சுஜித்

மண்ணை அறியாது விண்ணை அறிவதற்கு
எண்ணியது தவறென்று
இருவயதுப் பாலகன் நீ
இந்தப் புவிக்குயிரை விட்டுப் படிப்பித்தாய்!
தாகத்தால் நா உலர்ந்து தவித்த
ஆழ் துளைக்கிணற்றின்
வாயில் துளிநீராய் வீழ்ந்து
வற்றிப் போய்விட்டாய்!
காத்துக் கிடந்தது கரும்பாம்பாய்
பேய்ப்பசியில்
ஆழக் குழி நீயோ அதன்பசிக்கு இரையானாய்!
எத்தனை கோடிகளை இறைத்தெனினும்
உனைமீட்டுச்
செத்துவிட வில்லையின்னும்
மனிதாபி மானமெனச்
சொல்ல முனைந்தவரும்
தோற்றுத்தான் போனார்கள்!
இல்லை உன் உயிர்க்கு விலை
என்றோரும் சோர்ந்தார்கள்!
ஆளாளில் குறைசொல்லி
அடுத்தவரில் பழிசொல்லி
காலம் கடந்து தோண்டிக் கைகள் களைத்ததின்று!
எண்பது மணிநேரம் எப்படியும்
உனைமீட்க
நின்ற தொழில் நுட்பம்
நெடுமூச் செறிகிறது!
தனிமை, இருள், அச்சம், தாகம், பசி, சோர்வு
அனைத்தோடும் போர்செய்தாய்…
அதற்கேற்ற வயது பலம்
உனக்கில்லை என்செய்தாய்?
அசைந்த உன் விரல்களினால்
எதைச் சைகையாய்ச் சொன்னாய்?
இவ்வுலகின் பிரார்த்தனை… உன்
விதியினை மாற்றவில்லை
வெற்றுடலாயா மீண்டாய்?
உயிரைப் பறித்து மத, இனப்பெருமை காப்போர்…நின்
உயிர்காக்க ஓர்குரலில்
உருகிப் பதைபதைக்க….
என்னதான் செய்வதென்ற ‘இறை’
தனது அதிசயங்கள்
ஒன்றும் பலிக்காது ஊமையாகி …
தனைநோக்கி
வந்த கோடி வேண்டுதலை மறுதலித்து
திருந்தாத
ஜென்மங்களைத் திருத்த….
தனது கையாலாகாத்
தன்மையை மறைக்க… உனைப்
பணயம் தான் வைத்ததுவோ?
என்ன வளர்ந்துமென்ன …?
இப்படியோர் சவால் ஜெயிக்க
என்ன வழி என்றுரைக்கா டிஜிடல் யுகம் நாளை
என்ன பலன் நல்கும்?
இதுவே இறுதியென்று
முன்வந் துரைத்திடுமா
மூளைத் தொழில்நுட்பம்?
உந்தன் இறப்பும்
புவிக்கண்ணைத் திறக்கவில்லை
என்றால் இனிக்காவல் இல்லை
நம் வாழ்வுக்கும்!

29.10.2019

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply