முகமூடி வாழ்வு

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்பார்
அகத்தினது ஐய அச்சம்
முகத்தில் முகமூடி
அணியவைத்த தின்று!
ஆம் உயிர்க்கு ஊறுவரும்
கணத்தில்…முகஅழகு
கணக்கெடுக்கப் படாப்பொருளென்று
உணர்ச்சி ஒதுக்க அறிவு விழிக்கிறது!
முக அழகில் ஏதுமில்லை
முகமூடி போட்டேனும்
அக இருப்பைக் காப்பதுதான் அழகு
என்று தெளிவாச்சு!
முகப்பூச்சு வேண்டாம்
முககவசம் போதுமென
சகலருமே எண்ணி ஏங்க
சாப்பயம் உலுக்கிடுது!
முக அலங்கரிப்பிடங்கள் முடங்க
எங்கெங்கும்
முகக்கவசக் கடைகளிலே
மோதல் வெடிக்கிறது!
அழகு என்பது அகம் மகிழ்வாய் இல்லாட்டில்
இழவுக்கு நேர் என்று
எல்லோர்க்கும் புரிந்ததின்று….
காலம், இயற்கை, இறை, கற்பிக்கும்
அடிக்கடி இது
போல்…. எனினும் நாமோ புரியாமல்
பழையபடி
போலி அழகு பெருமைகளில்
பொருள் புலனை
வீணடிப்போம்;
இன்று விளங்கி….நாளை செய்வம்… ஏது ?

15.03.2020

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply