தலைமுறையின் தேவ கீதம்

காற்றிருக்கும் நாள் வரை நின் கானமிருக்கும் -உந்தன்
கந்தர்வக் குரலில் என்றும் ஈரமிருக்கும்
ஊற்றடைத்துப் போச்செனினும் ஓசை உயிர்க்கும் -உடல்
உக்கும் மண்ணுள்… உன் இசையோ பூத்துச் சிரிக்கும் !

காலையை உன் கானம் புத்துயிர்க்க வைக்குமே -தோன்றும்
கவலைகளில் உன் குரல் களிம்பு பூசுமே
மாலைகளில் காதல் பரவசங்கள் தூவுமே -இராவை
மயக்கி தூங்க வைப்பதுந்தன் மாய கீதமே!

சோகவேளை கண்துடைத்து ஆறுதல் சொல்வாய் -எங்கள்
துக்கம் சுகம் யாவிலும் நீ பங்குகள் கொள்வாய்!
வேகம் கொள்ள வைப்பாய் உச்ச ஸ்தாயியில் தீயாய் -தெய்வம்
வேண்டும்… நின் குரல்க் கிரங்கும் …நிற்பியே தூதாய்!

ஓசையிலும் காந்த சக்தி உண்டு …உணர்ந்தோம் -உந்தன்
உயிரிசை இழுக்க …இரும்புளங்கள் பிணைந்தோம்!
நேசனே உன் பாடலால் நம் வாழ்வை நிறைத்தோம் -இன்று
நிலத்துள் நீ …நின் இசையெம் நெஞ்சுள் வாழும் ….இரசிப்போம்!

மூச்சு முட்டப் பாடிச் சாதனைகள் செய்தவா -உந்தன்
மூச்சினாலே பாடல்கள் உயிர்க்க வைத்தவா
மூச்சுப் பையை மென்று கிருமி மோசம் செய்ததா -நீயும்
மூச்சு விட முயன்று தோற்றாய் …தெய்வம் எங்கடா?

பால சுப்ர மணியம் என்ற பாட்டு மேதையை -இன்னும்
பாடி ..எங்கள் உயிரைத் தாலாட்ட வல்லதோர்
தாயை….கொடிய நோயும் காவு கொண்டு வென்றதா?- எங்கள்
தலைமுறையின் தேவ கீதம் நின்று போனதா?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply