கவிஞனைக் காத்த வானம்

முருகையன் எங்கள் மண்ணின்
மூத்த நற் கவிஞர்.அன்னார்
திருமதி ஆக வந்து
சேர்ந்து, அன்னவரின் வாழ்வின்
சுருதியாய் பலமாய் சொத்தாய்
தொடர்ந்த ‘தவ மணியாம் தேவி’
பிரிந்தனள் எம்மை விட்டு
பெருகுது கண்ணீர்ச் சொட்டு!

அன்பதன் உருவம், யார்க்கும்
அருள் தரும் தேவ ரூபம்,
பண்பிலே சிகரம், அந்தப்
பாவலன் மனம் கோணாது
அன்னவன் இன்ப துன்பம்
அனைத்திலும் தொடர்ந்த வானம்,
சின்னவர் எமக்கும் பாசம்
சிந்திய குளுமை மேகம்!

கவிஞரின் வீடு தேடி
கவிதையைப் பயின்ற நாளில்
சுவைப்போம் பா பல இரசித்து!
சுவைப்போம் நல் விருந்தும் உண்டு!
செவியிற்கும் நாவினுக்கும்
திறம் சுவை சேர்ப்பார் அன்று!
புவிவிட்டுப் போனார் இன்று!
புலம்புது துடித்து நெஞ்சு!