இயற்கையோடு இணங்கு

காற்று பூக்களின் தேனைக் குடிக்குது.
கடல் அலை தொடு வானைச் சுவைக்குது.
ஊற்று நீர் மண்ணோ டூடிக் கலக்குது.
ஒளி இருளினைத் தின்று செமிக்குது.
சோற்றுக் காகவே சேற்றில் இறங்கையில்
சொறி சிரங்கு வந்தாலும் கால் பூக்குது.
தோற்று அழியாது பூமி…மனிதர் செய்
துன்பம் பொறுத்தும் தொடர்ந்து அருளுது.

இயற்கை என்பது வஞ்சகம் அற்றது.
இயற்கை ‘பழி பாவம் பார்த்தும்’ தயங்குது.
இயற்கை தன்னை அழிக்கும் மனிதனின்
எளிய சுயநலம் தன்னைச் சகிக்குது.
இயற்கை நித்தம் சிதையுற் றழியவும்
இயலுமான வளம் பலம் நல்குது.
“இயற்கையின் மௌனம்…அதனது அச்சமே”
என்று நாம் சீண்டின்…பொங்கி வெடிக்குது.

இயற்கை யோடு இணங்கியே வாழவும்,
இயற்கை யோடு இயைந்துமே போகவும்,
இயற்கை பொறுமை இழக்கா வழியிலே
இயற்கையின் பலன் கொள்ளவும் ….,மாளாத
இயற்கை பாதிக்கா வண்ணம் புதுமைகள்
இயற்றவும், அதைக் காத்து வளர்க்கவும்,
முயலின்….இயற்கை எமக்கு துணைதரும்.
முயன்றிடாப் போது எமக்கும் விடைதரும்.

09.12.2019

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply