நாளையை நம்பு

எங்கும் அடிதடி எங்கும் கொலைவெறி
எங்குஞ் சண்டித்தனம் ஆச்சு –யார்….அம்
பெய்த விழுதெங்கள் மூச்சு? –அட
தங்கு தடையின்றி தாயின் தமிழ் வென்ற
சாலைகளில் வாளின் வெட்டு —தினம்
சாகும் இனம் வதை பட்டு!

நாதியில் லாமலே நாறிக் கிடக்குதூர்
நஞ்சே உணவென ஆகும் –வாழும்
நாளைக்…. குளிசைதான் கூறும் –தினம்
போதைப் பொருளுள் புரண்டு பொரியுது
போரில் சிதைப்பட்ட காயம் –என்று
போகும் எமைச் சாய்க்கும் மாயம்?

நெல்லு விளைந்திட்ட நீதி நிலம் இன்று
நீரின்றியே தரிசாகும் –காலம்
நேரம் எம் கைவிட்டுப் போகும் –அன்று
கல்லைப் பிளந்து களைத்து விளைத்த ஊர்
கானலிலா விதை போடும்? –நாளை
கஞ்சிக்கா கையேந்தும் மானம்?

வாடுது கோடையில் வானும் நிலமதும்
வாழ்வு கருவாடாய் ஆச்சு –காலை
வைக்க வெயில் சுடும் தீச்சு –பின்பு
மூடிடும் மாரியில் முங்கும் திசையெல்லாம்
மூச்சை இழந்தெல்லோ போச்சு –சூழல்
மோதுதே எங்களைச் சாய்ச்சு!

வானம் வரையோங்கி வையம் ஜெயிக்கும்
மனங்கள் இணைந்தத னாலே –வாழ்வை
வாழத் துடித்தத னாலே –நாமோ
ஈன மனங்கொண்டு நித்தம் பிரிவுகள்
இன்றும் பெருக்குவ தாலே –ஆனோம்
இன்று அனாதைகள் போலே !

நேற்றோ தொலைந்தது இன்றோ நழுவுது
நிற்பது நாளைதான் நம்பு –அதில்
நிச்சயம் கொள்ளணும் தெம்பு –எங்கள்
ஊற்று அடைக்கலை உள்ள வாய்க்கால் சாறி
ஊருக்கு ஆற்றல் நீர் வார்த்து –காலம்
உய்விக்க வெல்வோமே ஆர்த்து !

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply