உயிர் மலர்வதெவ்வாறு?

ஒளிபடர்ந்துன் இரவை உறிஞ்சி
அகன்றபின்னும்
விழிமூடி அகக்கண்ணும் குருடாகத்
தூங்குகிறாய்!
புதுக்காற்று வீசும் சுகந்தப் பொழுது
மூச்சில்
சுதிகூட்ட…மூக்கைப்
பொத்தி மூர்ச்சை யாகின்றாய்!
அறுசுவைக ளோடு அட்சய பாத்திரங்கள்
விருந்துக்குத் தயாராக
விரதம் பிடிக்கின்றாய்!
இளங்குயில்கள் காதில் இனியகீதம் பொழிய,
குழலோடு யாழும் கூடி
இசை மாரி கொட்ட,
காதுகளில் இரும்பைக் காய்ச்சி நிரப்பியதாய்…
ஓர்செகிடன் போலாய்…
ஏதேதோ பதில் சொன்னாய்!
மயிலிறகால் உன்னைக் காலம் வருடவர
மயிர்க் கூச்செறியாமல்
மரத்த சடமானாய்!
இப்படி இருந்தால் எப்படித்தான்
ஐம்புலனும்
இப்பெரிய வாழ்வின்
இயல்பு இனிமை தேறும்?
இப்படி நீ வாழ்ந்தால்
எப்படி நின் உயிர் மலரும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply