந்த மனிதனிடம் இல்லை… ‘பணம் பண்ணுகிற’ சுயநலந்தான் அந்த மனிதனிடம் உண்டு.

தக்காளிப் பழத்தின் வாளிப்பைத்தான் மனிதன் பார்க்கிறான். ஆனால் வாளிப்பான அந்தத் தக்காளிப் பழத்தினுள்ளே துடிக்கின்ற புழுக்களைக் காண்பவன்தான் கவிஞன். இந்தப் புழுக்களைத்தான் கவிஞர் தனது கவிதையில் சுட்டிக் காட்டுகிறார்.

‘தார்’ என்றொரு கவிதையில்
‘உருகிய தாரின் குரூரம் எனைவறுக்கச்
செருப்பும் அற..
பொரிந்த தாரில் பதம்பொசுங்கி
துடித்துப் பதைத்துத் தீமிதித்துப் புண்ணானேன்.
‘ஐம்பத்து எட்டில்’
கொதித்த தார்ப் பீப்பாவில்
சங்கமித்த தமிழ்மகனின்
வலியினிலே நானுமின்று
கொஞ்சம் அனுபவித்த கொடுப்பினையில்
நடக்கின்றேன்.’
‘உறவு’ என்ற கவிதையில் இச்சமுதாயத்தின் வெட்டுமுகத் தோற்றத்தை இரத்தமும் சதையுமாகக் காட்டிய கவிஞர் ‘தார்’ என்ற இக்கவிதையில் தமிழரின் வரலாற்றில் பதிவான 58 கலவரத்தில் நடந்த கொடூரமான சம்பவத்தின் வடுவின் தோலை உரித்துக் காட்டுகிறார். 58 கலவரம் தமிழர்களுக்கு ஒரு புதிய செய்தியல்ல. ஆனால் அந்தச் சம்பவத்தை உணர்த்துவதற்கு கவிஞர் கையாண்ட கற்பனையும் அனுபவமும் அருமையாக உள்ளது.

‘செருப்பும் அற..பொரிந்த தாரில் பதம்பொசுங்கி’ எனக் கவிஞர் கூறுவதில்
உள்ள சகலராலும் புரிந்து கொள்ளக்கூடிய பொதுமையான – இலகுவான உதாரணந்தான் இங்கு கவனத்திற்குள்ளாகிறது.
‘சமூகத்திலிருந்து கற்று-கற்றதை இலக்கிய கவிதை நெறிக்குள் புகுத்தி திரும்பவும் அதே சமூகத்திற்குக் கொடுப்பது தான் இலக்கியம்-கவிதை. இக்கவிதையில் சம்பவ விபரிப்பு, சமூகச் செய்தி, உணர்வு வெளிப்பாடு, கற்பனை, மொழிப் பிரயோகம் யாவுமே மிகச் சிறப்பாக உள்ளன. அடுத்து ‘மறத்தல்’ என்று ஒரு கவிதை,
‘காயங்கள் காயங்களாகவே இல்லாமல்
ஆறுவதில் வியப்பில்லை..
ஆனால் வடுக்களெல்லாம்
சாகா வரம்பெற்றுத் தழைக்கும்
இது பொய்யில்லை.’
‘வடுக்கள்’ என்ற குறியீட்டின் மூலம் நீண்டதொரு வரலாற்றையே சுட்டிக்காட்டியுள்ளார்.

‘உறவு’ என்ற கவிதையில் சமுதாயம் என்ற பெரும்பரப்பின் வெட்டுமுகத் தோற்றத்தையும்’தார்’ என்ற கவிதையில் தமிழர்களின் வரலாற்றுப் பதிவின் இரத்த நெடில் மணக்கும் ஒருபுள்ளியையும் தொட்டுக் காட்டும் கவிஞர் ‘மறத்தல்’ என்ற கவிதையின் மூலம் ‘மௌன மொழியில்’ எங்களுக்குப் பலவற்றைச் சொல்கிறார்.

‘தீயினால் சுட்டபுண் ஆறும்ளூ ஆறாது
நாவினால் சுட்ட வடு.’
‘மறத்தல்’ அற்புதமான கவிதை. ‘கடவுளுக்கு உரைத்தது’ என்பது கவிதை நூலின் இறுதிக் கவிதை.
‘…ஞானாக்கினி எம்மைச் சுட்டுப் புடம்போடட்டும்
ஈனம் அறுத்து
இதந்தந்து வாழ்த்தட்டும்
ஞானத்தின் எல்லையை உன்
நாதரூபம் காட்டட்டும்’ எனக்கவிதை முடிக்கப்பட்டுள்ளது. தீக்கவிஞன் பாரதி தமிழ்மக்களின் ஈனநிலை கண்டு பராசக்திக்கு முன்னால் நின்று இரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறான். பாரதி பராசக்தியின்(கடவுள்) பக்தன்.

தந்தை செல்வநாயகம் அவர்கள் அரசியலில் இருந்த காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை பற்றிக் குறிப்பிடும் போது ‘தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்’ என கூறியுள்ளார். அந்த வரிசையில் ஜெயசீலன் 2004ம் ஆண்டு தனது கவிதை நூலில்
‘அற்புதமே உந்தன் அருள்விழிகள்
எங்களினை
நோக்கட்டும் உந்தன் நுண்ணதிர்வு
எம்மிடரைச்
சாய்க்கட்டும் சூழும் தடைதகர்த்துன் அபயக்கை
காக்கட்டும்’
எனத் தமிழ் மக்களின் துயரங்களைக் களையும்படி ஆண்டவனிடம் வேண்டுகிறார்.

கவிதையிலுள்ள ஒவ்வொரு அடியும் அர்ஜுனனின் பாணங்களாய் இதயத்தைக் குத்துகின்றன. பாரதி, செல்வநாயகம், ஜெயசீலன் மூவருமே ஒரு நேர்கோட்டில் கருத்து ரீதியாகச் சந்திக்கின்றனர். தமிழ் மக்களுக்கு 2009இல் ஏற்பட்ட கையறு நிலையை 2004 இல் ஜெயசீலன் உணர்ந்துள்ளார்.

அரசியல் விடுதலை கோரி ஆண்டவனிடம் முறையிடுவதென்பது அரசியல் விஞ்ஞான இயங்கியலுக்கு முரணானது என்பது நமக்குப் புரிந்தளவுக்கு கவிஞருக்குப் புரிந்திருக்காது என்று வாதிட முடியவில்லை. வாதிடவும் முடியாது.

தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றி ‘அடக்கிவாசிக்க’ வேண்டிய தேவை- உயிர் உடைமை அச்சம் கவிஞருக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தமிழருக்குமே இன்று உண்டு. அனைத்து எழுத்தாளர்களும் கவிஞர்களும் அதைத்தான் செய்கிறார்கள். செய்ய வேண்டியது சமூக நிர்ப்பந்தம்.

ஒரு கவிஞனையோ எழுத்தாளனையோ அவனது சமூகச் சூழ்நிலையிலிருந்து வேறுபடுத்தி சூனியமானதொரு இடத்தில் வைத்து விமர்சிப்பது மிகவும் தவறானது. அந்த வகையில் கவிஞர் ஜெயசீலனும் ‘மக்கள் சக்தியை’ மறைத்து வைத்துள்ளாரே தவிர மறந்தவருமல்ல, மறுத்தவருமல்ல எனலாம்.

‘கைகளுக்குள் சிக்காத காற்று’ கவிதைத் தொகுதி அற்புதமானது. தொடர்ந்தும் கவிஞர் எழுத வேண்டும் என வாசகர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

(இவ் விமர்சனக் குறிப்பு ‘ஜீவநதி’ யின் இதழ்- 30 இன் நூல் விமர்சனம் பகுதியில் பிரசுரிக்கப்பட்டது.)

Leave a Reply