மீட்பு

தங்குதற்கு மட்டுமல்ல வாழுதற்கும்
வீடுகள்தாம்
சங்கையான இடங்களெனச்
சகலரும் உணர்ந்தார்கள்!
வீடுகளுள் உறைந்து பல வித்தை புரிந்தார்கள்!
ஆடு மாடு கோழிகளை
அரவணைத்துக் கொண்டார்கள்!
ஓய்வை எடுத்தார்கள்!
உடற்பயிற்சி செய்தார்கள்!
நூல்கள் படித்தார்கள்!
நூல்கள் பொதிந்துவைத்த
ஆயிரம் அமுதங்கள் அள்ளிப் பருகினார்கள்!
வானொலி தொலைகாட்சி தனில்
பாட்டு, பகிடி, தொடர்
நாடகங்கள் தாண்டியும்
நன்மையுள்ள தறிந்தார்கள்!
பூக்கண்டு சீர்செய்து
புது நாற்று, கிளை நட்டு
வீட்டிலே தோட்ட விதை தூவி வேர்த்தார்கள்!
காகமொடு செண்பகம் காற்று வண்ணத்துப்
பூச்சியையும் கூர்ந்து பார்த்து
மகிழ்ந்தார்கள் !
வேளைக்கு வேளை விருப்பம்போல்
சமைத்தார்கள்!
தேடி இணையத்தில்
தினுசு தினுசாக
ஆறு சுவை ஆக்கி
ஆம் …பலநாட்களின் பின்
கூடி இருந்து பகிர்ந்துண்டு பூத்தார்கள்!
ஆடினார்கள்! பாடினார்கள்!
அபூர்வக் கலைவகைகள்
கீறியும் எழுதியும் கிழித்து இரசித்தார்கள்!
அவரவர்க்கு வருவதனை
ஆக்க முயன்றார்கள்!
எவை தமக்கு எளிதில் வரும் என்று
இனம்கண்டு
தம்படைப்பு ஆளுமையை
தமது திறமைகளை
தம் இயல்பை tiktok இல் smule இல் பதிந்தார்கள்!
உண்ணல். பொழுதழித்தல். உறங்கல்.
இவைதாண்டி
இன்னும் பலவாழ்வில் இருத்தல்
தெளிந்தார்கள்!
பலர் தம் நிழல்களைப் பார்த்தார் முதற் தடவை!
பலர் தம் இதய இசை கேட்டார்
முதற் தடவை!
பலர்தம் வியர்வைச் சுவையறிந்தார்
முதற்தடவை!
பலர்தம் நிறை குறையைத்
தேர்ந்தார் முதற் தடவை!
பலர்தம் உடை துவைத்தும்
பலர்தம் தலை மழித்தும்
பலர் தம் தொழில் தாண்டிப் பல புரிந்தார்
முதற் தடவை!
மோனம் அமைதி முழுதுணர்ந்து
புற உலகின்
தேனீ இரைச்சலைச் செவி மறந்தார்
முதற் தடவை!
ஆண்டவனை நேர்ந்து அழுதார் அவர்;
தியானம்
தோண்டி எடுக்கும் தீர்வை என்றார் இவர்;
இடருள்
வாழும் வழி வகை வகுத்தார் பலர்;
ஆழ்ந்து
தேடித் தமது நான்கு தடைச் சுவருள்
“தாம் ஆர் தமது உள்ளம் ஆர் தம் ஞானம்
ஏது எவரார் ” என்று
இனங்கண்டார் வேறு சிலர்!
குருட்டு வெளவால்கள் போல்
மோதித் தினம் திரும்பி
“இருக்கு புதுத்திசைகள்” என்று அறிந்தபடி;
இருந்த மனத்தெளிவை விட
வாழ்வில் இன்னும் இன்னும்
இருக்கு தெளிவு, தெரு என்று தெளிந்தபடி;
இருந்த நனவு கனவுகளை
விட இன்னும்
இருக்கு நனவு கனா என்றும் பலர் புரிந்தார்!
உடலில் இருந்த நோய்
ஒருவாறு தீர்ந்தழிய,
உயிரில் கலந்த வலி
ஒவ்வொன்றாய் மாய்ந்தகல,
தனிமைப் படுத்தப் பட்டு
தம் வீடுகளில்
தனித்திருந்து சாவின்
கதவுகளைத் தட்டி மீண்டு
நோய்வாய்ப் பட்டவர்க்காய்,
நோயில் இறந்தவர்க்காய்,
பாதிக்கப் பட்டவர்க்காய்,
பலவழியில் நொந்தவர்க்காய்,
வாழ்வினிலே உண்மையாக வருந்தி
நரர் …அழுகின்றார்!
வாழ்வினது அர்த்தம், வாழ்வினது சாரம்,
வாழ்வின் மகிழ்ச்சி, வலி, ஈரம், வாச நாற்றம்,
யாவை ? என இன்றை
யதார்த்தத்தில் கண்டுகொண்டு
உண்மைச் சுதந்திரத்தை,
உண்மைக்கட்டறுந்த வாழ்வை,
உண்மை விடுதலையின் உயிர்ப்பை,
உள்வீட்டில்
இன்று சிறையிருந்து இதயபூர்வமாய் உணர்ந்து
இயந்திரங்கள் தாம் அல்ல;
இதயங்கள் உள்ளவர் தாம்;
உயிருள்ளோர்; சடங்களல்ல…. என்று
தெளிந்தபடி
வீடுகளை விட்டு வெளியேறாது
இருந்த இந்த
நாட்களில்தான் …மனிதர்கள்
மனிதத்தை அறிகின்றார்!

20.04.2020

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply