கீழடி

தெய்வத் தமிழே! திசைதிக்கில் மூத்தவளே 
வையத் தினுக்கே வழிகாட்டி –உய்விக்கும் 
அன்னாய்…உனதுசேய்கள் ஆம்…உன் பெருமைகளைக் 
கண்டோமே கண்முன் களித்து!

“கீழடியைத் தோண்டக்   கிளம்பிய  சான்றுகள் நாம் 
மேலடி” எனச்சொல்லும்…மேன்மைகளை –ஏழ்கடலும் 
வான் திசையும் ஏற்கும்;  இரண்டா யிரம் ஆண்டைத் 
தாண்டியவள் நம் தாய்த் தமிழ்!

ஊருலகில் நாகரிகம் ஊற்றெடுக்கும் முன் ..தமிழில்
சீர் செழித்த வாழ்வு செறிந்ததென்றால் –வேர்காட்டும்
‘கீழடி’யில் நின்றுநாம் கெந்தியே…எண்திசைக்கெம்
ஆழம் உணர்த்தவேண்டும் ஆர்த்து!

‘கீழடியைக்’ கண்டு கிறங்க ‘வெடுக்குநாறி’
‘நீரா வியடி’யென்று நீதிக்காய் –வாதாடும்
காலமின்றும் வந்ததிங்கு! காயம் முழுதுமாறாக்
கோலம் கலையும் குனிந்து!

நாலு திசைகளிலும் நாங்கள் வெடித்த பஞ்சாய்த்
தானலைந்தும் யாரார்க்கோ தாமுழைத்தும் –ஓர் நிழலும்
சொந்தமாய் இல்லாத சோகக் குலமானோம்;
எந்தவிதம் போமிவ் இழிவு?

எங்கள் பெருமைகளை, எம் நிமிர்வை, எம் புகழை,
இங்குணராப் பேதைகளாய் இன்றிருந்து –எம் பெருமை
கண்டு மலைப்பவரின் கால் கழுவிச் சீவிக்கும்
துன்பம் துடைப்போமா சுட்டு?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply