உறவு

மரம் நிமிர்ந்தே நிற்கிறது.
வந்து வந்து பலநூறு
பறவைகள் அமர்கிறது.
பறந்து பல திரும்பிடுது.
மரத்துக்குக் கவலையில்லை.
வந்துபோகும் பறவைகளால்
மரத்துக்குத் தீங்கில்லை.
வரும் அவற்றை உறவென்று
கருதிமரம் நின்றதில்லை.
கலகலப்பு இழந்ததெனும்
குறைவரலாம்…ஆனால்
களைப்பாறி இளைப்பாறி
தரித்தகலும் இடமே …தான்
மரம் மமதை கொண்டதில்லை!
பறவைகளும் இளைப்பாற வேண்டும் இடம்
என்பதன்றி
உறவு உருத்து
மரத்தோடு வைத்ததில்லை!
மரம் தனது வேரை நம்பும்.
பறவை தன் சிறகை நம்பும்.
ஒருவரை நம்பி ஒருவரில்லை
எனினும் இவை
உருவாக்கும் உறவுத் தொடர்புக்கும்
உவமையில்லை!

05.02.2020

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply