கனவுகளின் எல்லை

படைப்பு : த.ஜெயசீலன்.
தொடர்பு: 621, பருத்தித்துறை வீதி
நல்லூர்
யாழ்ப்பாணம்
இலங்கை.
முதற்பதிப்பு: கார்த்திகை 2001
பதிப்புரிமை: படைப்பாளிக்கே
அச்சமைப்பு : திருவள்ளுவர் அச்சகம்
நல்லூர்.
அட்டை : குரு
அட்டைப்படம் : நல்லூரை ஆண்ட சங்கிலியனின் மந்திரிமார்
இல்லத்தின் இன்றைய தோற்றம்.
விலை: 110ரூபா.

621,பருத்தித்துறை வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்
கார்த்திகை,2001

அன்புக்கினியவர்களே!
வணக்கம்
கனவுகளுக்கு எல்லை உண்டா?
எனது சில ‘கனவுகளின் எல்லை’களிற் பிறந்த
கவிதைகள் இவை.
என் கனவுகள் எவை என்பதையும்,
அவற்றின் எல்லைகள் எவை என்பதையும்
இக் கவிதைகள் கூறும்.
‘ஏன் இப்படி கனவு வந்தது’ என்றோ
எவ்வாறு இப்படியெல்லாம் கனவுகள் வரலாம்? என்றோ
எவரும் தமக்குத்தாம் கேட்பதில்லை.
எவரிடமும் இவற்றுக்கான பதில்களும் இல்லை.
அதுபோல்தான்…
என் கவிதைகள் தொடர்பான
ஏன் இப்படி என்ற கேள்விகளுக்கு
என்னிடமும் பதில்களில்லை.
நீங்கள் உணர்ந்து எடைபோடுங்கள்
முடிந்தால் விமர்சனமொன்றெழுதி எனக்கு விலாசமிடுங்கள்.
அது போதும்!

காலத்தின் விமர்சனந்தான்
என்கனவுகள் நனவுகளாகுமா
என்பதைக்கூறும்!
வேறென்ன…..
எனக்கு உயிர்தந்தவர்களுக்கும்,
என் ஒவ்வோர் அணுவினது வளர்ச்சிகளுக்கும்
காரணமாக இருந்த அனைவருக்கும்
இச்சந்தர்ப்பத்தில்
என் நன்றிகளை தெரிவித்துப்

பணிகின்றேன்.
மீண்டும் சந்திப்போம்.
நன்றி கலந்த நட்புடன்
த.ஜெயசீலன்.

கவி மூலம்

உலகினை நம்பிடேன் ஊரினை நம்பிடேன்
உறவையும் நம்பமாட்டன்
உயிர் தந்த ‘தேவர்கள்’ உடன் வந்த சோதரர்
உரிமையை நம்பமாட்டேன்.
கலக்கின்ற காதலைச் சீதனக் காணியைக்
‘கலை’யாடிப் பெற்ற மகவை
கனவினை, கல்வியை கவிதையையும் அல்ல
எனையும் நான் நம்பமாட்டேன்.
நிலையான நிசமாக நினைமட்டுந் தானடா
நிதம் நம்பிச் சுவாசிக்கிறேன்.
நின்பாதம் சரணென்று நீ நல்கு அரணென்றுன்
நிழலுக்குள் இடந்தேடுறேன்.

துயரங்கள் உனைமேலும் உறுதியாய் நம்பிடத்
துணை செய்யும் வழிகாட்டிகள்
சோகங்கள் நீ எங்கும் சுடர்கிறாய் என்பதைப்
பறைச்சாற்றுந் தொலைக் காட்சிகள்
அயலென்ன புயலென்ன அகிலமும், அறிவும் உன்
அடையாள அணிவகுப்புகள்
அனைத்தும் உன் செயலென்று அறிந்துமேன் சிலநேரம்
அலைபாயும் என ‘தெளிய உள்’?
உயிர்க்கூட்டுள் உறவாடி உணர்வுக்குள் கொடியேற்றி
உறைகின்ற எந்தன் தலைவா!
‘உடைக்கின்ற’ நேரத்தில் உதிராமல் உனை எண்ண
உதவி செய் நல்லை முருகா.

அமுதூட்டு தமிழே

பாடுங் கவியையெல்லாம் பாகாய் இனிக்கவைத்து
ஆடுந்தமிழே…..அமுதுயிரே – கூடு விட்டு
கூடுபாய்ந் துன்னுள் குடியிருக்கும் ஓர் வரந்தா!
வாடாத மல்லிகையே வா!
குன்றா அழகாய்க் கொலுவிருக்கும் தேவீ; நின்
கண்ணோக்கம் பெற்றால்… கலியிடையும் – பொன்றாக்
கவியுரைப்பேன்; வந்து கடைக்கண்நல் காய்: ஊர்ச்
செவிஇரசிக்க வைப்பாய் சிறிது!
புற்றீசல் போலப் புறப்பட்டு ‘ சொற்சிலம்பம்’
விற்போர் நடத்தும் வெருளிகளால் – பொற்பழிந்து
போனாலும்… ஓராள் புறப்பட்டுப் பாரதிபோல்
சீராட்டின் பூப்பாய் சிரித்து.
நாலு வரிசும்மா நாட்டிவிட்டால் “பாவலன் யான்
ஆகா” எனக்குலைக்கும் வாய்களினால் – நீ இன்று
நீர்த்துக் கிடக்கின்றாய்; நேர்ந்தபிழை தீய்க்க வல்ல
பாத்துவக்கு வேண்டும்கண் பார்.
கச்சை அழகும் கழுத்தழகும்,காமனாடும்
எச்சில் அழகும் எழிலென்று – பச்சை
உடல்காட்டி… உன்னைச் சினிமாவா காக்கும்?
அடிப்பிடித்துப் போச்சுன் அழகு!
பூக்காடாய்ப் பார்த்தாய் அரசியலை! இன்றதுவோ
சாக்கடையாய் ஆச்சு; சனிப்பிடித்த – வாக்குரிமை
வந்ததனால் உன்னை மலிவுப் பதிப்பாக்கி
வென்றுதந்தார் ஊழல் விசம்!
எப்படி வாழ்ந்தவள் நீ எப்படி ஆண்டவள் நீ
இப்படித் தாழ்ந்திழிந்தாய்! ஏற்றமிகு – சொப்பனமுன்
வீட்டில் நனவாக வேண்டும்; வரந்தா நான்
மீட்டெடுப்பேன் உன்மாண்பை வென்று.

பள்ளி எழுச்சி

மெல்ல இருட்திருடர் மேற்கோடி ஒளிந்துவிட
‘கள்ளன் – பொலிஸ்’ ஆட்டம்
கதிரவனின் வரவோடு
முடிகிறது;
எங்கும் பூபாள முகவுரைகள்.
விடிபொழுதை வரவேற்கும் சில்வண்டின் விசில்வேதம்.
“கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்”
நேற்றுப் புவிகழுவ
நீர்வார்த்த இராமழையால்
காற்றில் குளுமை; காலடிக்குள் விறைப்பு;இவற்றால்
வானம் சலவைக்குப்

போய்வந்து மலர்கிறது!
‘புளிக்காப்பு’ போட்ட ஐம்பொற் சிலையாய்
தளிர் துளிர்கள்
குளித்து மினுங்குறது!
கூவும் குயிற்பாட்டால்
மாஞ்சோலையாம் தேசம் மகிழ்ந்தெழும்பப்
பாரதிகள்
“வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
ஏதேனும் உண்டோ”
என்றெழுந்து வருகின்றார்!
சாதாரண சனங்கள் தவிப்பணிந்து வழமைபோல்
‘ஆதாரந்’ தேடி அலையத் தொடங்குகிறார்!
கங்குல் கலைந்து
கதிர் வந்து விடிகிறதே…..
எங்கே இம்மண்ணின் இளைய திலகங்கள்?
எங்கே இக்கால
இலக்ஷ்மர், குகர்,பரதர்?
காண்டீபர் கர்ணருடன் கடையேழு வள்ளலொடு
சிபி, பேகன், மனு எங்கே?
பாரி, ஓரி போனதெங்கே?
தமிழுக்குத் தலைதந்த
குமணனின்னும் எழும்பலியா?
எதிர்காலக் கம்பன், ஜெயங்கொண்டான் நித்திரையா?
அடுப்படிக்குள் கல்லான அகலிகைக்கு
உசிர்தரணும்
அட… இராமர் இன்னும் அசையலையா?
விடிந்துளது; இளையவரே
பள்ளி எழுந்து அருள்வீரே!

உயிர்ப்பா

சூரியக் கிரணங்கள் தொட்டெழுப்பித் தூண்டலென
சோகந் துடைத்துச்
சுகந்தரணும் சொல்,வரிகள்!
ஆற்றுப் படுத்தலிற்தான் அழகு அழகாகப்
போற்றப் படுவதனால்
அணையிடணும் ஓசைநயம்.
எளிமை மிகுந்ததுதான் இயற்கை… எனினும் அது
ஒளித்துவைத்த வியப்புகள்போல்
அசத்தோணும் ‘கரு’ நுட்பம்.
தோண்டத் தோண்ட ஊற்றைச் சுரக்கும் நிலம் போல
மீண்டும் மீண்டுந் துய்க்க
விரியோணும் பொருள் ஆழம்.
கண்டு பிடிப்பொன்று கணஅதிர்வைப் பிரமிப்பை
தந்திடல்போல் உலுப்பிடணும்
உவமைதருஞ் சலனம்.
அதிகப் படியான அலங்காரம் ஆபரணம்
இயல்பு அழகுகளை இருட்டடிப்புச் செய்யும்…அதால்
கறிக்குப்புப் போல்… ‘அளவாய்’க் கற்பனைகள்
உருசிக்கேற்ப
செறிந்திடணும்;
சந்தம் சிறுசாரல்போற் தொடணும்.
மனக்குகையை வருடி
மலரிதழ்போல் மென்மையாக்கி
அமைதி நதியூறக்…கவித்துவம் அருட்டிடணும்.
இத்தனை இருந்திடினும்
ஏதோ…உயிர்ப்பிலாட்டி
செத்த பிணமாய்ச் சிலநாளில் மறைந்தேபோம்
பொய்க்கவிதை;
நித்தம் புத்துயிர்க்கும் மெய்க்கவிதை!
இயற்கையிலோ,
இறையிடமோ,
இயல்பாயோ, இரந்திரந்தோ
எவரிடத்தில் பறித்தெடுத்தோ
நான்பெறுவேன் கவியுயிரை?

உங்கள் வாரிசு

எழுதுகிற கோலுக்குள் இறங்கிவந்து அருளூற்றி
தெளிவெழுத்துத் தந்து திருத்துகிற மெய்யறிவே!

எதையெழுத என்றோர் வெறுமையுடன் காக்கையிலே
இதைஎழுதென் றென்னுள் எனையுலுப்பும் தெய்விகமே!

இதயம் கனக்கவைத்து…. இறக்கி வைக்கத் தவிப்புதந்து
பிடர்பிடித்துத் தள்ளி எனையியக்கும் பேர்வலுவே!

கவிதை கொதிக்கும் கணத்தில்…. மன அடுப்பில்
அவிசொரிந்து வார்த்தையனல் மூட்டும் அருவுருவே!

நான் நினைக்காக் கோணத்தில் எழுதுகோல் நகரவைத்து
மேன்மை விளைத்தெனைநான் வியக்கவைக்கும் ஓர்பொருளே!

போகும் வழி இதென்று புறப்பட்டால்… வேறு திசை
போகவைத்து “வழி அதென்று” புரியவைக்கும் நிஜவிதியே!

சாகா அமரநிலை தந்தென் கவிநிலைத்து
வாழ வரமருளும் இயற்கையெனுந் தாய்மடியே!

வாழ்த்துங்கள்! நானுங்கள் வாரிசு; என் வெற்றி தோல்வி
தான் உம்மை எடைபோடும்….. எனைச் சரியாய்

நடத்துங்கள்.

என்பாட்டு

எங்கள் வயல்வெளியில், எங்கள் நதிக்கரையில்,
எங்கள் கடற்பரப்பில்,
எங்கள் மலைமுகட்டில்,
எங்கள் இதயமான எழில் நிலத்தில்,
விதை திறந்து….
இங்குவரக் கொடுத்துவைத்த
என்சொந்தச் செடி கொடியில்,
இங்குள்ள புழுபூச்சி, எண்ணற்ற விலங்குகளில்,
எங்களது வாழ்வுக்கு இசையமைக்கும் கோவில்களில்,
எந்தனது பாடல்கள்
இழைந்து கலக்கோணும்!
எங்கள் விழுமியத்தை முதுகிற் சுமக்கோணும்!
எந்தனது பாடல்களில் எங்கள் அடையாளம்
கண்திறக்க வேணும்,
களைத்த சனம் ஓய்கையிலும்,
அன்பு – இன்பில் தோய்கையிலும்,
இளங்காதல் பாய்கையிலும்,
தள்ளாடிநாம் முதுமைத் தனிமையிலே வீழ்கையிலும்
வெள்ளை மனம் வெல்கையிலும்,
விருந்தென்பா தாறதோடு…..
இத்தரையைத் தொட்டு எரிக்கவரும் எமனுக்குக்
கத்தி தீட்டியும், பாய்ந்து கடன்தீர்த்தும்
இம்மண்ணின்
உயிரில் கலந்து உணர்விலுங் கலந்தென்றும்
பெயர் சொல்லும் “பிறவியாக”
என்பா நிலைக்கோணும்.

கவிமாலை

எந்தன் கவிதை எனும்நார் தனை எடுத்து
வந்தேன்…. வடிவான
மாலை ஒன்று கட்டி….. இந்த
மானுடக்கழுத்தில் மணந்ததும்பச் சூட்டுகிற
ஆவல் மிகக்கொண்டேன்
அட… மலர்கள் எவர் தருவீர்?
எந்த மலர்கள் இதற்குத் ‘தகும்’சொல்வீர்?
சந்ததியின் வாசத்தை,
சரித்திர வடிவத்தை,
எங்கள் முதுசத்தை,
எமது விழுமியத்தைக்,
கொண்ட மலரெனக்கு வேணும்; கொடுப்பீரா?

எந்தன் கவிதை எனும் நார் தனை எடுத்து
வந்தேன் எவ்
வகை மலர்கள் பொருந்தும்?

நான் சிந்தித்தேன்!

ஆமாம்… என் வாழ்முறையின் ஆணிவேரைத்
தொலைக்கா(த)
ஈரமின்னும் கசிகின்ற ‘இதயமலர்கள்’ தெரிந்தேன்!
அவற்றை தொடுத்தாலென்
கவிநாரும் மணம் வீசும்!
அவையிணைந்த மாலை சூடின்
மானுடமே பெருமையுறும்!

கனலாய்க் கொதித்தெழும்பும் கவிதை

காட்டாறு பாய்கையிலும்
காற்றோடிக் கூவையிலும்
வேட்டூரூம் வேளையிலும் வேதனையிற் தோய்கையிலும்
கேட்குதென்னுள் கவிதையென்னும் கீதம் – என்னைக்
கிளரவைத்துச் சொல்லுதது மெய்பொருளின் வேதம்.

சாமத்தில் விழிக்கையிலே
காமத்தில் குளிக்கையிலே
நாமங்கள் அணிகையிலே நமனென்று பணிகையிலே
தீயெனவே எழுகுதென்னுள் பாட்டு – அதென்
தேகத்தை உயிர்க்கவைத்து உசுப்புகிற ஊற்று.

ரத்தத்தைக் கண்ணீரை
பீரங்கி, ஈட்டிகளை
குற்றத்தை, அரசியலின் பித்தத்தை, யுத்தத்தை
முற்றத்திற் கண்டாலே போதும் – உடன்
மூளுகிற ‘வேக்காளம்’ கவிதையெனப் பாயும்.

தீமைகளைக் கண்டே கை
பிசைந்துடலம் வேர்த்தொழுக..
ஈமத்தீயாய் இதயம் எரிந்தேதோ செய்ய மனப்
பாரத்தைக் கவியிலேற்றிக் கொள்வேன் – அது
பலமான துவக்காகும் பரிகாரம் காண்பேன்.

அமுதத்தை உண்டவனாய்
அரனடியைக் கண்டவனாய்
எமனினையே கொன்றவனாய் இகம் பரத்தை வென்றவனாய்
தமிழருந்தப் பேரின்பம் காண்பேன் – அதன்
தயவிருக்க எப்போ நான் தரித்திரனாய்த் தாழ்வேன்?

நிலமகளை நினைந்திடையில்
வளைக்கரத்தை இணைந்திடையில்
கலைமகளைக் கலந்திடையில் கவிதையுடன் கரைந்திடையில்
உலகியலை மறந்தெங்கோ போவேன் – அந்த
உணர்ச்சிகளைப் பொன்னெழுத்திற் பொறித்துவிட்டே சாவேன்.

மனந்தன்னைக் கணம் ‘வடித்து’
நிதஞ் ‘சுத்தப்படுத்தி’ வென்று
நினைவிலிறை தனை நினைந்து இறப்பினையும் துணிந்தெதிர்த்து
நனவுலகிற் கனவு காணும்வீச்சு – தந்தென்
நாடிநரம்பான கவிதைக்கே எந்தன் மூச்சு!

கவிதைப் பூமரத்தை கண்டுணர்க!

எனக்குள்… கவிதைமரம் இருக்கிறது நானறிவேன்..
உனக்குள்… கவிதைமரம் உள்ளதை நீ அறிந்துளாயா?

பிறந்த தினந்தழைத்து வேர்பிடித்து சடைத்து இளம்
விருட்சமாச்சு அது எனக்குள், உனக்குள் அதைக் கண்டுளாயா?

அபூர்வக் கணங்களிலே,ஆனந்த வரங்களிலே,
அதிர்கையிலே, இயற்கையிடை அயர்கையிலே, அழுகையிலே,

காதலூட்டுந் துடிப்பினிலே, காரசாரத் தத்துவத்தின்போரினிலே, பரவசஞ்சேர் புனிதமூடு ஞானமூட்டும்

தெய்வ நினைவினிலே, திடீரென்றென் கவிதைமரம்
ஐயயோ! நிறநிறமாய் வகைவகையாய் குளிர்நெருப்பாய்

ஆனந்த அழுகைதரும்… கண்ணீர்ப்பனி நனைத்த
தேனக்க கவிதை மலர் பூத்தெனக்குப் பரிசளிக்கும்!

அந்தமலர்கள் என்னை அர்ச்சிக்க அர்ச்சிக்க
மென்மை மனஞ்சிலிர்த்து மேன்மை உடை உடுத்து

எனக்குள் குடியிருக்கும் இராட்சத விலங்குகளை
கணமழித்து… மனிதத்தைக் கண்டெடுத்துப் பூக்கின்றேன்!

அந்த மலர்களினை அகிலமதுஞ் சூட்டட்டும்
என்று தருகின்றேன் என் நண்பா உற்றுப்பார்!

உனுளும் கவிஅதிர்வு உள்ளதடா! நீ நினையா
உனது பலமகிழ்வில், உனது சில துயரில்

இதயம் கனத்தேதோ எதுவென்று புரியாத
பிரவாகம் தோன்றுவதைநீபுரிந்து உள்ளாயா?

அதுதான் உன் கவிமரத்தின் ஆணிவேர்த்துடிப்பு..! நீ
அதை வளர்த்தால் எழிற்கவிப்பூ பூத்திடலில் எது வியப்பு?

உனதுட் கவிமரத்தின் உலுப்பல்களை உணர்க!
கணம் மாறும் உணர்ச்சிகளால் கவித்துவப்பூ பூத்திடுக!

வன்மை கொண்ட வாழ்வை ‘அது’ மென்மைகளால் மூடிவிடும்!
உன்மனசின் விலங்குகளைப் படிப்படியாய் மனிதனாக்கும்!

ஏற்றப்பாட்டு

சேறை அவர்களின்கை தீண்டியதாற் தான் நீங்கள்
சோறில் கரம்வைத்தீர் சோதரே – சேறணிந்த
ஏற்றப்பாட் டைப்போல எம்பசியைத் தீர்த்துவைக்கும்
‘ஏற்றப்’பாட் டில்லையே இன்று!

நல்லூர்
வானம் குனிந்து வணங்க…. முகில் திரண்டு
பூச்சூட்ட,
கோடிப் புனிதம் குவிந்த தெனக்
கோபுரம் நிமிர்ந்துளது!
குரல் வைக்கும் நாதமணி
நாலு திசைகளையும் துயிலெழுப்ப வீற்றிருக்கு!
வர்ணம் கலந்து வடிவொழுகும் ‘யாளித்தூண்’,
சிற்பச் சிறப்பில்
திமிர்ந்து நிற்கும் மண்டபங்கள்,
ஊற்று அருள் விளக்கு,
உயிர்கரைக்குந் தீபங்கள்,
மோட்சத்தைக் காட்டுகிற மூலஸ்தானம், மேளம்….
தாளம் அதிரச் சாந்திதரும்
பூசைகால
மந்திரங்கள்,
மனசை வருடுகிற மலர்வாசம்,
சந்தனம் அகிற்புகைகள்,
தளர்ந்து மனமொடுங்கின்….
கண்ணுள் ஒளிபரப்புங் கற்சிலைகள்,அமர்ந்திருந்தால்….
அந்தரத்தில் மிதக்கவைக்கும் கேணியடி,
சுற்றிவர
ஞானம் பரப்பும் மணல்வீதி…இவையனைத்தும்
மோன மொழிபேசி முத்திதரக் காத்திருக்கு!
திருவிழா நாளென்றால்….
பலமடங்கு புனிதமிந்தத்
தெருவை நனைக்கும்; தெய்வீகம் கரைபுரண்டித்
திசையைப் புதுப்பிக்கும்;
‘தினம்’ தோறும் நமைத்திருத்த
நசியாதெம் விழுமியத்தை நல்லூர் மணிகாக்கும்!
நல்லூரே!உன்னிடத்தில் நான்சிலதைக் கேட்கின்றேன்;
சொல்லுன் இரகசியத்தை!
சுவர்க்கமென எப்படிநீ
என்றும் இளமையுடன் இனிமைதந்திருக்கின்றாய்?
சந்திக்கோர் கோவில் இருப்பினும் உன்
தாளடியில்
எங்குமிலா ஓர்சிறப்பை எப்படி நீ வளர்க்கின்றாய்?
என்றென்றும் ஞான இசையில் மனங்களினைப்
பண்படுத்திப்,
பக்குவப் படுத்தி, இறை இன்ப
அன்பைப் பரம்பரையாய் எவ்வாறு ஊட்டுகிறாய்?
உன்தெருவின் காற்றுமட்டும்
உயிர்சிலிர்க்க வைக்கிறதே!
உன்நிழல்தான் துன்பத்தை…. துரத்திவரும் போர்,பிணியை
சங்கரித்துப்….. பய நெஞ்சில்
சாந்திதந்து மீட்கிறதே!
உன்சூழல் அறியவொண்ணாச் சுகந்தம் பரப்புறதே!
விஞ்ஞானம் அறியாத விடையொன்றுன்
கருவறையில்
எஞ்ஞான்றும் இருந்திவ்
இதமண்ணைக் குளிர்த்திறதே!
எவ்வாறெனக் கேட்டு விழுந்தெழும்ப….
பரவசத்தில்
மெல்லிய உணர்வொன்றென் மேனியெங்கும் பரவியது!
உள்ளே ஒரு உதயம் உருவாச்சு!
அன்பர்களே….
நல்லூர் ஒருநாளென் கேள்விகட்குப் பதிலளிக்கும்!
அன்றுவரை எனை அருகில் இருக்கவிட்டால்…
அது போதும்…

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்

தங்கமுலாம் பூசித் தள்ளாடிக் கீழ்த்திசையில்
திங்கள் எழுகின்ற
தெய்வீகப் பௌர்ணமிநாள்
வெண்கம்பளம் விரிக்க வீதியெல்லாம் நிலவின்பால்
சிந்துறது;
தென்றல் சிறகடித்துப் பாடுறது!
அண்ணாந்து வானின் அமுதுண்டு உயிர் உயிர்க்க
மண்ணில் நடக்கின்றேன்
நிலவினிலே மாற்றமில்லை!
இத்தனை வயதினிலும்
இந்தக் கிழநிலவு
சற்றும் நரைமூப்புத் தட்டாமல்
தளதளப்பாய்
மார்க்கண் டேயன் போல் மணியாய்த்தான் சிரிக்கிறது!
இந்திலவு முன்பும் இளைஞனென…. என்மண்மேல்
வந்திருக்கும்;
எங்கள் வடலிகளில் பனிதடவிச்
சென்றிருக்கும்;
பண்டைச் சிறப்பையெல்லாங் கண்டிருக்கும்.
இந்தத் தெருவினிற்தான்….
என்பூட்டன் ‘சங்கிலியன்’
வெற்றிசூடி ‘வீராளி அம்மனுக்கு’ நேர்ந்து பொங்கி
‘நல்லூர் முருகனுக்கு’ நன்றி சொல்லிச் சென்றிருப்பான்!
புடைசூழும் மந்திரிமார்,
புலவர் பரிவாரம்,
படைநடத்தும் பட்டாளத் தலைவரெல்லாம் மிடுக்கோடு
மீசைமுறுக்கிவிட்டு
மெய் சிலிர்க்கப் போயிருப்பார்.
பேரிகை முழக்கி பின் சங்கு கொம்பூதி
வாள்சுழற்றி ஆடும் படை;
‘நூறு அக்குறோணி’
தேர்குதிரை யானைச் சேனை…. வர எழும் புழுதிப்
போர்வை புவியைச் சிறைப்பிடித்துப் போர்த்திருக்கும்!
மாதர்களின் ஆலாத்தி,
மறம்போற்றும் பாமுழக்கம்,
வீரர்களின் ஆர்ப்பில்.. இந்தத் தெருவீதி மகிழுவதைப்
பார்த்தன்று இந்தப்
படிகநிலா பூத்திருக்கும்.
பண்டார வளவின் பாசறைகள், அத்தாணி

மண்டபம்,அரண்மனைகள்,
மந்திரிமார் இல்லம், எழில்-
அந்தப் புரங்கள், மல்யுத்தம் ஆடரங்கு,
தமிழ் வளர்த்த சங்கப் பலகை,
அறமடங்கள்,

திசையெட்டைத் ‘திக்குப் பாலகர்’ போற் காத்திருந்த
விநாயகர் கோயில்கள்,
யமுனாரி,‘களிறுகட்டும்….
ஆனைப்பந்தி’ எல்லாமும் அன்றழகாய் நின்றதனைப்
பார்த்திளைய திங்கள் வாய் பிளந்திருக்கும்!
ஆம்; இன்று
கிழடுதட்டிப் போனாலும் அழகிழக்கா நிலவிந்த
நில நிலையைப் பார்க்கிறதே….
மலைத்திடுமோ?
எதை நினைக்கும்?

நினைந்துருகல்

மழை அடித்து ஓய்ந்தும் மர்மமாயோர் பிசுபிசுப்பும்
ஈரமணமும் ஒட்டி
இருக்கிறது காற்றினிலே!
பாதம் புதையப் பஞ்சிவிட்டுச் செம்பாட்டுச்
சேற்றில் மிதித்தேன்;
சிலிர்ப்பேறி உடல் விறைக்க
மெல்ல நடந்தேன்!
மிதிவெடியாம் விதை விளைந்து
பிணக்காடாய்ப் போன ….. நான்பிறந்த கிராமத்தை
இந்தமழை இன்றும் நனைத்திருக்கும்.
ஒழுங்கையொடு
வயல்தோட்டம் வீடெங்கும்
வெள்ளம் வழிந்திருக்கும்.
என்முற்றத்திற் பதிந்த என்பாதச் சுவடுகளைச்
சன்னமாகப் பெய்யுமிந்த
மழை அழித்துப் போயிருக்கும்.
இன்றெந்தன் தாய்மடிக்கு நான்போக முடியாது!
அன்றொருநாள் தோணிவிட்டு
விழுந்தடித்து நீச்சலிட்டு
ஈரஞ் சுவறித் திளைத்த இனிமைகளை
இன்றென் கிராமத்தில் அனுபவிக்க முடியாது!
நேற்றைய என் கிராமத்து
‘மழைக்கால நினைவலைகள்’
ஊற்றுக்கண் திறந்தெந்தன் உள்ளே பெருகியது!
அந்த நினைவுகளே என்னை நடத்த… நானுஞ்
சென்றேன்; ஆம் நேரஞ் சென்றதே
தெரியவில்லை!
கண்ணெட்டுந் தூரத்தில் கவிழ்ந்திருந்த என்கிராமம்
நெஞ்சிற் தணல் மூட்ட நிலைகுலைந்தேன்!
காப்பரண்கள்
என்னை அதற்குமேலே செல்ல விடவில்லை!
வந்து மீண்டும் நனைத்தமழை
என்னகத்தைக் குளிர்த்தவில்லை!

வடலி?

தங்கநிலம் இன்று தணலணிந்து கிடக்கிறது.
செங்கமலம் சிலநேரம் பூக்கும்;
சிரிக்காது!
பொங்கல்வரும்; பொங்கும் பூமி மகிழாது!
மன்றில் கவியரங்கு மலர்வதெப்போ?
தெரியாது!
கருக்குக் கணைகொண்ட கரும்பனைகள்
தறிபட்டு
உருக்குலைய எங்கள்
ஊரழகு பாழாச்சு!
என்று புதுவடலி எழும்? எமதூர்க்குத்
தென்றலினை மீண்டும் திரும்ப வரவழைப்பதற்கு
என்று புதுவடலி எழும்?
நேற்றுவரை…
‘கால்நடையாய்’ வாழ்ந்து கலைந்து.. பசி வதைக்கும்
சூழ்நிலைக்குள் நாங்கள்
துவண்டு சரிந்துள்ளோம்!
“பச்சையடா” அங்கென்று பசித்தலைந்தோம்;
கானல்நீர்ப்
பிச்சை கிடைத்ததனால்
தாகத்தால் பிதற்றுகிறோம்.
எங்கள் வலிதுடைக்க எதும் வரங்கள் வந்தனவா?
எங்களது காலுக்குச் செருப்பெனிலும் கிடைத்ததுவா?
இலையே… இதைநாங்கள் ஏன்மறந்தோம்?
மனந்திருத்தி
கைகொடுங்கள் எங்கள் கடனடைத்து…. நம் ஊரைப்
பொய்கரைக்கு முன்னே
புடம்போட்டு ஜொலிக்கவைப்போம்!
கருக்குக் கணைகொண்ட கரும்பனைகள் தறிபட்டு
உருக்குலைய எங்கள்
ஊரழகு பாழாச்சு!
என்று புதுவடலி எழும்?
எமதூர்க்குத்
தென்றலினைமீண்டும் திரும்ப வரவழைப்பதற்கு
என்று புதுவடலி எழும்?

ஒற்றைக்குரல்

எம்வான வெளியை நாம் இரசிக்கவைக்கும் மீன்குலமே!
எங்களினை மூடி இரட்சிக்கும் தமிழ்க்காற்றே!
இங்கணையும் தூரத் துறவு முகிலினமே!
தங்கநிலம் குளிப்பாட்டித் தாலாட்டும் அருவிகளே!
உப்பிட்டு உள்ளளவும் நினைக்கவைக்கும் நம்கடலே!
கற்பிழக்கா தின்றும் கருத்தரிக்கும் மரக்குலமே!
வண்ண மயமாயம் வரையும் மலரினமே!
எண்ணம்…. பறப்பதற்கு எண்ணவைத்த பட்சிகளே!
புல்லோடு பூச்சிகளே பூர்வஜென்ம பந்தத்து
இல்லறம்போல்… இம்மண்ணில் எம்மோடிருப்பவையே!
எங்களது பாதைகளே! எங்கள் திசைதிக்கே!
எங்கள் இசை கலையே! ஈடில் இலக்கியமே!
நெறிப்படுத்தும் கோவில்களே… நியாயமூட்டுந் தத்துவமே!
பரம்பரை இயல்புகளே… பால்வார்க்கும் இலட்சியமே!
ஒரு குரலில் சொல்லுங்கள்! ஒருமித்துக் கூவுங்கள்!
நிரந்தரமாய் நிம்மதியே நம்தேவை ‘பேசுங்கள்’
ஒற்றைக் ‘குரலிழையால்’ உலகைத் திருப்பியெங்கள்
பக்க நியாயத்தைப் பறைவோம்; கை கோருங்கள்.

போர் தொடங்கப் போகிறது

தள்ளாடித் தானாய்த் தலையாட்டும் இந்தமரம்
ஷெல்சிதறல் பட்டுச் சிதறிடலாம்.
இவ் இரவைத்
தாலாட்டுங் காற்று துவக்கு முனையினிலே
வேட்டையாடப் பட்டுச்
சிறையில் அடைபடலாம்.
என்னுணவில் பங்குபோடும் என்பூனை நாளையிங்கு
என் இரத்தம் நக்கி
வெறியோடலைந்திடலாம்.
என் வீட்டின் மேலே இதழ்சிவக்கும் விண்மீனை,
பாதி நிலவை,
படரும் கதிரவனை,
மீண்டும் நான் பார்க்க விதியற்றுப் போயிடலாம்,
ஏன்… இந்தக் கவியை எறிகணை கிழித்திடலாம்.
சூழ்ந்த அயலெல்லாஞ்
சுடுகாடாய் மாறிடலாம்.
ஆம்; விரைவில் எங்கும் போர் தொடங்கப்போகிறது!
மின்னும் புதுக்கருவி
வினைத்திறனைச் சோதித்துச்
சன்னம் நிரப்பியாச்சு; பீரங்கி வண்டிகட்கு
எண்ணையிட்டு மாச்சு! எங்கெங்கே இலக்கென்று
எண்ணி அளந்தாச்சு!
எல்லோரும் எதிர்பார்த்த
போர் தொடங்கப்போகிறது; புகையும் வெடிநெடிலும்,
ஊரைச் செவிடாக்கும் ஊளைகளும்,
இரணகளமும்,
மரணஒலியும், மருண்ட முகம் விழியும்,
குருதிக்கடலும்,
குதறுண்ட சதைநரம்பும்,
சடல நிரையும், தழைத்துவரக் கிளைத்துவர
விடியல்கள் துயரை…..இனி விதைக்கப்போகிறது!
பல குழற் பீரங்கி முதலிற் தொடங்கிவைக்க
கொலையோடு அழிவு
கூட்டுவைக்கப்போகிறது!
அலைந்துலையும் எமைச் ‘செய்தி’ ஆட்டிவைக்கப்போகிறது.
கோவில் மணியொலியைக்
குண்டடக்கப்போகிறது!
அவரவர்கள் தமக்குள் ‘கொடிவணக்கஞ்’ செய்கின்றார்!
அவரவர்கள் தம்தம்
போர்ப்பாட்டைப் பாடுகிறார்!
அவர்களிலே சிலர்தங்கள் துவக்குப் பிடியில்வைத்துக்
கடிதம் எழுதுகிறார்;
கண்ணிலொற்றிக் கொள்கின்றார்!
இறுதி அணிவகுப்பு ஏற்பாடு
களங்களிலே
நடந்து கொண்டு இருக்கிறது;
நான் எனது ‘சாப்பாட்டை’
என்செய்வ தென்று…. இறந்த மனத்தோடு
விண்பார்த்திருக்கின்றேன்!
நான்…. விரும்பா விட்டாலும்
ஆம்; விரைவில் இங்கு போர் தொடங்கப் போகிறது!

மழைப்போர்

சொட்டும் துளிகொட்டும் வெடிஇடி
தட்டும் தரைதட்டும் புயலது
குட்டும்… தரும் கொட்டம் இது ஒருமழைக்காலம்!
திட்டம் இடும் நட்டம் ஒளி மி(ன்)னல்
வெட்டும் விழிபட்டும் … செடிகொடி
செட்டும் விழநிற்கும் இது ஒரு புயற்காலம்!
தட்டுத் தடுமாறுந் தவளைகள்
கத்தும்; பெருவெள்ளம் நிலமதில்
முட்டும்; வயல்பட்டும் அழுகிடும் …. துயர்காலம்!
எட்டும் இடம் எட்டும் வரை குளிர்
வட்டம் இடம்; நொட்டும்!மனிதர்கள்
கொட்டில் விழ இற்றும்கரைகுவர்…‘கலிகாலம்’
எப்போ மழைவிட்டுப் புதுவெயில்
மப்பைச் சுடும் என்று – கனவுடன்
அப்பாவிகள் ஏக்கச் சிலுவையில் துடிப்பார்கள்!
தப்பித்ததோ புஞ்சை எனமனம்
வெப்பம் உற ஈரஞ்சுவறிட
நப்பாசையில் ‘ஏரர்’ கவலையுட் தவிப்பார்கள்!
கப்பல் பலவிட்டு நனையவும்,
பம்பல் அடிபட்டு அலையவும்,
வந்து விடும் சிறுவர் நிலைமையை அறியார்கள்!
எப்போ இதுபோல… வெடி மழை
கொட்டும் சமர்க்காலம் விழும்? என
முட்டும் பெரும் ஏக்கம்; இதை எவர் புரிவார்கள்?

எதிரினிலே வீழ்ந்த இடி

இடியோ சரேலென்று இறங்கியது!
‘பளீர்’ மின்னல்
கொடிபோல் புவியைக் குறிவைத்துப் படர்ந்தது! பேய்க்
கரிஇருட்டும்,
குளிரைக் கரைத்துவீசும் சூறையதும்,
நசநசென்ற நிலமும், நாசியினை உறையவைக்கும்
பசை ஈர மணமும்,
நடுங்கினாலும்… மழையையுண்டு
பசிதணிக்க ஏங்கிநின்ற பச்சைச் செடிசிலவும்,
“எது நடந்தால் என்ன” என இரைமீட்டு
நின்ற ஒரு
மாடும்,ஒழுக்கற்ற மறைவுதேடுஞ் சிறுநாயும்,
வரங்களினைக் காவி
வரிவரியாய்ப் புலம் பெயர்ந்த
எறும்புகளும்,
இன்னும் எவையென்று நாமறியா
ஜந்துகளும் நொடிப்பொழுது சடமாய் உறைந்திருக்க…
படைபடையாய்க் கூடிப்
படுத்திருந்த முகில்கிழித்து
இடியொன்றிறங்கியது!
இழைகுலைந்தாற் போல் மின்னல்
படிகடந்து அயல்நோக்கிப் பாய்ந்தது… ஆனால்….
அயலினிலே
இடிதாங்கி இல்லை!
இருந்திருந்தால் அது… இடியைக்
குடித்திருக்கும், மின்னலதின் கொட்டத்தைக்
கொன்றிருக்கும்!
இடிதாங்கி அற்ற அயல்….
எரிந்து வீழ்ந்த இடிமின்னால்
இடுகாடாய் மாறியது! எல்லாம் பொசுங்கியது!
சுடலைச் சிதைபோலே என்சூழல் கருகியதால்
கடைசியிலே மழை நதியில்
சாம்பல் தான் ஓடியது!
நின்று கண்டேன்.
நிலை குலைந்தேன்.‘நினைவுப்பல்லி’ சொல்லியது;
இன்றைக்கு.. முளைப்பதற்காய்
மண்ணுள்ளே காத்திருக்கும்
சின்னஞ்சிறு வித்துகளால் செழிப்பொருநாள் மீண்டுவரும்!
அன்றயலில் புதியதொரு
“இடிதாங்கி பூத்திருக்கும்”

போரிட்ட சட்டம்

சுகமாய் இசைக்குமரைச் சுகித்தபடி நான் கிறங்க
அகதிகளின் ஒப்பாரி அதிர்வுமூட்டி மீட்டியது.
தெருவை உழுதபடி திரண்டு செல்லும் டாங்கிகளின்
உறுமலிலே எந்தன் உயிர்த்துளிகள் கருகியது.
அலறி அடித்தோடும் அம்புலன்சின் ஜன்னல் காட்டும்
குலைந்த உடல்களெந்தன் குரல்வளையை அடைக்கிறது.
இரவின் செவிப்பறையை இடையிடையே கிழிக்கின்ற
எறிகணை முழக்கத்தில் என்குருதி ஒடுங்கிடுது.
காற்றலறக் கிழித்தோடும்‘கிபிர்’ ஹெலிகள் தீவிதைக்குஞ்
சூட்டில்…. எனதிதயம் சுருண்டு உருகிடுது.
இத்தனைபேர் பலியென்னும் இரவுநேர வானொலிகள்….
தத்துவத்தின் கழலில் நான் சரணடையத் தடுக்கிறது.
போரின் சிறுமௌனம்.. “புதுக் கொடூரப் போரொலிக்குத்
தூபம் இடுகிறதோ”? ஊரடங்கும் வெருட்டிடுது!
பட்டப்பகலெங்கே எப்ப எது பாயுமென்ற
அச்ச(ம்) மட்டும் ஆமையென அடிமனசில் ஊர்கிறது.
சராசரி வாழ்க்கையினைச் சாப்பிட்டுப் பசியாறும்
வெறிப்போர்கள் – போரில் வெந்து என்று மாளுவது?

விசர்நாயும் போரும்

விசர்நாயால் கடியுண்டு… நீர்வெறுத்து நாயைப்போல்
புரண்டு, குரைத்து,
காண்போரைப் போய்க் கடித்து,
துளிநீரை நக்கிக் குடித்து உயிர்விட்ட
மனிதனைப் பார்த்தேன்!
மனம் பயத்தில் உறைந்தது; நாய்
எனுஞ் சொல்லைக் கேட்க எனக்குள் நடுங்கியது!
விடுதலை பெற்று வீட்டுக்கு வந்த… அயற்
பொடியனினைப் போய்ப்பார்த்தேன்!
பேர்ந்து கிழிபட்ட
நகங்கள்,
உடலெங்கும் சிகரெட்டின் நக்கல்கள்,
பாதி உடைபட்ட பற்கள்,
குரலுடைந்த
பேச்சுஇ நிலை குலைந்தேன்!
‘உள்வலியை’ மறைத்துரைத்தான்…
குதிக்கால், மலவாசல், குறித்துவாரம் இங்கெல்லாம்
கொதிக்கும் இரும்புக்கோல்
கொஞ்சிய கதை சொன்னான்,
தலையோ கிறுகிறுத்துக் குருதி உறைந்ததென்னுள்!
விசர்நாய்க்கும் போருக்கும்
வித்தியாசம் அதிகமில்லை!
விசர்நாய் மனிதனினைச் சடலமாக வீழ்த்தியது!
விசப்போரோ ‘மனிதத்தை’
சடலமாக மாற்றுகுது!

மருட்டும் மழை

துப்பாக்கிகளின் தூறல் தொடங்கிச் சடசடென்று
இப்போ பெருமழைபோல்
எதிர்த்திசையிற் கேட்கிறது.
அமைதிப் புறாக்களிவ் மழையில் நனைந்திடுமோ?
‘ஒலிவ்’ இலைகள் இதற்குள்
அகன்றிடுமோ துரும்பைப்போல்?
மண்ணினது பாட்டுக்களை மறைத்துவைக்குங் கிராமங்கள்
இம்மழையிற் தோய்ந்து
எழில் கரைந்து தூர்ந்திடுமோ?
எம்மண்ணின் வாசத்தை எடுத்தியம்பும் பூவினங்கள்
அழுகிச் சிதறிடுமோ….
அடிக்கும் இம் மழை முழுகி?
எனையும் என் வீட்டினையும் எனதுற்ற உயிர்களையும்
நனைத்தென் இருப்பை நக்கி
வெடித்திரியாய்
இருந்த மனத்தை; தீக்குச்சிக் கவிதைகளை
நசித்திளக்கி விட்டு நகர்திடுமோ?
தொடர்மழையில்
தோய்ந்தீரஞ் சுவறி வெடவெடென்று நடுங்குது ஊர்?
ஏய்… மழையே கொஞ்சம்
விட்டுப் பிடிக்காயா?
மழைக்கு அதிபதிகாள்… வருண பகவான் காள்!
வெளிப்பருள மாட்டீரா?
வெயிலமைதி தாறீரா?

துயராகிப் போன சரிதம்

வெண்ணிலவு மண்ணுக்கு வெள்ளை அடிக்கிறது.
தென்றல் வழமைபோல்
சிணுங்கி நடக்கிறது.
இவ் இரவை எப்போதும் போல… நிசப்தபூதம்
கௌவிக்கிடக்கிறது.
கவலை எதுவுமின்றி
“என்ன நடந்தாற்தான் எனக்கென்ன” எனப்பூமி
தன்பாட்டிற் சுற்றிடுது!
தரையில் எரிமலைகள்
வெடித்த களேபரம் வேதனையைக் குவிக்கையிலும்,
எழுதுங்கைப் பெருவிரலை
ஏகலைவர் இழக்கையிலும்,
வெளிக்கவைக்கும் பாவலரின் விழிஇரத்தம் சிந்தையிலும்,
உண்மைசொன்ன குயிலின் உயிர்குடித்துக்
களைப்பாறிச்
சன்னங்கள் சிரிக்கையிலும்,
அடைக்கலச் சிறைக்கதவில்
அறுபட்டசோதரரின் அவலமப்பி நாறையிலும்,
‘வரையற்ற நீதி’ யாலெம் மலர்கற்பை இழக்கையிலும்,
எரிபட்ட சாம்பரிலே
ஏக்கங்கள் மிதக்கையிலும்,
வாக்குறுதி வலையில் வசப்பட்டே
உயிர்மீன்கள்
கருவாடாய்ப் போகையிலும்,
கறியாகும் வேளையிலும்,
தெருத்தெருவாய்ப் பூக்கள் சிதறல்… தொடர்கையிலும்,
அடுத்த வேட்டைக்கு ஆயத்தப் படுத்துகிற
கொடுக்குகளில்
‘ஒலிவ்’ இலைகள் கொத்தாய்க் குலுங்கையிலும்
“என்ன நடந்தாற்தான் எனக்கென்ன?”
எனப்பூமி
தன்தலையைச் சுற்றது; என்
தலைசுற்றி வெடிக்கிறது!

நேரம்

நீயுந்தன் நீண்ட வேட்டைப்பல்,குருதிசிந்தும்
கூர்க் கொம்பு,
சதையைக் கிழித்த நகம்… மறைத்து
மற்றவனைத் தூற்றுகிறாய்!
மற்றவன் தன் வாய்நாற்றம்,
மலங்கழுவாக் குதம், பீழை
வடியும் கண், மறைத்து உன்னைப் பழிக்கின்றான்!
ஒருவர் மேல் ஒருவர் மாறிமாறி வாரிவீசும்
சேறில்… இருவரது
நாற்றமும் முச் சந்திகளில்
மணக்கிறது;
சமூகம் மூக்கைச் சுழிக்கிறது!
முகமூடி போட்டுநீவீர் மெய்முகத்தை மறைத்தபடி
வீர வசனங்கள் விதைக்கின்றீர்!
நடிக்கின்றீர்!
“நீங்கள் அத்தனைபேரும் உத்தமர் தானா
சோல்லுங்கள் – உங்கள்
ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்”
பாடுகிறீர்; பாடுங்கள் –
இதே பாட்டை நாமுமோர்நாள்
பாடிடுவோம்;
அந்நாளைப் பார்த்துத்தான் காத்துள்ளோம்.

அந்நியமான நண்பனுக்கு

துயர்தாங்க மனமின்றித் தப்பிச் சென்றுன்
சுகங்காத்துத் தத்துவங்கள் அவிழ்த்து விட்டு
மயிர்க்கதைகள் பறையாதே நண்பா! நாங்கள்
மடையர்… நீபேரறிஞன் என்றாய்… ‘கேள்..வா’!
உயிர்துடிக்கும் நம்நிலையை உணராதுன்போல்
உலுத்தர்களின் வால்பிடிக்கப் பிரளாதென் நா!
சுயம் இழந்து பகட்டின் பின் அலையா தென்பா!
துயர் பகிர்ந்து நிழல் கொடுக்கும் என் சிந்தாம் ‘கா’!
பிணங்களுக்கு மத்தியிலே இருந்து கொண்டு
பேய்பிடித்தாற் போல்வெடித்துச் சிதறும்.. சோர்ந்த
மனம்…புலம்பி ஒப்பாரி வைத்திடாமல்
வனப்புகட்கே வாழ்த்திசைத்துக் கனவா காணும்?
கனக்க வேணாம்; நேற்று கூட குதறப்பட்டு
கைப்பற்றப்பட்ட எட்டுச் சடலம் பற்றி
உனக்குணர்வு இல்லாமல் இருக்கலாம்… என்
ஒளிக்கவிதை இவைபற்றி முதலிற் பாடும்.
என்கவிதை அழுகுரல்கள் என்றாய்…“நன்றாய்
இருக்கவில்லை” என்று அதைக் கிழித்தா போட்டாய்?
உன் ‘நிறுத்தல்’ தனை மதியேன்.. நொறுக்குத்தீனி
உண்டபடி எம்இழப்பின் செய்தி கேட்ட
பின்னும் உன் ‘பிரபலத்தை’ மட்டும் எண்ணும்
பிறவியே… என் யதார்த்தம் சொல்லும் பாவை… நோண்ட
உந்தனினை அனுமதியேன்! காலம் என்பா
உயிருளதா இ(ல்)லையா என்றுரைக்கும் …. சோரேன்.


நீவேறு

துப்பாக்கி தூக்கி மரத்திட்ட உன்கைகள்
எப்படித்தான் எந்தன்
இதயத் துடிப்பறியும்?
எவரினையும் எட்டி உதைத்து இழிவு செய்யும்
நவீன பூட்ஸ்காலென்
நரம்புணர்வையா புரியும்?
வயோதிபர் குழந்தையையும் உறுக்கும்நின் வாயா என்
உயிர்ச்சிலிர்ப்பு ஓசைக்கு மதிப்பளிக்கும்?
நிதம் கேட்கும்
ஷெல்லடிக்குள் பிய்ந்தநின் செவிப்பறையா
நானிசைக்கும்
மெல்லிசையின் மென்மைகளில் பரவசிக்கும்?
பயந்தரண்ட
அப்பாவிகளை எரிக்கும் நின் நெற்றிக் கண்ணா என்
கற்பனையை… காதலினைக் கண்டுகொள்ளும்?
இனத் திமிர்ச் சீழ்
ஊறிக் கிடக்கும் நின் இதயமா என்
ஒளி தொகுக்கும்
கானக் கவிதையுடன் கைகுலுக்கும்?
கலந்து வாழும்?

உங்களது சித்தாந்தங்கள்

வலிமூடிக் கனிந்து வெடித்த புண்ணைப் பாரீர்!
அழகென்றா இரசித்தீர்?
அதன்
வேதனையை ஏன்மறந்தீர்?
மருந்திட்டு அதனை மாற்ற நினையாமல்
மிளகாய்த்தூள் புளியைக்
கரைத்தேன் நீர் விட வாறீர்?
சீழ் துடைத்துத் தொற்றுநீக்கி, சேர்ந்து சுத்தமாக்காமல்
மேலும் அழுக்கேற விட்டேன் உறங்குகிறீர்?
தையலிட நல்ல
தையலூசி தேடாமல்
கிள்ளியதைக் கிழிக்க நீரேன்
முள்ளெடுத்து வருகின்றீர்?
முத்திப்புண் பிளந்து
புழுநெளிந்து
அழுகி.. ஊனம்,
ரத்தம் வடிவதையா இன்றும் இரசித்துள்ளீர்?

நடிப்புச் சுதேசி

சொந்தசுகத் துக்காய் சுதந்திரத்தை விற்றுவிட்டு
வந்தடிக்கும் காற்றின் வளத்துக்கு – பந்தம்
பிடிப்பவரைத் தூற்றும் பெரியதமிழ் ‘மானம்’!
“நடிப்புச் சுதேசி” யென்னும் நாடு!

காற்றுச் சுவாசம்

சுத்தமான காற்றைச் சுவாசிக்க ஏங்குகிறேன்…
சுத்தமான காற்றெந்தன்
சூழலில் கிடைக்கவில்லை.
எங்கும் அழுக்கேறி ஏதேதோ நஞ்சூறி,
மங்கள மலர்வாசம் மறந்தபடி,
குளிர்வற்றி,
ஆக்கிரமிக்குந் தீயால் அடங்கி, உயிர்பொசுங்கி,
ஏக்கம் மிகுகாற்றே
எனைச்சுற்றி மிகநடுங்கித்
தள்ளாடி ஓடியது!
தவித்துத் திணறு மெந்தன்
உள்மூச்சு;சுவாசிக்க உயிரின்றித் துடிக்கிறது;
இப்படியே போனால் இறப்பணைக்கப் போகிறது!
சுத்தமான காற்றைச் சுவாசிக்க ஏங்குகிறேன்.
எப்படி நான் உயிர்க்காற்றை
இங்குபெறப் போகின்றேன்?
சுத்தமான காற்றிற்தான் சுதந்திரமாய்ச் சுவாசித்தல்
அர்த்தமாகும்;
அதுதானெம் சூழலையும் சொர்க்கமாக்கும்;
எவர்வருவார்?
இக்காற்றை வடிகட்டி, அழுக்கை நஞ்சை
அகற்றி…நம்
மண், மலரின் வாசமூட்டிக் குளிரேற்றி,
எந்தன் நுரையீரல் இனிக்க உயிர்துளிர்க்க
அன்பளிப்பார் தரஅருள்வார்?
அயல் மலர்ந்து சுவாசித்து
நிம்மதியாய் நிமிர, நிலையுயர, யார் செய்வார்?
காற்றை மாசாக்கும்
எமகாதர்க்கு எமனாகும்
‘மீட்பர்கள்’ எவர்?அவரின்
விலாசத்தை எவர் தருவார்?

ஆறுதல்கள்

தூங்கிக் கிடந்த அடிமைத் தனந் தகர்த்து
ஓங்கிக் குரல் கொடுத்த
உலகமுதல் முதுகெலும்பே…..
‘ஜூ லியர் சீசர்’ நின் முகத்தை நான் காணவில்லை.
அடிமைப் படுத்துவோரின்
ஆணிவேரும் அன்றுதொட்டு
நடுங்கத் தொடங்கியதாம்; புதுவீர நாற்றுநட்ட
உன் ‘முஷ்டி’ தொட்டு முத்தம்
இடக் கொடுத்து வைக்கவில்லை.

நாகரீகம் என்றதெல்லாம் நாய்ச்செயலிலுங் கீழாய்ப்
போய்… ‘ரோமின்’
பேரரசர் பேயாட்டம் போட்டநாளில்;
அடிமைகளை மோதவிட்டு,
விலங்குகளைச் சீறவிட்டு
மரணத்தின் இரத்தத்தை மனம் இரசித்துப்
பொழுதுபோக்கும்
‘கொலோசிய’ அரங்குகளில் கொண்டுவந்த அடிமையான
‘கிளாடியேற்றர் ஸ்பாட்டக்கஸ்’
ந நிமிர்ந்தாய் உலகுறைய!
உனையும் தரிசிக்க என்னால் முடியவில்லை.
எனினும் அடிமைகளில்
எழுச்சியினைத் தூண்டியநின்
வரலாற்றைக் கேட்டபின்னென்
மனம் குனிந்து சோரவில்லை!

ஜூ லியர் சீசர்! என்
அன்பான ஸ்பாட்டகஸ்,
‘கொலோசியத்தை’ போற்தானே எந்தன் குடிநிலமும்
அவலக் குரலெழுப்பி,ரத்தக் குளமாகி,
பலர்பார்த்து இரசிக்கப் பலியாகி,
வரலாறு
பெரிதாக மாறாமல் பிரள்வதனைச் சொல்லுது; உம்
இருவரது நினைவுகள்தான்
‘இதுள்’ இருக்கும் எந்தனுக்கு
ஆறுதலைத் தருகிறது…
அகத்தில் ஒளியேற்றுகுது!


நிமிர்வுகள்

நேற்றவ் நெடுமரத்தை நிலைகுலைத்து வீழ்த்தினும்… அக்
காற்றெழுந்து அந்தோ
காலும் நிலாவிளக்கை
அணைத்தல் நடந்திடுமோ?
அயலை எரித்தழிக்கும்…..
அனற்சுவாலை, விண்ணில் அமர்ந்துள்ள ஆதவனைத்
தொட்டுப் பொசுக்கல்;
தொடர்ந்து சாம்பலாக்க எண்ணல்
எட்டாக் கனவெல்லோ?
ஏன்னப்பா….
நாணல்கள்
ஓடிவரும் வெள்ளத்தில் ஓரிருநாள் அமிழ்ந்திருந்தால்
வாடியழுகிற் றென்று பழித்தல் அறிவுடைத்தோ?

இடிக்கஞ்சா நிலவும்,
எரிக்கடங்கா ஆதவனும்,
அடிபணியாமல் வெள்ளம் வடியஎழும் நாணலதும்,
கண்ணுறங் காதிருக்கையிலே
காற்றோ, சிறு அனலோ,
எதுஞ் செய்ய முடியாது!
இது உனக்கேன் கசக்கிறது?

படகும் மனசும்
————————-
கடைசித் தடவை கைகாட்டிப்…. படகேறி
துடுப்போட்டிச் சென்ற
துணிவுப் பயணம் ஓர்
படமாய் மனசிலோடப் பார்க்கின்றேன் மீண்டுமேங்கி!

நேற்று நிசிவரைக்கும் நின்று
மனம் வலிக்கக்
காத்தலுத்துக் கண்ணீரில் குளித்து ஈரஞ் சுவறி மீண்டேன்!
நீலக் கடல் ….. மனிதன், 
நித்திரைக்குள் மூழ்கினாற்போல்
ஓலம் அடங்கி ஒளியிழந்து கிடக்கு தின்று!
அலைகள்…. பசியாறி
ஓய்வெடுத்தாற் போற்கிடக்கு!

விழியிலேதும் தெரியவில்லை.
வீச்சுவலை, படகு
பிடித்து வைத்த பாரை, பிரகாச முகம், சிரிப்பு,
‘அசைத்த’ கரம் எதுவும் எதுவும் தெரியவில்லை.

‘வெறுமை படர்ந்த கடல்;
வெறித்துச் சிவந்த விழி;
நெருப்பு எழும்மனது; ’ நிற்கின்றேன் கரை மணலில்!

மோனக் கடலுக்குன் முழுவிபரம் தெரியும்;
அதை
நாளை அது சொல்லிடலாம்;
தள்ளாடித் துவண்டபடி
செல்கின்றேன்;
நாளை இன்னும் சீக்கிரமாய் நான் வருவேன்.

காணாமற் போன கவிதைப் பொறி
———————————————————–
நெஞ்சிலோர் கவிப் பொறி பளிச்சிட்டது.
நினைவு மின்னலை…. வார்த்தைச் சிறையினுள்
குஞ்சு பொரிக்கவே வைத்திடில்…. “ஊரெலாம்
கும்பிடத் தக்க ஓர்கவி தோன்றிடும்”
என்ற எண்ணச் சிலிர்ப்பே இனித்தது!
“எழுதுவோம்” என ஏடொன் றெடுக்கையில்…..
எங்கிருந்தோ வந்த அகதிச் சிறுமியின்
ஈரஓலமென் என்பை உருக்கிற்று!

சென்று ஓர்பிடி என் உண வூட்டினேன்….
சிதறியே தாங்கள் ஓடி… எறிகணை
வந்து விழ, உறவுந் துடித்திட
மரணத்தின் கையில் மீனாய் நழுவியும்…
தம்மைக் கேடயம் ஆக்கிய போரின்முன்
தவங்கிடந்தும், பயந்தும், அலைந்தும், பின்
ஒன்றுமே இல்லாது உயிரை உடலினில்
உடுத்து வந்ததுஞ் சொன்னாள்; சிதறினேன்.

ஊர்கருகிற்று என்று உடைந்தனள்.
“உற்றார் எங்கென” பிரமை பிடித்ததாய்ப்
போற வாறோரைக் கேட்டுப் புலம்பினள்.
“போச்செலாம்” எனப்பொங்கி வெடித்தனள்.
போற தெங்கென வானை வெறித்தனள்.
போயினள். எனுட் பூகம்பம் பூந்ததாய்ப்
பாரம் ஏறி ஐம் பொறியும் கலங்கிற்று.
பூத்த ‘பாப்பொறி’ அவளொடா போயிற்று?

விழி துடைக்கும் விரல்
————————————–
“அடிபட்டாய்….. வாகனத்தில்” – என்றார் அயலவர்கள்!
துடித்தபடி ஓடினியாம் சொன்னார்கள்.
உனைக் காணா
உண்மைத் துயரில் உருக்குலைந்தேன் ஓர்நொடியில்.
‘என்அன்புப் பூனை’….
எங்கையடி இப்ப உள்ளாய்?
நீபோட்ட குட்டிரெண்டும் நித்திரைக்குள் ஆழ்ந்துளன.

பால்கொடுத்து விட்டோ பயணித்தாய்?
அவை… உணவு
செமிக்கும் வரையிற்கும் சோர்ந்து துயின்றுளன!
இன்னும் சிலமணியில்…..
அவையெழும்பி உனைத்தேடும்.
‘இரண்டு தினக்’ குட்டிகளோ வீரிட்டு உனை அழைக்கும்.
கண்திறக்கா ‘அவைகள்’ கால்சவள,
தேடி ஓய்ந்து
உன் அணைப்பு இன்றி உதிரும், உருக்குலையும்……

என்னானாய்…?
இரணத்தோடு துடித்தாயோ இறந்தாயோ?
என்னானாய்? எப்படியும்
திரும்பி வந்து சேர் தாயே!

கண்முன்னே…. நேற்றுக் ‘காணாமற் போனவனால்’
சின்னா பின்னமாகி,
சிதைந்தசேய் களின் வாழ்வைக்
கண்ட வலியொடுன்னிற் கசிகிறது பாசமடி!
உன்னிரண்டு சேயும்
உருப்படியாய் ஆனபின்பு
கண்மூடு;
அது வரையும்…. காயத்துட னெனிலும்
வந்து விடு;
எந்தன் மனஇரணத்தில் மெழுகிவிடு!

அஞ்சலி
————–
கண்டும்காணாதவராய்க் கடந்தோர் பலபேர்கள்!
பின்னுமுன்னும் பார்த்துப்
பேசாமற் தம்பாட்டில்
உன்னை விலத்தி ஒதுங்கினர் சிலபேர்கள்.
தோட்டா துளைத்த துவாரத்தை
“ஈ” நிரப்ப
நீட்டிக் கிடந்தாய்நீ! நானும் உனை விலத்தி
வீடடைந்தேன்;
உனை நினைந்து வெம்பி வெடித்து விழி
நீர் சொரிந்தென் சுயநலத்தை
அதிற்கரைக்க ஏங்கிநின்றேன்.
என்னைப் போல்…. உனைக்கடந்து சென்றோர்கள்
என்செய்வார்?
“நிச்சயமாய் உன்னை நினைத்திருப்பார்.
மனதுளுன்னை
உச்சரித்து விட்டுத்தம்
உணர்வுகளைப் புட மிடுவார்”
என்றறிவேன்;
இருநிமிடம் எனுளுனக்காய் அஞ்சலித்தேன்.

நாங்கள்
……………………………………
நெஞ்சில் கனல்கின்ற ஞான நெருப்பிருந்து
குஞ்செடுத்து… மண்ணின் கொடுமைகளாம் – பஞ்சைக்
கொளுத்தக் கவிவளர்ப்போம்! கூற்றெதிர்த்தால் நெற்றி
விழிதிறந்துஞ் சொல்வோம் விடை.

என்னை எழுப்பிய உன் நினைவு
—————————————————–
மனமென்னும் அலுமாரி திறந்தேன்;
பெருந்தூசில்
நனைந்து பலநினைவுப் புத்தகங்கள் கிடந்தன.
ஆ…..
எத்தனை காலமாச்சு?
அலுமாரி திறந்து பழம்
புத்தகத்தின் பக்கம் புரட்டி மனம் இலயித்து
எத்தனை வருஷமாச்சு?
தூசுக்குள் முத்தெடுத்தல்
போல அன்று நீ எனக்குப் பரிசளித்த…. ‘விடிவையேற்றும்’
நூலெடுத்து விரித்தேன்!
கம்பீரக் கையெழுத்தைத்
துப்பாக்கிக் குறியோடு போட்டு
அதன் கீழே
‘நட்பில் குழைத்தெடுத்த அன்பு’ பற்றி எழுதிய உன்
வரிகள்….
விழிகலங்க வைத்துச் சிரித்தன – உன்
முகம் உந்தன் கையெழுத்தில்
தோன்றி மறைந்தது; என்
மனமென்னும் அலுமாரி துயரத்தில் மூடியது!

இன்றெனக்கு இனி அமைதித்
தூக்கம் வரப் போவதில்லை!
உன்னுறக்கம் எனைஎழுப்பிற்று இன்று;
எடுத்தேன் கவி வில்லை!

நன்றி நவிலல்
————————-
நிலவும் நடுங்குகிற நிசி!
இரவு ரெண்டுமணி.
திடுக்கிட்டு விழித்து எழுந்தேன்;
விரைகிறது
ரெண்டு ரெண்டாக ‘மோட்டார் சைக்கிள்’ அணி!
கண்டரண்ட நாயின்
கதறலையும் மேவி…. அவை
சீறும் உறுமல் நித்திரையைச் சிரச்சேதம்
செய்யப் புரள்கின்றேன்.
நொடிகள் நிமிடமாகச்
சென்றும் ஒரே அமைதி…. “திரும்பி அவை வரக் காணோம்
எங்கே அவையிப்போ
இரைதேடிக் காத்திருக்கும்”?
யோசித்து நெஞ்செரிய மணிபார்த்தேன்!
மணிமூன்று!
தூரத்தில் அவைதிரும்பும் தொடரொலி எழுந்துவந்தென்
வீட்டைக் கடந்து
விரைந்தோடி மறைய…. நெஞ்சில்
ஆசுவாசம் ஊற
விளக்கேற்றி,
தாள்தேடி
எழுதுகிறேன் மலர்ந்தபடி….
“இயமனுக்கு இன்று நன்றி”

சரிகள்
————

“இதுதான் சரி” யென்று இயம்புகிறேன் நான்… இல்லை
“இதுதான் சரி” யென்று
இயம்புகிறாய் நீ…..இரண்டும்
“பிழை” இதுதான் சரியென்று பிளிறுகிறான் அவன்….
“எல்லாம்
பிழை” இதுவே சரியென்று பேசுகிறான் வேறொருவன்.

எதுதான் பிழை?
எதுதான் சரி? இல்லாட்டில் –
அதுவுஞ் சரி இதுவுஞ் சரி யெனலா தப்பவழி?
புரியவில்லை;
சரியின் புதிர் விரைவில் அவிழுதில்லை!‘சரி’யிடம் நான்          பதில்கேட்டேன்.
சிரித்து அது சொல்லிற்று….    “அவனவனின் கொள்கைதனில் அவனவனின்வாழ்முறையில் அவனவனின் பின்னணியில்
அவனவனின் ‘சரி’ தங்கி
இருக்கிறது;
அதனாலே உண்மையிலே எது சரியோ
அது மறைய அவனவனின் அரசியல் தான் சரியாச்சுப்
புரிகிறதா” கேட்டதது!

புரிந்தாலும்…. “அது சரியோ”
அரித்திட்ட கேள்வியிலென் அரசியலா மேவிற்று?
சரியான நிசச் சரியை
செகம் எப்போ சாருவது?

சாக்கடை ‘வாசம்’
—————————-
அரசியலேன் சாக்கடை யென்றழைப்ப தென்று
அவர்கேட்டார்! “வீட்டுக்கு சாக்கடையே
இருப்பதைப்போல் நாட்டிலுள்ள கழிவை எல்லாம்
இடுவதற்கு அரசியல்தான் இடமாம்;” என்று
உரைச்சொன்னான் ஒரு அறிஞன்! ஓமோம் நாறும்
உலுத்தர்களின் உறைவிடமாய்…. மானம் விற்கும்
சிரிப்பிடமாய்… பொய், கறுப்புப்பணம், ஏ மாற்றல்
செழிக்கின்ற சேறாய்த்தான் மக்கள் ஆட்சி!

பேதமிலா வாழ்வமைக்க வந்தவர்கள்
நிறபேதம், இனபேதம், நில பேதத்தைக்
கூறுபோட்டுக் குட்டி போட்டுப் பிரித்துத் தாக்கி
குத்து வெட்டுப்பட,எங்கும் கோரக் காட்சி!
ஜாதிகளை உரசி….. எழுந் தீயை மூட்டி
சாராய நதிதிருப்பி, கள்ள வாக்கு
போடுவதில் புரட்சிகூட்டி… கூட்டாய்ச் சேர்ந்து
புதுமை செய்யப் போகிறதாம்… கட்சி ஆட்சி.

கதிரை யென்ற மூன்றெழுத்து மந்திரத்தை
கனவினிலும் செபித்து, அதற்காய்த் தவித்து, மாய்ந்து
எது செய்தும் ‘அதை’ அடையத் துடித்துப்…. பேய்தான்
இடந்தரினும் சேர்ந்து; கொள்கை தனைக்கிழித்து
சதிகளெனும் மதுகுடித்து சொந்த மண்ணின்
சனங்களின் மெய்த் தாகத்தை மறந்து…. “வென்று
விதிசெய்வோம்” என்று விளையாட்டுக் காட்டும்
வெருளிகளின் அரசியலுக் கெதுதான் கூற்று?

அது
——–
அந்தோ தெரிகிறது அது என்று சிலபேர்கள்!
அந்தோ சிரிக்கிறது அது
என்ற சிலபேரோ
சந்தோசங் கொள்கின்றார்! “தமக்குத் தெரியவில்லை…”
என்று சிலர்நின்று
அங்கலாய்த்துப் பார்க்கின்றார்!
எம்மை நோக்கி வருகிறது… இதோ கிட்ட வருகுதென்று
சும்மா ‘ஒருகணிப்பிற்’ சொல்லித்
தமைவளர்க்கும்
ஆரவாரக் குரல்கள் அடிக்கடி எழும்; ஓயும்!
அதனை விரும்பி அழைக்கவும் மனமின்றி
அதையழைப்பதாய் நடித்துள்
அழுகிறது ஒரு கானம்.

அதைப்பற்றிப் பேசின் – அழிவென்னும் ஒரு திக்கு.
அதைப்பற்றிப் பேசாட்டில் – அடி என்றும் ஒரு திக்கு.
“தூரத்தில் வழமை போற்தான் இருக்கு” என்று
சொல்கிறார்கள்
அந்தப் பொருளைச்
சரியாய் அறிந்தவர்கள்!

இந்தப் பொருள்வந்தால் எம் உயிர்க்கே ஆபத்து
சண்டை பிடித்தேனும்
சரிக்கட்ட வேணுமென்று
சிண்டு முடிந்தபடி சிலர்;
அந்த ஒரு பொருளை
விட்டு… “கிடைப்பதனை விரும்புவம் வா” என்று சிலர்!
“எட்டி அதைப்பிடிப்போம்”
என்றெழுந்தார் பலர்… தானாய்
“முத்தியபின் வரட்டும்” முணு முணுத்து வேறு பலர்!
சுற்றுமுற்றும் பார்த்தேன் நான்!
சுறுக்காய் அது வரவோ…..
வந்த அது பெரிதாய் மாற்றந் தனைத் தரவோ
எந்த அடையாளமும் இருப்பதாய்த் தெரியவில்லை!
என்றாலும் அதற்காக
ஏங்குமனம் தூங்கவில்லை!

முகம்
———-
எவரியக்க ஆடுகிறோம்? ஏன்பதறிகிலோம்.
‘எவர்கயிற்றை ஆட்டவைத்தார்? எதுமறிகிலோம்.
எவர்கள் போடும் தாளம்பார்த்து நாங்கள் போடுறோம்?
எவரின் பாட்டை எங்கள் பாட்டு என்று பாடுறோம்.?
எவர் சிரிப்பில் எம்முகம் மலர்ந்து பூக்கிறோம்.?
எவர் அழுகைக் காக நாங்கள் கண் பனிக்கிறோம்?
இவை அறிந்திடாமல் நாமும் அறிவு பெற்றதாய்
எமை நினைந்து பெருமைகொண்டு பேயராகிறோம்.

அவரவர்கள் தம் நலத்துக்காக எங்களில்
அன்பு கொள்வதாய் நடித்தரங்கிலேறுறார்
தவிக்கும் எங்கள் வாய்க்கு கானல் நீரைக் காட்டிடும்,
தருமர் “தாகம் தீர்ப்பம்” என்று சூளுரைக்கிறார்.
அவரவரின் பூச்சிரிப்புள் நாகம் வாழ்வதை
அறிந்திடாமல் நாமும்… நன்கு ஒத்து ஊதுறோம்.
அவரவர்கள் எம்மைச்சாட்டி தமை வளர்தபின்
அனாதையாவம், இதனைத் தேர்ந்திடாட்டி நாறுவம்.

எமது முள்ளந் தண்டை நெம்பு ஆக்கி நிமிருவோம்.
எமது இதயத் துடிப்பில் நாங்கள் எமை இயக்குவோம்.
எமது உணர்வை எமது ரத்தம் தனிலே கரைப்போம்.
எமது பாட்டுக்கேற்ற மெட்டை நாங்கள் போடுவோம்.
எம் இரசிப்புக்கு ஏற்ப நாங்கள் எதுவும் ஆடுவோம்.
எமக்குள் ‘அந்நியங்கள்’ பூந்திடாமல்…. பாடுவோம்.
எமை நடத்தும் அருவக் கை முறித்து நாங்களே
எழுந்து நிற்கும் நாளில் தானே வாகை சூடுவோம்.

சுயம்
———-

நாயாய் இருப்பதற்கு நான் தயார்தான்!
சோறுவைத்து
நாளும் அணைப்பவரை நக்கி; அவர் வருங்கால்…
வாலாட்டி;
அவர்களது மகிழ்ச்சிகளில் நான்துள்ளி;
சோகத்தில் அவர்களுடன் சுருண்டு விழிசிந்தி;

ராவு பகலெல்லாம் ‘காவற் துறையாக’
வீடுதனைச் சுற்றி
வேலிமீறும் ஆடுமாட்டை
ஓடித்துரத்தி; ஒரு பொழுது அவர்களுடன்
பந்தடித்தும் விளையாடி;
அவர்கள் உதைத்தாலும்
வந்து முதுகுரஞ்சி; பின் எந்தன் பாட்டில் ‘வெளிக்
குந்தில்’ அனாதையைப்போற் குறண்டி;
கடன் தீர்க்கும்
நாய் போற் கிடப்பதற்கு நான் தயார்தான்

அதற்காக
“வளர்ப்போர்க்கு மட்டுந்தான் வணக்கஞ் செலுத்தோணும்.
வளர்ப்போரின் வீட்டுக்கு மட்டும் உழைக்கோணும்.
வளர்ப்போரைச் சாடுவோரை வடிவாய்ச் கடிக்கோணும்.
வளர்ப்போர்கள் செய்வதெல்லாம்

‘சரி’ யென்றுரைக்கோணும்.
வளர்ப்போர்கள் சொல்லிவிட்டால்…
வாய்பொத்தி, வாலாட்டி,
குலைக்கோணும்,
வளர்ப்போர்கள் ‘வா’ என்றாற் போகோணும்.
வளர்போர்க்காய் என்னுணர்வை,
என் விருப்பை,
என் வாழ்வைப்
புதைக்கோணும்” என்று
புவிமக்கள் எதிர்பார்த்தால்….
நாயாய் அவதரிக்க நான் விரும்ப மாட்டேனாம்!

ஓன்றுரைப்பேன்
“வளர்த்தோம் நாம்” என்பவர்க்கு ஒன்றுரைப்பேன்.
மண்ணிலுள்ள மனிதன் நான்;
என் மானம் மலடில்லை;
நன்றியுள்ள மிருகம் நாய்; அது அடிமை ஜென்மமில்லை!

புலரும்
———–
படலைகள் எங்கும் பசிகள் தாகங்கள்
பலிகள்; இது என்ன நடைமுறை?
பருவகாலத்தின் உரு நிறம் மாற
படரும் போர்பேயின் நிழற்கறை.
குடைகள் இல்லாமல்….. தொடரும் மாரிக்குள்
குலையுமோ எங்கள் தலைமுறை?
குலவும் சோகத்தின் குடல் அறுத்ததனைக்
குதறச் சொல்; நல்ல வழிமுறை!

வருக நீ வந்து தொழுக; நம் தாயின்
வழியும் கண்ணீரைத் துடையடா!
வருடு; காயங்கள் ரணங்கள் ஆறட்டும்
மடியை தாலாட்டில் நனையடா!
சிறையிற் பூப்புக்கும்; சிலுவையிற் கூட
சிரிக்குந் தளிரென்று உணரடா!
தெருவில் ‘நாயாக’த்திரியும் மானத்தை
திரட்டித் தீயாக்க எது ‘தடா’?

புதிய மேகங்கள் உதயமாகுங்கள்
புனித தேகங்கள் நனையவே!
புயலின் வேசங்கள் கலைய ஆடுங்கள்
புலர்வில் கோலங்கள் வரையவே!
இதய பாரங்கள் இடியும் நாளொன்றில்
இதங்கள் ராஜாங்கம் புரியுமே!
இதழில் வேதங்கள் எழுதும் பூங்காற்றின்
இசையெம் நெஞ்சத்தை உரசுமே!

ஜெயபேரிகை கொட்டடா!
——————————————-
முரசறைந்திடு முரசறைந்திடு
முரசறைந்திடு தோழனே!
முதுகிலேறிய சிலுவை தூள்பட
முரசறைந்திடு வீரனே!
கர இரும்பிலே கனல் பிறந்திடுங்
கணம் வரை அறை சீலனே!
கரைபுரண்டு உன் விழி நதி…. துயர்
கரைத்திட அடி மேளமே!

இரு சுடர்களும் நடுநடுங்கிட
இடியென எழும் ஆர்ப்பிலே….
எழுகடல்களும் ஒலியடங்ணும்!
இருளும் அஞ்சணும்! சுற்றுற
புரி இறுகியே புவியும் நிற்கணும்!
புவியில் ஊன்றி விண்ணேறி நின்
கர இசை ஒலி கடவுள் மாரின் கண்
களைத்திறக்க முழங்டா!

ஊழியொன்றெழுந் தாடல் போலவும்
ஊதுலைத் தணல் போலவும்.
பேயலை புயல் பீற…. மின்னி ஓர்
பிரளயம் எழல் போலவும்.
பேயிரைச்சலில் வானும் மாறிட,
பிய்ந்த நம்மவர் பீடுற,
கூடி ஓர்குரல் வைத்துப் பேரிகை
கொட்டு கூற்றதும் அஞ்சிட!

கொட்டடா பறை கொட்டு எம்துயர்
கொல்ல அஞ்சிடும் தேவா… அக்
கூவலால் அரண்டெம் நியாயத்தின்
கூரைக்காணக் கை கொட்டடா!
கொட்டு; ஆட்டுற பேய்கள் அஞ்சித்தற்
கொலை புரிந்திடக் கொட்டடா!
கொட்டு இந்நிலம் எங்கும் ‘இன்பமே’
கொட்ட பேரிகை கொட்டடா!

காலத்தைக் கல்லில் வடி
——————————————
நாளைக்கும்….
எங்கள் நந்தவனக் கொண்டைகளில்
பூ பூக்கும்;
தென்றல் புனுகு பூசிப் பாடிவரும்!
இரத்தங் கசிந்து இரணமான கடல் கூட
புத்தம் புதிதாகிப் புறுபுறுக்கும்….. வழமைபோல்!
நீலம் கரைத்த கடல் நிலத்தைச் சலவைசெய்ய
நாளை ‘கதிர்ச்சோப்பால்’ தரைவெளுக்கும்.
தங்கவெயில்
கண்ணீர் நதிகளினைக் காயவைக்கும்.. ஆம் எங்கள்
காயங்கள் கூட நாளைக்கு மாறிடலாம்!
நேற்றையின்றை நினைவுபல
நெஞ்சுக்கு விடை தரலாம்.

எங்களது பேரர்,
அவர்களது பேர்த்தி பூட்டர்,
செங்களத்திற் தோய்ந்ததிந்தச் செம்மண்தான் என்பதனைப்
புராணக் கதைகளைப் போல்
படிக்கும் நிலைவரலாம்.
பனிமடியை விட்டுப் பாட்டனது காலடிமண்
தனில் மீண்டும் வந்து தடுமாறி வேரூன்றும்
‘கலப்புமொழி’ நாற்றெம்
கண்ணீர் நனவெல்லாம்
கனவென்று…. எங்கள் கதையை மறந்திடலாம்.
வேசங்கள் வாழ்ந்து ஈகங்களோ சோர்ந்து
சாபக்கேடு பல
நாளைக்கும் நீண்டிடலாம்.

‘காலம் எவருக்கும் கைகட்டி நிற்பதில்லை’

நாளைக்கு….. இங்கே நடக்குங் குழந்தைகட்கு
நேற்றை இழப்பும்;
இற்றை இரணகளமும்;
சாக் ‘கத்தி’ விளிம்பில் வாழ்வை நடத்தி நாம்
‘வனவாசம்’ மற்றும்
வடக்கிருத்தல் கற்றதுவும்;
தெரிந்திடணும்! பூமி எம் திசையின் நியாயத்தை
அறிந்திடணும்!
எங்கள் பெருங்கதையை ஆருரைப்பார்?
கவிதைதான் இதற்குக் கண்கண்ட ஆள்; சந்தக்
கவிதான் அரிப்படையாக் கல்வெட்டடா!
அதனால்
கவிஞர் எழு; இன்றைக்
காலத்தைப் பதித்தே செல்.

அதிகாலை அழகு
——————————
பஞ்சுமுகில் மேகம் பனித்தெளிக்க மண் மீது
கொஞ்சம் உறங்குகிற
கும்மிருட்டும் எழும்…. ஓடும்.
பிஞ்சுமலர் மொட்டில் பிறக்கும்; விரிகதிரின்
மஞ்சள் சிரிப்பெடுத்து
மண்தங்க நகை புனையும்.
குயிலெழும்பிக் கூவுங் குழல் கேட்டுப் பால் சொரிந்து
பசுக்கூட்டம் “பேஷென்று”
பாராட்டித் தலையாட்டும்….
அதிகாலை அழகருமை!
ஆம்…. இந்தக் காலையிலே
முகிலுக்கு ஆர்தான் முகங்கழுவி விட்டார்கள்?
அயல்குளிக்க ஆர்தான்
அமுதம் இறைத்தார்கள்?
இருளுக்கார் வெளிச்ச உடைமாற்றி விட்டார்கள்?
‘வெல்வெட் மலை போன்ற’
விருட்சத்தின் முதுகிலெல்லாம்
பச்சைகுத்தி விட்டார் பறந்தார்கள்?
புதுவாசம்;
கமழ்கிறது; காற்றுங் கவிபாடி நடக்கிறது!
புத்துணர்ச்சி மின்னப் புனல்மினுங்கித் துள்ளுறது!
தண்ணீரில் வைரம்
தகதகக்கச் செய்தது யார்?
வண்டுகளின் வாயில் வாத்தியங்கள் வைத்ததுயார்?
கழுவித் துடைத்துவிட்ட
கண்ணாடி போலிந்தப்
பொழுதைத் துலக்கியபின்…. பூகசங்கிப் போகாமல்
ஒவ்வோர் இதழ் திறந்த உத்தமனார்?
வகைவகையாய்
விண்ணில் நிறம்விற்கக் கிடக்கிறதே…… யாரந்த

வண்ண வியாபாரி?
மண்ணினிலே வியப்பென்னும்
பொன் கொழிக்க வைத்துப் புதிருக்குட் புன்னகைக்கும்
மன்னனெவன்?
நித்தம் மருவ எழில் வார்த்த அவன்
நிலவை உறங்கவிட்டு… நித்திரைக்குப் போயிருந்த
கதிரை எழுப்பிவந்து
கடமைசெய்யச் சொல்கின்றான்.
நீலநிற வானில் நிமிடத்துக் கொரு கோலம்
போடுகிறான்;
சந்தோசப் புழுகிற் சிறகடிக்கும்
பட்சிகளின் காதில் பார்முழுக்கச்
சொர்க்கமென்ற
செய்தி அறிவித்தான்! திரியவைத்தான்!!
அன்னவனை….
கண்ணில் பனித்துளியைக் காவுகிற புற்களது
கண்ணீர் துடைக்கவைத்துக்
காப்பாற்றும் வள்ளலினை….
புழுவுயிர்க்க; சின்னப் பூச்சி பூண்டு, பூமியையும்
தொடர்ந்துழைக்க விட்டு
சூட்சுமமாய் நிற்பவனை….
புலர்வினுக்குள் நீயும் புரிந்தாயா கேட்கின்றேன்?

அதிகாலை அழகு அருமை
அதேபோல
அதிகாலையை உனக்கு
அறிவிப்பேன் புகழ் அருமை!
புதியவனே… இந்தப் புலர்வை ருசித்தபடி
பதிகமொன்று பாடிப் பதந்தொடவா!
இதுன் கடமை.

இசையே
————–
நரம்புகளில் நாணேற்றிச் சுருதி கூட்டி
நாதமெழ வைக்கின்றாய்! செவியிற் பாய்ந்து
இறுதி அணு வரைபரவி அவை இலயமாய்
இயங்கவைத்தாய்! எழுச்சிதந்தாய்! இதயம் என்னும்
சிறுகுடத்தில் இனிமை மிகு அமுதம் ஊற
சிலிர்ப்பூட்டித் தூண்டுகிறாய்! இசையே நீதான்
உருக்குலைந்த ஊர்திருத்தும் மருந்து ஆனாய்

உலகத்தின் மூத்த குரல் நீயே…. காற்று
உற்பத்தி செய்த மொழி நீயே… ஆற்றில்
அலையினிலும் உன்அசைவே! செடிகொடியை
ஆடவைக்கும் உன்புகழே! குயில்கள் தொட்டு
பலவகையாய் உயிர்களுள்ளும் படருவாயே!
பலவகையாய் உருவெடுத்து உலவு வாயே!
“ஒழுங்காக வாழ்ந்ததினால் உயர்வு”! என்று
உணர்த்துகிற புனிதமே! நீ உயிரின் மூச்சே!

குளிர் மெல்லப் பரவியுள்ள இரவில், மோனம்
குடியிருக்கும் ஒரு பொழுதில்…. விழிகள் மூடி….
வழியும் உனைப் பருகுகையில் யாரோ என்னை
மயிலிறகால் வருடுதல் போல் இருக்கும்; நாத
நெளிவுகளும் சுளிவுகளும்…. துயரின் சிக்கல்
முடிச்சவிழ்க்கும்! மனச்சிறகு விரியும்! வாழ்வின்
முழுமையதன் பொருள் விளங்கும்! இடர்கள் செய்ய,
முயலாத… மென்மையாயென் சிந்தை மாறும்.

சோக கீதம்
——————–
ஏதோ ஒரு பாடல் தூரத்தில் கேட்கிறது!
சோகக் குயிலின் சுரங்கலந்து
கண்ணீரின்
ஈரங் கசிந்து அந்த இதயராகம் கேட்கிறது!
யார் படித்தார் இதனை?
யௌவன இவ் இரவைச்
சோக நெருப்பில் சுடும் இதனை யார் இசைத்தார்?
காற்றும் உறைய….. என்
கனவும் உறைய… பீறும்
ஊற்றுக் கவியினாலும் உவமைசொல்ல இயலா… நான்
தோற்கவைத்த இப்பாட்டை
சுதிசேர்க்கும் மாயன் யார்?

வேதனையை இசைமொழியில் விபரித்து
தன்துயரை
நாமும் பகிரவைத்த நாதப் பிரம்மா யார்?
மீண்டும் அதே பாட்டு;
மிதந்து வரும் ‘அது’ ஓர்
காலக் குரலா? கனவுகளின் ஏக்கத்தில்
வாடுங் குரலா? வரலாற்றால் மிதிபட்ட
ஏழைக் குரலா? கடந்துபோகும் யதார்த்தத்தின்
சாரக் குரலா?
சரியாய் விளங்காத
போதும் அதுவோர் புண்பட்ட இருதயத்தின்
நாகக் குரலென்றென்
தமிழுக்குப் புரிகிறது!
கேளுங்கள் தோழர்காள்…. உமக்கு எது புரிகிறது?

இறைவனிடம் கேட்டேன் இறகு!
—————————————————
மெல்லச் சிறகடித்து மேகத்தில் முக்குளிக்கும்
புள்ளாகிப் போக ‘பொடி’ எனக்கு – கொள்ளையாசை
வானில் பறக்கும் மணிக்குயிலைக் கேட்கின்றேன்
ஏன்மனிதன் ஆனேன்நான் என்று?

பஞ்சாய் இறகும்… பறந்துயரப் பூஞ்சிறகும்
குஞ்சு பொரிக்கும் குதூகலமும் – அஞ்சாமல்
விட்டு விடுதலையாய் வெய்யில் குடிப்பதுவும்
எட்டவில்லை யேடா எனக்கு?

என்ன சுதந்திரமாய் எப்பாட்டும் பாடிடுவேன்.
தின்பேன்; நினைத்தால் திசையளப்பேன் – கண்மூடித்
தூங்கென்று சொல்லத் துரைகளில்லாச் சிட்டாக
ஏங்குறதென் உள்ளம் எரிந்து.

ஆலில் ஒரு வீடு, ஆ… முகிலில் பள்ளியறை,
நீலக் கடல்…. பூங்கா, என்றிணைத்து – வாழ்வில்
இடத்துக்காய் மாயும் இடர்…. அற்ற கொக்கின்
நடந்தேடும் எந்தன் தவிப்பு.

தான் வாழச் சொந்தச் சகோதரரைக் கன்னமிட்டுக்
கோனாகும் கொள்கை குருவியிடம் – நான்காணேன்.
கூனிக் குறுகுதுளம்! கூடிக் கரைந்துண்ணா
ஈனப் பிறப்பெடுத்தேன் ஏன்?

“வெள்ளைச் சிறகினைப்போல் மென்மை உளப்புறாவே”
கள்ளன்… உடல்நிறம்போல் நெஞ்சடைந்தேன் – சொல்லில்
வடிக்கவொண்ணாத் தாழ்வுயர்வு மானிடர்க்குட் செய்த
துடக்கனானேன் என்னைத் தொலைத்து!

பேதங்கள் அற்று பெரிசு சிறிசழித்து,
சாதிச் சழக்கறுத்து….. சன்மார்க்கம் – தேட
பரிணாமப் பாடம் பறவையிடம் கற்போம்,
இறைவனிடம் கேட்டேன் இறகு.

நட்பு
——–
வெளியே மழைத்தூறல் விடாமற் பொழிகிறது.
துளிகள் மனதைக்
கழுவி நகர்ந்ததுவாய்ச்
சிலிர்க்கிறது மேனி! இடிகள் ரெண்டு எதையெதையோ
முழங்கி விவாதிக்க
மின்னல்… விளக்கேற்றி
எத்தனையா தேடுகுது?
எழுந்து கொண்டேன்!
இம்மழைக்குள்….
ஏந்தனுடன் நித்தம் இரவிரவாய்க் கதைக்கின்ற
விண்மீன்கள் நனைந்து விறைத்திடுமோ?
நடுநடுங்கிச்
சன்னி பிடித்துத் தளர்ந்திடுமோ?
அவைபாவம்!
நட்பென்று எவருமற்ற தனிமைக் கொடுமைவிட்டென்
முட்டறுக்க எனக்கு முழுஉதவி
செய்பவை அவ்
விண்மீன்கள்;
அவையிப்போ நனைந்து விறைக்கையிலே
என்னென்று நான் பொறுப்பேன்?
இதோ நானும் நனைகின்றேன்.

காதலியாய் வந்த காற்று
—————————————–
வேர்வைப் புழுக்கத்தில் வெந்து நசநசென்று
ஈர அரிப்பில் எனைவெறுத்து – வாடித்
தவித்தேனே! வந்தாய்; தலைதுவட்டி மேனி
அவிவகற்றி விட்டாய் அணைத்து.

இதமாய் அழைத்தாய் இழையிழையாய்ப் ‘பின்னி’
பதமாய் எனைவருடிப் பாய்ந்தாய் – இதயத்தின்
ஓவ்வோர் கலவியர்வை ஒற்றி எடுத்துமீண்டாய்!
திவ்யமணந் தந்தாய் சிரித்து.

களைப்பில் உடல்நீவிக் கண்மலர்தித் தூங்கும்
குளுமைதந்தாய்! வெப்பக் கொடுமை – களைந்துடலம்
புல்லரிக்க எங்கும் புளகம் பரப்பி ஒரு
மெல்லிசைபோற் சூழ்ந்தாய் மிதந்து.

கவரிவீசிக் கண்ணீரைக் காயவைத்தாய்! பூவால்
அவிசொரிந்தாய் நான் ‘பா’ அனலை – நவவடிவில்
மூட்டவொரு மூலமானாய்! மூச்சினிலும் மென்மைவைக்கத்
தாட்டதெனை உன்மென் தனம்.

மனசிதத்திற் தோய்ந்து குயிலாகக் கூவ
நினைவு மயிலாய்நின் றாட – கனவு
வசந்தச் சுகந்தத்தை வார்க்கவைத்தாய்! உள்ளப்
பசிதணித்தாய் சுற்றிப் படர்ந்து

என் அன்புக் காதலியாய் என்இந்தக் கோடைவாழ்வின்
துன்பத் திருந்துமீட்கும் தூவடிவே – தென்றல்
எனுமன்புத் தேவதையே! என்றும் நீ வந்தென்
நனவுவில்லில் ஏற்றுவியோ நாண்?.

துறவு
———
காகங்கள் மழையிற் ‘கரைந்தபடி’ சென்றுளன!
தன்பாட்டிற் தூறல்
சடசடத்துக் கொட்டுகுது!
மழையில் நனைந்து மனஞ்சிலிர்த்து
மரமெல்லாம்
இழகிக் குழைந்து இசைந்துளன.
பார்த்திருந்தேன்!
இடையிடையே இடியோடு வலுக்கிறது வீண்பொழிவு!
மண்கரைந்து…. வெள்ளத்தை
மணம் புணர்ந்து போகிறது!
பட்டப் பகலினிலும் ‘பளீர்’ மின்னல் கண்மணிக்குள்
கத்தி புகுத்துகுது!
கசியும் இயற்கையிலே
எல்லாம் முழுக, இரையும் மழைதவிர
மௌனத்தில் யாவும் உறைந்து குளிர்ந்து நிற்க,
மழையின் இழைபிடித்து
இழைக்கிறது என் மனது!

அந்த இழையில்…. அலையும் மனசை நானே
தந்திரமாய்க் கட்டிவிட்டால்….
தரணியிலே என் பிறப்பு
மோட்ச முத்தி காணும்;
மௌனத்திற் சாந்தியுறும்!
மெய்மறந்து இந்த மேன்மையான இயற்கையுடன்
மெய்கலத்தல் ‘நிர்வாணம்’
‘ஞானம்’ அதே ‘தெய்வீகம்’

எழுக!
———–
அதிகாலை தனைமேலும் அழகாக்கலாம் – தோற்று
அசையாத மலையின்கண் நொடிகேட்கலாம்.
புதுப்பூவின் பூப்புக்கு தினவாழ்த்துக்கள் – சொல்லி,
புலம்பேரும் முகில்தங்க இடம் நல்கலாம்.
கரைமீது நுரையாக விழிசிந்தியே – கத்தும்
கடலுற்ற துயர்போக்க வழக்காடலாம்.
வெறிபோட்டு வருகின்ற புயல் வீழ்த்திநாம் – பூண்டின்
விரலுக்கும் வலிக்காமற் தொடச்சொல்லலாம்!

நிலவூற்றும் நறையுண்டு நரைபோக்கலாம் – நித்தம்
நெருப்பாகத் தகிக்கின்ற உளம் வாங்கலாம்.
கலையாடிக் களமாடிக் கறைபோக்கலாம் – தூசுக்
ககனத்தை வடிவாக்கிப் புதுசாக்கலாம்.
இவையாவும் நிறைவேறும்… எழில் வாழ்க்கையை –
வாட்டும்
இரணம்மாற மருந்தாகும் துணிவோங்கினால்!
வீதி கூட தனைமாற்றும்; அவதாரம் போல் – மாற்றம்
விளைக்கின்ற இளவெள்ளம் அணைதாண்டினால்!

வழி
நெஞ்சில் எரியும் நெருப்பொன்றே மிச்சமென
வீஞ்சும் மழைக்குளிரில் முக்குளித்தோம் – அந்த
நெருப்பு அணையாமல் நெய்விடுதல் தானெம்
வரலாற்றைக் காக்கும் வழி

நனைதல்
—————-
என்ன இனிய மழைக்காலம்? எந்தனது
எண்ணத்தை நீராட்டி
எல்லாக் கலங்களையும்
குளிர்த்தி இதயத்தைக் குளிரால் நிரப்பி… என்
விழியில் பனிவிதைத்து மீட்டி
என் நரம்புகளில்
இசைபிறக்க….. இடியால் மிருதங்கம் கொட்டி… நற்
‘பளீர்’ மின்னல் மின்னி
படமெடுத்துப் போகிறதே…..
என்ன இனிய மழைக்காலம்?
தரையெல்லாம்
வெள்ளம் பெருகி விறைக்கும்; செடி கொடிகள்
ஈரஞ் சுவறி இருக்கும்: துளிச்சாரல்
தூறும்…. இதப்பன்னீர் தெளிக்கும்; சுகம் முளைக்கும்!
என்ன இனிய மழைக்காலம்?
இம் மழைக்குள்
சன்னமாய்த் தோய்ந்து ஜலக்கிரீடை செய்வதுவும்,
சின்னக் குடைக்குள்ளே சிதறுந் துளிதழுவ;
ஆடை அரைகுறையாய் நனைய;
சைக்கிளேறி
சனங்குறைந்த ரோட்டில் சத்தமிட்டுப் பாடுவதும்,
அண்ணாந்து வானம் அவிழ்க்கும் அமுதத்தைக்
கண்ணார, மூக்கால்
காதுகளால், வாய் கரத்தால்
தின்று திளைப்பதுவும் எனக்கு விருப்பம்; ஆம்…..
அதைவிடவும் நீயும் நானும்
விரல் கோர்த்து
உதிரும் மழை நனைந்து உல்லாசம் சுகிப்பதுவே
எனக்கு மிகவிருப்பம்;
இளமழையே தா நெருக்கம்!

நெஞ்சுக்குள் பூத்த நிலவு
—————————————–
நெஞ்சைக் கனியவைத்தாய் நீ; உந்தன் புன்னகையில்
கொஞ்சும் கொலுசொலியைக் கூட்டிவந்தாய் – பஞ்சு
விரற்சிவப்பில் கண்முன் விடிவுகாட்டி என்னைப்
பிறக்கவைத்தாய்…. பூவாய்; பிணித்து!

ஏதோ திசைநடந்த என்னைத்… தடுத்தாண்டு
பாதைகாட்டி; உன்னுட் பதிவைத்து – போதாகி
நானும் மலரவைத்தாய்! நாடகமா ஆடிவென்றாய்?
நானடிமை ஆனேன்; நடித்து.

கண்ணில் ஒளிப்பிழம்பைக் கண்டேன்! அடிகுயிலே
உன்மொழியில் கோடி உணர்வுகற்றேன் – மண்ணின்
மகத்துவமே…. உன்னாற்தான் மாண்புபெற்ற தென்று
புகழ்ந்தேன், இதிலில்லை பொய்.

பாத கமலத்தில் பள்ளி கொள்ளும் ஓர்வண்டாய்ப்
போதைதலைக் கேறிப் புலனழிந்து – மேதினியில்
பேரின்பம் காணவேண்டும்; பேதாய்நீ தெய்வதம்போல்
ஓரின்பம் என்றேன் உணர்ந்து!

வண்ண நிலவுன் வடிவொளிர…. என்னாலே
என்ன தரமுடியும்? ஏதுமில்லை – என்னுடலை
எண்ணை எனஉருக்கி ஈவேன்; எனை எரித்து
மின்னு; மகிழ்வேன்யான் வெந்து!

உயிரின் ஒளியாய் உணர்வின் இசையாய்
பயில்வித்தாய் பாசம்; பலமே! – துயர்மறக்க
வைக்கும் பரவசமே! வாழ்வின் அதிரசமே!!
மொய்ப்பாய் எனை; கொல்வாய் மூப்பு!

திருப்தி
———–
நல்ல மழைக்காலம்!
நரம்புகளில் குளிர் நுழைந்து
துள்ளுகையில்… மின்சாரம் நூர்ந்த இளம் இரவு!
சுற்றயலைக் கூதல் துளைக்குமொலி!
மரஞ் செடி பூ
நெற்றி விறைத்துநிற்க
நீந்தி வரும் பனிக்காற்றில்
உயிருறைய வைக்கும் ஒருநாதம்!
சுதிசேரத்
தவளைகளின் ‘தாபச்சங்கீதம்’!
பூட்டிவைத்த
ஜன்னலிலே சாரல் சந்தமெட்டுக் கட்டையிலும்
சின்னத் துளிகூட ஒழுகாச் சிறுவீடு!
கள்ளச் சிரிப்போடு கரையும் மெழுகுதிரி!
சூடாறத் தேநீர்!
சுகமே…! நீ என்னருகில்!

“மௌனமான நேரம் – இள
மனசிலென்ன பாரம்”

என்று அறைக்குள்ளே இதமூட்டும் மென்மைஇசை!
உன் கூந்தல் வாசம்!
உனது முணு முணுப்பு!
பின்னல் வழியில்… பிரமிப்பு… கதகதப்பு!
போதும்… இவைபோதும்;
வாழ்வு நிறைவதற்கு!.

கரைந்துருகல்
———————–
வார்த்தைகளால் மட்டுமன்றி மனசால், இதயத்தால்
நீ என்மேல் வைத்திருக்கும்
நிச அன்பை எடுத்து உரை!
தேவைகளும் இலாபமதும் உறவைத்தீர்மானிககும்
வேச உலகில் நீ
மெய்யுறவு தனை நல்கு!
காமம் களைத்தபின்பும் ஆசை அலுத்தபின்பும்
மோசங்கள் போகாமல்
மூச்சுள்ள வரை நீளும்
பாசத்தின் வேர்களினை எனக்குமட்டும் நீ காட்டு!
காம சாத்திரங்கள் கரையறியாப் பெண்மைபற்றிப்
பேசுவதை பேசட்டும்;
பெண்ணே நீ மென்மை ஆளும்
தேசம்; இதை எனக்கு நரை முதுமையிலும் தெளிவி!
சின்னத் துயர்க்கல்லாற் சிதறவல்ல….
பளபளக்கும்
கண்ணாடி அல்லடிநம் கனவு;
அது அசையாத்
திண்ம இரும்பென்றென் சிந்தைக்கு மட்டுஞ் சொல்
சில்லறை நோ, வலிகள், சேதங்கள், போட்டிகளைக்
கெல்லி எறிகையில் நம்
கரங்காய்த்த போதும்… நாம்
மெல்லுணர்வில் உருகோணும் மெழுகாய்;
நீ தணலேற்று!
காவியங்கள் சொல்லு(ம்) நெறி,
சினிமாவின் முகமூடி,
வீதிகளில் இளமைதூண்டும் வெறி,
இவைகள் தனைத்தாண்டி,
காதலே வாழ்வாகக் கசிந்து கண்ணீர் மல்கி
நமைமறந்து பேரின்ப் நாம் காண;
உயிர் சுமக்கும்
சுமைபகிர;
ஏழேழு ஜென்மம் இம்மண் மடியில்
சுவர்க்கந் தனைக்கண்டு சொக்க;
நிச மோட்சமெட்ட
மனிதனுள்ளே வாழுந் தெய்வீகம் தனைத் தெரிந்து
‘புனித நிலை’ வாழ்வின்
பொருளைப் புவிக்குரைக்க,
வணக்கத்தக்குரியவளே….
வா… உன்னை வரமாய்த் தா!

உயிரில் இட்ட கோலம்

என்னுள் உயிர்முற்றம் கூட்டி மெழுகி உன்
சந்தனக் கைகளினால்
போட்டாய் எழிற்கோலம்.
அந்தக் கோலம் உன் அகக்கோலம்
என் மனதைச்
சந்நிதியாய் மாற்றியது.
தினம் புனிதம் ஊட்டுகுது!
உடலுக்குத் தெரியாமல் உட்புகுந்து எவ்வாறென்
மனங்கோவிலாக வைத்து
மாவிளக்கு ஏற்றிவிட்டு,
எதுவும் நடவாத தாய் எதிரில் போற.. பெருஞ்

சதிபுரியும் உனக்கென்ன
தண்டனை நான் தீர்க்கிறது?

மூச்சானாய் என்னுள் முளைத்து

எந்தன் இருதயத்தை இருகையாற் பிசைவதற்கு
எப்படி முடியுதுன்னால்?
என் இரத்த நாடிகளை
கால் விரலின் இடையே கசக்கி நசிக்கின்ற
அலட்சியம் கற்றதெங்கே?
என் சுவாசப்பைகளினைக்
கடதாசியாய்க் கிழித்துஇ மூச்சுக் குழல்முறித்துப்
புல்லாங்குழல் ஊதும்
பிள்ளைமனம் பெற்றதெப்போ?
தொண்டைக்குள் முள்ளாய்த் துருத்திநின்று
பட்டினியில்
என்னுயிரை வாடவிட்டு
எவற்றை “இரை ம{ட்கின்றாய்”?
உணர்ச்சி நரம்புகளை உரசித்தீப் பற்றவைத்து
இரசிக்கும் நீ இராட்சசியா?
இளமையொரு காட்டாறாய்
எனை அலைக்கும் போது கரையில் இருந்தபடி
கைகொட்டிக் குதூகலிக்கும்
கல் நெஞ்சம் இளகாதா?
கனவுகளால் என்னுள் கர்ப்பமொன்று நானடைந்தேன்…
கனவையுரு வாக்காமல்
‘கத்திமௌனம் வைத்தாய்’ ஏன்?
உன் நினைவால் மட்டும் உயிர்துளிர்த்துக் கொள்ளுமெனை
உன்பாரா முகம் நித்தம்

உருக்குலைத்து வைக்கும் உலை!
காதல் கவிதையுளும் எனைஇன்று
அடைவைத்தேன்,
நாளை நான் பொரிப்பேனா?
கூழாகிப் போவேனா?
நீதாண்டி இவற்றை நிர்ணயிக்கும் வெப்பநிலை.

 

ஜென்ம ஈடேற்றம்

எந்தனது ஜென்ம ஈடேற்றம்…
உன்கவிதைக்
கண்களுக்குட் சிக்கி கரச்சூட்டிற் பனியாகி
என்பிளகி உந்தன்
இதயத்தை நிறைத்தபடி
உன்நாடி நாளத்துள் உலவி
சில நொடிக்குள்
உன்னுயிரின் நீளம் உயரம் அகலமதைக்
கண்டு கலந்துருகி இறுகிக்
கருத்தரித்து
உன்னோடு வாழும் ஒருநாளிற் தீருமென்பேன்!
என்றந்தத் தேன்நாளும் எனையணுகும்?
அதுவரைக்கும்
வந்துபோகும் நாளெல்லாம்
கரிநாளாய் எனைவறுக்கும்!

 

வியப்பு

நிலவு சொரிகையிலே நிலமமர்ந்து உந்தனது
விழிகளின் பொருமையெண்ணி வியந்தேன்.
முகிலொன்று
பையவந்து மூட படிகநிலா வொளி மறைய
வையமிருளாச்சு;
என்னுள் மின்னலொன்று வெட்டியது.

“நிலவைவிட உன்விழியின் ஒளிப்பெருமை மிகவியப்பே”

ஏனென்றால்…..
எந்தத் துயர்க்கவலை முகில் மறைக்கும்
போதும் அதன் பிரகாசம் குறைந்ததில்லை!
புகழ்கின்றேன்.

உவமை

பிரம்மன் ஒரு பெருங்கவிஞன்
அவன் எழுதிப் பிரசுரித்த
கவிதைகளில் எனைக்கவர்ந்த மிகச்சிறந்த
கவிதை நீ!

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு மட்பாண்டம்;
வனைவது கடினம்…. ஆனால்
போட்டுடைத்தல் சுலபம்! புரியாத வாழ்க்கை ஒரு
அந்நியனின் பாசை;
அறியாமல்… அறிந்ததுபோல்
புன்னகையால் மழுப்பிப் புகைகிறோமே!
வாழ்க்கையொரு
தேன்கூடு..; துன்பமெனும் தேனீக்களை விலக்குஞ்
சூக்குமந் தெரிந்தால்
சுவைத்தல் மிகச்சுலபம்!
வாழ்க்கையொரு ஓடம்; வளக்காற்று வீசாட்டில்
ஆழ்கடல் போற் தனிமையிலே
அசையாமல் நின்றுவிடும்!
வாழ்க்கையொரு காட்டுவழி; வழிமாறிப்போனவர்கள்
மீண்ட வரலாறு மிகக்குறைவு என்பதனால்!
வாழ்க்கையொரு தூண்டில்;
எதிர்பாராத் திமிங்கிலமும்இ
காத்திருந்தால் சேர்த்துவைத்த புழுகூடத் தொலைவதுவும்இ
நிகழ்வதனால்!
வாழ்வோர் நெடுவானம்..; பலநேரம்
வெறுமைகள் மட்டும் விரிவதனால்!
வாழ்க்கையொரு
புல்லின் நுனியிலே பூத்திருக்கும் பூ..; மகிழ்ச்சி
கொஞ்சநேரம் மட்டும்
மலர்ந்து சிரிப்பதனால்!
வாழ்க்கையொரு போரரங்கம்; வெற்றி, வடு, உட்காயம்
ஆழப் பதிந்து சா வரை
நினைவில் நிற்பதனால்!
வாழ்க்கையொரு மைதானம் ; போட்டியிடும் போதுமட்டும்
ஆரவாரங் கூடிப் பின் சும்மா கிடப்பதனால்!
வாழ்க்கையிந்தப் பெரும்பூமி;
மாறி மாறி மாற்றந்தந்தும்
சாரமது மாறாதோர் சாலையிலே சுற்றுவதால்!
இன்னுமின்னும் இன்னுமின்னும்
எத்தனையோ உவமைகள்….
என் செய்ய? வாழ்வை வரையறுக்க முடியவில்லை.

வரையறைக்குட் சிக்காது
வசதியாய் அமர்ந்து கொண்டு
முறைக்கிறது வாழ்க்கை;
மூசிமாயும் எமைப்பார்த்து!

என்னுடைய தானியங்கள்

என்னுடைய தானியங்கள் எங்கே நான் தேடுகிறேன்.
என்னுடைய தானியங்கள்
இப்போது எங்கிருக்கும்?
என்னுடைய தானியங்கள் எந்நிலையில் அங்கிருக்கும்?
என்னுடைய தானியங்கள் எங்கேநான் தேடுகிறேன்.

எந்த வயலில் எவனிடத்தில்
அது விளைந்து
எந்தனது கைகளில் என்றைக்குக் கிடைத்தெனக்குச்
சொந்தமென மாறிவிடும்?
சொந்தமான பின் அவற்றில்
எத்தனைதான் என்செல்வம் பெருவைக்கும்?
நான் சுவைக்க
எத்தனைதான் எனிற்சுவறும்?
எத்தனைதான் தொலைந்துவிடும்?
எத்தனைதான் என்கையாற் பகிரப் பிறர்க்காகும்?

“தானியம் ஒவ் வொன்றினிலும்
கடைசியிலே… அதுவாய்ப்போய்ச்
சேருமிடம் பொறித்துளது” என்கிறதே…. திருமறைநூல்;
எந்தனது தானியங்கள் எவை?
எனக்காய்ப் பிறந்தவைகள்
எப்படியும்(?) என்கைக்குச் சேரணுமே
எங்கு அவை?

?

விடுதலையைப் பெற்று விட்டதுவா?
இது வரையும்…..
உடலிற் சிறைகிடந்து
கோழி உரிபட்டதன் பின்
காற்றினிலே விட்டாத்தி யாகக்
கதை பறைந்து
ஓர்சிறகு விருப்பம் போல்
ஊரூராய்த் திரிகிறதே….
விடுதலையைப் பெற்று விட்டதுவா…?
கேட்கின்றேன்!

வாழ்வோடேன் வழக்கு

ஒரு பயணம்… காற்று வளத்தாற்… சுலபமெனில்
திரும்பி வரும்பயணம்
எதிர்க்காற்றிற் சிக்கிவேர்த்தல்
இயற்கை;
எனினும் பயணங்கள் முடிந்தனவோ?
சுகத்தின்பின் துன்பம்
தொடர்கதையாய் நீண்டிடலே…
யதார்த்தம்; எனில்
வாழ்வை முறைத்தல் முறைதானோ?

உணர்தல்

பாலைப் பொழிகிறது பனையின் மேல்…. படிகநிலா!
வானம் துடைத்து
வடிவாய் மினுங்கிறது!
வீசுகிற காற்றினிலே விசமம்; ஆம்
குளிர் கலந்துஇ
பேசிக் குசுகுசுக்கும் பெட்டைகள் போல் நகர்கிறது!
காற்று நகர்வில் கசிந்தொழுகும் நாதத்தில்
தாவரங்கள் தம்பாட்டிற் தலையசைக்க
என்முன்னே
மோன இரவு முழுகிடுது இன்பத்தில்!
தலையாட்டி
இடையிடையே ‘சபாஷ்’ சொல்லும் இலை….உணர்வை
அவதானித்தேன்;
அவற்றின் அனுபவத்தை என்வரிகள்
வருணிக்க முடியாது!
வருணிக்க வேண்டுமெனில்
நான் மரத்தை உணரவேண்டும்;
மரமாய்நான் மாறவேண்டும்.

நிலைபேறு

ஆஸ்த்திகனும் வாழ்ந்தான்; அவனைப் பழித்தெதிர்த்த
நாஸ்த்திகனும் வாழ்ந்தான்;
நானென்று தலையெடுத்த
ஆணவனும் வாழ்ந்தான்; அடிமையாகிப் பிறனைநம்பிப்
போனவனும் வாழ்ந்தான்;
பூவுலகின் தத்துவங்கள்

“ஒவ்வொன்றுக்கும் தான்தான் உடைமை”
என்று கொள்கைபேசி
நின்றவனும் வாழ்ந்தான்;
நினைத்த போது இச்சைதீர்த்துக்
கொண்டவனும் வாழ்ந்தான்;
“கூறப்பா” இவர்களெல்லாம்
வாழ்ந்தார்கள் தான் ஆனால், இவர்களிலே ஆரார்தான்
வென்றார்கள்?
இதற்கு விடைதேடு; காலத்தில்
நின்று நிலைப்பவரின் நிசப்பாதை அதைச்சேரு!

இரக்கம்

சின்ன மழையிற்கே சிலுசிலென்று மண்குழைந்து
பசையாகும்!
வெள்ளம் பசி கொண்டு வெப்பத்தை
அள்ளியுண்டு விட்டு அப்படியே அவ்விடத்திற்
பள்ளி கொள்ளும்!
மண்ணுட் பரவிவாழ்ந்த பூச்சி புழு
வேறு வழியின்றி வெளிக்கிடும்!
ஆம் வெள்ளமற்ற
ஈரஞ் சுவறாத இடம்நோக்கிப் படையெடுக்கும்.

இன்றும் வான் ஓர்பாட்டம் இறைத்து
என் ஊர்முழுதைச்
சங்கிராந்தி ஆட்டியது!
தாரைதப்பட்டையுடன்
கடல்குடித்த வானம் கரகமெடுத் தாடியது!
கொடுகிக் கிடந்துவிட்டுக்
கொஞ்சம் மழை இரசிக்க
வெளிவந்தேன்;
தூவானம் சுகங்கேட்டு நுள்ளியது!
ஈரம்என் காலிரண்டுள் ஏற… உடல் சிலிர்க்கச்
சாரத்தினுட் புகுந்து தரை பார்த்தேன்!
கோலமிட்டு
மண்புழு ஒன்றென் விறாந்தைக்குள் வருகிறது!
ஊர்ந்து…, அரைந்தரைந்து,
உடன்… வெப்பக் கதகதப்பை….
உயிரிருப்பை….
தேடி உயிர்துடிக்க வருகிறது!
எப்படிக் கதவடைப்பேன்? என்றாலும் ‘மனச்சகுனி’
வென்றிட
அதைக்காலால் விருட்டென்று நிலத்துக்கே
தட்டிவிட்டு வந்துவிட்டேன்!

பின்…வெய்யிற் சாறொழுக…
பூமி கரமுரஞ்சிப்
புத்துயிர்க்க,வெயில் குளித்துக்
குளிர்காய்ந்தேன்!
முற்றத்தில் குற்றுயிராய் எறும்பு மொய்த்து
மண்புழு கிடந்தது, என்
மனம் எரிந்தே போயிற்று!

காலமே பதில் சொல்

அந்தத் தவளை அதுவரையும் ஈசல்களைத்
தின்று சுகத்தில்
திளைத்தபடி நின்றதுதான்!
கண்டுவிட்டுப் போனேன் கடந்து!
திரும்பி…இஏதோ
சிந்தனையில் மிதித்தேன்; ‘திடுக்’ என்றென்
கால்நசிப்பில்
சம்பலாகி அத்தவளை சிதறியது!
குடல் சிதைந்து
வயிறு பிளந்துஇ வாய்கிழிந்துஇ
நொடிப்பொழுதில்
உயிரிழந்தும் போச்சு; என்
உள் ஏதோ குத்தியது!

எப்படி அக் கணப்பொழுதில்
எனைமறந்து நான் மிதித்தேன்?
எப்படி அக் கணத்தில் அத் தவளைபற்றி
நான் மறந்தேன்?
மிதித்த நொடிப்பொழுது
விரைந்தெங்கோ போயிற்று!
மிதித்த நொடி; தவளை உயிருமெங்கோ ஓடியது.
மிதித்த நொடிப்பொழுது மீளாது.
என்காலில்
மிதிபட்ட தவளையுயிர் மீளாது.
ஆக… நானும்
மிதித்த நொடிப்பொழுதில்
‘விதி’ என்னை ஆண்டதுவோ?
மிதித்திடுமுன் தவளை விரையாமல்…. என்காலில்
மிதியுண்டு போச்சே….
விதி அதையும் ஆட்டியதோ?
எனக்கும் இதுவரைநான் அறியாஅத் தவளைக்கும்
என்ன தொடர்பு?
ஏன் எமக்குள் சாத்தொடர்பு?
நானோர் கருவிதானோ?
கீதை சொன்ன அறமோவிது?
ஏன் அதனை இறக்கவைத்து எப்படியோ பழிஏற்று
நானுள்ளேன்!
இதற்குச் ‘சமனான எதிரான’
மறுதாக்கம் ஆர்மூலம் வருமோ? ‘நான்’
மிரள்கின்றேன்.
என்செயலைத் தாண்டி
எனையியக்கும் காலத்தைக்
கண்டு கொண்டேன்!
எப்படி என் கறுமத்தை நான் துடைப்பேன்?

கை

என்கைகள், ஷெல்லாம் இடிவிழுந்து இற்றதனால்
சந்தோசம் என்றான் தளராமல் – “என்னப்பா”
என்றேன்; இனியார்க்கும் கைகட்டத் தேவலையே”
என்றான்; தொழுதேன் எழுந்து.

காலத்துக்கு உரைத்தல்

தோல்விகளால் என்னைத் துவண்டு அழ வையாதே!
வேள்விகளில் நெய்யாய் விழுந்தெரியச் செய்யாதே!

நான்யார் எனமறந்த நாட்கள் தான் அதிகம் .. அதில்
ஈனமெனுஞ் சேற்றில் இருத்தி எழுப்புறியே!

என்பாதை இதுவென்று எனை அறிந்து புதிதணிந்து
முன்செல்ல… பின்முதுகில் இழுத்தென்னை அலைக்கிறியே!

நானென் ‘நிலை’ உணர்ந்து நாகரிகத்தின் வழியில்
போகையிலே சிரித்தென்னைப் புதைகுழிக்குள் வீழ்த்திறியே!

நடக்கையிலே நல்லதிசை காட்டாமல்… முடக்குகளில்
துடக்குஇ தீட்டில் நான் சிக்கத் தூண்டில் இடுகிறியே!

நான்நினையா தென்னால் நடத்தப்படுஞ் செயலில்
வேண்டாதன மட்டும் விளைவிக்க நிற்கிறாயே!

சரிகளுக்கு நான்பொறுப்பு அல்ல… எனச் சாந்தியுற்றேன்!
பிழைகளுக்கா நான்பொறுப்பு? பிடரை உலுப்பாதே!

செய்தபிழை நினைந்து சீவன் எரிந்துளேன் நான்
உய்யும் வழியுரையாது ஊமையெனப் போகாதே!

பாவங்கள் பண்ணவைத்தாய்! பாவப் பரிகாரம்
நான்செய்ய விடாமல்…உள் ஆணவத்தை மூட்டாதே!

தவறுகள் முன் தலைகுனிந்து தண்டனையை ஏற்கஇ விடா
அகங்காரம் அறுக்காமல்…அகத்துட்பேய் வளர்க்காதே!

பொம்மலாட்டக் காரன்…நீ பொருத்தமாய்ச் செடில் பிடிப்பாய்
என்னஆட்டம் ஆடி இளைக்கின்றேன்.. வாட்டாதே!

பக்குவப் படவும்நின் பதமோட்சம் காணவும்நான்
இக்கரையில் நிற்கிறேன்; நீ அக்கரையா.. வா அருகே!

நீயும் நானும்

எந்தன் அசிங்கங்கள் எனக்குத் தெரிகிறது!
எந்தனது கீழ்த்தரங்கள்
எனக்குப் புரிகிறது.

ஐந்து மணிக்குளிரில் ஆலயத்தில் அமர்கையிலும்
அந்தரப்பட்டுள்ளம் அலையத் துடிக்கிறது!
காணும் எழிலையெல்லாம்
கையகப் படுத்துகிற
ஆவேசம் நரம்பில் ஆணி அடிக்கிறது.
பாவாடை தாவணிகள் பயணப்படுகையிலே
யாரென்றறியாமல்
பின்தொடரும் நெஞ்சப்பேய்.
மற்றவனைத் தாழ்த்தி நான்மகுடம் அணிகையிலே
வக்கிரச் சிரிப்பு வழிகிறது மன வாயில்.
நானென்ற ஆணவத்தில் நடக்கையிலோ….
நாடிகளில்
தீயெழுந்து அயலை அடக்கும் ‘சுயதடிப்பில்’!
மரணங்கள்,தோல்வி
மாற்றானைத் தழுவுகையில்
குரூர மகிழ்வு கொலுவேறும் இதயத்தில்!
சிக்கலின்றி அன்பாய்ச் சிரிக்கின்ற வேசமெல்லாம்
பக்கத் திருப்பவர்கள் பரிசடைந்தால் கலைந்து..
எனக்குள்
யுத்தம் வெடிக்கிறது!
யான் தோற்றால்… வென்றவன்மேல்
அபாண்டப் பழிசுமத்தும் ஆவேசம் கொதிக்கிறது.
சுயநலமே வாழ்வு
வாழ்வே சுயநலமாய்
பயிற்சி எடுத்துவிட்டு பறக்கிறது வாழ்க்கைத்தேர்!
எந்தன் அசிங்கங்கள் எனக்குத் தெரிகிறது.
எந்தனது கீழ்த்தரங்கள்
எனக்குப் புரிகிறது.
இத்தனையும் உள்ள எனை இணைத்து
அன்புவைத்து
பக்கத் தமர்ந்து பனித்தணைக்க எப்படித்தான்
உன்னால் முடிகிறது?
ஊளையிட்டு அலைகின்ற
என்வெறியில் எப்படிநீ இசைகேட்க முடிகிறது?
‘கடையன்’ எனைநானே கண்டஞ்ச…
காதலிக்க
முடியுதுன்னால்,
மேதை உன் முழுமையையார் அறிகிறது?

நம்பிக்கை

நேற்றுமெந்தன் பிழைதிருத்தி நீ இயக்கினாய் – நேர்ந்த
நீசங்களுள் மோசம் போயிடாதும் மீட்டினாய.;
சேற்றுள் சிக்கிடாது இன்றுஞ் சிறையெடுக்கிறாய் – நாளை
தெருவிலென்னை விடுவியோ?… சீ…நீ..நிமிர்த்துவாய்.

வேட்டை

கைகளிலே வேலோடு கத்தி, அம்பு, வில் பூட்டித்
தெய்வமென உன்னைச்
சிருஷ்டித்தோர் பெரியோர்தான்.
முதலில்….
உனைக்கண்ட முகூர்த்தத்தில்…‘அன்பருளும்
முதல்’ உனக்கேன் ஆயுதங்கள்…?
என எனைநான் கேட்டதுண்டு!
இது இன்றே புரிகிறது எனக்கு;
கொடுமைமிகு
வனவிலங்கை வேட்டையிடும் வேடனைப்போல்….நீ எங்கள்
மனவிலங்கை வேட்டையிடக்
கொலைக்கருவி தூக்கியுள்ளாய்..
என எனக்கு விளங்கிற்று;

எனினும் நின் வேட்டை என்
மனவனத்தில் இனும் உலவும் பலகொடிய விலங்குகளை
சுதந்திரமாய் உலவவிட்டுச்
சும்மா இருப்பது ஏன்?
புரியவில்லை என்னுயிர்க்கு;
பொருள், புணர்ச்சிக்கு அலைவனவும்,
ஆணவத்தில் திரிவனவும்,
மற்றவற்றை இடறி…அவை
வீழ மகிழ்வனவும், வீம்புக்கு நிற்பனவும்,
குள்ளக் குணத்தாற் குழிபறிக்கப் பார்ப்பனவும்,
கள்ளங்கள் செய்தெனிலும்
‘கலக்க’ நினைப்பனவும்,
கூர்நகத்தால்,பல்லால், குரலால்
நரர்நடுங்க
ஆர்ப்பரித்து “தனக்கடக்கம் யாவும்”
எனப் பாய்வனவும்,
போன்ற ……பல கொடிய விலங்கினங்கள் மனவனத்தில்
குட்டியீன்று பெருகிடவும்…
கொன்றவற்றை ஒழிக்காமல்…
அற்புத அமைதியெந்தன் அகந்தன்னிற் சேர்க்காமல்….
ஏன் உள்ளாய்…. கைகளிலே
ஈட்டி வேல், வில் கத்தியுடன்?
இது புரிய மறுக்குது; என்
மனவனத்தைப் பூந்தோட்டம்
எனமாற்ற வேட்டையிடு எனை;
நேர்த்தி தொடர்கிறது.

பெருவாழ்வு

ஈரங் கசிகின்ற இதயம் எனக்குளிடு!
பாசப் பனியில் பனித்துறைய
மெருகேற்று…!
அமைதியான மோனம் அணைத்துவரும் நிம்மதியில்
இமைப்பொழுதும் நீங்காமல் இரு!
செல்வம் தா அளந்து!
மென்மையென் மேனியெங்கும் பூக்க விதைவ வீசு!
கண்ணில் கருணைநதி கரைபுரளவை;
வாழ்வில்
குளுமை குவி; சேரும்
குடி,களவு, பொய், பொறாமை
அழி! ஜெயித்தால் ஆடவைக்கும்
ஆணவத்தைத் தறி; அடங்கிச்
சிறு பொழுதில் மீண்டுமெனைச் சிறையெடுக்குஞ் ‘சாகா
வரம்’பெற்ற காம அரக்கன்மேல் ஈட்டியெறி!
பிறன் நெஞ்சை ரணமாக்கிப் பேசின்
என் நா பூட்டு!
திரியாக்கி நரம்பாலே நட்புக்கு ஒளியூட்டு!
வெறிக்கோபம் சண்டை விலக்கிவிடு!
அன்பூட்டு!
காதலிலே எனைக்கரைத்துக் கரைத்துப் புடம்போடு!
பேதங் கடந்து “பிணை!”‘;
எதிலும் முழுமை காணும்
பரவசத்தில் எனையே நான் தொலைக்கப் பழக்கியெடு!
இசையோடு இசையச்செய்!
இயற்கையுடன் இலயிக்கவை!
பசி, நோய், பேய்ப் – பயம் போக்கு.
பழிநினையா மனம் நல்கு.
ஒரு உயிர்க்கும் தீங்கெண்ணா உண்மை உளம் அருள்க.
எறும்பும் மிதிபடாமல்
எடுத்துக் கவனமாக
அதிரா நடைபழக ஆவனசெய்.
மற்றவனைத்
திருத்துதற்கு நானார்? நான் திருந்தத் துயர் சொரிக!
பிறரை ‘நிறுத்திடாமல்’ பிறர்பாரம் பகிரச்செய்!
எது ‘என் – உன்’ செயலென்று
எதிர்வுகூற அறிவுகொடு!
அளவுக்கு மீறாத அழகோடு ஆசைதா!
மெல்லிசை கவிதைகளில் மெய்மறந்து,
வண்ணத்தி
புல்லோடும் வாழ்ந்து புத்துயிர்க்கும் முறை தெரிவி!
எவ்வளவு திருந்தினாலும்
எனைம மீ… விதி அலைக்கக்…..
கௌவும் இழிகுணங்கள் கவிந்து;
அடிபோட்டு
நானார் என்பதை நான் மறக்கையிலே உணர்த்து.. என்
ஈனம் அசிங்கங்கள் ஏற்றுக்கொள்!
அதைப்போலென்
வானப் புகழ், பெயரை வசூலி!
எனைத்திருத்தி
மேன்மைகொடு;
மேலும் பக்குவப் படுத்து..;ஒரு
தூய பொருளாய்… நின் சுழற்சிக்குள் நிரந்தரமாய்
வாழும் வரலாறாய்.. மாறவிடு;
மாற்றிவிடு!

பாதை

நெஞ்சிலெத்தனை கோடி நினைவுகள்?
நினைவுயாவும் நிஜமென்று ஆகுமா?
தஞ்சமென்று துயரிடை வீழுமா?
தலைநிமிர்ந்தது நித்தம் ஜெயிக்குமா?
வஞ்சம், பஞ்சத்தில் வாடி வதங்குமா?
வாய்த்த அதிர்ஷ்டச் சொகுசில் மிதக்குமா?
கொஞ்சத் தூரம் கடந்த என் வாழ்விலே…
சற்றமர்ந்தெனை நான் கேள்வி கேட்கிறேன்.

இந்தப் பாதையில் நானாய் நடந்தேனோ?
இந்தப் பாதையே என்னை நடத்திற்றோ?
எந்தப் பாதையால் போக நினைத்தும்; நான்
இந்தப் பாதையால் போக ஆர் வைத்தரோ?
எந்தப் பாதையால் போவன் என்றோ அன்று
எழுந்தேன்; எங்குதான் சென்று அடைவனோ?
அந்த எல்லையை இன்றே அறிந்திடும்
அறிவு ஞானங்கள் என்றைக்கு எட்டுமோ!

இந்தப்பயணம் சுகமாய்த் தொடருமோ?
இவ்வழியில்எத் திருப்பம் நிகழுமோ?
இந்தப் பாதையில் எத்தடை நேருமோ?
எப்புதுத்தெரு என்னை அழைக்குமோ?
எந்த வாகனம் வந்தேற்றிப் போகுமோ?
ஏதும் விபத்தில் நானும் முறிவனோ?
இந்தப் பாதையில் நாளை வழித்துணை
எவர்? எவரெவர் அறிமுகம் கிட்டுமோ?

எந்தன் பாதையில் நாளை வரவுளோர்இ
என்துணையென நான் சென்று சேர்ந்திடும்
அந்த எல்லை மட்டும் தொடர்பவள்இ
அன்பர்கள், நண்பர், அன்பு முகமூடி
கொண்டெனைக் கோதித் தின்னத் தொடர்பவர்,
குளிர், மழை, வெயில், பற்றி உணர்த்தி என்
துன்பம் தீர்ப்பவர், தோணியாய் என்னை மெய்வ்
துறையில் சேர்ப்பவர் யாரோ? எவர்களோ?

என்ன என்ன நிலைமைகள் மாறிடும்?
என்னை எப்படி அந்த நிலைமைகள்
வண்ணம் மாறிட வைக்கும்? வனைந்திடும்?
வதைக்குமோ? என்ன செய்யும்? பெரும் வேகங்
கொண்டு முன்னேறும் காலம்… என் கைகோர்த்தா
கொள்ளும்? இல்லாட்டி விட்டிட்டா போகும்? எம்
மென்நிழல் வந்து ஒத்தடம் தந்திடும்?
வியர்வையொற்றி எத் தென்றல்கள் கொஞ்சிடும்?

வந்த பாதையைத் திரும்பிநான் ‘பார்க்கிறேன்’.
வளைவு, நெளிவு, முள். பள்ளம், வனப்புகள்
சந்தோசம், வெற்றி, சாதனை, சோதனை
தவறு, தோல்வி. அதிஷ்டம், தூரதிஷ்டங்கள்
நின்று கைகளைக் காட்டிச் சிரித்தன!
நினைவுகள் வழி அனுப்பின…! வாழ்தின!!
தெம்பெழுந்தது நெஞ்சில்.. நடக்கிறேன்.
தெய்வம் நல்வழி காட்டும் விரைகிறேன்.