கவிஞர் முருகையன் அரங்கதிறப்புரை

வடமாகாணபண்பாட்டுஅலுவல்கள் திணைக்களம் நடாத்தும் தமிழ் இலக்கியபெருவிழா
2012 இன் ஆய்வரங்கு“வடமாகாணத்தின் தமிழ் இலக்கியத்தின் செல் நெறிகள் “என்றமகுடத்தில் இடம்பெறுகின்றது. இதன் முதன்நாள் நிகழ்வின் இவ்வரங்குகவிஞர் முருகையன் அரங்காகஅமைகிறது. இந்தஅரங்கின் அரங்கத் திறப்புரையைவழங்குவதில் மிகமகிழ்வடைகின்றேன். முருகையனின் இறுதிக்காலத்தில் நெருங்கப்பழகிஅணுகத் தொண்டனாக இருந்துகவிதையாப்பை அவரின் வீடுதேடிச் சென்றுகற்றவன் என்பதால் அவர் பற்றிய தொடக்கவுரை ஆற்றுவது பொருத்தமானதே எனக் கருதுகின்றேன்.

ஈழத்தமிழ் கவிதையின் மூலவர்களில் ஒருவராகவும்,ஈழத்தமிழ் கவிதையின் பிதாமகர்களான மூலமூர்த்திகளில் ஒருவராகவும் கவிஞர் முருகையன் விளங்குகிறார். யாழ்ப்பாணமாவட்டத்தின் சாவகக்சேரியிலுள்ள கல்வயல் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமிழ் ஆசான் இராமுப்பிள்ளை செல்லம்மா தம்பதியினர் மகனாவார். இவர் தமதுஆரம்பக்கல்வியினை கல்வயல் சைவப்பிரசாச வித்தியாசாலையிலும் அடுத்து இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் உயர்தரத்தினை யாழ்ப்பாணம் இந்துகல்லூரியிலும் கற்றார். மேலும்,கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபாடத்தினை கற்று விஞ்ஞானமானிப் பட்டத்தையும் தனதாக்கிகொண்டார். இவரின் கல்வி அவர் மேலும் தொடரலண்டன் பல்கலைக்கழகத்தின் கலைமாணிபட்டத்தினையும் பெற்றார். மேலும் யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதி பட்டத்தினையும் பெற்றுகொண்டார்.

தமிழ் ஆசானின் மகன் என்பதாலோ இவரின் இளமைக்காலத்தில் 13, 14 வயதில் கவிபுனையும் ஆற்றல் வெளிப்படத் தொடங்கியது. இவரதுகவிதை 1950 இல் யாழ் இந்து கல்லூரிவெளியிட்ட“இந்து இளைஞன்”சஞ்சிகையில் வெளிவந்துமேலும் 1950 இன் நடுப்பகுதிகளில் சுதந்திரன்,வீரகேசரி,ஈழகேசரி,அமுதசுரபி,கலைமகள்,தீபம்,எழுத்து,தாமரைபோன்றசஞ்சிகைகளிலும் இவரின் கவிதைகள் வெளிவந்தன. இவரின் கவிதை ஆக்கத்திறனுக்கு பாடசாலை நண்பர்களானக.கைலாசபதி,நடனசபாபதி சர்மா போன்றோர்களின் தொடர்பும் மஹாகவி,சில்லையூர்,நீலாவணன் போன்ற கவிஞர்கள் தொடர்பும் தமிழக எழுத்தாளர்களான கி.வ.ஜகன்நாதன், சி.சு.செல்லப்பா, சிதம்பரரகுநாதன், ந.பார்த்தசாரதி ஆகியோரின் தொடர்பும் உரமூட்டியது.

பல்வேறுபட்ட இலக்கிய நூல்களை வாசித்துச் சுவைத்த இவர் பிறரின் ஆக்கங்களையும் மொழிபெயர்த்து தொகுத்த போது உருவானதுதான் “ஒருவரம்” இது 12 ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிடப்பட்டதாகும். மேலும் “வந்துசேர்ந்தன, தரிசனம், நெடும்பகல், கோபுரவாசல், ஒரு சில வீதிசெய்வோம், ஆதிபகவன், வெறியாட்டு, அது அவர்கள், மாடும் கயிறு அறுக்கும், நாங்கள் மனிதர் மேற்பூச்சு,சங்கடங்கள், ஒவ்வொருபுல்லும் பூவும் பிள்ளையும், உண்மை, இன்றைய உலகில் இலக்கியம்” முதலான 21 நூல்கள் இவரால் வெளியிடப்பட்டன.

இவர் பேராசிரியர் க.கைலாசபதியுடன் இணைந்து எழுதிய படைப்பாகிய “கவிதைநயம்” இன்று வரை ஈழத்தில் வெளிவந்த நூல்களில் கவிதை தொடர்பான சிறந்த நூலாக நிலைத்திருக்கிறது. மேலும் மஹாகவியுடன் முருகையன் இணைந்து பாடிய காவிய நூல் ‘தகனம்’ஆகும். இது‘தேனருவி’எனும் சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளிவந்தது.

கவிஞர் முருகையன் ‘கவிஞர்க்கக் கவிஞன்’எனகைலசபதியாலும் ‘புலமைக் கவிஞன்’எனபேராசிரியர் சிவத்தம்பியாலும் போற்றப்பட்டவர்.

மரபிலக்கியத்தில் மிகுந்தஈடுபாட்டினைக் கொண்டிருந்தாலும் நவீன இலக்கியபரீச்சையமும் மாக்சிக, விஞ்ஞானபார்வையும் கொண்டு இவை அனைத்தினதும் சங்கமம் தான் கவிஞர் முருகையன். இவர் ஒரு பல் திறப்பட்ட ஆளுமையாளன் கவிதை, காவியம், கவியரங்க ஆற்றுகை, நாடகம், விமர்சனம், ஒவியம், மொழிபெயர்ப்பு ஆங்கில சிங்கள மொழிப்புலமை எனப் பலதிறமைகளை தன்னகத்தில் கொண்டிருந்தவர்.

யாழ்ப்பாணகவியரங்குகளின் தரத்தைஉயர்த்தியதுடன் யாப்பு கவிதைகளில் சமரசம் செய்யாமல் புதிய உத்தி, பேச்சோசை, நவீன கவிதை நுட்பங்களை புகுத்தி ஈழத்தமிழன் கவிதைக்கு மெருகேற்றிவிட்டவர். இதற்கு உதாரணமாக ‘அதுஅவர்கள்’ எனும் தொகுதிதனியே வெண்பாயாப்பால் ஆனது எனினும் அதன் பாடுபொருள் இன்றையயதார்த்த வாழ்வைச் சுட்டுகிறது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. இவர் எழுதி மேடையேறிய நாடகங்கள் ‘உயிர்த்தமனிதர் கூத்து, கடூழியம், பொய்க்கால், யார் கொலோசதுரர்’ ஆகியவை இவரின் நாடக ஆளுமையை எடுத்துக் காட்டும். மேலும் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்துவைத்துள்ளனர். எனினும் அவை இன்று வரை பிரசுரமாகவில்லை.

இவற்றோடுகாளிதாசன் சமஸ்கிருதத்தில் எழுதிய‘இறையனார் களவியல்’என்றகவிதையைஆங்கிலத்திலிருந்துதமிழில் மொழிபெயர்த்து‘குமாரசம்பவம்’என்ற நூலைஆக்கியுள்ளார்.

விஞ்ஞானம், இரசாயனவியல் போன்ற பாடங்களை மாணவர்களுக்கு போதிக்கும் ஆசிரியத்தொழிலை சிறப்பாக ஆற்றியதுடன் கல்வி வெளியீட்டுதிணைக்கள பாடநூலின் ஆக்கக்குழுவில் ஒருஅங்கத்தவராய் இருந்து கல்விச் சமூகத்திற்கு பல அளப்பரிய சேவையை வழங்கினார். இத்துடன் கலைச்சொல் ஆக்கக்குழுவில் அங்கம் வகித்து அதிலும் பல ஆலோசனைகளையும் ஆக்கங்களையும் வழங்கியுள்ளார்.

நீர்வேலியை புகுந்த இடமாகக் கொண்ட இவர் இரு பிள்ளைகளையும் பெற்றெடுத்து இனிதே தமது வாழ்வினைகழித்து வந்தார். காலங்கள் உருண்டோட 73 ஆவது அகவையினில் இறைபதம் எய்தினார்.

ஈழக்கவிதைகளின் பிதாமகர்களில் ஒருவராகவிளங்கியவர் எனினும் எளிமையும்,மென்மையும்,பழக இனிமையும் கொண்டமனிதனாகவும் மகோன்னதகவிஞனாகவும் விளங்கியகவிஞர் முருகையனை கௌரவிக்கும் முகமாக கவிஞன் முருகையன் அரங்கம் இன்று ஆய்வரங்காக அரங்கேறுகின்றது. இவ்வரங்கதிறப்பரையை ஆற்றுவதில் பெருமகிழ்வடைகின்றேன்.

(2012இல்யாழ். நெல்லியடியில் நடந்தவடமாகாணபண்பாட்டுஅலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இலக்கியப் பெருவிழாமுதல்நாள் காலைஅமர்வுகவிஞர் முருகையன் அரங்காகஅமைந்தது. இவ் அமர்வில் நான் ஆற்றியஅரங்கத் திறப்புரை இதுவாகும்.)

Leave a Reply