உலகை உணர்!

தனித்திருத்தல் தவத்தின் முதற் படியில் ஒன்றாம்!
தனித்திருத்தல் பெரும் யோகம்! ஞானம் காண
தனித்திருத்தல் மார்க்கம்! இன்று தொற்று நோயில்
“தப்ப இது ஒரே வழி” விஞ்ஞானம் ஏற்கும்!
தனித்திருத்தல், தனிமைப் படுத்திடுதல், ஊரை
சமூகத்தை, குடும்பத்தை, நாட்டை, வீட்டை,
தனிப்படுத்தி உயிர் காப்போம். தேவை என்றால்
தரணியையும் தனிப்படுத்தி உய்யப் பார்ப்போம்!

தனிமையிலே சாரம் இருக்கென்றான்…முன்னோர்
தமிழ்கவிஞன்; விவேகமொடு வீரம் கூட
தனிமையிலே இருக்கென்றின் றுரைக்கும் நோயும்.
தனிமையிலே இனிமை காண முடியும் என்று
சனம் ஏற்கும் நேரம்; இது வரையில் யாரும்
சந்திக்கா வரலாற்றுக் காலம்! நாங்கள்
தனித்திருக்க… உலகின் பிற உயிர்கள் எல்லாம்
சந்தோசம், சுதந்திரத்தைச் சிலநாள் காணும்!

உலகமிது மனிதருக்கா முதுசச் சொத்து?
உயிரினங்கள் கோடிகோடி பிறந்து வாழும்
உலகம் அந்த உயிர்களுக்கும் உருத்து! நாமே
உரிமையாளர் என்றவற்றை அடக்கி வைத்தோம்!
‘உலகின் – பிற உயிர்களின்’ மெய்த் தொடர்பால் தோன்றும்
ஒருகோடி நன்மைகளை அழித்தோம்! இந்த
நிலையின் ஒரு விளைவால்… கண் காணா வைரஸ்
நிற்கவைத்துக் கேள்வி கேட்க நிலைகு லைந்தோம்!

எங்களுக்குத் தேவையில்லை என்ப தற்காய்
இவ்வுலகில் இருக்கின்ற உயிர்கள் யாவும்
இங்கு வாழ அருகதையே அற்ற வைகள்…,
எமக்குதவும் உயிர்கள் வாழ ஏற்ற வைகள்…,
எங்களுக்கு அடிமை அவை…, என்று நேற்று
எடுத்தெறிந்தோம்; ஓர் கிருமி யாலே நொந்தோம்!
“பங்கிருக்கு அனைத்துயிர்க்கும் உலகின் வாழ்வில்”
படிக்காட்டில்…அவற்றாலும் துன்பம் கொள்வோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply