மரபின் வசீகரமாய்,த.ஜெயசீலனின் “புயல் மழைக்குப்பின்னானபொழுது”இ.சு முரளீதரன்

மரபு இலக்கியவடிவங்கள் ஊடாக தமது அனுபவத்தை பிறரில் சுவறவைப்பதற்கு இயலாத தருணங்களிலும், தேய்வியம்பல் என ஒதுக்கும் சந்தர்ப்பங்களிலும் மாற்று இலக்கிய வடிவங்களைக் கட்டமைத்தல் இலக்கிய உலகின் நடைமுறையாகும். பக்தியுணர்வை தொற்றவைக்க “வெண்பா” ஏற்ற தன்று என்னும் நிராகரிப்பிலேயேகாரைக்கால் அம்மையார் சங்கமருவியகால இறுதியில் விருத்தம், கட்டளைக் கலித்துறை என்னும் நவீன வடிவங்களைக் கட்டமைத்தார். இத்தகைய செல்நெறியின் நீட்சியாகவே செய்யுள் அமைப்பினைத் தகர்த்த கவிதை வடிவங்களும் உருவாகின. எனவே நவீன வடிவங்களில் வெளிப்படுவன அனைத்துமே அற்புதமானவை என்றோ, மரபு இலக்கிய வடிவங்களின் ஊடான அனுபவ வெளிப்படுத்தல்கள் அற்பமானவை என்றோ கருதுவதுபடு அபத்தமானதாகும். மரபிலக்கியவகைமையும், தற்புதுமையான படைப்பாக்கமும் அனைத்து மொழிகளிலும் உரம் சேர்த்து வருவதை பரந்த வாசிப்புப்பழக்கம் உள்ளோர் நன்கறிவர்.

கனவுகளின் எல்லை (2001) கைகளுக்குள் சிக்காதகாற்று (2004) எழுதாதஒருகவிதை (2013) என்னும் மூன்றுகவிதைத் தொகுதிகளையும் தொடர்ந்துநான்காவதுதொகுதியாகத.ஜெயசீலனின் ‘புயல் மழைக்குப் பின்னானபொழுது’ வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சுயத்தின் தேடல், இயற்கை மீதானஈர்ப்பு, போரின் பின்னான அவலம், பிடிமானமற்ற காலத்தின் இயலாமை,மேலாண்மை குறித்த எள்ளல் போன்ற பல்வேறு பட்ட பாடு பொருளினை தன்னகத்தே கொண்ட 59 கவிதைக ளை உள்ளடக்கியுள்ளது. வெளிப்பாட்டு உத்தியில் முன்னைய தொகுதிகளின் நீட்சியாகவே அமைந்துள்ளமையும் அவதானத்திற்குரியது.

அலாதியான சொற்களின் உன்னத ஒழுங்குபடுத்தலே கவிதையாக உருப்பெறுகின்றது. சொற்களின் இடையே புதைந்துள்ள மௌனத்தின் பேருருவமே கவித்துவத்தின் தேறிய பெறுமான மெனக் கொள்ளப்படுகின்றது.

“போர் சிதைத்துதின்று……மீந்த
வெளிகளிலும்
எஞ்சிச்சிதறுண்டுபோய் எங்கும்
சூனியமாய்க் கிடக்கும்
சுவடிழந்தநிலம் மீதும்
எத்தனையோபேரின் கனவுகள்”

என்னும் வரிகளில் த.ஜெயசீலனின் தாடனமானசொல் அடுக்குகளைக் காணமுடிகிறது.
மேலும்,செய்தியாக இல்லாமல் அனுபவத்தொற்றலாக உருமாறும் போதே கவிதைஉச்சம் பொதுகின்றது. என்பதற்கு இவ்வரிகள் தக்கசான்றுகளாக அமைகின்றன. த.ஜெயசீலனின் வார்த்தை வங்கியிலுள்ள பதங்கள் நேர்த்தியான இயங்குதிறனோடு செயலாற்றுவதையும் பலகவிதைகளில் அவதானிக்கமுடிகின்றது.

“நீரூற்றிக் காடாற்றி
மிச்சசொச்சம் எல்லாம் வெட்டிப்புதைத்தகற்றி
தகித்துக் கிடக்கின்றதரையினிலே
நீரூற்றி
நம்;பிக்கைநாற்றுக்களை
நட்டுக்கொண்டிருக்கின்றோம்;.”

கவிஞர் வெளிப்படுத்தும் படிமங்களும்,உவமைகளும் பொதுசனங்களின் அனுபவத்தை விட்டுப் புறந்தள்ளிப் போகாத அதேநேரம், எளிமை, புதுமை, தரம் என்னும் மூன்றும் கலந்தமைந்த முறையில் அமைந்திருப்பதும் நோக்கத்தக்கது.

“வெட்டிவைக்கப்பட்டசர்க்கரைப் பூசனியின்
துண்டொன்றாய் மஞ்சள் நிலவு”

“கடல்பொங்கிக் கோபமாய்க் கறுவித் துடித்திருக்கு
படகெல்லாம் கரையில் படுத்துளன”

போன்றன சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். சமூக,அரசியல் நிலைப்பாடு குறித்த ஆதங்கத்தை,முகிழ்க்கும் எள்ளலை, துரும்பைக் கூட மாற்ற முடியவில்லையே என்னும் இயலாமையை பல கவிதைகளில் பதிவுசெய்துள்ளார். தூய்மையின் பேரால் நிகழ்ந்த கொடூரத்தின் பின்னானபொழுதையே கவிதைத் தலைப்பும் சுட்டிநிற்கிறது. அரசியல் அநாகரிகத்தைப் பின்வருமாறுஅங்கதப்படுத்துகின்றார்.

“புனிதம் எரியாமல்
புன்னகைத்துக்கிடக்கிறது
மனிதம் தான் சாம்பலிடைஎலும்புகளாய் எஞ்சிற்று”

வரலாற்றுணர் வற்ற தமிழர்களின் மீதான கோபத்தையும் கொட்டித்தீர்த்து விடுகின்றார். “தன்னைஅறிதல்” என்பதை மரபின் வழி நின்று சற்றே உறைக்குமாறு வலியுறுத்த முனைந்துள்ளார்.

“இந்நிலத்தின்
தொன்மையைபரம்பரைத்தொடர்ச்சியைக்
காத்தருளும்
தன்மைபெருமையைத் தரிசியாமல்
எல்லாமும்
நன்றாய் அறிந்தவன் நீஎன்கின்றாய்!
உனைப்பார்த்து
உன் காலடியின் மண் நகைக்கும்”

கவிஞர் முருகையனின் நீட்சியாகத.ஜெயசீலன் நோக்கப்படுவதுண்டு. அந்தவகையில் கவிஞர் முருகையன் எழுதிய “முன்னோக்கு” கவிதையின் சமனான எதிரான மறுதாக்க அருட்டுணர்வை “வந்தபாதை” கவிதை உள்வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காட்டாறு. ஜென்மம், குளுமை, சுவறல், அருமை, சிலிர்ப்பு போன்ற சொற்கள் மீதுகட்டுக்கடங்காத காதல் த.ஜெயசீலனுக்கு உண்டு. அவரது நான்கு தொகுதிகளிலும் இவற்றைத் தரிசிக்கமுடிகிறது. “நடந்தாய் வாழி”, “வான்புகழ்”, “எதுநடந்ததோ அது நன்றாக” போன்ற கவிதைத் தலைப்புக்களிலும் மரபின் தொடர்ச்சியை இனங்காணலாம். அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்பனவும் பலகவிதைகளில் அற்புதமாகப் பதியப்போடப்பட்டுள்ளன. ஆரம்பச் சொற்களோடு தொடர்ந்து பயணித்துக் கவிதையை நிறைவு செய்யும் பாணியையும் ஆங்காங்கே கடைப்பிடிக்கின்றார். “கேள்விவளையங்கள்” “நெருப்பில் முகிழும் நீரின் ஓர்துளி” என்று நவீன மொழிக்கையாட்சியும் இயல்பாய் அமைந்துள்ளது.

இலக்கணநெறிகளைச் சந்தத்திற்காகத் தகர்க்கும் கவி மரபையும் கைக்கொள்கிறார். “ஒவ்வொருதிசைகளுக்கும்” என ஒருமை–பன்மை விலக்கியேப யன்படுத்துகிறார். கணனித்தட்டச்சின் தவறால் ளகரழகர பேதங்களும் இடம்பெற்றுள்ளன. (உலகாழ்வோர் பக்கம் – 20) (ஊழைகழ் போல்பக்கம் – 16) “மௌனித்த ஆயுதங்கள் ஊமையாச்சு பேசவில்லை” பக்கம் – 15 என்னும் வரிகளில் வேறுபட்டஉணர்வுகளைதராத பட்சத்தில் ஒரே அர்த்தத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் நுணுக்கமாக நோக்கும் போது வெளிப்படும் இத்தகைய நுண் தவறுகளை தவிர்த்துவிட்டு நோக்கின், ஈழத்துக்கவிதை உலகிற்கு “புயல் மழைக்குப் பின்னானபொழுது” அர்த்த புஷ்டியான வருகையாகத் தென்படுகின்றது. மரபுக் கடலின் மரியானா ஆழியே! மென்மேலும் அற்புதமான கவிதைகள் புனைந்துவாழி”

(இக் கட்டுரை 28.12.2014 வெளிவந்த‘வலம்புரி’வாரமலரில் பிரசுரமாகியது)

Leave a Reply