ஓரவிழிப் பார்வை ஒன்றுக்காய்….

தேரடியில் வில்வமர நிழலில் ஆறினோம் –வள்ளி
தெய்வயானை யோடு வருவாயா தேடினோம்!
ஊரடங்கி விட்ட பின்னர் ….நல்லை வாசலில் –வந்துன்
-னோடு பேசக் காத்திருந்தே வாடி…ஓடினோம்!

மூலஸ்தானத்துள் உறைந்து மோன மூர்த்தியாய் –நீயும்
மூடிக்கொண்டிருந்து என்ன ஆகும் சொல்லையா?
ஏறெடுத்துப் பார்த்திடாது வீதி சுற்றியா –நீயும்
ஏகுகிறாய்? நின்றெம் குறைகள் கேட்டுச் செல்லையா!

உன்னை மட்டும் நம்புகின்ற உண்மைச் சொந்தமாய் –நாங்கள்
உயிர் கனிந்தழைக்க விட்டுப் போதல் நியாயமா?
மன்னரோடு ஏனையோரை நம்பி நொந்தமாம் –நீயும்
வரந்தராது விட்டகன்றால்…என்ன செய்வம் யாம்?

உண்டியலில் காசுமிட்டு சூடம் ஏற்றியே –உந்தன்
உளம் விரும்பும் நேர்த்தி தீர்க்க வேணும் …என்றொடா
இன்றுமுள்ளாய்? அன்பை மட்டும் நல்கும் ஏழை நாம் –உடன்
இரங்கு என்று பழிகிடப்போம்….பார்க்க மாட்டியா?

ஓர விழிப்பார்வை ஒன்றுக்காக ஏங்கினோம் –வீதி
ஓரம் நின்றுன் ஆசி தேடித் தானே வாடினோம்!
“யானிருக்க ஏது பயம்” என்னும் வேலவா –நாங்கள்
யாசிக்கிறோம் உந்தன் அன்பை மட்டும்…அருளடா!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply