வீடு

காதலின் கீதங்கள் காற்றினில் என்றுமே
காவியம் பாடிட வேண்டும்.
கருணையும் அன்பதும் கட்டிப் பிடித்தெங்கள்
கன்னத்தில் கொஞ்சவும் வேண்டும்.
வாழ்கின்ற காலங்கள் வரையறை கொண்டவை
வாழ்க்கை வரம்; அது மீண்டும்
வாராது…தீயவை மற்றோர்க்குச் செய்யாதுன்
வாழ்க்கையை வாழ்! அது போதும்!

தூக்கத்தில் பாதியும் ஏக்கத்தில் பாதியும்
தூர்ந்தே தொலைந்திடு மானால்
தோன்றி நீ பெற்ற நின் சுந்தர வாழ்க்கையைத்
துன்பமே கைப்பற்றிப் போனால்
சாக்காடு மட்டும் நீ சந்தோசம் காணாமற்
தான் போக வேணும்; உன் வாழ்நாள்
சாதனை செய்யோணும் சரித்திரம் காணோனும்
தயங்கின் உன் நாள்…என்றும் வீண் நாள்!

பூமியின் அழகினைப் புட்களின் இசையினைப்
பூக்களின் மகிழ்வினைக் கூடு.
புன்னகை செய்து உன் ஐம்புலன் பூத்தெழ
புதிய வரங்களைத் தேடு.
சாமியை நம்பிடு ஆயினும் உன் மனச்
சாட்சியின் நேர்மைக்காய்ப் பாடு.
தாவரம் பூச்சி விலங்குகள் கைகோர்த்துச்
சாந்தி பெறும் வாழ்வே….வீடு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply