மண் மீட்பு

மண்ணை மீட்டிடல் என்பதை நாங்களும்
மறந்து பத்தாண்டு ஓடிப் பறந்தது.
மண்ணின் மீட்பு என்ற விடயம் நம்
மைந்த ருக்குப் புரியாப் புதிராச்சு.
மண்ணை மீட்டிடல் என்பதன் அர்த்தத்தை
மாறிப் புரிந்த நம் மக்கள் …தடை விழ
மண்ணை வெற்றுக் காணிகளில் நின்று
வலிந்து மீட்கிறார்…யார்தான் தடுப்பது?

வீதியால் மண்ணைக் கொண்டு வரப் போக
வேண்டிய தில்லை அனுமதி என்றபின்
வேலி அற்ற வெறும் நிலம் யாவிலும்
வேண்டும் மட்டும் மண் அள்ளிப் புவியியல்
சூழல் பாதிப்பைப் பற்றி கணக்கின்றி
சுருட்டி விற்கிறார்! சூழவுள்ள கடல்
பாயும், உள்வரும், நிலமும் பலியாகும்!
பணத்தை வைத்திவர் என்னதான் பண்ணுவார்?

காசு பார்ப்பதே கண்ணும் கருத்துமாய்
காலடியிலே கிண்டி மண் பொன் அள்ளிக்
காசு சேர்க்கலாம்…கால்வைக்க ஏலாத
கதிவரும்; இதை நீயும் மறுப்பியா ?
நீ நின் நிலத்தில் நிலைக்க முடியாத
நிலை வரும் நிசம்… நீயும் மறைப்பியா?
காசைக் குவித்து உன் வாழ்வைத் தொலைத்தெதைக்
காண ஏலும் சொல்? திருந்தவே மாட்டியா?

15.12.2019

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply