எம்மைத் தேற்றடா!

ஈர நல்லையின் வீர ஷண்முகா!
இன்றிடர் களைந் தெம்மை நோக்கடா!
பாரை மாய்த்திடும் பாவ நோயினை
பாடை யேற்றடா…பஸ்பமாக்க வா!
வேரிலே விழும் வேதனை இடர்
வெட்டி வீழ்த்தடா! மேன்மை சேர்க்க வா!
தேரி லேறடா…! தேகம் யாவிலும்
தீமை ஓட்டி எம் திக்கை மீட்க வா!

தொற்றினால் பிணி சூழ்ந்து வந்தது.
தூரத் தூர நாம் நிற்க வைக்குது.
தொற்றி நம் திசை சூழ் தனிமையில்
சோர வைத்தது. வாயை மூடி யாம்
சுற்றச் செய்தது. இந் நிலமையால்
சொர்க்கம் கொண்டரும் நல்லை நாதனுன்
அற்புத விழா கூட அன்றுபோல்
அன்றியே… கட்டுப் பாடு கண்டது!

என்ன ஆகுமோ? என்ன நேருமோ?
என்று ஏங்கி நாம் உன்னைக் காணவே
நின்றுளோம்… எழு! நேர்த்தி தீர்க்கவும்
நெருக்கும் தொற்றிடர் நீற வேல் விடு!
மின்னல் போலத் தேர் ஏறி வந்திடு!
விழிகளால் அயல் தொற்று நீக்கிடு!
இன்று போல் ‘நிலை’ என்றுமே இனி
இல்லை என்றிடு! எம்மைத் தேற்றிடு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply