இயல்பு வாழ்வு

தெளிவாச்சு வானம்! தெளிவாச்சு ஆழி!
தெளிவாச்சுக் காற்று!
தெளிவாச்சு கங்கை!
“ஆம்…மீண்டும் எங்கள் அழகியற்கை
வான் மலைகள்
ஆறின் தெளிவோட்டம் அதிசயம்”
என்றுரைக்குது ஊர்!
தூசு, புகை, துணிக்கை,
தொல்லை தரும் நஞ்சு,
மாசு கழிவெல்லாம் மனிதச்
செயற்பாட்டால்
நாளும் பெருகி
நம் தரை, கடல், வானை
நாறடிக்க…எல்லாமும் நஞ்சூறி;
அழுக்கேறி;
யாவும் தனித்துவம் தரம் குன்றி;
உயிர்வாழ
ஏலாது மூச்சுத் திணறிக் கிடந்தநிலை
ஓரிரு மாதங்கள் ஒதுங்கி
மனிதர்கள்
சாப்பயத்தில் வீடுகளில் சரிய….
இயங்குநிலை
யாவும் ஒடுங்க….தொழிற்சாலை கப்பல்கள்
வானூர்தி எல்லாமும் வாய்மூட …
மெளனமாகி
மாறிற்று ! இந்தச் சூழல்
சற்று மூச்சுவிட்டு
நீண்ட சிறைதகர்த்து நிம்மதியாய்க்
கொஞ்சநேரம்
ஆசுவாசம் கொள்ளுதின்று!
அட்டகாசம் கிருமி செய்ய
ஏனைய உயிர்கள் இயல்பாய்த்தம்
சூழலுடன்
பேசிக் களிக்கிறது!
அவைக்கு இது நாள் வரையும்
போடப்பட் டிருந்த தடை ,
ஊரடங்கும் தகர்ந்துபோச்சு!
மயில்கள் பயம்விட்டு ஆட,
குருகினங்கள்
தயங்காது கூவ,
சகல விலங்குகளும்
அச்சம் அகன்று சுற்ற,
பாம்பு வெளவால் எறும்புண்ணி
பச்சையாய் உண்ணப் படும்
பூச்சி தேள் தவளை
தத்தமது பண்ணைவிட்டு ஊர்சேர,
நரரும் “தாம்
இயந்திரங்கள் அல்ல” என உணர்ந்து
தம் குணத்தை
இயல்புகளை வீடுகளில் இருந்தபடி
மீட்டெடுத்தார்!
இயற்கையும் எல்லாமும் இயைபாச்சு
இந்நாளில்!
“இயற்கையைக் குலைத்தவர்கள்
எவருமல்ல…மானிடரே”
என்றுரைக்கும் காலம்!
அதற்கான தண்டனைதான்
இன்று கிடைத்ததென்று இயம்பிற்று
வரலாறு!
“ஆண்டுக் கொருதடவை அணுகவேண்டும்
இந்நிலைமை”
கேட்குதொரு அசரீரி!
இதற்காய் கொடுத்தவிலை…
இலட்சம் கடந்த சாவை… எண்ணி
ஏங்கும் எனது மனம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply