வேசம்

அகத்திலே… எனைவீழ்த்த அம்புகளைக்
கூர்தீட்டி,
அகத்திலே… எனைச் சாய்க்க
அரிய வியூகம் ஆக்கி,
அகத்திலே…
எனைப்புதைக்க ஆசைக் கிடங்குவெட்டி,
அகத்திலே…
எனை ஏய்த்து உம் எல்லைக்குள்
வரப்பண்ண
வகைவகையாய்ப் பொறிவைத்து
வலை கண்ணி என்வழியில்
புகும் போகும் இடமெல்லாம் பொருத்திப்,
புறத்தினிலோ
சிரித்து மகிழ்கின்றீர்!
தேகம் கட்டி அணைத்து
“பெரும் பலம் நாம்” என்கின்றீர்!
“மேதினியில் அன்பு நட்பின்
வரைவிலக்கணம் யாமே” என்றும்
புகழ்கின்றீர்!
ஆச்சர்யப் பட்டுலகம் அதிர
அன்பொழுகும்
பேச்சில் மகிழ்ந்துள்ளே….
பிணமாக்கும் வழி பார்ப்பீர்!
யானும் இவை அறிவேன்!
உமைப்போலே பழகுகிறேன்!
நேரே சிரித்துள்ளே உமை எதிர்க்க
வழி காண்பேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply