தொலைத்த வாழ்வு!

கலப்படமில்லாக் காற்று,
கலப்படமில்லாக் குடிநீர்,
கலப்படமில்லாப் பொருட்கள்,
கலப்படமில்லா உணவு,
கலப்படமில்லா இயல்பு,
கலப்படமில்லா ஆற்றல்,
கலப்படமில்லா உணர்வு,
கலப்படமில்லா வாழ்வு,
கலப்படமில்லாக் கலைகள்,
கலப்படமில்லாக் கவிதை,
யாவையையும்…. இன்று
அடைவுவைத்து அழித்து;
நாகரீகம் நவீனத்தில் நம்பிக்கை
எனவளர்ந்து;
நாமெம் அடையாளம் தனித்துவம்
தூய்மை மறந்து;
தேவையில்லை எம்மண்ணுக்கு
ஏற்றவாழ்வு என திரிந்து;
வேர்வையினைச் சிந்தி விளைந்ததை
புறக்கணித்து;
சுற்றிச் சுகவாழ்வைத் தொடர்ந்து;
சோம்பலுற்று;
தொற்றாநோ யைச்சொந்தம் துணையென்று;
இன்றுசூழ்ந்து
தொற்றும்நோய் மாய்க்க …நம்
தொன்மை வாழ்வின் மேன்மை தேர்ந்து;
நிற்கின்றோம்!
அது திரும்ப வாராது …!
அதைமீட்டு
முற்றாய் நாம் முகிழ முடியாது!
நஞ்சூறியுள்ள
முற்றம் கடல் வானும் முறைக்க
முழித்”தென்ன
குற்றம் தான் செய்த”மென்றோம்?
இம்மண்ணுக் குகந்தவாழ்வை
விட்டது குற்றம்;
விழுமியம் மறந்து மேன்மை
கெட்டது குற்றம்;
கேட்டு வெளி நெறி முறைகள்
தொட்டது குற்றம்;
தொடர்பில்லாக் கலப்பினங்கள்
நட்டது குற்றம்;
நம் முயல்வின் வேர் விழுதும்
பட்டது குற்றம்;
பறந்துவரும் பணம் என்று
வெட்டியானதும் குற்றம்;
மிகு குற்றம் நாம்புரிந்து
கலப்படம் நஞ்சு கலந்த
நவீனவாழ்வில்
உழலுகிறோம்….உணர்ந்தாலும்… மாறாது
நம் மட்டம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply