பாரம்

“வருத்தங்கள் பட்டுப் பாரம் சுமப்பவரே
அருகினிலே வாருங்கள்
அயர்வகற்றி உமைவருடி
விருந்து தருவேன்யான் விரைந்து ”
என… என்றோ
இருந்து அழைத்ததொரு அசரீரி!
‘ஈஸ்டரன்று’
புரிந்து…அதனின் பொருளறியார்…,
புனிதம் …தம் கொள்கைக்காய்
மரித்தல் எனச் சொல்வோர் …,
மனித நேயம் மறந்து
‘வருத்தப்பட்டுக் குண்டுப் பாரம்’
சுமந்து வந்து;
திறந்திருந்த ‘பாவ மன்னிப்பு கூடு’ விட்டு;
திருச்சபையுள் நுழைந்து;
சிதறி வெடித்தூரை
நொருக்கினார்!!
சொர்க்கத்தை நொடியில் குதறி
நரகமாக்க…சிலரின் ‘மதம்’
நக்கிற்று குருதி ஆற்றை!
“வருத்தங்கள் பட்டுப் பாரம் சுமப்பவரே
அருகினிலே வாருங்கள்…”
என்ற அசரீரி
பொறிகலங்கித் திகைத்துப் புலனழிந்து
வாயடைத்துக்
குருதி வடிந்தோடக்
குற்றுயிராய்த் துடிக்குதின்று!

29.04.2019

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply